கருத்து

கர்ப்பிணிப் பெண்கள் துறவிகளாக இருக்க வேண்டுமா?

இரும்புச் சத்தும் புரதமும் மிக எளிதாகக் கிடைப்பது இறைச்சி உணவுகளிலிருந்துதான். இந்தச் சத்துகள் மரக்கறி உணவுகளை விட மாமிசக்கறி உணவுகளில் மிகுதியாகக் கிடைக்கின்றன.

அ.குமரேசன்

அ. குமரேசன்

கர்ப்பிணிப் பெண்ணே நீ…

  • கறி, முட்டை சாப்பிடக் கூடாது
  • உடலுறவு கொள்ளக் கூடாது, தூய்மையான எண்ணங்கள்தான் மனதில் இருக்க வேண்டும்.
  • ஆசை, கோபம், பற்று, வெறுப்பு, காமம் ஆகிய உணர்வுகள் கூடாது.

-இதெல்லாம் யாரோ ஒரு தாய் அல்லது மாமியார் தனது மகள் அல்லது மருமகளுக்குச் சொன்ன அறிவுரை அல்ல. ஒரு மருத்துவர் தன் மருத்துவமனைக்கு வந்த கர்ப்பிணிக்கு வழங்கிய ஆலோசனையும் அல்ல. மத்திய அரசின் ‘ஆயுஷ்’ அமைச்சகம் வெளியிட்டுள்ள ‘தாயும் குழந்தை பராமரிப்பும்’ என்ற கையேட்டில் உள்ள அதிகாரப்பூர்வ வழிகாட்டல்களில் இந்த அறிவுரைகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இம்மாதம் 21ம் தேதி உலக யோகா தினம் வருவதையொட்டி இந்த வெளியீடு.

இந்தநூற்றுக்கு எழுபது பெண்கள் ரத்தசோகையால் பீடிக்கப்பட்டுள்ள, புரதச் சத்து பற்றாக்குறை உள்ள நாட்டில் இரும்புச் சத்தும் புரதமும் மிக எளிதாகக் கிடைப்பது இறைச்சி உணவுகளிலிருந்துதான். இந்தச் சத்துகள் மரக்கறி உணவுகளை விட மாமிசக்கறி உணவுகளில் மிகுதியாகக் கிடைக்கின்றன என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அ-அசைவ உணவுப் பழக்கம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த சில பெண்களே கூட கர்ப்பக் காலத்தில் குடும்பத்தினர் ஒத்துழைப்புடனோ, ரகசியமாகவோ அசைவ உணவு எடுத்துக்கொள்வதுண்டு. அசைவ உணவுக் குடும்பத்தினர் அசைவக் கர்ப்பிணிகளுக்குப் வாஞ்சையோடு செய்துகொடுப்பதுண்டு.

ஆயுஷ் அமைச்சகத்தின் அறிவிப்பு

குடும்பங்களின் உணவுப் பழக்கம் சார்ந்து கறி சாப்பிடுவதா வேண்டாமா என்று முடிவு செய்வதைப் பெண்களிடம் விட்டுவிட வேண்டும். அமைச்சகத்தின் இந்த அறிவுரையோ, பெண்களுக்குப் பிரசவத்தை எதிர்கொள்ளும் உடல் வலிமையைத் தடுக்கிற கைங்கர்யம்தான்.

கர்ப்பக் காலத்தில், வேறு குறிப்பான சிக்கல்கள் உள்ளவர்களைத் தவிர மற்ற பெண்கள் உடலுறவைத் தவிர்க்க வேண்டியதில்லை என்றுதான் மருத்துவ அறிவியல் கூறுகிறது. சொல்லப்போனால் அப்போது கிடைக்கிற மன நிறைவு பெண்ணின் கரு ஆரோக்கியமாக வளர்வதற்கே உதவும், கருவைத் தாங்கியிருககும் கர்ப்பப்பை இதற்கேற்பவே பெண்ணின் உடலில் இயற்கையாக அமைந்துள்ளது என்றும் மருத்துவ அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். கர்ப்பக்காலத்தில் பாதுகாப்பான உடலுறவு குறித்த ஆரோக்கியமான வழிகாட்டல்களும் உள்ளன.

அது ஒருபுறமிருக்க, தூய்மையான எண்ணங்கள் என்றால் என்ன? பாலியல் சிந்தனைகள் தூய்மையற்றவை என்பது எந்தக் காலத்து வாதம்? பாலியல் கற்பனைகள் புனிதமானவைதான், உள்ளத்துக்கும் உடலுக்கும் உற்சாகமூட்டுபவைதான். அத்துடன், பாலியல் எண்ணங்களைத் தவிர்க்கவே முடியாது, தவிர்க்க வேண்டிய தேவையுமில்லை. மற்றபடி தூய்மையான எண்ணங்கள் என்ற பெயரில் பெண் பக்தியில் மூழ்கிக்கிடக்க வேண்டும் என்கிறார்கள் போலும். தானும் தன் குடும்பமும் சுற்றமும் நட்பும் ஊரும் உலகமும் வன்முறையின்றி, அபத்தமான வழிகாட்டல்களின்றி மனநிறைவோடு இருக்க நினைப்பதை விடவும் தூய்மையான எண்ணம் இருக்கிறதா என்ன?

ஆசை, கோபம், பற்று, வெறுப்பு, காமம் ஆகிய உணர்வுகளே கூடாதென்றால் கிட்டத்தட்ட கர்ப்பிணிப் பெண்கள் துறவிகளாக இருக்க வேண்டுமோ? துறவிகள் எனப்படுவோரே அப்படியெல்லாம் இல்லையே அன்பர்காள்!

மகிழ்ச்சி நிறைந்த குடும்பத்திற்காக ஆசைப்படலாம். அது தடுக்கப்படுவதை எண்ணிக் கோபப்படலாம். அன்பான வாழ்க்கை மீது பற்றுக் கொள்ளலாம். அந்த வாழ்க்கை அமைவதைக் கெடுக்கும் சுயநலம், அரசியல், மதவெறி, சாதிப்புத்தி உள்ளிட்டவை மீது வெறுப்படையலாம். செயற்கையாக, போலித்தனமாக அடக்கிவைக்காமல் இயல்பான காமம் தாராளமாக இருக்கலாம்.

இதெல்லாம் கட்டுப்பாடற்ற சுதந்திரவாதிகள் என்று வசைபாடப்படுவோர் பரப்புகிற போதனைகள் அல்ல. உடலியல் உளவியல் மருத்துவ அறிவியலாளர்கள் ஆராய்ந்து முன்வைக்கிற கருத்துகள்.

‘ஆயுஷ்’ என்றால் ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தம், ஹோமியோபதி. அலோபதி அல்லாத இந்த ஐந்து அருமையான மருத்துவமுறைகளின் ஆங்கில முதலெழுத்துகளைச் சேர்த்து உருவாக்கப்பட்ட கூட்டுச்சொல். இப்படியெல்லாம் அபத்தமான அறிவுரைகளைப் புகட்டி, இந்த மருத்துவமுறைகளே அறிவியல்பூர்வமற்றவை என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடாதீர் ஆட்சிபீடத்தினரே!

எல்லாப் பெண்களுக்கும் முழுமையான ஊட்டச் சத்து கிடைப்பதை, அறிவார்ந்த படிப்பு கிடைப்பதை, தரமான இலவச மருத்துவம் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டிய அரசு கல்வி, மொழி, உணவு உரிமை, தனிப்பட்ட அடையாளம் என்றெல்லாம் வந்து இப்போது கர்ப்பத்திலேயே கை வைக்கிற இந்த அத்துமீறலை அனுமதிக்காதீர் பொதுச்சமூகத்தினரே!

அ. குமரேசன், எழுத்தாளர்; பத்திரிகையாளர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.