அரசர் பாபாராம்தேவ்வைவிட சிறப்பாக காலை உயர்த்துகிறார்
மனுஷ்ய புத்திரன்
…….
மூச்சை நன்றாக உள்ளிழு
அதை வெளியே விடும் முன்
சர்வதேச யோகா தினத்தில்
நாம் சிந்திக்க வேண்டியவை ஏராளம்
ஆரோக்கிய வாழ்விற்கு
யோகா சிறந்தது
ஆரோக்கியமான இந்தியாவிற்கு
யோகா சிறந்தது
தினமும் அரசரனின் நான்கு சவுக்கடிகளுக்குப்பிறகு
அவர் தரும் அன்பு முத்தம் சிறந்தது
அரசர் இந்த யோகா தினத்தில்
தன் கால்களை அவ்வளவு நேர்த்தியாக
மேலே கொண்டு செல்கிறார்
பாபா ராம்தேவ்வைவிட அரசர்
சிறப்பாக காலை உயர்த்துகிறார் என்று
ப்ரேக்கிங் நியூஸ் ஓடிக்கொண்டிருக்கிறது
நாம் முத்தமிடுவதற்காக
அவர் பொறுமையுடன் தன் பாதங்களை
அந்தரத்தில் நிலை நிறுத்த்துகிறார்
மூச்சை இன்னும் கொஞ்ச நேரம்
உள் நிறுத்துங்கள்
நூறு தேசங்களின் தேசத்தை
ஒரு தேசமாக்குவது எப்படி என்று
யாருக்கும் தெரியவில்லை
திரையரங்குகளில் தேசிய கீதங்களுக்கு
எழுந்து நிற்கச்சொன்ன பிறகும்
இந்த தேசத்தின் வரைபடத்தின் விரிசல்கள்
அப்படியேதான் இருக்கின்றன
இப்போது அதன் மீது ஒரு யோகா பாய்
விரிக்கப்படுகிறது
இந்தியர்கள் அனைவரும்
ஒரே நேரத்தில் கண்களை மூடுகிறார்கள்
மூடிய கண்களிந் இருட்டில்
ஒன்றுபட்ட இந்தியா ஒளிர்கிறது
கண்களை திறந்ததும்
வேறு உண்மைகள் வந்துவிடுகின்றன
பதஞ்சலி இப்போது
ஒரு அரசியல் சிந்தாந்தியாக மாறிவிட்டான்
மூச்சை இன்னும் கொஞ்ச நேரம்
உள் நிறுத்துங்கள்
யோகா வேறு யாருக்கெல்லாம் சிறந்தது?
தற்கொலை செய்துகொள்ளும்
விவசாயிகளின் பிரேதங்களுக்கு சிறந்தது
மாட்டுக்கறி உண்பதற்காக
தோல் உறிக்கப்படுபவர்களுக்கு சிறந்தது
கொல்லப்படும் சிந்தனையாளர்கள்
தங்கள் மனதை அமைதிப்படுத்த யோகா சிறந்தது
ரோஹித் வெமூலாக்கள்
தூக்குக்கயிறை எடுத்து மாட்டிக்கொள்ளும்முன்
யோகாவில் அமர்வது சிறந்தது
வேலையில்லாத இளைஞர்களுக்கு
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களுக்கு
கலவரங்களில் அகதியாகிறவர்களுக்கு
திவாலாகிற சிறு வணிகர்களுக்கு
செல்லாத நோட்டுகளால் வீதிக்கு வந்தவர்களுக்கு
எல்லோருக்குமே யோகா சிறந்தது.
இன்னும்
போதைப்பழக்கம் உள்ளவர்களுக்கு
வாயுத்தொல்லை உள்ளவர்கள்
ஒற்றைத்தலைவலி உள்ளவர்கள்
மாதவிடாய் பிரச்சினை உள்ளவர்கள்
அனைவருக்கும் யோக சிறந்தது
யோகா இந்த தேசத்தின்
சிறந்த வலி நிவாரணி..
நீங்கள் பொறுமையிழக்கிறீர்கள்
என்பது எனக்குத் தெரியும்
என்னை ஒரு அவநம்பிக்கைவாதி என்றோ
அனார்கிஸ்ட் என்றோ நினைக்கிறீர்கள்
பயனுள்ள விஷயங்கள் எங்கிருந்தாலும்
அதை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதில்
நம்பிக்கைகொண்ட இந்தியர்களில் ஒருவர் நீங்கள்
நான் என் நன்நம்பிக்கைகளுக்கான
என் உடலை சிதைத்துக்கொள்வதையே விரும்புகிறேன்
உலக யோகா தினத்தில்
என்னால் மூச்சுவிடவே முடியவில்லை
குண்டலி உங்களுக்கு சாத்தியமாக
இன்னும் சில நிமிடங்கள்தான் இருக்கின்றன
உங்கள் மூச்சை இன்னும் கொஞ்சம்
உள்ளிழுத்துக்கொள்ளுங்கள்
சுகந்தி நாச்சியாள் கவிதை!
செம்பட்ட முடி சரசா
நெதமும் தட்டுற வரட்டியும்
யோகக் கலையில ஒண்ணுதான்
நெதமும் காலையில
நெடுஞ்சாலைய கூட்டுற
மாராத்தா
அவ செய்யுற யோகாவ
யாராலயும் செய்யமுடியாதுன்னு
சவால் விடுறா
மணிக்கணக்கா குனிஞ்சு கூட்டுறதுன்னா சும்மாவா?
வளர்ந்ததுலயிருந்து வயக்காட்டுல
களையெடுக்குற கன்னிம்மா
செய்யுற யோகாவுக்கு
யாரும் இன்னும் பேர் வைக்கல
காலங்காலமா ஊருக்குள்ள
மலமள்ளுற காளிம்மா
செய்யுற யோகத்த விட
உங்க யோகம் எவ்வளவு உசத்தின்னு
கேள்வி கேட்டா
பதில் சொல்ல யாரு இருக்கா?
சரியான திக்குல நெஞ்ச நிமிர்த்தி நின்னு
போட்டோவுக்கு போஸ் கொடுக்குறது
என்ன வகை யோகா?