சினிமா

நிழலழகி-10: நம்மில் லஜ்ஜோக்கள் எத்தனை பேர்?

இன்றும் ஒரு பாலியல் பலாத்கார கொடூரம் என்றால் போலீஸ் விசாரணை, போராட்டங்கள் என கொதித்து எழும் நம் சமூகம், நான்கு சுவற்றுக்குள் திருமணம் என்ற அங்கீகாரம் மூலம் கணவன், மனைவி இடையே நடக்கும் பாலியல் துன்புறுத்துதல்களை தட்டிக் கேட்டதே இல்லை.
கே. ஏ. பத்மஜா

Parched | Leena Yadav | Hindi | 2015

எங்கோ ராஜஸ்தான் கிராமம் ஒன்றில் பாலியல் துன்புறுத்தலால் வதைக்கப்படும் ஒரு சாமானிய பெண்ணைப் போலவே நம் தேசம் முழுவதும் எவ்வித பாகுபாடுமின்றி பெண்கள் சீரழிக்கப்படுவதை லஜ்ஜோ எனும் கதாபாத்திரம் மூலம் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது ராதிகா ஆப்தே நடித்த இந்த முக்கியமான திரைப்படம்.

லீனா யாதவ் இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியான படம் ‘பார்ச்டு’. தன்னிஷ்தா சாட்டர்ஜி, ராதிகா ஆப்தே, சுர்வீன் சாவ்லா, லெஹர் கான் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் வசிக்கும் நான்கு பெண்களின் வாழ்க்கை, தாங்கள் சார்ந்த சமூகத்தின் பழக்கவழக்கங்கள், வாழ்வியல் நடைமுறைகளால் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதே கதைக்கரு.

ராணி (தன்னிஷ்தா சாட்டர்ஜி) கணவனை இழந்தவள். தன்னுடைய மகனிற்கு அதிக வரதட்சணை கொடுத்து ஜானகி (லேகர் கான்) என்னும் இளம்பெண்ணை குழந்தை திருமணம் செய்துவைப்பாள். பிஜூ (சுர்வீன் சாவ்லா) அந்தப் பகுதியில் கவர்ச்சி நடனமும் பாலியல் தொழிலும் செய்து வருபவள்; லஜ்ஜோவுக்கும் ராணிக்கும் நெருங்கிய தோழி, ஆலோசகர் பிஜூ. அவள்தான் அந்தக் கிராமத்தின் கனவுகன்னி ஆயினும், ஊரை விட்டு ஒதுக்கிவைக்கப்பட்டவள். எல்லா காலக்கட்டத்திலும் நம் நாட்டின் பல பகுதிகளில் வாழும் ஒட்டுமொத்த பெண்களின் வாழ்க்கையை ஏதோ ஒருவிதத்தில் பிரதிபலிப்பதுதான் இப்படத்தின் சிறப்பம்சம்.

இப்படத்தில் வரும் ஒவ்வோரு பெண் கதாபாத்திரத்துக்கும் ‘நிழலழகி’ தொடரில் ஓர் அத்தியாயம் ஒதுக்கலாம். எனினும், நான் நிஜ வாழ்க்கையில் பார்த்த சில பெண்களை நினைவுபடுத்தியது லஜ்ஜோ (ராதிகா ஆப்தே) என்பதால், அந்தக் கதாபாத்திரத்தையே இங்கே முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். பெண்களுக்கு படிப்பறிவு அவசியம் இல்லை என நம்பும் கிராமத்தில் கிஷான் என்ற சற்றே கல்வியறிவு கொண்டவரால் நடத்தப்படும் பெண்கள் சுய உதவிக் குழுவில் லஜ்ஜோ உள்பட பல பெண்களும் சேர்ந்து பணம் ஈட்டுவர். லஜ்ஜோவிற்கு குழந்தை இல்லை. இதனால், அந்தக் கிராம மக்களாலும், கணவனாலும் அடிக்கடி வசைபாட்டுக்கு உள்ளாவாள். பல நேரங்களில் தன்னுடைய குடிகார கணவனால் அடித்துக் காயப்படுத்தப்பட்டு உடலுறவில் ஈடுபடுத்தப்படுவாள். தனது காயங்களுக்கு மருந்து போட, உடனே அவள் தேடி ஓடி வரும் இடம், ராணி வீடுதான்.

ஆம், இன்றும் ஒரு பாலியல் பலாத்கார கொடூரம் என்றால் போலீஸ் விசாரணை, போராட்டங்கள் என கொதித்து எழும் நம் சமூகம், நான்கு சுவற்றுக்குள் திருமணம் என்ற அங்கீகாரம் மூலம் கணவன், மனைவி இடையே நடக்கும் பாலியல் துன்புறுத்துதல்களை தட்டிக் கேட்டதே இல்லை. பல பெண்கள் குடிகார கணவன், காம வன்மம் பிடித்த கணவன் என பல விதத்தில் உடலளவிலும், மனதளவிலும் துன்புறுத்தபட்டுதான் வருகின்றனர். எனக்குத் தெரிந்து பல பெண்கள், ‘எல்லாம் கண்ட கண்ட வீடியோ பார்த்து பண்றதுதான்; மத்தபடி என் கணவன் அன்பானவர்’ என்ற ரீதியில் பேசுவர். இன்னும் சிலர் எல்லாம் அந்தக் குடியும் போதைப்பொருள்களும் படுத்தும் பாடு. இதையெல்லாம் ஒரு பெண் பொறுத்துதான் ஆகவேண்டும்’ என்ற அளவிற்கு போதிப்பர்.

ஒரு கட்டத்தில் தோழிகள் மூவரும் சமுதாய சிக்கல்களை பேசிக்கொண்டு இருக்கும்போது, ‘பெண்மை முழுமை பெறுவது குழந்தைப்பேற்றில்தான்’ என்பாள் ராணி. லஜ்ஜோ முகம் மாறுவதைக் கவனித்த பிஜோ, ‘பெண்ணிற்கு குழந்தைப் பேறு இல்லாமல் இருப்பதற்கு கணவன் கூட காரணமாய் இருக்கலாம்’ என்பாள். ‘அப்படிக் கூட இருக்குமா?’ என்று வெகுளியாய் கேட்கும் லஜ்ஜோ பார்க்கும்போதும் அவள் அடிவாங்கும்போதும் கணவனின் அன்பைப் பெற நிச்சயம் தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று தீர்மானிப்பாள்.

அதன்பின், லஜ்ஜோவை குழந்தை பாக்கியத்திற்காக ஒரு சாமியாரிடம் அழைத்துச் செல்வாள் பிஜோ. ஆம், நம் சமூகத்தில் பல சாமியார்கள் மக்களின் கேலிக்கும், கவனத்திற்கும் ஆளாவது இப்படித்தான். இதில் படித்தவர், படிக்காத பெண்கள் என்றெல்லாம் பேதம் இல்லை. இவர்கள் வீடியோ கூட மிகவும் பிரபலம். இந்தப் படத்தை பார்க்காதவர்கள் கூட ராதிகா ஆப்தே வீடியோ என்று தேட தவறியிருக்க மாட்டர்கள். இரண்டு மாத கர்ப்பத்தை கணவனிடம் சந்தோஷமாய் பகிரும் லஜ்ஜோவிடம், அவள் கணவன் ‘எந்த ஆம்பளையிடம் போனாய்?’ என்று அடித்து வதைக்கும்போது, இந்தக் கொடுமைக்கு ஒரு முடிவே கிடையாது என்பதை உணரும் லஜ்ஜோ, தோழியின் உதவியுடன் தன்னைத் தானே விடுவித்து கொள்ளமுற்படுவாள். இரவு நேரத்தில் தசரா பண்டிகையின் நிறைவு நாள் சுபமாய் கிராமத்தில் கொண்டாடி முடிக்கப்படும்.

இந்தப் படத்தை பார்த்து முடித்ததும் நான் பல வருடங்களுக்கு ஒரு தோழியின் உறவினருக்கு நடந்தது நினைவுக்கு வந்தது. அந்தப் பெண் திருமணம் முடிந்து இரண்டு குழந்தைக்கு தாய். அவள் கணவன் கஞ்சா, குடி போன்றவற்றிற்கு அடிமை. இதனால் மனைவி நடத்தை மேல் சந்தேகம். வீட்டு செலவுக்கு பணம் கொடுப்பதும் இல்லை. இரவு நேரங்களில் மனைவி உடலுறவிற்கு மறுக்கும்போது பிளாஸ்டிக் குழாயை பிறப்புறுப்பில் திணிப்பது, உடல் முழுவது சூடு வைப்பது என பல விதத்தில் துன்புறுத்தப்பட்டுள்ளார். விவாகரத்து கேட்டு இரு வீட்டு உறவுகளையும் அழைத்து பேசியபோது, அந்தப் பெண்ணின் கணவன் மிகவும் நல்லவன் போல் பேசியிருக்கிறான். வந்த உறவுகளிடம் மறைமுக உறுப்புகளில் இருக்கும் காயங்களைக் கட்டி, தன் தரப்பு நியாயத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்திருக்கிறாள் அந்தப் பெண். ஒரு கட்டத்தில் தன் தாயிடம் எல்லாவற்றையும் காட்டி சொன்னபோது, குடும்ப வறுமை, பிள்ளைகளின் எதிர்காலம், சமூக அவமானம் எல்லாம் பற்றி பேசி, எப்படியாவது கணவனை குடிப்பழக்கத்தில் இருந்து திருத்தும்படி அறிவுரை சொல்லிவிட்டு சென்றுள்ளார் அந்தப் பெண்ணின் தாய். வேறு வழி இல்லாமல் தன்னுடைய ஆதங்கத்தை அந்தப் பகுதியில் கொட்டித் தீர்த்தாள். ஏனோ ‘பார்சடு’ படத்தில் வரும் லஜ்ஜோ எனக்கு அந்த முகம் தெரியாத சகோதரி பட்ட கஷ்டத்தை நினைவுபடுத்தி சென்றது.

இந்தப் படத்தில் வரும் நான்கு கதாபாத்திரத்திரங்களில் ஏதோ ஒரு கதாபாத்திரம் நிஜ வாழ்க்கையில் நம்மைச் சுற்றி உலாவிக் கொண்டுதான் இருக்கின்றன. அதிலும் பெரும் எண்ணிக்கையில் லஜ்ஜோ சாயல் சுமந்து வாழும் பெண்கள் ஏராளம். லஜ்ஜோ போன்ற பெண்களின் திறமை வெளியில் பலரால் அங்கீகரிக்கப்பட்டாலும் வீட்டிற்குள் நசுக்கப்படுவதுண்டு. குழந்தை இல்லை என்ற பழிச்சொல்லை முழுவதுமாய் சுமக்க வேண்டிய நிலைமை பல பெண்களுக்கு உண்டு. இன்றும் பல தம்பதிகள் தாம்பத்தியம் என்பது உடலளவில் நடக்க வேண்டிய சடங்கை போலவே பாவிக்கின்றனர். பெண்களின் உடல் வெறும் காமத்தின் தேவைக்கு மட்டுமே பார்க்கபடுவது, சாமியை நம்பாமல் ஆசாமியை பெண்கள் நம்புவது, எந்தத் துன்பத்தையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் இயலபு வாழ்க்கையை சந்தோஷமாய் வாழ்வது… இப்படி எங்கும் விரவிக் கிடக்கிறாள். ஏன், நம்மிள் கூட லஜ்ஜோக்கள் ஒளிந்திருக்கலாம்.

தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: