சினிமா

நிழலழகி 11 – காஞ்சனாக்களின் காதல்… வரமா, சாபமா?

கே. ஏ. பத்மஜா

Ennu Ninte Moideen | R.S.Vimal | Malayalam | 2015

கே. ஏ. பத்மஜா

‘காதல்… காதல்… காதல்… காதல் போயின் இன்னோரு காதல்’ என்ற ரீதியில் காதலை இந்த அவசர உலகில் நாம் பரிகாசிக்கிறோம். ஆனால், உலகம் தோன்றியது முதல் இன்று வரை காதலில் சிக்காத ஆணோ, பெண்ணோ கிடையாது. ஏதோ ஒரு வயதில், ஏதோ ஒரு நாளில், ஒரு சில நொடிப் பொழுதேனும் நமக்கு யார் மீதாவது காதல் வராமல் இருப்பதில்லை. இப்படியான காதலின் மேன்மையை அழுத்தமாய் சொன்ன படங்களுள் ஒன்று ‘என்னு நிண்டெ மொய்தீன்’.

ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் பிரிதிவிராஜ், பார்வதி, டோவியோ தாமஸ், லீனா மற்றும் பலர் நடித்து மலையாளத்தில் 2015-ஆம் ஆண்டு வெளிவந்த படம். எழுபதுகளில் நடக்கும் காஞ்சன மாலா – மொய்தீன் காதல் ஜோடியின் உண்மைக் கதைதான் இந்தத் திரைப்படம். மலையாளம், தமிழ் என தான் நடிக்கும் எல்லா திரைப்படங்களிலும் தனக்கென ஓர் அடையாளத்தையும், ரசிகர்களையும் உருவாக்கி வருபவர் நடிகை பார்வதி. எல்லா படத்திலும் பார்வதியை ரசிக்கும் நமக்கு, இந்தப் படத்தில் முழுக்க முழுக்க காஞ்சன மாலாவாக மட்டுமே நம் மனதில் பதிந்துடுவார். ஆம், ஒரு நல்ல நடிகனோ, நடிகையோ தன்னை மறைத்து கதாபாத்திரமாகவே ரசிகர்கள் மனதில் பதிவதுதான் அவர்கள் நடிப்புக்கும், அவர்களுக்கும் கிடைக்கும் வெற்றி.

1960-1970களில் ‘முக்கம்’ என்ற பகுதியில் பல வருடங்களாய் மொய்தீன் தந்தைக்கும் காஞ்சன மாலா குடும்பத்திற்கும் மதம் தாண்டி நல்ல நட்பு, சமமான அந்தஸ்து, ஊர் மரியாதை இருக்கிறது. ஆயினும், காஞ்சனா மாலா, மொய்தீன் காதலை இரு குடும்பமும் மத அடிப்படையில் ஏற்க மறுக்கிறது. இவர்கள் காதல் வீட்டிற்கு தெரியவரும்போது காஞ்சன மாலா படிப்பு நிறுத்தப்பட்டு, வீட்டில் அடைக்கப்படுகிறாள். ‘பெண்பிள்ளைகள் படிக்கபோனதால்தான் இப்படிக் காதல் எல்லாம் வருகிறது’ என்று காஞ்சனா மாலாவின் தங்கைகளின் படிப்பையும் சேர்த்து நிறுத்தும் மாமாவிடம், தங்கைகளை படிக்க அனுப்பும்படி போராடுவாள். வீட்டில் வேறு திருமணத்திற்கு ஏற்பாடு செய்யும்போதும் மொய்தீன் தவிர வேறு யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் என பல அடி, உதைகளைக் கூட தாங்கிக் கொள்வாள்.

காஞ்சன மாலா வீட்டிற்குள் அடைக்கப்பட்டிருக்கிறாள் என தெரிந்ததும், அவளைச் சந்திக்க வரும் மொய்தீன் தன்னோடு வீட்டை விட்டு ஓடிவரும்படி கேட்பான். ஆனால் காஞ்சனா தங்கள் இரு குடும்பத்தின் பல வருட நட்பு, தனது தங்கைகளின் திருமணம் போன்றவை நாம் ஓடிப் போய் கல்யாணம் செய்வதால் பாதிக்கப்படும். எனவே, இருவீட்டின் சம்மதத்துக்குக் காத்திருப்போம் என தீர்மானமாய் மொய்தீனிடம் சொல்லிவிடுவாள். அப்பு (டோவியோ தாமஸ்) காஞ்சன மாலாவை ஒரு தலையாய் காதலித்து இருப்பான். பலமுறை தனது காதலை காஞ்சனாவிடம் வெளிப்படுத்த முயன்று தோற்றுப்போனவன். ஒருமுறை காஞ்சனாவை இந்த நிலையிலும் தான் திருமணம் செய்துகொள்ளத் தயார் என தன் காதலை வெளிப்படுத்துவான். காஞ்சனா மிகத் தெளிவாக, “எனக்கு மொய்தீன் மேல் இருக்கும் காதலை விட மொய்தீனுக்கு தன் மேல் இருக்கும் காதல் அதிகம். நாங்கள் இருவரும் ஒருவருக்காக ஒருவர் காத்திருப்பது என சத்தியம் செய்து கொடுத்துள்ளோம். இதையும் மீறி நீ என்னை திருமணம் செய்ய நினைத்தால், அது எனது பிணத்தோடுதான் நடக்கும்” என்பாள்.

வருடங்கள் உருண்டு ஓட தங்கைகள், அண்ணன், அப்பு என ஒவ்வொருவரின் திருமணமாய் முடிந்தபோதும் காஞ்சனா, மொய்தீன் திருமணத்திற்கு இரு வீட்டிலும் சம்மதிக்க மறுப்பர். மொய்தீன் தனது காதலை விட மறுப்பதால் ஏற்படும் சச்சரவு அப்பா – மகனை நீதிமன்றம் வரை இழுத்துச் செல்லும். மொய்தீனின் உடல் காயத்தையும் அவனது காதல் நினைவுகள்தான் ஆற்றிடும். எப்போதும் கடிதங்களில் பகிர்வு, எப்போதாவது சில நிமிட சந்திப்புகள் எனக் காதலை வெளிப்படுத்தினாலும், படம் முழுக்க பின்னணி இசையும், பாடல்களும், மழையும் அவர்கள் காதலையும் காத்திருப்பையும் நமக்குள் கடத்தும். ஒரு கட்டத்தில் ‘இனி யார் சம்மதத்திற்கும் காத்து இருக்க வேண்டாம்; நாம் திருமணம் செய்துகொள்வோம்’ என முடிவெடுக்கும் காதலர்களை விதி நிரந்தரமாய் பிரித்துவிடும். இறுதியில் காஞ்சனாவை தன் வீட்டிற்கு தன்னுடைய மருமகளாய் அழைத்து சொல்வாள் மொய்தீனுடைய தாய். அப்போது காஞ்சனா முதல் முதலாய் மொய்தீன் வீட்டில் வலது கால் எடுத்து வைத்து அவன் நினைவுகளுடன் வாழப்போவதால் புன்னகைப்பாள்.

இப்படி தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் கஷ்டப்படுத்துகிற ஒரு காதல் தேவைதானா என்ற கேள்வி நமக்குள் வரும். ‘நமக்கு பிடித்தவர் கிடைக்கலைனா, நம்மைப் பிடித்தவர் கூட வாழ்க்கையை சந்தோஷமா அமைத்துக்கொள்ளணும்’ என பலரும் சொல்வர். உண்மையில், அவர்கள் யாரும் காஞ்சனா போன்றவர்களின் மகிழ்ச்சிக்காக யோசித்தவர்கள் அல்ல; அப்படிச் சொல்பவர்கள் எல்லாம் சுயநலமாய் தங்களுடைய சந்தோஷத்துக்காக யோசித்தவர்கள். காஞ்சனா போன்றவர்களுக்கு உண்மையில் காதல் என்பது வாழ்க்கையில் ஒரே ஒருமுறைதான் வரும். காதல் அவர்களுக்கு பசி அல்ல… உயிர். பழைய காதலி, காதலன் நினைவுகளுடன் வேறு திருமணம் செய்து வாழ்வது எளிது. எதற்கு இப்படி தனிமையில் பிரிந்து கஷ்டபட வேண்டும் என்று அவர்களுக்கு இறக்கப்படும் நாம், அவர்களுக்கு காதல் நினைவுகளில் வாழ்வதில்தான் உண்மையான பேரின்பம் என்பதை புரிந்துகொள்ள மறுக்கிறோம். ஓர் ஆண் தன்னுடைய காதலிக்காகக் காத்திருப்பதும் போராடுவதும் நம் சமூகச் சூழலில் எளிது. ஆனால், வீட்டிற்குள்ளும், சமுதாயத்திலும் பலவீனப்படுத்தியே வளர்க்கப்படும் ஒரு பெண் தன்னுடைய காதலுக்காகத் தனித்துப் போராடுவது அத்தனை எளிதல்ல.

நம்மில் பலருக்கு எத்தனை வயது கடந்தாலும் முதல் காதலைப் பற்றி பேசுவது என்றால், நுனி நாக்கில் தேன் தடவியது போன்றும், தென்றலை நம் பக்கம் யாரோ திருப்பிவிட்டது போன்றும் அத்தனை சுகமான விஷயம். அப்படி ஒரு மருத்துவர், ஒரு பெண்ணிற்கு தன் மீது ஏற்பட்ட காதல் அனுபவத்தை என்னோடு பகிர்ந்தார். அவர் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது அதே வகுப்பில் படித்த ஏழை குடும்பத்து பெண் அவள். பார்க்க மிகவும் அழகு. நல்ல குணமும் கொண்டவள். படிப்பு சரியாக வராததால் இவர் அந்த பெண்ணிற்கு அடிக்கடி பாடத்தில் இருக்கும் சந்தேகத்தை தீர்த்துவைத்துள்ளார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் தனது காதலை அந்தப் பெண் வெளிப்படுத்தியபோது, தான் மருத்துவப் படிப்பிற்காக வெளியூர் செல்லப்போவதாகவும், அத்தனை வருடம் அந்தப் பெண் வீட்டில் திருமணம் செய்யாமல் காத்திருப்பது சாத்தியமில்லை; அதனால், என்னால் உன்னை திருமணம் செய்ய இயலாது என்று சொல்லிவிட்டு கடந்துவிட்டார். பின்னர் ஒருமுறை நண்பர் ஒருவர் மூலம் அந்தப் பெண் தீரா வயிற்றுவலியில் இறந்து விட்டாள் என தெரியவந்தபோது அவளுக்காக வருந்தினார்.

வருடங்கள் பல கடந்தபோது இவருக்கு வேறு பெண்ணுடன் காதல் திருமணம், குழந்தைகள் என வாழ்க்கை ரம்மியமாக நகர்ந்துள்ளது. ஒருநாள் பழைய நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தபோதுதான் அந்தப் பெண் உயிருடன் இருப்பதாகவும், திருமணமே செய்துகொள்ளவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. ஒருமுறை அந்தப் பெண்ணை நேரில் பார்க்கச் சென்றார். தனது புகைப்படத்தையும், தன்னைப் பற்றி வெளிவந்த செய்தித்தாள் பக்கங்களையும் மட்டுமே தனக்கான பொக்கிஷங்களாக தலையணையில் அந்தப் பெண் வைத்துப் பாதுகாப்பதைக் கண்டு திகைத்துவிட்டார். அவரது தங்கைகளுக்குத் திருமணம் முடிந்துவிட்ட நிலையில், அவர் தனித்து தனிமையில் வாழ்கிறார் என்பதும் தெரிய வந்தது. “என் வாழ்க்கையில் உங்களை மீண்டும் சந்தித்தது மிகப் பெரிய மகிழ்ச்சி. இனியும் என்னைப் பார்க்க வரவேண்டாம். அது உங்களின் சமூக மரியாதையையும் ,குடும்ப நிம்மதியையும் கெடுக்கும்” என்றார் அந்தப் பெண்.

அந்த மருத்துவரின் காதலியை எது வாழ்க்கையை நகர்த்த வைக்கிறது என்று யோசித்தபோது, அவளது காதல் நினைவுகள்தான் என்பதை காஞ்சனமாலா எனும் நிழலழகி மூலம் புரிந்துகொள்ள முடிந்தது. தான் காதலிக்கப்படுவதை உணரும் நினைவுகளை விட, தான் காதலித்துக்கொண்டிருப்பதை உணர்த்தும் நினைவலைகளே ஒருவரின் இருப்புக்குப் போதுமானது என்றும் தோன்றுகிறது.

கண்டதும் காதல், கவித்துவக் காதல், பார்க்காமலே காதல், பேசாமலே காதல், கண்றாவிக் காதல் என காதல் பலவகை என்றாலும், காஞ்சனா போன்றவர்களின் காதல் சாபமாக நமக்கு தெரிந்தாலும், அவர்களுக்கு அது வரமே!

தொடரும்…

Advertisements

பிரிவுகள்:சினிமா

Tagged as:

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s