செய்திகள்

மத்திய அரசு எள் என்று சொன்னால், தமிழக அரசு எண்ணெயாக நிற்கிறது: மு. க. ஸ்டாலின்

காஞ்சிபுரத்தில் உள்ள செவிலிமேடு குளம், உத்திரமேரூர் தொகுதியில் உள்ள உத்திரமேரூர் குளம், செய்யூர் தொகுதிக்கு உட்பட்ட விளாகம் குளம் ஆகிய குளங்களை  தூர்வாரி, சீரமைத்தது திமுக. இந்த குளங்களை பார்வையிட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கு நிகழ்வை திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலையேற்று நடத்தினார். இந்நிகழ்வு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்று சொன்னாலும் இந்தப் பணிகள் பொதுமக்கள் பாராட்டும் வகையில் நடைபெறுவது, உள்ளபடியே தலைவர் கலைஞர் அவர்களுக்கும், திமுகவுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. நாங்கள் எந்தளவிற்கு எதிர்ப்பார்த்தோமோ அதைவிட மிக சிறப்பான வகையில் தி.மு.கழகத்தை சேர்ந்த அனைவரும் தூர்வாரும் பணிகளை நிறைவேற்றி இப்படிப்பட்ட சிறப்பினை கழகத்திற்கு சேர்த்துள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், கழக தோழர்கள் அனைவருக்கும் திமுகவின் சார்பில் எனது பாராட்டுகளை, வாழ்த்துகளை, நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதையெல்லாம் பார்த்தாவது ஆளுங்கட்சியான அதிமுக, ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, நீர்நிலைகளில் தூர் எடுக்கின்ற பணிகளை உடனடியாக துரிதப்படுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்கின்ற பணிகளில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

பின்னர் செய்தியாளர்கள், காவிரி டெல்டா பகுதியை பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டுமென்று விவசாயிகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், பெட்ரோ கெமிக்கலுக்காக இடங்கள் ஒதுக்கியிருப்பதாகவும், அதற்கு அரசு அனுமதி தந்திருப்பதாகவும் ஓ.என்.ஜி.சி., நிறுவனம் கூறுவது பற்றிக் கேட்டார்கள்.

அவர்களிடத்தில் கடலூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களை பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலமாக தமிழக அரசு அறிவித்திருப்பது உள்ளபடியே அதிர்ச்சியளிக்கக்கூடிய செய்தியாக அமைந்திருக்கிறது. குறிப்பாக ஹைட்ரோ கார்பன் திட்டம், கதிராமங்கலம் ஓ.என்.ஜி.சி., திட்டம் என்பது மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களாக அமைந்திருக்கிறது. எனவே அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் போராடிக் கொண்டிருக்கக்கூடிய இந்தநேரத்தில் இப்படி அறிவித்திருப்பது உள்ளபடியே வேதனை தரக்கூடிய செய்தி.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை பொறுத்தவரையில் மக்களுக்கு கொடுக்கக்கூடிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாத நிலையில், அதுவும் மத்திய பாஜக அரசு எதை சொன்னாலும் ‘எள்’ என்றால் ’எண்ணெய்’ என்பதுபோல மாறிக் கொண்டிருக்கிறார். அதேபோல, பாஜக அரசு தான் செய்ய நினைப்பதை இன்றைக்கு மாநிலத்தில் இருக்கும் இந்த ‘குதிரை பேர’ ஆட்சியை பயன்படுத்தி செய்துக் கொண்டிருக்கக்கூடிய நிலைதான் உள்ளதே தவிர வேறெதுவுமில்லை என்றேன்.

சென்னை மாநகர மக்களின் குடிநீர் பிரச்னையைப் போக்க – குறைந்த கட்டணத்தில் அதிகளவு குடிநீரை லாரிகள் மூலம் வினியோகம் செய்யவும் – ஆந்திர முதல்வரை சந்தித்து கிருஷ்ணா நதி நீரை பெறவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று நான் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை மாநகரம் வரலாறு காணாத குடிநீர் பஞ்சத்தை சந்தித்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் மாதக்கணக்கில் குடிநீர் விநியோகிக்கப் படுவதில்லை. ஒருசில பகுதிகளில் குழாய்களில் வரும் குடிநீரும் சாக்கடை கலந்து வருவதாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. சென்னைக்கு குடிநீர் தரும் பிரதான ஏரிகளில் தண்ணீர் இல்லாத நிலையில், கல்குவாரிகளை தேடி அலையும் அவல நிலையை இந்த அதிமுக அரசு ஏற்படுத்தி விட்டது.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் வடசென்னை பகுதியிலும், நெம்மேலியில் துவங்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் தென்சென்னை பகுதியிலும், குடிநீர் பிரச்னையை தீர்க்க ஓரளவு கை கொடுத்துக் கொண்டிருக்கின்றன என்பது ஆறுதலான செய்தியாக இருந்தாலும், சென்னை மாநகர மக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் கடந்த ஆறு ஆண்டுகளாக அதிமுக அரசு படுதோல்வி அடைந்துள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகம் எதிர் கட்சியாக இருந்தாலும் இன்றைக்கு ஆளுங்கட்சி செய்ய வேண்டிய பணிகளை செய்து வருகிறது. தமிழகம் முழுவதும் குளங்களை தூர் வாரும் பணிகளை மேற்கொண்டு, நேற்று மட்டும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 குளங்கள் மற்றும் 2 ஏரிகள் தூர்வாரப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்துள்ளேன். குறிப்பாக வந்தவாசி மும்முனி குளம் தூர்வாரம்போது, நீரூற்று ஏற்பட்டதன் காரணமாக அந்தப் பகுதி மக்களின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் அளவிற்கு அது பயன்பட்டு வருகிறது.

அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு, 16.4.2013 அன்று நெம்மேலியில் 1371 கோடி ரூபாய் மதிப்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் 110-வது விதியின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதேபோல், சென்னை அருகில் உள்ள போரூரில் 4,070 கோடி ரூபாய் மதிப்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஒன்றும் அறிவிக்கப்பட்டது. இந்த இரு திட்டங்களும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஆந்திர மாநில அரசுடன் உரிய நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சென்னை மாநகருக்கு கிடைக்க வேண்டிய 12 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீரையும் பெறமுடியவில்லை.

சென்னை மாநகருக்கு குடிநீர் தரும் ஏரிகளை ஆழப்படுத்தி, மழை வெள்ளத்தில் கடலில் கலந்த வெள்ளநீரை சேமித்து வைக்கவும் இந்த ஆட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவை பற்றியே துளியும் கவலைப்படாமல் தூங்கிக் கொண்டிருக்கும் இந்த அரசின் பொறுப்பற்ற செயலால், இன்றைக்கு சென்னை மாநகர மக்கள் குடிநீருக்காக அவதிப்படும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. எங்கு பார்த்தாலும் டெங்கு போன்ற நோய்கள் பரவிக் கொண்டிருக்கின்ற நேரத்தில், பாதுகாப்பான குடிநீர் இல்லாமல் சென்னை மாநகர மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதிமுக ஆட்சியை ’அறிவிப்பு அரசு’ என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மீண்டும் மீண்டும் குற்றம்சாட்டி வருகிறோம். ”110 அறிவிப்புகளில் சொன்னதை செய்திருக்கிறீர்களா என்பது குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யுங்கள்”, என்று எத்தனையோ முறை வாதாடியிருக்கிறோம். நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டதொடரில் கூட, ”110-வது விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்புகளை எல்லாம் உறுதிமொழிக் குழுவிற்கு அனுப்பி வையுங்கள்”, என்ற கோரிக்கையை சட்டமன்றத்தில் நானே வைத்தேன். அப்போது பதிலளித்த முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி, “110-வது விதியில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் எல்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு ஆதாரங்கள் இருக்கிறது”, என்றார்.

ஆனால், இப்போது இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவர் (சி.ஏ.ஜி) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராமநாதபுரம் குதிரைமொழி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், தூத்துக்குடி ஆழந்தலை கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகிய இரு திட்டங்களுக்காகவும் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 200 கோடி ரூபாய் செலவழிக்கப்படாமல் சரண்டர் செய்யப்பட்டுள்ளது”, என்ற அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார். இந்த இரு திட்டங்களும் 10.4.2013 அன்று 110-வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள்.

ஆகவே, சென்னை மாநகரத்தில் மட்டுமல்ல, தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் ’குதிரை பேர’ அதிமுக அரசுக்கு எவ்வித ஆர்வமோ, ஆக்கபூர்வமான முயற்சியோ இல்லை. அதைவிட, “110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்பட்டுள்ளன”, என்று முதலமைச்சர் அப்பட்டமான பொய்யை சட்டமன்றத்திலேயே சொல்லியிருக்கிறார் என்பது வேதனையளிக்கிறது.

எனவே, இனியும் காலம் தாழ்த்திக் கொண்டிருக்காமல், உடனடியாக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி, ஆந்திர முதல்வர் திரு. சந்திரபாபு நாயுடு அவர்களை சந்தித்து, சென்னை மாநகருக்கு கிடைக்க வேண்டிய கிருஷ்ணா நதி நீரை உடனடியாகப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்னை மாநகர மக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண, லாரிகளில் குடிநீர் சப்ளை செய்வதை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். அதுமட்டுமின்றி, சென்னை மாநகர மக்களுக்கு லாரிகளில் வழங்கப்படும் குடிநீருக்கான கட்டணத்தையும் குறைக்க வேண்டும்.

Advertisements

1 reply »

  1. petrol has become scarce. All the western countries are switching over to Hydro Carbon. Fortunately, We have an abundance of this commodity. We should encash it and Tamilnadu should develop. The fuel is lying much below the water table and will not affect the surface soil. Only politicians are objecting to this project for their political gain. Let us not have a confrontation with the centre.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s