நூல் அறிமுகம் புத்தக அறிமுகம்

கொக்குகளுக்காகவே வானம்: தியாக சேகரின் ஓரிகாமி மடிப்பு கலை நூல் வெளியீடு!

“சாதாரண சின்னகிராமத்தில் இருக்கும் ஒரு குழந்தை தான் மடித்துசெய்த கொக்கையோ, தும்பியையோ, யானையையோ உயிர்பொம்மையாக நினைத்து அதை எடுத்துக்கொண்டுபோய் அவளுடைய விளையாட்டுப்பொருட்களுடன் சேர்த்து வைத்துகொள்வாள் எனில் அதுதான் நான் நம்பும் புரட்சி”
இயல்வாகை
மண்கட்டிடத்தை முதன்முதலாக காட்டுப்பள்ளியில் எழுப்ப நமக்குள் எண்ணம் உதித்த காலச்சூழலில் எல்லோருக்கும் ஒரு சின்ன கோரிக்கையை பொதுவில் முன்வைத்தோம். அந்த கோரிக்கை பொருளையோ தொகையையோ சார்ந்தது அல்ல.
அவரவர்களுக்கு பிடித்தமான, மனதுக்கு அந்தரங்கமான ஆத்ம உறவுடைய, எப்போதுமே வாழ்விணைத்து நினைத்துக்கொள்ள விரும்புகிற நிலத்திலிருந்து ஒரு கைப்பிடி மண்ணோ, நீரோ, சிறுகல்லோ… எதுவாயிருந்தாலும் தொட்டெடுத்து அனுப்பிவையுங்கள் என்பதே அந்த வேண்டல்.கற்கள்கற்களாக அப்படி நிலமெழும்பின அந்த மண்கூடு தன்னளவில் முழுமைகொண்டிருந்த நாளில், அதற்கான திறவுக்காக அரவிந்த் குப்தா குக்கூவுக்குள் உள்நுழைந்த தருணத்தில் நூற்றுக்கணக்கான காகிதக் கொக்குகள் ஒரு மரத்தின் கிளைகளில் கட்டித் தொங்கிக்கொண்டிருந்தன.

அந்தமரம் பாறையில் வேரூன்றியிருந்த இலைகளுதிர்ந்த ஒரு பாலை மரம். மாடு கன்று ஈன்ற பின்பு சினைநஞ்சு கட்டப்படுகிற மரங்களாகவே பாலைமரம் பூமியில் நிற்கிறது. பறக்கும் அவ்வண்ணக் கொக்குகள் எல்லாம் விதவிதமான விரல்கள் எல்லாம் கூட்டாகச்சேர்ந்து காகிதங்களை மடித்துமடித்து உருவம் கொடுத்தவைகள்.

பாலை மரத்தடியில் நின்று அரவிந்த் குப்தா அண்ணாந்து பார்க்கும்போது, விரிந்துநிற்கும் கிளைக்குச்சிகள் முழுக்க கொக்குகளாக பறப்பதும், அவைகளின் பின்புலத்தில் ஆகாயவெளி நீலம் பூத்திருந்ததும் கண்களை விட்டகலாதவை. கொக்குகளின் சிறகில் அமைதியை எழுதிக்கொண்டிருக்கும் சசாகியின் தீராப்பிரார்த்தனையாகவே அந்த தருணத்தை எல்லோரும் மனதுற்றோம்.

தியாகசேகர், வாழ்வினை விடாப்பிடியான தீவிரத்தோடு வாழ விரும்புகிற… அவ்வளவு நெருக்கடிகள், அத்தனை துயரங்கள் எல்லாவற்றையும் தாங்கியும் தாண்டியும் மீண்டும்மீண்டும் வாழ்வட்டத்துக்குள் வந்துவிழுந்த சகஆள். சமூகப்பணிக்கான கல்லூரிக்கல்வியை முடித்திருந்தும், தனியார் தொண்டுநிறுவன வேலைகளில் மிதமிஞ்சிய சம்பளத்திற்கான வாய்ப்புச்சூழல் இருந்தும்… முழுதையும் தவிர்த்துவிட்டு இந்த நிலப்பரப்பெங்கும் அலைந்துதிரிகிறார்.

காகித மடிப்புக்கலை ஒரிகாமியைக் கற்றுக்கையிலெடுத்து குழந்தைகளிடம் இயங்குகிறார். சாதாரணமாக நினைக்கும் வெற்றுக்காகிதத்தை மகிழ்வுதரும் உருவங்களாக மாற்றி நம் கண்ணோட்டத்தை சீர்படுத்தி வியப்பை ஏற்படுத்துகிறார். அவரிடம் பேசும்போது அவரொரு வார்த்தை சொன்னார், அது “சாதாரண சின்னகிராமத்தில் இருக்கும் ஒரு குழந்தை தான் மடித்துசெய்த கொக்கையோ, தும்பியையோ, யானையையோ உயிர்பொம்மையாக நினைத்து அதை எடுத்துக்கொண்டுபோய் அவளுடைய விளையாட்டுப்பொருட்களுடன் சேர்த்து வைத்துகொள்வாள் எனில் அதுதான் நான் நம்பும் புரட்சி”.

பத்துவருடகாலமாக ஒவ்வொரு கட்டத்திலும் தியாகசேகருடைய தன்னுணர்தலையும் அதுசார்ந்த மனமாறுதல்களையும் நாங்கள் கண்டுவருகிறோம். அவருடைய இந்த கொக்குகளுக்காகவே வானம், தமிழ் ஓரிகாமிப் புத்தகம் காலத்தால் அவசியாமனதாக நாங்கள் நினைக்கிறோம். கடந்த இருவாரங்களாக அவர்கொண்ட மெனக்கெடல்களையும், நிறைய உழைப்பையும் உட்சுமந்து இப்புத்தகம் இயல்வாகை பதிப்பில் வெளிவருகிறது.

நம்மாழ்வார் மிகவும் நேசித்த, தன்னோடு இருக்கவேண்டுமென அவர் ஆசைப்பட்ட மனிதர்களில் தியாகசேகரும் ஒருவர். ஆனால், நம்மாழ்வாரைத் தாண்டி குழந்தைகளிடம் செல்வதே சரி என்று அய்யாவின் கரங்களிடமிருந்து தன்னை வழிய விடுவித்துக்கொண்டு குழந்தைகளிடம் சென்றடைந்ததை இக்கணம் மனதில் நினைக்கிறோம். 

இப்போது… ஏதோவொரு பள்ளிக்கூடத்தில் இவர் சொல்லித்தரும்போது நம்மாழ்வாரும் உட்கார்ந்து ஒரு குழந்தையின் கைவிரல்களாக இருந்து கற்றுகொள்வதாகவே மனதார நம்புகிறோம். தியாக சேகருக்கு எங்களின் நெஞ்சார்ந்த அன்பும் வாழ்த்துகளும்.

வாய்ப்பிருக்கும் நண்பர்கள் எளிய இப்புத்தக வெளியீட்டு நிகழ்வுக்கு வாருங்கள்.

ஈரோடு புத்தக கண்காட்சி

இயல்வாகை பதிப்பகம்

அரங்கு எண் 154

காலை 11.00 மணி முதல் இரவு 9 மணி வரை

9942118080

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: