
அருண் நெடுஞ்செழியன்
தற்கால தமிழக அரசியலில் நடைபெற்றுவருகிற கேலிக்கூத்து நிகழ்வுகள் அனைத்தும் ஏதோ திடுமென மக்கள் அசந்திருந்த நேரத்தில் நடக்கிறது என பொருள் கொள்ள இயலுமா?
காமேடியல்ல ட்ராஜிடி என்றும், வெட்கக்கேடு என்றும், பதவி அதிகார போட்டிக்கான மானமற்றவர்களின் கேவலமான சண்டை என்று மட்டும் நாம் கூறிவிட இயலுமா? இங்கு விஷயம் என்னவென்றால் இந்த மகா வெட்க நிகழ்வுகள் அனைத்தையும் நடைமுறையில் உள்ள முதலாளித்துவ ஜனநாயக அமைப்பு முறையே சாத்தியமாக்கி வருகிறது என்பதுதான்!
டிசம்பர் -5 முதலாக தற்போதுவரை நடைபெற்றுவருகிற அனைத்து நிகழ்வுகளும், மெரினா தியானம் முதலாக இணைப்பு நாடகம் வரையிலும், கூவத்தூர் முதலாக தற்போது புதுவை ரிசார்ட் வரையிலும், அனைத்து சம்பவங்களுமே முதலாளித்துவ அரசியல் சாசனத்திற்கு எதிரானது அல்ல!
இங்கேதான் இந்த புனிதக் குடியரசு அமைப்பின் உள்ளடக்கத்தை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.இந்த அமைப்பின் வர்க்க சார்புத்தன்மையை விளங்கிக் கொள்ளவேண்டும். இந்த புனிதக் குடியரசு அமைப்பு அடிப்படையிலேயே முரண்பாடுகளை கொண்டது.இந்திய ஆளும்வர்க்கத்தை சேர்த்தவர்கள், பாஜகவோ, காங்கிரசோ யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் சமூக அனைத்திற்கும் எஜமானர்கள் ஆகிறார்கள். அனைத்து மக்களுக்குமான நல்லாட்சியை வழங்குவதாக சொல்கிறார்கள்.இந்திய அரசியல் சாசனத்தின் வழி இந்நாட்டின் மக்கள் அனைவரும் சமம்தான். ஆனால் எதார்த்தத்தில், சமூக -அரசியல் -பொருளாதார அடிப்படையில் யாவரும் சமமில்லை என்பதுதான் உண்மை!
நடைமுறையில் உள்ள ஒரு முதலாளித்துவ ஜனநாயக அரசிற்கு தலைமை வகிப்பவர்கள், ஒரு வர்க்கத்திடம் சுரண்டித்தான் இன்னொரு வர்க்கத்தின் தேவையை பூர்த்திசெய்யமுடியும். அதாவது அதானி அம்பானி டாட்டா என்ற முதலாளித்துவ வர்க்கத்தின் தேவைக்கு, அவர்களின் பிரதிநிதிகளான மந்திரிகள், முதன்மை அமைச்சர்கள் உழைக்கும் வர்க்கமான பாட்டாளிகள், விவசாயிகளை சுரண்டிதான், இயற்கை வளத்தை சுரண்டித்தான் சேவை ஆற்றவேண்டும்.
இந்த சேவையை எவ்வளவு சொல் அலங்காரங்கள் கொண்டு அலங்கரித்தாலும், பாராளுமன்ற மயக்கங்களில் மக்களை கிடத்தினாலும், உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டின் வர்க்க சார்பு ஆட்சி வெளிப்பட்டுக் கொண்டுதான் வரும். கோதாவரிப் படுகையில் ரிலைன்ஸ் நிறுவனத்தின் ஊழல் கொள்ளை, தாது மணல் கொள்ளை, மல்லையா கடன் பெற்று ஓட்டம் என்ற செய்திகள் யாவும் இதற்கு சில உதாரணங்கள்!
இழந்த உரிமைகளுக்கு எதிராக போராடுகிற மக்களிடம் போலீஸ் ராணுவம் கொண்டு வீரம் காட்டுவார்கள், அடக்கி ஒடுக்குவார்கள். ஆனால் பதவி பணம் பேராசைக்கு கோழைகளைப் போல மண்டியிடுவார்கள். ஒட்டு போட்டப்பின் இந்த புனித குடியரசு அமைப்பில் இருந்து அந்நியப்படுகிற மக்கள், அதன் பின் இந்த அமைப்பில் பங்கேற்கவோ, தங்களது பிரதிநிதிகளை திரும்ப பெறவோ, அரசியல் சாசனத்தின் படி வாய்ப்பு இல்லாத காரணத்தால் மீண்டும் இந்த அமைப்பின் மாபெரும் சக்கரத்தில், ஓட்டுபோட்டு வெளியேற்றப் படுகிற பங்களிப்பை மட்டுமே செய்கிறார்கள்
ஆனால் உழைக்கும் மக்கள் அதிகாரத்தை கைப்பற்றி அமைத்த பாரிஸ் கம்யூன் இதற்கு நேர் எதிரானது. மக்கள் பிரதிநிதிகள் எப்போது வேண்டுமானாலும் இந்த அமைப்பில் இருந்து திரும்ப அழைக்கப்படலாம். உயர் அதிகாரி முதல் கடைகோடி உழைக்கும் மக்கள் வரை அனைவருக்கு சமமான ஊதியம். இன்னும் பல மாய வித்தை காட்சி போல அதிசயங்களை நிகழ்த்தியதுதான் பாரிஸ் கம்யூன் புரட்சி…. ஆனால் ரத்த வெள்ளத்தில் உலகின் முதல் பாட்டாளி வர்க்க கம்யூன் ஆட்சி மூழ்கடிக்கப்பட்டது. ஆனால் அது வராலாற்று பெருமையுடன் வீழ்ந்தது. மக்கள் குடியரசின் மெய்யான அர்த்தத்தை நடைமுறைப் படுத்தியது.
அந்தப் பாரிஸ் கம்யூன் எங்கே? இந்த பாராளுமன்ற, சட்டமன்ற ஆட்சி எங்கே?
அருண் நெடுஞ்செழியன், சமூக-அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல், அணுசக்தி அரசியல் ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.

சுதந்திர ஊடகத்துக்கு ஆதரவளியுங்கள்
த டைம்ஸ் தமிழ் சார்பற்று செயல்படும் சுதந்திர ஊடகம். நீங்கள் தரும் குறைந்தபட்ச நன்கொடை எங்களை நகர்த்தும்.
$1.00