ஆற்றல் பிரவீண்குமார்
இது ஏதோ ஒரு நகரத்து தார் சாலை அல்ல. எங்க ஊரில் காணாம போன ஆறு.. இப்பதான் கண்டு பிடிச்சோம். இந்தியாவின் மூத்த ஆறுகளில் ஒன்றான பாலாற்றின் நடுவில் எடுக்கப்பட்ட படங்கள் இவை. பல வருடங்களுக்குப் பிறகு இந்த ஆற்றில் இப்போதுதான் நல்ல தண்ணீர் ஓடுகிறது. பல வருடம் தண்ணீர் வராமல் இருந்ததால் பாலம் கட்டாமலே தார் சாலைகள் அமைக்கப்பட்டு இங்குள்ள தொழிற்சாலைகளின் வண்டிகளை பார்க் செய்யும் இடமாக காலப்போக்கில் மாறியது. காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த இடத்தில மட்டும் 50 வண்டிகள் நிற்கும். இது வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள பாங்கி ஷாப் பகுதி.
‘பாலாறும் தேனாறும் ஓடவைப்போம்…’ என்று ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் வாக்குறுதிகள் தூள் பறக்கும். ஆனால் ஓடிக் கொண்டிருந்த பாலாறு… பாழாறாகிப் போச்சே என்று அங்கலாய்ப்பது மட்டுமே வேலூர் மாவட்ட மக்களின் வாடிக்கையாகிப் போச்சு.மக்களாகிய நம் பங்கும் இதில் இருக்கவேண்டும் என்று இன்னமும் நம் மக்களுக்கு உறைக்கவே இல்லை.ஆம்பூர்,வாணியம்பாடி,பேர்ணாம்பட்டு பகுதிகளில் பாலாற்றின் நிலை இதுவே.
இந்தியாவின் மூத்த ஆறுகளில் ஒன்று என்று பாலாற்றைச் சொல்லுவதற்குக் காரணம் உண்டு. அதாவது சுமார் 100 அடி ஆழம் வரை பாலாற்றில் மணல் சுரங்கம் போன்று இருக்கும். இந்த மணல் சுரங்கத்தைத்தான் அடி வரை தோண்டுகிறார்கள். ஒரு அடி மணல் உருவாவதற்கு பல நூற்றாண்டுகள் ஆகின்றன என்கிறது ஆய்வுகள். ஆனால், மணல் கொள்ளையர்களோ ஆற்று மணலை கணக்கில்லாமல் அள்ளிக்குவித்து பணமாக்கி விடுகிறார்கள் என்றால் எங்கள் மக்களின் பங்குக்கு குப்பை கொட்ட வண்டி நிறுத்த ஆக்கிரமிப்பு செய்ய என்று செய்கிறார்கள்.
கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே கர்நாடக மாநிலத்தில் பாலாற்றின் தண்ணீர் வரத்துத்தடுக்கப்பட்டுவிட்டது. 1992-க்குப் பிறகு பாலாற்றில் நீர்வரத்து குறைந்து போய், இப்போது முற்றிலும் மோசம். இந்த நிலை மாற வேண்டும். நதிகளுக்கும் நிலத்திற்கும் உயிருண்டு என்பதை புரிய வைக்கும் கல்வி வேண்டும். மனிதர்களுக்கு அருகில், எளிய மனிதர்களுக்கு அருகில், வாழ வக்கற்றுப்போய்க்கொண்டிருக்கும் சாமானியர்களுக்கு அருகில் அழைத்துச் செல்லும் கல்வி வேண்டும்.
நகரம், வளர்ச்சி, தொழில்நுட்பம் போன்றவை மனநோயாளிகளையும் பொறுப்பற்ற நுகர்வுக் கலாச்சார அடிமைகளையும் உற்பத்தி செய்து வருவதை ஆழ்ந்து பேசக்கூடிய கல்வி வேண்டும்.
குழந்தைகள், பழங்குடிகள், கலைஞர்கள் மற்றும் இயற்கையிடமிருந்து கற்பதே வாழ்வு என்பதை நம்பும் கல்வி வேண்டும். பேராசை நோய்கொண்ட அரசுகள் மற்றும் பெருமுதலாளிகள் கண்ணுக்குத் தெரியாத வன்முறைகளை பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கு எதிராகவும் தினமும் நிகழ்த்துகின்றன என்பதை மனதில் பதிய வைக்கும் கல்வி வேண்டும்.
நாம் தரமான அடிமைகளாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறோம் என்பதையும், கல்வி என்றால் என்னவென்று நாம் அறியாத வண்ணம் மறைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் விரிவாகப் பேசும் கல்வி வேண்டும். கரிசல் மண்ணில் ஒரு சிறுவனோடு நடக்கையில் எதிரில் வந்து நின்ற மண்புழுவை கவனித்து மண்ணோடு அள்ளி புல்புதருக்குள்விட்ட ஆன்மாவை சிதைக்காத கல்விதான் நமக்கு வேண்டும்.
ஆற்றல் பிரவீண்குமார், சூழலியல் ஆர்வலர்.