Dharmaraj Thamburaj
‘தலித்’ என்பது ஆவேசம் என்றால், அது ஒரு தனி நபர் தன்னை ‘தலித்’ என்று அறிவித்துக் கொள்ளும் முறை. ‘நான் தலித்!’ என்று சொல்லிக் கொள்வது மட்டுமே எப்பொழுதும் சாத்தியம்.
அடுத்தவரை ‘தலித்’ என்று அடையாளப்படுத்த ஆரம்பிக்கும் பொழுது அந்த வார்த்தையின் ஆவேசம் வடிந்து விடுகிறது.நிறைய நேரங்களில் தலித் அரசியலில் இது தான் பிரச்சினை.
இளவரசன், சங்கர் நிகழ்வுகளில், அவர்களின் மரணத்தில் சாதியம் இருந்தது. அதைப் பார்த்து / கேள்விப்பட்டு அதே போன்ற மரண பயத்தை அடைந்தவர்கள் ஒவ்வொருவரும் தன்னை ‘தலித்’ ‘தலித்’ என்று சொல்லி ஆவேசப்பட்டது வேறு,
அனிதாவின் மரணத்தில் நிகழ்வது வேறு.
அனிதா தலித்தாக இறந்து போகவில்லை. அவள், தமிழகத்தில், வறிய குடும்பத்தில், சமச்சீர் கல்வியைப் பயின்ற, அநியாயமான தேர்வு முறையால் வஞ்சிக்கப்பட்ட குழந்தை. அவளது மரணம் தமிழகத்தின் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு நேர்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. இதில் எந்த இடத்தில் அக்குழந்தை தலித்தாக இருந்தது?
அந்த மரணம் எந்த வகையில் என்னை தலித் என்று உணர வைக்கிறது?
அந்த மரணம், தமிழ் நாட்டில் வாழும் தகப்பனாக என்னை வதைக்கிறது; சமச்சீர் கல்வியைப் பயிலும் மாணவனாக என்னை மனப்பிராந்திக்குள் ஆழ்த்துகிறது; வறுமையில் வாடுகிற மனிதனாக என்னை கலக்கத்தில் ஆழ்த்துகிறது; கல்வி நம்மை முன்னேற்றும் என்று நம்பிக்கொண்டிருந்த அனைவரையும் அது சிதறடிக்கிறது. மாநில சுயாட்சியை இழந்த நபர்களாக கழிவிரக்கத்தில் தள்ளுகிறது.
இந்த இடத்தில் நான் நிச்சயமாய் ‘தலித்’ என்று சொல்லி ஆவேசப்பட மாட்டேன்.
இந்த இடத்தில் ‘நான் ஏன் தலித்தும் அல்ல?’ என்று தான் நான் சொல்லிக்கொண்டிருப்பேன். தலித் என்பது சாதி அடையாளமில்லை என்றால், அனிதா எப்படி தலித்தாவாள்?
Advertisements