கே. ஏ. பத்மஜா

Magalir Mattum | Bramma | Tamil | 2017
‘இந்தியா – பாகிஸ்தான் பிரச்சினை சுமுகமாகத் தீர்ந்துவிட்டது’ என்று சொன்னால்கூட ‘அப்படியா?’ என்று சர்வசாதாரணமாகக் கடந்து போகும் நம் மக்கள், “அந்த வீட்டுல மாமியாரும் மருமகளும் இணக்கமாக சேர்ந்துவிட்டார்கள்” என்றால், “அப்படியா!” என்று வாயைப் பிளப்பார்கள். அந்த அளவிற்கு மாமியார் – மருமகள் என்றால், அவர்கள் இருதுருவத்தில் இருந்துகொண்டு ‘போர்… ஆமாம் போர்’ என்ற ரீதியில் சண்டை போடுவதாகவே ஆண்டுடாண்டு காலமாகக் காட்டியுள்ளது தமிழ் சினிமாவும் மெகா சீரியலும்.
திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்குள் போகும் பெண்ணை துக்கம் விசாரிப்பதுபோல் ‘மாமியார் உன்னை நல்ல வச்சுக்குறாங்களா?’ என்று கேட்கும் அக்கம்பக்கத்தினர் என இந்த உறவை இன்றுவரை ஒரு வேற்று கிரகத்து உறவாகவே மாற்றிவிட்டனர்.
‘மகளிர் மட்டும்’ – 2017 ஆம் ஆண்டு பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா, ஊர்வசி, சரண்யா, பானுப்ரியா, நாசர், லிவிங்ஸ்டன், மாதவன் என ஒரு நடிப்பு பட்டறைகளின் கூட்டால் உருவான படம். ஜோதிகாவை மையமாக வைத்து, அவரை முதன்மைப்படுத்திய படம்.
ஜோதிகா புல்லட் ஓட்டும் காட்சிகளாலும் புகைப்படங்களாலும் இரண்டு வருடங்களாக விளம்பரப்படுத்தப்பட்ட படம். ‘ஆண்கள் தோசை ஊற்றி, தங்களுக்குப் பிரியமானவர்களுக்கு அதை வழங்க வேண்டும்’ என்றெல்லாம் படத்தின் ப்ரோமோஷனிற்கும் சூடேற்றினர். 1994 ஆம் வெளியான ‘மகளிர் மட்டும்’ படத்துக்கும் இதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. பெண்களின் பல்வேறு பிரச்சினைகளும் இதில் பேசப்பட்டிருக்கிறது என புகழாரம் வந்துகொண்டேதான் இருக்கிறது.
மூன்று உயர்நிலைப் பள்ளி தோழிகள் ராணி அமிர்தகுமாரி (பானுப்ரியா), சுப்புலட்சுமி (சரண்யா), கோமாதா (ஊர்வசி) ஆகியோரின் அற்புதமான பள்ளி விடுதி வாழ்க்கை எதிர்பாராமல் ஒருநாள் முடிந்து போகிறது. வாழ்க்கை ஓட்டத்தில் எங்கெங்கோ தொடர்பில் இல்லாமல் போன இந்தத் தோழிகள் உலகமானது திருமணம், சீமந்தம், குழந்தை வளர்ப்பு, பேரப்பிள்ளைகள் என பல வருடங்களில் உருண்டு செல்கிறது. ஒருநாள் இவர்கள் மூவரையும் சந்திக்கவைக்க பிரபாவதி (ஜோதிகா) எடுக்கும் முயற்சியையும், குடும்பங்களில் பெண்கள் சந்திக்கும் இயல்பான பிரச்சினைகளையும் பேசிய படம் ‘மகளிர் மட்டும்’.
பல முக்கிய பெண் கதாபாத்திரங்கள் இருந்தும், என்னை அதிகமாக கவனம் ஈர்த்தவர் ஊர்வசிதான். தன் உடல்மொழி, நடிப்பு, காமெடி என அத்தனையிலும் ஊர்வசி தனக்கென ஓர் அடையாளம் பெற்றுக்கொண்டே இருக்கிறார். கோமாதா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஊர்வசி ‘இப்படி ஒரு மாமியார் கிடைத்தால் செம்ம’ என்று தமிழ்நாட்டுப் பெண்களை ஏங்க வைத்துவிட்டார். இப்படி எல்லாம் ஒரு மாமியார் இருப்பாரா என்று பல மருமகள்களை பெருமூச்சி விட வைத்துவிட்டார்.
முதல் காட்சியில் தன்னுடைய மகனை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைத்துவிட்டு, அந்தப் படபடப்பு அடங்காமல் பிரபாவதியுடன் காரில் பயணிப்பார் கோமாதா. ஆரம்பத்தில் கோமாதாவும் பிரபாவதியும் அம்மா – பெண்ணா அல்லது தோழிகளா என்றெல்லாம் யோசித்து கொண்டிருக்கும் நமக்கு, அவர்கள் மாமியார் – மருமகள் என்பது தெரியும்போது ஆச்சரியம்.
கணவன் இறந்த பிறகு, மகன் படிப்பை முடித்து வெளிநாட்டு வேலைக்கு செல்கிறான். மகன் காதல் திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண்தான் பிரபாவதி. மகன் இல்லாத தனிமையைப் போக்க, ‘எப்படியும் இன்னும் கொஞ்ச மாசத்துல நீ இந்த வீட்டுக்கு மருமகளா வரப்போறவதான? இப்பவே வந்து என்கூட தங்கிடேன்’ என்று மருமகளிடம் கேட்கிறார் மாமியார். பிரபாவதியை ஒரு தோழி போல் அந்த வீட்டிற்குள் நடத்துவாள். தன்னுடைய பொழுதுபோக்கிற்காக மொட்டைமாடியில் பள்ளிக் குழந்தைகளுக்கு டியூஷன் எடுக்கும் கோமாதாவிற்கு டியூஷன் பிள்ளைகள்தான் எல்லாம். அவர்களை படிக்கவைக்கும் விதம் நமக்கு சிரிப்பை வரவைக்கும்.
கோமாதா மாதிரி வாழ்க்கையில் எல்லா பொறுப்புகளையும் முடித்து விட்டு, தனிமையில் இருக்கும் நபர்களுக்கு மட்டும்தான் வாழ்க்கை, அன்பு போன்ற வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் தெரியும். கோமாதாவின் தவிப்பை புரிந்த பிரபா, தோழிகளைத் தேட உதவுவாள். தன்னுடைய தோழிகளிடம் பிரபாவை விட்டுக் கொடுக்காத கோமாதா, அதேநேரத்தில் கண்டிப்பு, பாசம், தோழமை என அனைத்தையும் அள்ளிக்கொடுக்கும் மாமியாராக இயல்பாய் இருப்பார்.
தோழிகளுடன் இன்பமான நாட்களிலும் பிரபா மீது குறையாத அக்கறை. பழையக் காதலை சொல்லும்போது வெட்கம். தன் தோழிகளின் வாழ்க்கை நிலையை புரிந்துகொள்ளும்போதும் அவர்கள் மேல் சிறுவயதில் இருந்த பாசம் துளிகூட குறையாமல் இருப்பதும் அழகு. தோழிகளுக்கு இடையே ஓட்டப்பந்தயம் வைக்கும்போது தன்னால் ஓட முடியாததை உணர்ந்து, அந்த இடத்தை தன்னுடைய நகைச்சுவையால் நிரப்பியிருப்பார். ஆம், படம் முழுக்க நான் அதிகமாய் ரசித்தது ஊர்வசியின் நகைச்சுவை உணர்வைத்தான்.
ஒரு காட்சியில் தாஜ்மஹாலைக் காட்டி, ‘இது ஷாஜஹான் தனது காதல் மனைவி மும்தாஜிற்கு கட்டியது’ என ஒரு கைடு சொல்லும்போது, “இந்த மும்தாஜ் முப்பத்தாறு வயதிற்குள் பதினான்கு பிள்ளைகள் பெற்றிருந்தாள் என்று உனக்குத் தெரியுமா?” என்று பிரபா கேட்பாள். ஆம், பெண்களின் நிலை அவ்வளவுதான். என்றோ ஒரு நாள் தனக்காக மாறுவான், தன்னைப் புரிந்துகொள்வான் என்று காத்திருக்க வேண்டியதுதான்.
சினிமாவில் மட்டும்தான் மூன்று மணி நேர முடிவில், கடைசிக் காட்சியில் சுவிட்ச் போட்டாற்போல் ஒட்டுமொத்த ஆண்களும் திருந்துவது நடக்கும். அதுவரை பெண்கள் அனைவருமே உண்மைகள் மறைக்கப்பட்ட தாஜ்மஹால் போலவே உலகத்தாருக்குத் தெரிவர்.
பெண்களின் பிரச்சினைகளை வெறும் சிட்டிகை அளவு மட்டுமே பேசிய படம் ‘மகளிர் மட்டும்’. ஆனாலும் மாமியார் – மருமகள் உறவை மேன்மையாகவும் சிறப்பாகவும் காட்டியத்திற்காய் இந்தப் படத்தை ரசிக்கலாம். கோமாதா போன்ற மாமியாரை திரையில் பார்த்து நிழலழகியாகக் கொண்டாடலாம்.