
எனக்கு ஒட்டுமொத்தமாக நிறைவு தந்த சமீபத்திய படங்களுள் ஒன்று #துப்பறிவாளன். இரண்டே முக்கால் மணி நேரத்துக்கு திரையை விட்டு கண்கள் அகலாத வகையில் கவனித்துக் கொண்டதே கச்சிதத்தைக் காட்டியது. வலித்துத் திணித்து உருவாக்கப்பட்ட பாகுபாடுகள் ஏதுமின்றி, எல்லா தரப்பு ரசிகர்களும் கடைசி காட்சி வரை இருக்கையில் நெளியாமல் பார்த்துக்கொண்டதே மிஷ்கின் திரைமொழியின் நேர்த்தியைச் சொன்னது.
நல்லவர்கள் – கெட்டவர்கள் கூட்டத்தில் அதீதமானவர்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு கதை சொல்லப்பட்ட இந்தப் படைப்பு, இரு தரப்பு உணர்வுகளின் உச்சங்களையும் காட்சிப்படுத்தியது. மனிதர்களின் மகத்துவத்தையும் குரூரத்தையும் பிரித்து மேய்ந்தது. துப்பறிவாளனைப் பொறுத்தவரையில், ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’சை வைத்துப் பகுப்பாய்வது, நுணுக்கமாக அணுகுவது போன்றவற்றைச் செய்ய விரும்பவில்லை. ஏனென்றால், அதெல்லாம் எனக்குச் சரிபட்டும் வராது. ஆனால், நம் களத்துக்குப் பொருந்தும்படியும் நம்பும்படியும் காட்சிகளை அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்வேன். கனியன் பூங்குன்றனின் கெட்டப் மட்டும்தான் தனிப்பட்ட முறையில் உறுத்தலாக இருந்தது. படம் போகப் போக அந்த உறுத்தலும் போய்விட்டது.
குறிப்பாக, இந்த வகைப் படங்களுக்கே உரிய த்ரில் – சிலிர்ப்புத் தன்மைகளைத் தாண்டி, ஒவ்வொரு கதாபாத்திர உருவாக்கத்திலும் காட்சியமைப்புகளிலும் உணர்வுபூர்வமாக கையாளப்பட்ட திரைக்கதை உத்தி மிகவும் பிடித்திருந்தது. சில முக்கியக் கதாபாத்திரங்களின் பின்புலத்தைச் சொன்ன திரைக் கதைசொல்லி மிஷ்கின், சில முக்கியக் கதாபாத்திரங்களின் பின்புலத்தைக் கொஞ்சம் கூட காட்டாமல் நம் கணிப்புகளுக்கு விட்டது, பார்வையாளர்களின் படைப்புத்திறனை மதிக்கும் செயலாகவே பார்க்கிறேன். மனோகர் (பிரசன்னா), ப்ரீதா (ஆண்ட்ரியா) உள்ளிட்டோரின் பின்னணிக் கதை சொல்லப்படாததை இங்கே குறிப்பிடுகிறேன். அவர்களது பின்னணியை நானே வடிவமைத்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
முக்கியக் கதாபாத்திரங்கள் உளவியல் ரீதியில் நுணுக்கமாக அமைத்ததை ஒரே ஓர் உதாரணம் மூலம் சொல்ல விரும்புகிறேன். மல்லிகாவை மனோகர் கலாய்த்துக் கொண்டிருப்பான். விரைப்பு மனிதன் கனியனுக்கு அவள் மீதான கனிவையும் காதலையும்கூட வெளிப்படுத்த தெரியாத அளவுக்கு ஒர்க்ஹாலிஸத்தின் உச்சமாக இருப்பான். ஆனால், மல்லிகாவைக் குறிவைத்தே மிரட்டல் மெசேஜ் அனுப்பப்பட்டது என்பது தெரியவந்ததும் கனியனுக்கு முன்னால் மனோகர் அலறியடித்து ஓடுவான். மனிதம் மிகுதியாக இருந்தாலும் மனிதர்களை அணுகும் முறையில் கனியன் தேர்ந்தவன் இல்லை; மனோகர் இயல்பானவன் என்பதையே இவை காட்டின. மல்லிகாவின் கைகளில் துடைப்பத்தைத் திணித்து வீட்டிலேயே இருக்கவைத்ததில் ஒளிந்திருப்பது மட்டமான பார்வை அல்ல; அவளுக்கு ஒருவித பாதுகாப்பைத் தரவேண்டும் என்ற தனக்குத் தெரிந்த வழியிலான பேரன்பு வெளிப்பாடு. அவளது பிரிவைத் தாளமுடியாமல் மண்டியிட்டு கதறியதன் மூலம் கனியன் பூங்குன்றன் தன் கேரக்டரை உடைத்து வெளிக்காட்டி அழவும் தயங்கவில்லை.
சரி, மேட்டருக்கு வருகிறேன். நம் சினிமாவில் கெட்டவர்கள் வீழ்த்தப்படும்போதும் சாகும்போதும் சோகமான பின்னணியை இசையை கேட்பது அரிது. ஆனால், அது மிஷ்கின் படங்களில் தொடர்ச்சியாக இடம்பெறுகிறது. ‘அஞ்சாதே’ படத்தில் மிகக் கொடூரத் தன்மை கொண்டது பிரசன்னாவின் கதாபாத்திரம். அந்தக் கதாபாத்திரம் சாகடிக்கப்படும்போது, இறந்து கிடப்பது ஒயிட் ஆங்கிளில் காட்டப்படும்; அப்போது, நெஞ்சைப் பிழியும் சோகமான பின்னணி இசை பயன்படுத்தப்பட்டிருக்கும். ஒரு கோடூரன் கொல்லப்படும்போது ஏனிந்த சோகம்? இது யாருடைய சோகம்? பார்வையாளர்கள் சோகத்துடன் பார்க்க வேண்டுமா? அல்லது அந்தக் கதாபாத்திரம் செத்ததில் அதன் படைப்பாளில் கவலைப்படுகிறாரா?
இப்படி பல கேள்விகள் எழுந்தன. என்றாவது ஒருநாள் மிஷ்கினை சந்திக்க நேர்ந்தால் இதைக் கேட்டுவிடுவது என்றும் முடிவு செய்திருந்தேன். அப்படி ஒரு சந்திப்பில் கேட்டேவிட்டேன். அதற்கு மிஷ்கின் சொன்ன பதில் மிகவும் நிறைவைத் தந்ததுடன், ஒரு சினிமாக் கதையையும் கதாபாத்திரத்தையும் அணுகும் விதத்தையும் ஓரளவு சொல்லிக் கொடுத்தது. அவர் சொன்னதன் சாராம்சம் இதுதான்:
“என் கதையில் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாமே என் குழந்தைகள்தான். என்னிடம் உள்ள நல்ல தன்மைகளையும், நான் விரும்பும் நல்லனவற்றையும் நான் உருவாக்கும் நல்லவர்களிடம் கேரக்டர்களாக புகுத்துகிறேன். நான் விரும்பாத தீயதும் கொடூரமானதுமான அம்சங்களை கெட்டவர்களிடம் கொண்டு சேர்க்கிறேன். ஆனால், அவர்களும் மனிதர்கள்தான். என் குழந்தைகள்தான். அவர்களது இறப்பும் என்னைச் சோகத்தில் ஆழ்த்தும். அந்தச் சோகத்தை இசையில் நிரப்ப முயல்கிறேன்.”
செம்ம.
‘துப்பறிவாளன்’ படத்தில் இதே விதமாகவே இசை அணுகப்பட்டிருக்கிறது. அவர்கள் மனிதத்தன்மைகளை தூரப்போட்ட கொடூரர்களாக இருப்பினும், அவர்கள் சாகும்போது சோக கீதமாக பின்னணி இசை அழுதது. பார்வையாளனான எனக்கும் ஒருவித சோகம் தொற்றியது. கொஞ்சம் யோசித்துப் பார்க்கிறேன். நமக்கு நெருக்கமாகத் தெரிந்த மனிதர்களில் – உறவுகளில் அப்பட்டமாக மோசமான தன்மைகளை நிரம்பியவர்களையும் நாம் சந்திக்கிறோம். சில நேரங்களில் அவர்களால் துயரங்களை அனுபவிக்கிறோம். ஆனால், அவர்களில் எவரேனும் இறந்த தகவல் கேட்டால் ஒரு நிமிடம் துன்ப அதிர்ச்சியை அனுபவிக்கிறோம்தானே?!
கிராமங்களில் நேரில் பார்த்திருக்கிறேன். பரம எதிரிகளாக பாவிக்கப்பட்டு சண்டை போட்டுக்கொண்டவர்கள் மரணங்களின்போது துயரத்தில் பங்கெடுப்பதும், உடலைச் சுமந்து செல்வதும் மனிதர்களிடமே பார்க்கக் கூடிய நெகிழ்ச்சிகள். இதன் வடிவமாகவே மிஷ்கின் படைப்புகளில் கெட்டவர்களின் சாவுகளின்போது ஒப்பாரிச் சத்தம் இழையோடி, பார்வையாளர்களுக்கு அந்தக் கதாபாத்திரங்கள் மீதான கோபத்தைத் தணிக்கும் மனிதத்தைக் கடத்துவதாகப் பார்க்கிறேன். ஒன்றைச் சொல்லியே ஆகவேண்டும்: மிஷ்கினுக்குக் கிடைத்த மேன்மையான பொக்கிஷம்தான் இசையமைப்பாளர் அரோல் கொரேலி.
அடுத்த மிஷ்கின் படைப்புக்கான காத்திருப்புடன்,
கீட்சவன்