கருத்து

மெர்சல் மருத்துவம்!

ங்கப்பூர் ஆசியாவிலேயே காஸ்ட்லியான மருத்துவத்திற்கு பேர் போன நாடு. சிங்கப்பூரில் வாங்குகிற கட்டணத்தை பார்த்து மிரண்டு போய் சென்னைக்கு வருகிற நோயாளிகள் ஏராளம்.

சிவசங்கரன் சரவணன் 

மெர்சல் படத்தில் மருத்துவர்கள் மீதும் மருத்துவத்துறை மீதும் பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். விஜய் ஒழுங்கா, அட்லீ ஒழுங்கா என கேட்டு சண்டை போடவேண்டியதில்லை. அதை பார்க்கிறவர்கள் அட ஆமால்ல சரியாத்தான் கேக்கறார் ல என்று எண்ணுவதை நாம் மறைக்கமுடியாது. என் மனைவி கூட என்னிடம் மருத்துவர்களைப் பற்றி அந்த படத்தில் சொல்லப்படுகிற பெரும்பாலான குற்றச்சாட்டுகள் சரிதானே என்று கேட்கிறார். எனவே படக்குழுவினர் மீது கோபப்படுவதை விட உண்மைகளை விளக்குவதற்கு நாம் முயலவேண்டும்.

அதற்கு முன் ஒரு வரலாற்று செய்தியை தெரிந்துகொள்ளலாம். ஜவஹர்லால் நேரு ஏன் மாபெரும் தீர்க்கதரிசி என தெரிந்துகொள்ளமுடியும்.

நேரு பிரதமராக இருக்கும்போது மருத்துமனைகள் ஆரம்பிக்க தனியாருக்கு வங்கிக்கடன் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை வருகிறது. நேரு கோப்பு ஒன்றில் தன் கைப்பட எழுதுகிறார் : தயவு செய்து மருத்துவமனைகள் ஆரம்பிக்க வங்கிகள் கடன் தரக்கூடாது என்று. நேருவின் எண்ணம் யாதெனில் ஒருத்தர் வங்கிக்கடன் வாங்கி மருத்துவமனை ஆரம்பிக்கிறார் என்றால் அவர் கடனை அடைப்பதற்காகவாவது அந்த ஆஸ்பத்திரியில் டார்கெட் பிக்ஸ் பண்ணப்படும் என்பதே.

ஆக ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தவரை இந்தியாவில் தனியார் மருத்துவமனை கட்ட லோன் கிடையாது. அவருக்கு பின் வந்த சாஸ்திரி காலத்திலும் கூட இல்லை. பிறகு செல்வாக்கான நபர் மூலம் செல்வாக்கான வழியில் அந்த நடைமுறை தளர்த்தப்பட்டது வேறு கதை.

சரி அடுத்ததாக நாம் தெரிந்துகொள்ளவேண்டியது சிங்கப்பூர் ஆசியாவிலேயே காஸ்ட்லியான மருத்துவத்திற்கு பேர் போன நாடு. சிங்கப்பூரில் வாங்குகிற கட்டணத்தை பார்த்து மிரண்டு போய் சென்னைக்கு வருகிற நோயாளிகள் ஏராளம். அடுத்த எல்லாருக்கும் தெரிந்திருந்தாலும் இந்த தகவலை இன்னொரு முறை ஞாபகப்படுத்திவிடுகிறேன் :

சிங்கப்பூர் நாட்டின் மொத்த மக்கட்தொகை 50 லட்சம் பேர். சென்னையின் மக்கட்தொகை மட்டும் 75 லட்சம் பேர். இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வேலை தேடி போகிற டாக்டர்கள் அதிகம். காரணம் இந்தியாவில் ஒரு டாக்டருக்கு வழங்கப்படும் சம்பளத்தை விட சிங்கப்பூரில 300% முதல் 500% வரை அதிகம். எனக்குத்தெரிந்த ஒரு கண் டாக்டர் சென்னையில் 1.5 லட்ச ரூபாய் சம்பள வேலையை விட்டுவிட்டு சிங்கப்பூரில 6 லட்ச ரூபாய் சம்பளத்துக்கு சென்றார்.

சிங்கப்பூரோடு இந்தியாவை ஒப்பிடுவது எந்த விதத்திலும் நியாயமே அல்ல. தமிழ் சினிமாவில் இந்த அபத்தத்தை ஆரம்பித்தது சுஜாதா என்றே நினைக்கிறேன்.

சரி, காசு உள்ளவன் தாஜ் ஓட்டலுக்கு போவான், காசு இல்லாதவன் அம்மா கேன்டீனுக்கு போவான். அதுபோலத்தான் ஏழைகளுக்கும் அரசாங்க ஆஸ்பத்திரி தான் கதியா? அப்பல்லோ விற்கு ஒரு ஏழையால் போக முடியுமா? அப்பல்லோ போல தர்மாஸ்பத்திரி இருக்கவேணாமா? என்று கேட்கிற கேள்வி யில் நியாயம் இருப்பதாகவே கருதுகிறேன். இதை எப்படி சரி செய்வது?

அப்பல்லோ வில் இருக்கிற எல்லா பெசிலிட்டியும் சென்னை பொது மருத்துவமனையிலும் இருக்கிறது. பிறகு வேறென்ன வித்தியாசம்?

அப்பல்லோ வில் ஒரு டாக்டர் செய்யும் வேலையை விட ஒரு அரசு டாக்டர் இரண்டு மடங்கு அதிக வேலையை செய்கிறார். ஆனால் அப்பல்லோ டாக்டர் வாங்குற சம்பளத்தில் பாதி தான் இவர் வாங்குறார். டாக்டர்கள் கார்ப்பரேட் ஆஸ்பத்திரியை நோக்கி படையெடுப்பதை தடுத்து நிறுத்த ஒரே வழி தனியார் மருத்துவர்களுக்கு இணையாக அரசு மருத்துவர்களுக்கும் சம்பளம் தரவேண்டும். அரசு சம்பளத்தை விட நிறைய தருகிறார்கள் என்று தானே ஒரு டாக்டர் தனியாருக்கு போகிறார், பிறகு மேனேஜ்மென்ட் அழுத்தம் தர அதை நோயாளிகள் மீது திருப்புகிறார்! அரசாங்கத்திலும் அதே சம்பளம் என்றால் அவர் போங்கயா நான் கவர்ன்மென்ட் லயே வேலை பார்த்துக்கறேன் என்று வருவார்.

இலவச மருத்துவம் என்பது தமிழ்நாட்டில் ஏற்கெனவே இருந்து வருகிற ஒன்று தான். ஏழைகள் அதிகளவில் பெரும் பயன் அடைகிறார்கள். ஒரேயொரு சின்ன உதாரணம் : பாம்புக்கடி விஷத்துக்கு மருந்து தயார் செய்து அதை இலவசமாக வழங்குகிற ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் அதுவும் ஒவ்வொரு இருபது கிலோமீட்டர் சுற்றளவுக்குள்ளேயே. ஏன் தனியாரிடம் அது இல்லை என்றால் அந்த மருந்துக்கு குறைந்தபட்சம் 20,000 ரூபாய் ஆகும். பாம்பு கடித்து வருபவர்கள் கிராமப்புற ஏழைகளாக இருப்பார்கள். காசு இருக்காது. காசு இல்லாதவனுக்கு வைத்தியம் பார்க்க தனியாருக்கு அவசியம் இல்லை. இது ஒரு உதாரணம் மட்டுமே.

ஆக ஏழைகளுக்கு தர்மாஸ்பத்திரிகள் துணை புரிகின்றன. பணக்காரர்களுக்கு அது அவசியமே இல்லை. அவன் நேரா கார்ப்பரேட் ஆஸ்பத்திரிக்கு போறான். பிரச்சினை மிடில் கிளாஸ் மொண்ணைகளிடம் தான். இவருக்கு ஏழையோடு ஏழையாக தர்மாஸ்பத்திரி போகவும் கவுரவம் தடுக்கிறது, கார்ப்பரேட் ஆஸ்பத்திரியில் வாங்குற கட்டணமும் வாயை பிளக்க வைக்கிறது. இவர் உடனே தான் வஞ்சிக்கப்படுகிறோம் என உணர்கிறார். இந்த குரூப் தான் தடுப்பூசி போடலாமா போடக்கூடாதா என்ற சிந்தனையிலேயே இருப்பார்கள். நான் சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசிக்கிறவன். எங்கள் பகுதிவாசிகள் அரசு இலவசமாக போடுகிற எல்லா ஊசிகளையும் தங்கள் குழந்தைகளுக்கு கேள்வியே கேட்காமல் போட்டுவிடுவார்கள். போயஸ்கார்டன் ல வசிக்கிற ஆட்களும் தப்பித்துவிடுவார்கள். தடுப்பூசி போடக்கூடாது என வாட்சப் வதந்திகளை நம்பி வீணா போற குரூப் நடுசென்ட்டர் குரூப் தான்.

சினிமா வில் மருத்துவம் மேம்படவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் கருத்து சொல்பவர்கள், நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்றெல்லாம் வியாக்கியானம் பேசாமல் அரசாங்கம் இலவசமாக வழங்குகிற ஊசிகளை போட சொல்வது தான் நியாயமானதாக இருக்கும்.

அடுத்தது நுகர்வோர் சட்டத்திலிருந்து மருத்துவத்தை விடுவிக்கவேண்டும். ஒரு நோயாளி மூன்று மாதங்களுக்கு முன்பு தான் ஒரு ஆஸ்பத்திரியில் எல்லா டெஸ்ட்டுகளும் எடுக்கிறார். பிறகு வேறொரு டாக்டரிடம் செல்கிறார். அந்த டாக்டர் ஏற்கெனவே எடுத்த டெஸ்ட்டுகளே போதும் என்று கருதினால் கூட அவர் மீண்டும் புதுசாக எடுக்க சொல்லி எழுதுவார்.

ஏன்?

ஏனென்றால் நோயாளிக்கு ஏதாவது பிரச்சினையாகி அவர் சார்பாக டாக்டர் மீது யாரேனும் வழக்கு தொடர்ந்தால் அப்ப ஜட்ஜ் கேட்கக்கூடிய முதல் கேள்வி : நீ ஏன் இந்த இந்த டெஸ்ட் லாம் எடுத்து பார்க்கவே இல்ல என்பது தான்.

ஒரு இதய டாக்டர் தனது அனுபவத்தால் பரிசோதனை செய்து நார்மல் என முடிவுக்கு வந்தாலும் அவரால் நார்மல் என சொல்லிவிடமுடியாது. ஏனென்றால் நாளைக்கு உங்களுக்கு ஒன்றாகி அவர் மீது கேஸ் போட்டால், எந்த டெஸ்ட்டுமே எடுத்து பார்க்காம நீ எப்படி நார்மல் என சட்டம் கேட்கும். டெஸ்ட் எடுத்து பிறகு ஏதாவது ஆனால் கூட, நான் டெஸ்ட் எடுத்தபோது நார்மல் ரிசல்ட் தான் வந்தது எனக்காட்டி சேஃப் ஆகலாம். டெஸ்டு எடுத்திராவிட்டால் டாக்டர் காலி.

அப்புறம் Family physician concept ஐ திரும்ப கொண்டுவரவேண்டும். இது டாக்டர்கள் கையில் இல்லை. நமது கையில் தான் இருக்கிறது. நம்ம பக்கத்து தெருவிலேயே இருக்கிற டாக்டரிடம் செல்லாமல் ஒரு சாதாரண பிரச்சினைக்குக் கூட மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிக்கு போகவேண்டியது. இந்த லோக்கல் டாக்டர் எவ்ளோ நாள் தான் கிளினிக் ல ஈயோட்டுவார்? க்ளினிக் க இழுத்து மூடிட்டு அந்த மல்ட்டி ஸ்பெசாலிட்டி ஆஸ்பத்திரியில் சம்பளத்துக்கு வேலையில் சேர்வார்.

அதாவது டாக்டர்கள் என்றாலே மனித புனிதர்கள் என்று நான் சொல்வதாக கருதவேண்டாம். நான் அரசு மருத்துவமனையில் படித்து தனியார் மருத்துவமனைகளில் வேலை பார்த்தவன். இன்றும் அந்த இரண்டு ஆஸ்பத்திரிகளோடும் தொடர்பில் இருந்து பணியாற்றுகிறவன். டாக்டர்கள் பணம் பறிப்பதே இல்லை என்றெல்லாம் சொல்லமாட்டேன். அதே சமயம் எது நியாயம் எது அநியாயம் என்பதிலும் நமக்கு தெளிவு வேண்டும். மூணு வருஷ டிகிரி முடிச்சுட்டு ஐடி கம்பெனில 40 ஆயிரம் சம்பளத்துக்கு ஒருத்தர் வேலைக்கு சேருவார், நமக்கு வருடா வருடம் நல்ல இன்கிரிமென்ட் வேண்டும், கை நிறைய சம்பாதிக்கிற மாப்பிள்ளை வேண்டும் ஆனால் டாக்டர் மட்டும் காசு வாங்காமல் சேவை செய்யவேண்டும் என எதிர்பார்க்கலாமா? பாவம் அவருக்கும் வயிறு, மனசு இருப்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

சிசேரியன் குறித்து ஒரு ஆர்டிஐ போட்டிருக்கிறேன். அதற்கு பதில் கிடைத்தவுடன் அந்த டேட்டாவை வைத்துக்கொண்டு இன்னொரு தனிப்பதிவாக எழுதுகிறேன்.

சிவசங்கரன் சரவணன், மூகநூலில் எழுதிய பதிவு.

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: