சர்ச்சை

தமிழ்ப் பெண்கள் அழகா, கேரளப் பெண்கள் அழகா விவாதத் தடை: கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலா?

பாலின சமத்துவம், திருநங்கையரின் சமத்துவம், தற்பாலின உறவாளர்களின் சமத்துவம் என மனித உரிமைக் கருத்தாக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வேர்பிடித்துவரும் சூழலில், அந்த வேர் மேலும் ஆழமாகவும் விரிவாகவும் வளர்வதற்கு வழிசெய்வதற்கு மாறாக, வேரில் அமிலம் ஊற்றுவது தலைமுறைக் கொடுமை.

அ. குமரேசன்

kumaresan
அ. குமரேசன்

நான் கூட, எதிர்ப்பின் நியாயத்தை ஏற்றுக்கொண்டுதான் “தமிழகப் பெண்கள் அழகா, கேரளப் பெண்கள் அழகா” விவாத ஒளிபரப்பை விஜய் டிவி நிறுவனமும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும் விலக்கிக்கொண்டார்கள் என்று நினைத்துவிட்டேன். ஆனால் காவல்துறை தலையீட்டால்தான் ஒளிபரப்பை நிறுத்திக்கொண்டார்களேயன்றி, இப்படியொரு விவாதத்தின் பெண்ணடிமைத்தன உள்ளடக்கத்தை நேர்மையாக உணர்ந்துகொண்டதால் அல்ல என்பதை ‘நீயா நானா’ ஆண்ட்டனியின் ஆத்திரமிக்க பதிவு காட்டிக்கொடுக்கிறது. இடதுசாரிப் பெண்ணியவாதிகள்தான் தடைகோரினார்கள் என்று கூறியிருக்கிற ஆண்ட்டனி, அப்படித் தடை போடுவதன் மூலம் கருத்துச்சுதந்திர ஒடுக்குமுறையில் ஈடுபடுகிற மதவாத, சாதிய அடிப்படைவாதிகளுக்கும் இடதுசாரி அடிப்படைவாதிகளுக்கும் என்ன வேறுபாடு என்று கேட்டிருக்கிறார்.

“தலைப்பு அநாகரிகமா, விவாதம் அநாகரிகமா” எனக் கேட்டு அந்தத் தலைப்பு குறித்து விமர்சித்த எனது பதிவுக்கு வந்த எதிர்வினைகளில் கூட சங் பரிவாரத்தினர் உள்ளிட்ட சில அன்பர்கள், “இது மட்டும் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதாகாதா” என்று கேட்டிருந்தார்கள்.

மெர்சல் திரைப்படத்தில் சில வசனங்களை நீக்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் சர்ச்சை கிளப்பினார்கள், படத்தின் கருத்துகளில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் அதை விமர்சியுங்கள், பிரச்சாரம் செய்யுங்கள் அதை விடுத்துத் தடைபோடுவதா என்று கருத்துரிமைக்காக வாதாடுவோர் கேட்டார்கள். அந்த மெர்சல் சூடு அடங்குவதற்குள் இந்தச் சூடு.

பிரச்சனையின் தன்மையைப் பொறுத்து அணுகுமுறைகள் மாறும் என்று கூறலாம் என்றாலும், எந்தவொரு பிரச்சனை குறித்த கண்ணோட்டமும் மாறுபடும், எனது நியாயங்கள் இன்னொருவருக்கு அநியாயங்களாகப் புலப்படும் என்பதால் அப்படிச் சொல்லி நழுவுவதற்கு நான் விரும்பவில்லை. ஆகவே சற்றே விரிவாக எழுத வேண்டியிருக்கிறது, பொறுமையாகப் படிக்குமாறு ஆன்ட்டனியையும் இப்போது மட்டும் கருத்துரிமை பற்றிக் கவலைப்படுவோரையும் கேட்டுக்கொள்கிறேன்.

முதலில், பெண்களோ ஆண்களோ இடதுசாரிகள்தான் மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும், பெண்ணின் சுயமரியாதை உள்ளிட்ட மானுட மாண்புகளை உயர்த்திப் பிடிப்பதிலும் முன்னணியில் நிற்கிறார்கள் என்ற உண்மையை உரக்க வெளிப்படுத்தியதற்காக ஆன்ட்டனிக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இத்தகைய நியாயங்களுக்காகப் போராடுவதில் இடதுசாரி பெண்ணியவாதிகளும் இடதுசாரி மனித உரிமையாளர்களும் தொடர்ந்து முன்நிற்பார்கள் என்றும் உறுதியளிக்கிறேன்.

அடுத்து, இந்தப் பிரச்சனையில் காவல்துறை தலையீட்டை நாடியவர்கள் குறிப்பாக எந்தவொரு குறிப்பிட்ட இடதுசாரிக் கட்சி அல்லது மகளிர் அமைப்பின் சார்பாக அதைச் செய்யவில்லை. வெவ்வேறு அமைப்புகள் சார்ந்தவர்கள், எந்த அமைப்பையும் சாராதவர்கள் என்று பல நிலைகளிலும் இருப்போர் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள். சொல்லப்போனால் பல்வேறு பிரச்சனைகளில் மாறுபட்ட கண்ணோட்டம் உள்ளவர்களும் கூட இதில் ஒத்த சிந்தனையோடு சந்தித்திருக்கிறார்கள்.

மூன்றாவதாக, ஆன்ட்டனி தனது அறிக்கையில், தமிழக, கேரள கல்லூரி மாணவிகள் அழகுபடுத்திக்கொள்வது பற்றி ‘அகம் சார்ந்தும் புறம் சார்ந்தும்’ பேசினார்கள் என்று கூறியிருக்கிறார். எது அழகு என்பதாக விவாதிக்கப்பட்டிருந்தால் வரவேற்கத்தக்கதுதான். ஆனால் மேனியை அழகாக வைத்துக்கொள்வதைச் சுற்றியே அந்த விவாதம் நடந்திருக்கிறது என்பது அவரது அறிக்கையிலிருந்தே தெரிகிறது. ஒருவேளை, அதில் கலந்துகொண்ட பெண்களில் ஒருவர், உடல் சார்ந்து அழகுபடுத்திக்கொள்வதுதான் அழகா என்று கூட கேட்டிருக்கலாம்தான். அது நமக்குத் தெரியாது. இங்கே நம் கவலையெல்லாம், இப்படி அழகான தோற்றத்திற்காக மட்டுமே மெனக்கிடுவதுதான் பெண்மை என்பதாகப் பெண்ணின் சிந்தனை சுருக்கப்பட்டிருக்கிற சமுதாயத்தில், அவ்வாறு சுருக்கியதை மேலும் மேலும் இறுக்கமாக்குகிற விவாதம் தேவையா? கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிற பெண்ணுரிமையைப் பின்னுக்கு இழுக்கிற கைங்கரியமல்லவா இது? பெண்ணின் சுதந்திரம், பெண்ணின் சுயம், பாலின சமத்துவம், திருநங்கையரின் சமத்துவம், தற்பாலின உறவாளர்களின் சமத்துவம் என மனித உரிமைக் கருத்தாக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வேர்பிடித்துவரும் சூழலில், அந்த வேர் மேலும் ஆழமாகவும் விரிவாகவும் வளர்வதற்கு வழிசெய்வதற்கு மாறாக, வேரில் அமிலம் ஊற்றுவது தலைமுறைக் கொடுமை.

மதவாத-சாதியவாதிகளுக்கும் இடதுசாரி அடிப்படைவாதிகளுக்கும் என்ன வேறுபாடு என்று கேட்டிருக்கிறார். ‘தாலி பெண்ணின் பெருமையா சிறுமையா’ என்றொரு விவாதத்தைப் பதிவு செய்து அதை ஒளிபரப்பவிருந்த நாளில் ரகளை செய்து அதைத் தடுத்தார்கள், டிபன் பாக்ஸ் குண்டு வீசினார்கள். அப்போது அதை ஆன்ட்டனி இதே போல் கண்டித்தாரா, அல்லது அது வேறு ஒரு நிறுவனத்தின் நிகழ்ச்சிதானே என்பதால் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாரா என்பது நமக்குத் தெரியவில்லை. கண்டித்திருப்பாரானால் மகிழ்ச்சிதான். இப்போதைய மெர்சல் விவகாரம், முன்பு வந்த விஸ்வரூபம் விவகாரம், சென்னைப் பல்கலைக்கழகத்தில் அமெரிக்கப் பேராசிரியர் ஒருவர் நிகழ்த்தவிருந்த இஸ்லாமியப் பெண்கள் குறித்த உரை நிறுத்தப்பட்ட விவகாரம், பி.கே. போன்ற திரைப்படங்களுக்கு எதிராக எழுந்த கலவரங்கள் விவகாரம், எழுத்தாளர்களது புத்தகங்கள் முடக்கப்பட்ட விவகாரம்… இவற்றிலெல்லாம் உங்கள் எதிர்வினையைப் பதிவு செய்திருக்கிறீர்களா ஆன்ட்டனி? அல்லது, எல்லாப் பிரச்சனைகளிலும் கருத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று கழன்றுகொள்வீர்களா? ஏதோவொரு வகையில் இவை ஊடகத்துறை சார்ந்தவையாக இருப்பதால் இக்கேள்வியை உங்களிடம் கேட்டேன்.

இப்போது, நிகழ்ச்சி ஒளிபரப்புக்குத் தடை கோரப்பட்ட விவகாரத்திற்கு வருகிறேன். அந்த விவாதத்தில் பங்கேற்றவர்கள் என்ன பேசினார்கள், நெறியாளர் எப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பினார், அதற்கு எத்தகைய பதில்கள் வந்தன என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள முடியாமல் போய்விட்டது என்பது உண்மையே. அதன் அடிப்படையில் தொடர்ந்து கருத்தியல் களத்திற்கான விவாதங்களை மேலும் மேலும் முன்னெடுத்துச் செல்ல முடியும், அது சிந்தனைப் பரவலுக்குத் துணையாக அமையும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

“உன் கருத்தோடு முரண்படுகிறேன், ஆனால் உன் கருத்தைச் சொல்வதற்கு உனக்குள்ள உரிமையைப் பாதுகாக்க உயிரையும் கொடுப்பேன்” என்ற உலகப் புகழ்பெற்ற மேற்கோளைப் போற்றி ஏற்றுக்கொண்டவன் நான். எந்தவொரு கருத்தும், எந்தவொரு எதிர்க்கருத்தும் தடை செய்யப்படக் கூடாது என்பதே என்னுடைய கருத்து. சம்பந்தப்பட்டவர்களின் மனசாட்சிக்குக் கேள்விளை வைப்பது, இது நியாயம்தானா என்று அவர்களோடு விவாதிப்பது, மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய விவாதங்களுக்கு வலுவான கண்டனக் குரல் எழுப்புவது, அந்தக் கண்டனங்களின் நியாயச் சீற்றம் கண்டு உரியவர்கள் தாங்களாக முடிவை மாற்றிக்கொள்வது… இத்தகைய அணுகுமுறையைத்தான் நான் ஆதரிக்கிறேன். ஒரு கருத்தை வெளிப்படுத்தும் உரிமை பறிக்கப்படுவது என்பது, அந்தக் கருத்து என்ன என்று மக்கள் கேட்பதற்கான உரிமையும் பறிக்கப்படுகிற சர்வாதிகாரமே என்று திரும்பத் திரும்ப, இத்தகைய கருத்துரிமை ஒடுக்கல் பிரச்சனைகள் வந்தபோதெல்லாம், என் போன்றோர் சொல்லி வந்திருக்கிறோம்.

இந்தக் குறிப்பிட்ட தலைப்புக்கும், அதன் உள்ளடக்கத்திற்குமான எதிர்ப்பு ஒரு சமூகக் கோபமாகப் பரிணமிக்கச் செய்ய வேண்டுமேயன்றி, நாமாகத் தடுக்கக் கூடாது என்பதே என் நிலைபாடு. ஆணாதிக்க சமுதாயத்தில், இத்தகைய பிரச்சனைகளில் அவ்வளவு எளிதாக சமூகக் கோபமாக மாற்ற முடிவதில்லைதான். ஆனாலும் அது ஒரு இயலாமையாக, உடனடித் தடையை வற்புறுத்துவதற்கான நியாயமாக மாறிவிடக்கூடாது.

குறிப்பாகப் பண்பாட்டுத் தளம் சார்ந்த பொதுப் பிரச்சனைகளில் காவல்துறை உள்ளிட்ட அரசாங்க எந்திரத்திடம் நம்மை ஒப்படைத்துவிடக்கூடாது என்பதே என் நிலைபாடு.

அந்த அடிப்படையில், இந்த விவகாரத்தில் தடை கோரப்பட்டதை நானும் ஏற்கவில்லை. அதைக் கோருவதன் மூலம், கருத்துரிமை ஒடுக்குமுறைகளில் இறங்குகிற கட்சிகள், அமைப்புகள், மதவாதிகள், சாதியவாதிகள் உள்ளிட்டோர் தங்களை நியாயப்படுத்திக்கொள்ள இடமளிக்கப்படுகிறது. இதற்கு முன் நான் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து, கூர்மையாக விமர்சித்திருக்கிற எந்தப் பிரச்சனையிலும், குறிப்பிட்ட கருத்து அல்லது விவாதம் அல்லது நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்தியதில்லை.

(இப்போதைக்கு) நிறைவாக, தடை கோரப்பட்டதை மட்டும்தான் நான் ஏற்கவில்லை. மற்றபடி இதில் ஈடுபட்ட பெண்ணுரிமையாளர்களின் அந்த அறச்சீற்றத்தில் முழுமையாக என்னையும் ஐக்கியப்படுத்திக்கொள்கிறேன். இந்தப் போராட்ட அனுபவம், மக்களையும் மனித உரிமைகளையும் இழிவுபடுத்துகிற எல்லா ஆணவங்களுக்கும் எதிரான சமூக ஆவேசமாகப் பரிணமிக்க வாழ்த்துகிறேன்.

அ. குமரேசன், மூத்த பத்திரிகையாளர்; எழுத்தாளர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: