கருத்து சர்ச்சை

எது அழகு? எது அசிங்கம்?

நாம் நமது அரசியலை அல்லது நமது உடலில் செறிந்துள்ள இத்தகைய அழகுXஅசிங்கம் பற்றிய இனவாத நிறவாத அரசியலை வெட்டி எறியாமல் பாசிச எதிர்ப்போ அல்லது சமத்துவ அரசியலோ பேசவே தகுதியற்றவர்கள் என்பதை உணரவேண்டும்.

ஜமாலன்

ஜமாலன்

கருப்பு-வெள்ளை என்பது கீழைத்தேயவியல் எனப்படும் ஓரியண்டிலஸத்தில் உருவாக்கப்பபட்ட ஒரு பின்காலனியச் சிந்தனை. இது புரியாது கருப்புத்தோலும் வெள்ளை முகமூடியும் கொண்ட பின்காலனிய மனநிலையின் விளைவுதான் நிறம் மற்றும் அழகு பற்றிய பொதுபுத்தி மனநிலை. ஃபிரான்ட்ஸ் ஃபனானின் ”கருப்பு தோலும் வெள்ளை முகமூடியும்” என்ற நூல் ஃபனானின் மற்றொரு முக்கிய நூலான ”The Wrethced of the Earth” என்ற நூலுக்கு முன்னுரை எழுதிய சார்த்தர் கூறியதைப்போல ஐரோப்பிய மனசாட்சியை உலுக்கும் இந்நூல்களை வாசித்தால் பின்காலனியம் உருவாக்கிய நமது வெள்ளை முகமூடி கிழித்தெறியப்படும். உடலில் தமிழன் இந்தியன் இஸ்லாமியன் இந்து கிறித்துவன் சைவன் சாதியாளனாக ஆணாக இருக்கலாம் சிந்தனையில் உள்ளத்தில் வெள்ளையனாக இருக்கும் தீண்டாமை பார்க்கும் விதேசிகளே நாம்.

உலகின் குறிப்பிடத்தகுந்த குறியியலாலரும், தத்தவவியலாளரும், படைப்பாளியும், சிந்தனையாளருமான உம்பர்ட்டோ ஈகோ On Beauty என்றும் On Ugliness என்றும் இரண்டு நூல்களை கலைக்களஞ்சியங்கள் போன்று தொகுத்து உள்ளார். அழகு மற்றும் அசிங்கம் (அழகின்மை) பற்றிய வரலாறு என்று பலநூற்றாண்டுகளில் வழங்கப்பட்ட ஓவியங்கள், சிறப்பங்கள் எனத் தொகுக்கப்பட்ட அந்நூலில் ஈகோ அழகு என்கிற கருத்தாக்கம் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக ஐரோப்பிய மையவாதமாக மாறி அது மறுமலர்ச்சிக் காலத்தில் அசிங்கம் என்கிற கருத்தாக்கத்தை கண்டு பிடித்து அதை உலகளாவியதாக மாற்றியது என்பதை புரிந்தேற்கச் செய்கிறார். அழகு என்பது கலையோடு எப்படி தொடர்புறுத்தப்பட்டு எப்படி சிறிது சிறிதாக கலையை ஆக்ரமித்தது என்பதையும் தொடரச் செய்கிறார். ஒரு விவசாயி, தையற்காரன், கைவினைஞன் உள்ளிட்ட பல அன்றாட தொழிலில் ஈடுபடுபவர்களின் உற்பத்தியை அழகு அடிப்படையில் கலையற்றதாகவும் வெறும் பண்டங்களாக கருதும் மனநிலை எப்படி வந்தது? அழகு என்பது கலையோடு மறுமலர்ச்சிக்காலத்தில் இணைக்கப்பட்டதே என்பதையும் அது ஐரோப்பியமையவாத பிரபஞ்சம் பற்றிய பார்வையை அடிப்படையாகக் கொண்டது என்பதை விவரிக்கிறது அந்நூல்கள்.

கார்ல் மார்க்ஸ் பண்டம் என்ற கருத்தாக்கத்தை தனது மூலதனத்தில் சிதைவாக்கம் செய்து அதனுள் செறிந்துள்ள சுரண்டலையும் அதற்கான வர்க்கநலனையும் வெளிப்படுத்தியும், உழைப்பு எப்படி பண்டமயமாதலில் உடலில் இருந்து அந்நியமாக்கப்படுகிறது என்பதையும் ஆதம் ஸ்மித் முன்வைத்த உழைப்பு என்பது உழைப்புச் சக்தியாக மாற்றப்பட்டு சந்தையில் விற்கப்படுவதும், உழைப்பாளி தன்னிலையற்ற எந்திரமாகி தன் உழைப்பை தானே நுகரமுடியாத அந்நியமாதலுக்குள் ஆட்படுகிறான் என்பதையும் விவரிக்கிறார். இந்த அந்நியமாதலின் அரசியல் அழகு என்று கட்டமைக்கப்பட்ட தன்னுணர்வின் ஒரு அரசியல் வெளிப்பாடே என இதை விரித்து பொருளுரைக்கலாம். காரணம் படைப்பணர்வு என்பது அழகுடனும், அழகியலுடனும் உறவுபடுத்தப்பட்டு உள்ளது.

எட்வர்ட் சைத் தனது ஓரியண்டலிஸம் என்ற நூலில் கருப்புXவெள்ளை எப்படி மேற்கத்தியம் என்ற கருத்தை கட்டமைத்து ஐரோப்பிய மையவாதத்தை உருவாக்கியது என்பதை விவரிக்கிறார். வெள்ளை என்பதற்குள் செறிந்துள்ள இனவாத, நிறவாத அரசியல் எப்படி பின்காலனிய நாடுகளின் அழகியலாக வடிவமைந்து இன்றுவரை வெள்ளைத்தோல் வேட்கையாக மாறியுள்ளது என்பதை விவரிக்கிறார்.

நாம் நமது அரசியலை அல்லது நமது உடலில் செறிந்துள்ள இத்தகைய அழகுXஅசிங்கம் பற்றிய இனவாத நிறவாத அரசியலை வெட்டி எறியாமல் பாசிச எதிர்ப்போ அல்லது சமத்துவ அரசியலோ பேசவே தகுதியற்றவர்கள் என்பதை உணரவேண்டும்.

இந்த நிறவெறி மற்றும் அழகுXஅசிங்கம் இவைதான் இந்தியாவில் நிலவும் தீண்டாமை என்கிற கருத்தாக்கத்தின் பாசிச வேர். தீண்டாமையை ஒழிக்க இத்தகைய அரசியல் ஒர்மையை பெற வேண்டும் அல்லது நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ள வேண்டும். அதனால்தான் எட்வர்ட் சைத் சொன்னார் “Check your politics before enter it” என்றார். எந்த ஒன்றிலும் நுழைந்து கருத்து சொல்லும் முன், பேசுமுன், எழுதும் முன், செயல்படும் முன் நமது அரசியலை குறிப்பாக நமது உடலரசியலை ஒருநிமிடம் சோதித்து அறிவது அவசியம். கலை இலக்கியவாதிகள், கவிஞர்கள் தங்கள் படைப்புகளின் வழிதான் இந்த அழகியல் பற்றிய பார்வையை சமூகத்தில் கட்டமைக்கிறார்கள் என்பதால் அவர்கள் அதிக தன்னுணர்வுடன் இந்த அரசியலை புரிந்துகொள்வது அவசியம். அழகு என்பது என்ன? அதன் சமூகக்காரணிகள் என்ன? அதன் வெளிப்பாடு என்ன விளைவை உருவாக்குகிறது? அதன் வரலாறு என்ன? என்பது போன்றவை முக்கியம்.

எனது மொழியும் நிலமும் நூலில் ”அழகிய விளிம்புகளும் அதிகார மையங்களும்” மற்றும் ”கலாச்சார அரசியலில் கவனத்தில் இருத்த வேண்டிய புள்ளிகள்” என்ற காலக்குறி 1995 இதழில் வெளிவந்த இரண்டு கட்டுரைகளில் இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. ”அழகிய மையங்களும் அதிகார விளிம்புகளும்” பிறகு பிரேம் நடத்திய அமீபா சிற்றிதழில் மறு பிரசுரம் ஆனது. வாய்ப்புள்ள நண்பர்கள் வாசித்து உரையாடலை தொடரலாம்.

ஜமாலன், எழுத்தாளர்.

Advertisements

One comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: