கருத்து

லஷ்மி – நேர்மையற்ற கதைசொல்லி

டி. தர்மராஜ்

லஷ்மியின் கதையில் மொத்தம் நான்கு பேர் இருக்கிறோம். லஷ்மி, அவளது கறுப்பு வெள்ளைக் கணவன், கலர்க் காதலன், அப்புறம் கதையைக் கேட்டுக் கொண்டிருக்கும் நாம்.

படம் நெடுக, அந்தப் பெண் தன்னை ஒரு அபலையாக சித்தரிக்கவே மெனக்கெடுகிறாள். இதற்காக, இரவுகளில் அவளும் கணவனும் புணர்வதைப் பார்க்கக் கூட அவள் நம்மை அனுமதிக்கிறாள். புணர்ச்சிக்கு இடையே குழந்தை விழித்து விடக் கூடாது என்பது தான் அவள் பதைபதைப்பு. நாம் பார்த்துக் கொண்டிருப்பதைக் குறித்து அவளுக்கு ஒன்றும் லட்சையில்லை. சொல்லப் போனால், நம்மை அங்கே இருக்கச் சொன்னதே அவள் தான்.

இதே லஷ்மி, காதலனுடன் புணரும் போது நமக்கு ஒரு மண் சிற்பம் மட்டுமே காட்டப்படுகிறது. அதாவது, அவளது சந்தோஷ தருணங்களை கூடுமானவரை நம்மிடம் நேரடியாய் சொல்வது இல்லை. அவளது ஒரே நோக்கம், தான் ஒரு அபலை என்று நம்மை நம்ப வைப்பது; அதன் மூலம் தனது காதலை நியாயப்படுத்திக் கொள்வது.
இந்த அபலைக் கதையைக் கேட்பதில நமக்கொன்றும் பிரச்சினையில்லை. இப்படி பல கதைகளைக் கேட்டிருக்கிறோம். இராமயணச் சீதையில் ஆரம்பித்து, ஜெயகாந்தனின் அக்னிபிரவேஷம் வரை நிறைய கதைகளைக் கேட்டு, இது போன்ற காதல்களை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிற மனப்பக்குவம் நமக்கு இருக்கிறது தான்.

ஆனால், லஷ்மியின் கதையில் எல்லோரும் பதட்டமடைவதற்கான காரணம் என்ன? வீரிய ஆண் போல யோசிப்பவர்களும், தைரிய பெண் போல யோசிப்பவர்களும், அங்குமிங்குமாய் அலைபாய்பவர்களும் என்று பலரும் சஞ்சலமடைவதற்கான காரணம் என்ன என்று யாராவது யோசித்தீர்களா?

தன்னை ஒரு அபலையாக பாவித்து கதை சொல்லும் அந்தப் பெண்ணிடம் ஒரு எளிய கதை சொல்லிக்கான நேர்த்த கூட இல்லாததை கவனியுங்கள். லஷ்மி, ஆரம்பத்தில் இருந்து ஒரு தரப்பாகவே பேசிக் கொண்டிருக்கிறாள். அவள் கணவன் மீது நாம் இனந்தெரியாத வெறுப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான் அவளது நோக்கமாக இருந்தது. அதைக் கூட நாம் விட்டு விடலாம். பரஸ்பர காதல் என்ற அங்கீகாரத்திற்காக ஏங்கும் அபலை என்று நாம் நம்பி விடுகிறோம்.

லஷ்மி, அவள் கணவனுக்கு உண்மையாயில்லை என்பது தான் கதையே. அதற்கு அவள் தன் தரப்பு நியாயங்களாக, தான் ஒரு காதல் அபலை என்றும், தனது கணவன் தன்னிடம் நேர்மையாய் இல்லையென்றும் வாதிடுகிறாள். இதிலொன்றும் நமக்கு பிரச்சினையில்லை.

கணவனிடம் கிடைக்காத அங்கீகாரத்தை அவள் காதலனிடம் பெற்றுக் கொள்கிறாள். இதிலும் நமக்குப் பிரச்சினை இல்லை. விகற்பமாக எதுவும் தெரியவில்லை. அந்த இரவுக்கான காரணங்கள், சூழ்நிலைகள், அன்று நடந்த உரையாடல்கள் என அப்பெண் சொன்ன கதையில் பெரும்பாலும் உண்மை இல்லை என்று நமக்குத் தெரிந்தாலும் கூட, அவள் கதையை நாம் காது கொடுத்து கேட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். எங்கேயாவது அவள் காதல் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டால் போதுமென்று இருக்கிறது நமக்கு.

ஆனால், இறுதியில் காதலனுக்குக் கூட அவள் உண்மையாய் இல்லை. இனி, புகைவண்டியில் செல்லப் போவது இல்லை என்று முடிவு செய்கிறாள்.

இதைக் கூட நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. குடும்பமாக வாழுகின்ற பெண்ணுக்கு ஏராளமான பயங்கள் இருக்கக் கூடும். அதனால், பிரச்சினைகளைத் தவிர்க்க விரும்புகிறாள் என்று நமக்குத் தெரிகிறது. இந்த இடத்தில் அவளுடைய புத்திசாலித்தனத்தை நாம் ஒரு கணம் மெச்சக்கூட செய்கிறோம்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, கதை கேட்டுக் கொண்டிருக்கும் நம்மிடம் கூட அவள் உண்மையாய் இல்லை என்ற போது தான் பார்வையாளர்கள் பதட்டமடையத் தொடங்குகிறார்கள்.

அந்தச் சம்பவம் குறித்து அவளிடம் துளியளவு சஞ்சலமும் இல்லை என்றே கதையைச் சொல்லி முடிக்கிறாள். அவளது நடையுடை, பாவனை எதிலும் துளி வித்தியாசம் இல்லை. கணவனிடம் மட்டும் அந்த சம்பவத்தை மறைக்கவில்லை; நம்மிடமும் அதை மறைக்க விரும்புகிறாள் என்று முதல் முறையாக நமக்குத் தெரிய வருகிறது. நாம் அவளை அருவருப்பாக பார்க்கத் தொடங்குகிறோம்.

கதைசொல்லிக்கும் பார்வையாளருக்குமிடையே ஒரு காதல் உண்டு. இந்தக் காதலும் கூட பரஸ்பர நம்பிக்கையால் தான் செய்யப்பட்டிருக்கிறது. இருவருக்குமிடையே, சின்னச் சின்ன சீண்டல்கள், வேடிக்கைகள், கோபங்கள், தாபங்கள் இருக்க முடியும். அதையெல்லாம் கடந்து ஒருவர் மீது மற்றவருக்கு ஆழ்ந்த மரியாதை இருக்கும். இது கதையாடலின் அடிப்படையான விதி. லஷ்மி, இறுதியில் இந்த விதியைத் தான் காற்றில் பறக்க விடுகிறாள். அவள் நம்மையும் உதாசினப்படுத்துகிறாள். அவள் நமக்குக் கூட நேர்மையாக இருக்க விரும்பவில்லை.

அந்த இரவு சம்பவம், அதை அவள் மறைக்க முயற்சி செய்தது பற்றிய முகக்குறிப்புகளை நாம் அவளிடம் எதிர்பார்க்கிறோம். அவளிடம் அப்படி எதுவும் இல்லை. கணவனிடம் காட்டும் போலி முகத்தைத் தான் அவள் நம்மிடமும் காட்டுகிறாள்.

முகக்குறிப்பை நேரடியாகச் சொல்லியிருக்க வேண்டும் என்பது கூட அவசியமில்லை. ஜெயகாந்தன் காலகட்டத்து உத்தி போல, தலை மீது நீரைக் கொட்டிக் கொண்டேன் அல்லது ஷவரின் கீழ் நின்றிருந்தேன் என்று கூட சொல்லியிருக்கலாம். அல்லது, மறு நாள் காலையில், வழக்கம் போல கண்ணாடி பார்த்து நெற்றிப் பொட்டு வைக்கும் போது, எல்லாமே ஞாபகம் வந்து, ஒரு கணம் முகம் கலங்கி பின் சுதாரித்தேன் என்று சொல்லியிருந்தால் கூட போதுமாக இருக்கும்.

ஒரு பார்வையாளராக, இறுதியில் நாம் லஷ்மியிடம் எதிர்பார்ப்பதெல்லாம் ஒரு சின்ன சஞ்சலத்தை தான். ஆனால், அவளிடம் எந்த விதமான கலக்கமும் இல்லை. மாறாக, அவள் இப்பொழுது பழைய அபலையாக இல்லை; எல்லோரையும் அவநம்பிக்கையோடு கையாளுகிற நபராக மாறியிருக்கிறாள். ‘பெண் மனது சமுத்திரம் போல, ஆண்களால் அறிய முடியாதது’ என்றொரு கிளிஷே இருக்கிறதே அதன் ஒட்டுமொத்த உருவமாக மாறி நிற்கிறாள்.

அவள் கணவனோடு அவளுக்குக் காதல் இல்லை. காதலனோடு கொண்ட காதலையும் அவள் குடும்பத்திற்காக புறக்கணித்து விட்டாள். இது வரைக்கும் சரி.

ஆனால், அவளுக்கு இந்தக் கதையை சிரத்தையாய் கேட்டுக் கொண்டிருக்கும் நம் மீது கூட காதல் இல்லை என்பது தான் எல்லோரையும் எதிராகப் பேச வைக்கிறது.

உண்மையில், எல்லோரிடமும் வெளிப்பட்ட கோபம், அவளது கற்பு பற்றியது அல்ல; அவளது அறம் மீதானது.

டி. தர்மராஜ், ஆய்வாளர்; எழுத்தாளர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: