செய்திகள்

அருவி: பவித்ரா உன்னை நினைத்துக்கொள்கிறேன்!

சிவராஜ்

சிவராஜ்

விழிமீறும் கண்ணீரையும், நாவைப் பிறழச்செய்யும் சொற்களையும் கடினப்பட்டு கட்டுப்படுத்தி, குரல்வளை கவ்வலின் எச்சிலை விழுங்கிக்கொண்டே இவ்வெழுத்துக்களை எழுதுகிறேன்.

இந்தத் திரைப்படம் ஏதோவொரு வகையில், மனிதர்களாலும் சூழல்களாலும் உண்டாக்கப்பட்டு மனதின் அடியாழத்தில் தங்கியிருந்த நிறைய கசப்புகளையும் வன்மங்களையும் அக்கக்காக பெயர்த்தெடுத்து, நம்மை திரும்பத்திரும்ப கூண்டிலேற்றுகிறது. நம் சுயத்தை கண்முன் நிறுத்தி நிலைகுலையச் செய்யும் கேள்விதனை விடாமல் எழுப்பி சுயசுத்தத்தை நொடிக்குநொடி யாசிக்கவைக்கிறது இதன் திரைமொழி. இவ்வளவு விரிந்த ஒரு அன்போடு இந்த உலகத்தை ஒருவன் தன்னுடைய படைப்பின் வழியாக அணுகிவிட முடியுமா என்று என்னை நானே இப்பவரை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

பவித்ரா – இத்திரைப்படம் கண்டுற்ற கணந்தொட்டு என் நினைவின் தூசுச்சாம்பலில் இருந்து கங்காக கனன்று ஞாபகத்துள் எரிந்து கொண்டிருக்கிறாள்.(அவள் பெயரை மாற்றி இருக்கிறேன்… காரணம் தெரியவில்லை). அவளைப்பற்றி நான் பேசியே ஆகவேண்டும். பதினைந்து வருடம் முன்பாக இப்படம் வந்திருந்தால் அது அவளின் உலகத்தையே உயிர்ப்பித்திருக்கும். அவளை அவளாகவே வைத்திருந்திருக்கும்.

காலக்கணக்கில் குறைந்தது பத்துப் பதினைந்து வருடங்கள் முன்பிருக்கலாம். திடீரென்று ஒருநாள் மாலை, பிசிக்ஸ் மாஸ்டர் தொலைபேசியில் அழைத்து கூப்பிடுகிறார். நானும் எப்பவும்போல பள்ளிக்கூடத்துக்குப் போகிறேன். சாயங்காலம் பள்ளி முடிந்து எல்லாப் பிள்ளைகளும் வீடுசென்ற பிறகு, தாமதமாகக் கிளம்பும் டவுன் பஸ்ஸில் போகிற கிராமத்து மாணவர்கள் மட்டும் அங்கிருந்தனர். ஆறாவது ஏழாவது படிக்கும் அந்தக் குட்டிப்பயல்கள் எல்லாம் பள்ளிக்கூட தண்ணீர்த்தொட்டியின் அருகில் வளர்ந்திருக்கும் நெல்லி மரத்துக்கு கீழே உதிர்ந்துகிடந்த நெல்லிக்காய்களை பொறுக்கி விளையாடிக் கொண்டிருந்தனர்.

பக்கத்திலேயே அங்கு, நடுத்தர வயதிலான ஒரு அம்மா நின்றிருந்தார். எங்கள் பிசிக்ஸ் சார் அம்மரத்தடிக்கு வருகிறார். கொஞ்ச நேரம் அந்த தாயுடன் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் பேசப்பேச அந்தத்தாய் உடைந்து அழுவதை நான் தூரமிருந்து பார்க்கிறேன். அந்த அம்மாவை உட்காரவைத்து ஆறுதல்படுத்தி தொடர்ந்து பேசியபடியே இருக்கிறார். சிறுவர்கள் எல்லாம் கிளம்பிப்போனப் பிறகு அந்த அம்மா அங்கு இடிந்துபோய் உட்கார்ந்திருந்தார்.

பிசிக்ஸ் சார் தனியாக வந்து பள்ளிக்கழிவறைக்கு அருகில் நின்று இரண்டு சிகரெட்களை அடுத்தடுத்து வேகவேகமாக ஊதித்தள்ளுகிறார். அவர் அடைந்திருந்த பதட்டத்தை உணர முடிந்தது. நான் அவரிடம் போகிறேன். “எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலடா” எனச்சொல்லிவிட்டு ஒரு பெண்ணின் பெயரைச் சொல்கிறாள். “பவித்ரா” “அவள எப்டியாவது சரி பண்ணிடனும்டா. ஆனா என்ன செய்யன்னு தெரியலடா” என்று திரும்பத்திரும்ப அவள்சார்ந்த பதட்டங்களையே சொல்லிக்கொண்டே இருந்தார்.

அருவி படத்தில் ஒரு காட்சி

அடுத்தநாள் மசங்கல் மூன்றுமணிவாக்கில் மீண்டும் என்னை பள்ளிக்கு வரச்சொல்கிறார். திரும்பவும் நான் அவரைப்பார்க்கப் போகிறேன். அவர் பள்ளிக்கூட ஆய்வுக்கூடதுக்குள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். மணிமேகலை டீச்சர் “சிவராஜ் வந்திருக்கான்” என அவரிடம் சொல்ல பிசிக்ஸ் மாஸ்டர் என்னை உள்ளே வரச்சொல்கிறார். ஆய்வுக்கூடத்துக்குள் போனால் அங்கு பவித்ரா உட்கார்ந்திருந்தாள். அவர், அப்போதும் அவளின் அருகமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

“நீங்க எவ்ளோ சொன்னாலும் மூனு நிமிசத்துக்கு மேல, நீங்க சொல்றது எதுவுமே கேக்குறதில்ல. எனக்கு சண்முகத்தோட முகமும் அவனோட குரலுந்தான் எனக்கு ஞாபகம் வந்துட்டே இருக்கு. அவன் இப்ப எங்க இருப்பான்? அதுமட்டுந்தான் எனக்குள்ள தோணிக்கிட்டே இருக்கு. நான் என்னங்க சார் பண்றது?” என்று அவள் அழுது புலம்புகிறாள். கதியற்று நிற்பவனைப் போல செய்வதறியாது, பிசிக்ஸ் சார் அவளருகில் நிற்கிறார்.

அவளைப்பற்றி தெரிந்துகொள்கையில், தலீத் சமூகத்தைச் சார்ந்த ஒரு சிறுபெண் அவள். அப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். அவளுக்கு அப்பா கிடையாது.கூத்தம்பட்டி என்கிற குக்கிராமத்தைச் சார்ந்தவள். அவள், ஒரு பையனை விரும்புகிறாள். அவன் அங்குள்ள உயர்சாதிப் பையன். பவித்ரா வகுப்பிலேயே நன்றாக படிக்கிறவள், முதல் அல்லது இரண்டாம் தரம் வரக்கூடியவள். கவிதைகளை, கட்டுரைகளை அவ்வளவு ஆர்வமெடுத்து தீவிரமாக வாசிக்கக்கூடிய பெண்ணவள்.

“நீ முதல்தரம் எடுக்கக்கூடியவள். அவன் உயர்சாதிப் பையன்” என விடாமல் எங்கள் சார் சொன்னபோதும் “நீங்க என்ன குற்றச்சாட்டு அவனப்பத்தி சொன்னாலும் என் மண்டைக்குள்ள நிக்காது சார். அவன் இப்ப என்ன பண்ணிட்டு இருப்பான்? அவன் முகம், அவன் குரல் இதுதான் ஞாபகத்துக்கு வந்துட்டே இருக்கு” என்று பைத்தியம்போல சொல்லிக்கொண்டே இருந்தாள். அந்தப் பெண்ணுக்கும் அவனுக்கும் ஐந்து வருடம் வயது வித்தியாசம் இருக்கிறது. இந்தத் தகவல் தெரிந்த அவன் வீட்டார் அவனை வெளியூருக்கு அனுப்பிவிடுகின்றனர். ஆனால், என்ன பிரச்சனை என்று கடைசிவரை என்னிடம் அவர் சொல்லவில்லை.

ஒருமாதம் கழிந்து அவர் என்னோடு அந்தப் பதட்டத்தைப் பகிர்கிறார். “அவ ரெண்டுமாசம் கர்ப்பமா இருக்காடா. எப்டியாச்சும் அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு அவங்க அம்மா சொல்றாங்கடா. ஆனா, கொஞ்சநாள் கழிச்சு பண்ணலாம்ன்னு நான் முயற்சி பண்றேன்டா. ஏன்னா, சாதி ரீதியா பெரிய பிரச்சன ஆய்டும். இத எப்டி சமாளிக்குறது? அவ ரொம்ப சின்னப்பொண்ணு வேற” என முடிவெடுக்க முடியாமல் என்னென்னமோ சொல்லி உளறுகிறார். இந்தச் சிக்கல் அப்படியே தொடர நாட்கள் கடந்துபோகிறது. கொஞ்சநாட்களிலேயே அவள் பள்ளிக்கு வருவது நின்றுபோகிறது.

எதிர்பாராமல் ஒருநாள், சாயங்காலம் ஏழு எட்டு மணிவாக்கில் பிசிக்ஸ் சாருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அவர், தனது ஸ்கூட்டரில் என்னையும் ஏற்றிக்கொண்டு அவசரஅவசரமாக அவள் வீட்டுக்கு விரைந்து போகிறார். அப்பொழுதான் நான் முதன்முறையாக பவித்ராவுடைய வீட்டுக்குச் செல்கிறேன்.
அவள் என்ன செய்திருக்கிறாள் என்றால்… அவளின் அப்பா குடித்துப்போட்ட சாராய பாட்டில்களை எடுத்துக்கொட்டி அதைத் தூள்தூளாக உடைத்துப் பொடியாக்கி… அதை… அதை… சமைக்கிற ரவையில் கலந்து உப்புமா செய்து சாப்பிட்டுவிடுகிறாள். அந்தக் கண்ணாடிச் சில்லுகள் எல்லாம் அவள் தொண்டையிலிருந்து பிறப்புறுப்பு வரை அங்குலமங்குலமாகஉள்ளுறுப்புகளை கிழித்துச் சிதைத்து துளைகள் முழுக்க இரத்தம் கசிய அவள் சாய்ந்து கிடக்கிறாள். கற்பனை செய்திடமுடிந்திராத ஒரு தற்கொலையை அவள் தனக்கு நிகழ்த்திக் கொண்டாள்.

பிசிக்ஸ் சார், அவள் காலைக் கட்டிப்பிடித்து “நான்தான் உன்ன கொன்னுட்டேன்” “நான் தான் உன்ன கொன்னுட்டேன்” என சத்தம்போட்டு அழுது, கத்திக்கத்தி அலறுகிறார். நான் பிணமாக உறைந்து நிற்கிறேன்.

இந்த ‘அருவி’ யைப் பார்க்கும்போது எனக்கு நிஜமாகவே தோன்றியது ‘அந்தக் கண்ணாடிச் சில்லுகள் கிழித்த இரத்தம் தான் இந்த அருவியின் ஒவ்வொரு சொல்லாக இருக்கிறது’. ஒரு பத்தாண்டுகள் முன்புமட்டும் இப்படம் வந்திருந்தால்…

யாரைக் குறித்தும், எந்த மனிதனைக் குறித்த ஒரு கசப்போ, ஒரு சின்னக் குற்றச்சாட்டோ இல்லாத ஒரு அதிதூய தன்மையைக் குறித்து இப்படம் பேசுகிறது.

‘ஒரு பாவமன்னிப்புக்கான படமாகவே’ என்னைப்பொறுத்தவரையில் இப்படத்தை நினைக்கிறேன்.

மீண்டும் மீண்டும் நம்முடைய பேச்சின் கீழ்மைகளையும், அருவருக்கத்தக்க அசிங்கங்களையும் கண்முன்னாடி நேர்நிறுத்தி நம்மை ஏதோவொரு வகையில் சொல்லகப்படாத ஒருவித சுயதூய்மைக்கு இட்டுச்செல்கிறது.

திரைப்படம் முடிந்து, இருண்ட திரையரங்கின் கதவு திறந்து வெளிச்சம் உள்வருகையில், கலங்கமில்லாத ஒரு வெளி திறப்படைந்ததைப் போலவே உள்ளுணர்வு கொள்கிறேன்.

அடக்கமுடியாத கண்ணீரோடு அபி வந்து என்னைக் கட்டியணைத்து, “அண்ணா, எனக்கு பொன் கொழந்த பொறந்தா சத்தியமா அருவின்னுதான் பேரு வப்பேண்ணா” என்று வாசலில் வைத்துச் சொன்னாள்.

இறுதியாக… இந்தத் திரைப்படத்துக்காக மெனக்கெட்டு விரும்பியுழைத்த அத்தனை உயிர்களையும் பவித்ராவின் தூய அன்பும் கருணையும் சூழட்டும்.

பவித்ரா உன்னை நினைத்துக்கொள்கிறேன்.

சிவராஜ், செயல்பாட்டாளர், குக்கூ குழந்தைகள் இயக்கம். தும்பி இதழின் ஆசிரியர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: