சினிமா

நிழலழகி 21: சில்க் ஸ்மிதாவும் நசுக்கப்பட்ட பட்டுப்பூச்சியும்!

கே. ஏ. பத்மஜா

கே. ஏ. பத்மஜா

The Dirty Picture | Milan Luthria | Hindi | 2011

அது ஓர் இரவு. நாங்கள் படுக்கைக்கு ஆயுத்தமாகிக் கொண்டு இருந்தோம். என் எட்டு வயது மகள் என்னருகில் படுத்துக்கொண்டு, “அம்மா, இந்த மாதிரி ஏன் உங்களுக்கு பெருசா இருக்கு? எனக்கும் நான் வளர வளர அது பெருசாகுமா?” என்று கேட்டாள். அவள் இப்படிக் கேட்பதும் நான் “ஆம்” என்று பதில் சொல்வதும் முதல் முறையல்ல. ஆனால், இந்த முறை அவள் அடுத்த கேள்வியைத் தொடுத்தாள். “ஏன் அப்படி வளருது? அதைப் பார்க்க அசிங்கமா இருக்குதுல்ல?” இம்முறை அவள் மனதில் உருவாகியிருக்கும் களையைக் கிள்ளிப் போட வேண்டியது கடமை என்று உணர்ந்தேன். உடனே அவளிடம், “நீ பிறந்தபோது உனக்கு சின்ன கைகள், கால்கள், விரல்கள் என்றுதான் இருந்தது. நீ வளர வளர உனது கை, கால் வளருவது போல மார்பும் ஓர் உறுப்பு அதுவும் வளர்கிறது. உனக்கு உனது கை, கால், பல் வளர்வது நினைத்து அசிங்கமா இருந்தது இல்லையே, அப்போ இதுவும் அசிங்கம் இல்லையே?” என்றேன். அவளுக்கு ஒரு தெளிவான விளக்கம் கொடுத்த திருப்தியில் கண்ணயர்ந்தேன்.

  • ‘தி டர்ட்டி பிக்சர்’ 2011 ஆம் ஆண்டு மிலன் லுத்ரியா இயக்கத்தில் வித்யா பாலன், நஸ்ருதீன் ஷா, துஷார் கபூர், இம்ரான் ஹாஸ்மி நடிப்பில் வெளிவந்த இந்தி படம். மறைந்த கவர்ச்சி நடிகை ‘சில்க்’ ஸ்மிதா வாழக்கையைப் பற்றிய படம் என்றெல்லாம் பரவலாய் பேசப்பட்டாலும், ராஜ்த் அரோரா தனது கற்பனையையும், சினிமா வட்டத்தில் தங்கள் வாழக்கையை தொலைத்த பல முன்னணி நடிகைகளின் உண்மை நிலையின் வெளிப்பாட்டையும் திரைக்கதையாக வடித்துள்ளதை திரை ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினர்.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் வீட்டைவிட்டு ஓடி நகரத்திற்கு வரும் ரேஷ்மா (வித்யா பாலன்) சினிமா வாய்ப்புக் கேட்டு பல இடங்களில் நிராகரிப்பும், அவமானமும் அடைகிறார். எனினும், தன் மீதான நம்பிக்கையைத் துளியும் இழந்திருக்க மாட்டாள். ஒரே ஒரு பாடல் காட்சியில் நடிக்க வாய்ப்பு கிடைத்து, அதில் தன்னை முழுவதுமாய் அடையாளப்படுத்தி புதிய வாய்ப்பிற்காக காத்திருக்கும் ரேஷ்மாவிற்கு வெறும் ஏமாற்றமே மிஞ்சும். வர்த்தக நோக்கில் படம் சரியாய் ஓடவில்லை என்பதும், அதில் இயக்குனர் ரேஷ்மாவின் கவர்ச்சி நடனப் பாடலை நீக்கி விட்டார் என்றும் தெரியும்போது, மீண்டும் அந்தப் பாடலை இணைத்து தன்னுடைய படத்தை வெற்றிப் படமாய் மாற்றுவார் தயாரிப்பாளர் செல்வா கணேஷ்.

தன்னுடைய சிறு வயது முதல் கனவு நாயகனாகிய சூர்யாகாந்த் (நஸ்ருதீன் ஷா) உடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும்போது, புளியம் கொம்பைப் பிடித்து உச்சிக்கு வந்த வேகம் என்றாலும், அவள் சந்தித்த சறுக்கல்களே நமக்குப் பாடம். சினிமாவில் நடிப்பது மட்டுமே தனது ஒரே லட்சியம் என்று புரிந்துகொண்ட சில்க், அந்தப் போராட்டத்தை தனியாகத்தான் போராட வேண்டும் என்று தெரிந்தும், துணிந்து வீட்டை விட்டு புறப்படுவாள். தன்னுடைய கனவு நாயகன் சூர்யாகாந்த உடன் நெருங்கி நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது, அவருக்கு ஆசை நாயகியாகவும் மாறும் சில்க், சூர்யகாந்த் திருமணமானவர் என்று தெரிந்தும் அவர் மீது காதல் வயப்படுவாள். ஒரு கட்டத்தில் சூர்யாகாந்த தன் மனைவியை விட தன்னை கேவலமாக நடத்துவதை உணர்ந்த சில்க், அவரை விட்டுச் செல்வாள். பின்னனி குரலில் சில்க் முதல் முதலாய் சிந்திக்கத் தொடங்கி விட்டாள்; தன்னைச் சுற்றி நடப்பதை உணர தொடங்கிவிட்டாள் என்று வரும்.

ஆம், பல பெண்கள் இன்று தாங்கள் அன்பு செலுத்துவது போல் இந்த உலகம் நமக்கு பதில் அன்பு செலுத்தும் என்று நம்பி அவர்களை சுற்றி பின்னப்படும் சதிவலையை உணர்வது இல்லை. விழித்து எழும் நாளில் எல்லாம் கை மீறி போய்விடுகிறது. தனக்கு சிறந்த நடிகை விருது கிடைக்கும்போது சில்க் பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ‘கவர்ச்சி என்பதை சீ… சீ… என்றெல்லாம் சொல்லிவிட்டு, அந்தரங்கத்தில் அவற்றைப் பார்த்து அகம் மகிழத்தான் செய்கிறோம்’ என்பதை மேடை ஏற்றி இருப்பார். நம் வீட்டு பெண்கள் என்ன ஆடை அணிய வேண்டும் என்று கட்டுப்படுத்தும் ஆண்கள், அண்டை வீட்டு ஆன்டியின் ஆடை விலகுவதை ரசித்து ரகசியமாய் சுய இன்பம் கொள்பவர்கள்தானே? அப்படிப் பார்த்தால் பிரச்சினை மனதிலும் பார்வையிலும்தான் இருக்கிறது. அது கவர்ச்சியில் இல்லை. நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தில் சினிமாவிற்கு வாய்ப்பு தேடிவந்த நடிகையை ‘கவர்ச்சி நடிகை’ என்ற முத்திரையுடன் மறைய வைத்ததற்கு, அவருக்கு வாய்ப்பு கொடுத்த, கொடுக்காத இயக்குனர்கள் மட்டும் காரணம் இல்லை; அவரை அப்படி அடையாளப்படுத்தி அவர் அங்கங்களை ரசித்த ரசிகர்களும் சேர்ந்துதான் காரணம்.

சினிமா உலகம் அவருக்கு வேண்டிய வரவேற்பை கொடுக்கத் தவறியது ஒரு பக்கம், தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர் நம்பிய யாரும் அவர் மீது உண்மையான அன்பை செலுத்த முடியாமல் அவரை விரக்தியின் எல்லா பரிமானத்தையும் பார்க்கவைத்தது அவரது கவர்ச்சி நடிகை என்ற அடையாளம். தன்னுடைய இந்த நிலையை எண்ணி வாழ்க்கையை வெறுத்து போகும் சில்க் தனக்கான முடிவை தானே தேடிக் கொள்வார். உண்மையில் சில்க் இன்று நம்முடன் உயிருடன் இல்லை என்றபோது, மக்கள் சில்க்கின் கவர்ச்சியை பற்றி பேசுவதிலை. மாறாக அவரது நடிப்பையும் அழகையும் குணத்தையும் நிறத்தையும் போற்றிப் புகழ்கிறார்கள். ஒருவேளை இதை நாம் செய்ய வேண்டிய காலத்தில் சரியான பார்வையுடன் செய்து இருந்தால், சில்க் போன்ற ஒரு சிறந்த நடிகையை நாம் இழந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை இந்தப் படம் பார்த்தபோது உணர்ந்தேன். இந்தப் படத்தை பல திரை ஆர்வலர்கள் திட்டி தீர்த்தபோதும், வித்யா பாலனுக்காக நிச்சயம் ஏற்றுக்கொள்ளலாம். எந்த விதத்திலும் உடல் வாகில் சில்கிற்கு சம்பந்தமே இல்லாத வித்யா பாலன், தனது நடிப்பின் மூலம் சில்க்காக மட்டுமே அவரைப் பார்க்க வைத்திருப்பார்.

நடிப்பில் உச்சியில் இருந்தபோதும் இப்படி சில்க் வாழ்க்கையை பிரதிபலிக்க போகிற ஒரு படம் என்றபோதும், அதை துணிச்சலாய் எடுத்து நடித்த வித்யா பாலன் நடிப்பை பற்றி சொல்லவேண்டும் என்றால், ‘அவர் ஒரு திரவ நிலை; அவர் ஏற்கும் பாத்திரத்தின் வடிவத்தைப் பெறுவார்’. சில்க் போன்ற நிலழகியை வித்யா பாலன் போன்ற நிழலழகி வெளிப்படுத்தியது ரசிகர்களுக்கு இரட்டிப்பு கொண்டாட்டம்தான்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: