கருத்து

ஒரு “அரசு” போக்குவரத்து தொழிலாளியின் மகள் பேசுகிறேன்!

சுசீலா ஆனந்த்

மூத்தவளாய் பிறந்த மூணாம் வருஷத்தில் அப்பாவுக்கு போக்குவரத்து துறையில் ஓட்டுநர் பணி கிடைத்திருந்தது. அதற்குள் தங்கையும் தம்பியும் பிறந்தார்கள். அரசு போக்குவரத்து துறையில் அப்பாவுக்கு பணி கிடைக்கும் வரையில் கான்வென்ட் பள்ளிக்கூடத்தில் படித்து கொண்டிருந்தேன். வேலை கிடைத்த ஓராண்டிலேயே அரசு உதவி பெரும் தமிழ் மீடியம் பள்ளியில் கல்வி பெறக்கூடிய வசதிக்கு தான் சம்பளம் கிடைத்தது.

அதுவரையில் சென்னைக்குள் குடியிருந்த நாங்கள் வீட்டு வாடகை தர முடியாத சூழலில் சென்னைக்கு வெளியே அப்போதிருந்த துரைப்பாக்கத்தில் குடிசை வீடொன்றுக்கு வாடைக்கு மாறியது கூட அப்பா போக்குவரத்து ஊழியராக வேலைக்கு சேர்ந்த பின்னர் தான். மூன்றாம் வகுப்பு குழந்தையாக ஒரு கையில் தங்கையும், மற்றொரு கையில் தம்பியும், ஜோல்னா பையுமாக எட்டாத பல்லவன் பேருந்து படிக்கட்டில் கை வைத்து ஏறி அடையாறில் இருக்கும் அவ்வை இல்ல பள்ளிக்கூடத்துக்கு வந்து வீட்டுக்கு அதே போல திரும்ப வேண்டும். அரசு போக்குவரத்து கழகத்தில் மகனுக்கு நிரந்தர வேலை என பாட்டி வருவோர் போவோரிடமெல்லாம் பீற்றி கொண்டிருக்கும்போது நாங்கள் சென்னைக்குள் குடியிருக்க வாடகைக்கு வழியில்லாமல் பாம்புகள் சூழ் சுடுகாட்டு வழிப்பாதை கடந்து இரவு 7 மணிக்கு பள்ளி கூடத்திலிருந்து திரும்பிக்கொண்டிருப்போம். வீடு வந்து சேரும் வரை வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டிருந்த அம்மாவும் அப்பாவும் சென்னைக்குள் குடியிருப்பை மாற்ற வேண்டியது தவிர்க்க முடியாது. அதனால் வாடகையை சமாளிக்க தான் வேலைக்கு போவதாய் அம்மா முடிவெடுத்ததும் என அரசு போக்குவரத்து ஊழியனின் குடும்பம் இத்தனை செழிப்பாக இருப்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்…

அரசு உதவி பெரும் பள்ளி தான் எனினும் அங்கு கட்ட வேண்டிய கல்வி கட்டணத்துக்கு போக்குவரத்து ஊழியரான அப்பா படும் பாட்டை பார்த்து நாங்கள் ரெண்டு பெண்களும் விடுமுறை தினங்களிலெல்லாம் குழந்தை தொழிலாளர் ஆக்கப்பட்டோம். 14 -15 வயசில் போட்டிருக்கும் ஆடை முழுக்க screen printing paint வழிய சாலைகளில் நிமிர்ந்து நடக்க கூசி குனிந்து நடந்து வீடு வந்த சேரும் நேரங்களில் எங்களின் தகப்பனார் அரசு பேருந்தில் தலையை நிமிர்த்தி நேர் கொண்ட பார்வையோடு தானொரு அரசு பேருந்து ஊழியன் என்ற பெருமிதத்தோடு லட்சக்கணக்கானோரின் பாதுகாப்பான பயணத்துக்கு உத்தரவாதம் தருபவராக நெருக்கடி மிக்க சென்னையின் சாலைகளில் வாகனத்தை செலுத்தி கொண்டிருப்பார்.

விவரம் தெரிந்த நாள் முதல் அப்பா retired ஆகி வரும்வரை 4000 ரூபாய்க்கு கூடுதலான சம்பளத்தை வாங்கியதாக நினைவே இல்லை. அதற்குள் அம்மா கொஞ்சம் மிளகாய் பொடி, துளியூண்டு புளி, சிறிது உப்பு, இது கிடைத்தால் அடுப்பு கூட இல்லாமல் குழம்பு வைப்பது எப்படியென்பதை பழகியிருந்தாள். படிப்பும், பண்டிகை தின கொண்டாட்டங்களும், நிர்வாகம் தந்த கடன் திட்டங்களிலேயே கழிந்ததில் சம்பளம் பிடித்தம் போக உப்பு, புளி, மிளகாய் பொடி வாங்குமளவுக்கு தேறும் அத்தோடு ரேஷன் அரிசியும்..

சுசீலா ஆனந்த்

விடியற்காலை மூன்று மணி ஷிப்ட் முதல் எல்லா வகை ஷிப்ட் களிலும் மாங்கு மாங்கென்று வேலை செய்தும் கடன்கள் தவிர வேறு ஒன்றும் தேறாத துறை போக்குவரத்து துறை என்று உணர்ந்த நேரத்தில் நெருக்கடி மிக்க வேலை அது செய்யும் சாலை மீதுள்ள கோபத்தை வீட்டுக்குள் நுழைந்ததும் காட்டுவார் அப்பா. வீடு, வேலையென உழைத்து கொட்டிய அம்மாதான் அடிதாங்கியாகவும் ஆனார். 300 சதுரடி வாடகை வீட்டில் இருந்த அளவான பொருட்களும் மூலைக்கொன்றாய் வீசியெறியப்பட்டது. அதுவரை சேர்த்து வைத்த மான அவமானங்களும்…

ஒரு முறை திடீரென சபரிமலைக்கு மாலை போட்டு கொண்டு வீட்டுக்கு வந்தார் அப்பா உடன் 13 வயதான தம்பியும். தாங்கள் பிச்சையெடுத்து சாஸ்தாவின் சன்னிதானத்துக்கு வருவதாக வேண்டியிருப்பதாக சொன்னார் அப்பா.. வீட்டில் சண்டையில்லாமல் இருக்கும் என நாங்களும் தனக்கு விழும் அடியிலிருந்து ஒரு 48 நாளேனும் விடுதலை என அம்மாவும் சந்தோச பட்டு கொண்டோம். ஒரு விடியற்காலை தம்பியை கூட்டிக்கொண்டு புறப்பட்டு போனவர் தெருக்களில் சாமிக்கு உண்டியல் மூலம் பிச்சை எடுத்து சேர்த்த பணத்தில் வீடு வந்து சேர்ந்தார்கள். எண்ணி பார்த்ததில் 3500 தேறியது. மறுநாள் காலை உண்டியலுக்கு பூசை எல்லாம் முடித்து உண்டியலை உடைத்து எடுத்த பணத்தை எங்கள் மூவருக்கும் பள்ளி கல்வி கட்டணம் கட்ட சொல்லி பிரித்து கொடுத்தார் அப்பா.. “அப்ப கோவிலுக்கு” என்று கேட்ட அம்மாவிடம் எது முக்கியம் னு அய்யப்பனுக்கு தெரியும் என்றார் அப்பா என்ற அரசு சம்பளம் வாங்கி கொண்டிருந்த அரசு போக்குவரத்து ஊழியர்…

குடும்பத்தோடு சுற்றுலா செல்ல வசதியாக போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த இலவச பஸ் பாஸ் பயன்படுத்தி தான் சட்டக் கல்லூரி படித்த காலங்களில் மதுரை to சென்னை வந்து வந்து போக முடிந்தது. வளர்ந்து பெரியவர்களாகி ஒரு நயா பைசா கூட அப்பா கையிலிருந்து வாங்காமல் கல்யாணம் காட்சியெல்லாம் முடித்துக்கொண்டோம். இப்படியே 30 ஆண்டுகால சேவை முடித்து retired ஆனபோது கையில் நிர்வாகம் எழுதி தந்த ஒரு அக்ரீமெண்ட் பேப்பரும் கையுமாக வீடு வந்து சேர்ந்ததில் இருந்து ஓரிரண்டு ஆண்டுகள் ஒழுங்காக 6000 பென்ஷன் வந்து கொண்டிருந்தது. அம்மா வேலைக்கெல்லாம் போக கூடாதென லட்சுமண கோடு கிழித்து மாதம் இவ்வளவு என நானும், தங்கையும் கொடுத்து வந்தோம். சிறு வயசிலிருந்து வாழ்க்கை கற்று கொடுத்த தரை நீச்சல், பின்னர் காற்றிலேயே நீச்சலடிக்கும் அளவுக்கு எங்களை பழக்கி தந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென இரு கண் விழிகளில் ஒன்று மட்டும் அப்படியே அசையாமல் நிற்க, அப்பாவை அரசு மருத்துவமனையில் சேர்த்த பொழுது தான் தெரியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சரி வர தரப்படாத பென்ஷன், மீண்டுமொரு முறை சார்ந்திருக்கும் நிலைக்கு தன்னை தள்ளிடுமோ என்ற அச்சம், பென்ஷன் ஆபீசுக்கும், தொழிற்சங்க அலுவலகத்துக்கும் நடந்து நடந்து தொய்வடைந்ததை காட்டிலும் தங்களின் பணம் 7000 கோடியை அப்படியே அமுக்கி வாயில் போட்டு கொண்ட அரசாங்கம் இனி அதை திருப்பி தர கடுமையாக போராட வேண்டுயிருக்கும் என்ற உண்மை தெரிந்து கொண்டதும், தான் இறப்பதற்குள் அது சாத்தியமில்லை என்ற அவநம்பிக்கையும் அவரை முடக்கி போட்ட விஷயம்.

பிள்ளைகளாக உடனடியாக தோள் கொடுத்தோம், சிகிச்சை அளித்தோம், சந்தோசமாய் இருக்க சொன்னோம். ஆனாலும் அப்பாவும் அம்மாவும் சார்பற்று வாழும் சுயமரியாதையை மீட்டு தர முடியாதவர்களாகி விட்டோம். அம்மா தன்னுடைய 65 வயதில் மீண்டும் வேலைக்கு கிளம்பிவிட்டாள். என்ன சொன்னாலும் இது தங்களின் சுயமரியாதை என்கிறாள். எங்கள் வீட்டில் மட்டுமல்ல, ஓராயிரம் அரசு போக்குவரத்து தொழிலாளியின் குடும்பங்களில் இன்று இது தான் நிலை.

இப்போது சொல்லுங்கள், காலமெல்லாம் உழைத்து சேர்த்து அரசிடம் கொடுத்த தங்கள் பணம் 7000 கோடியை 10 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்து திரும்ப கேட்க்கும் இந்த போராட்டம் நியாயமற்றதா?
தொழிலாளிகளின் அடிப்படை சம்பளம் 17 ,700 என உயர்த்திய பின்னரும் தொழிலாளர்கள் போராடுவதாக சொல்லும் அமைச்சர் சும்மாவா தந்தார்.. ஒன்றல்ல இரண்டல்ல 23 முறை பேச்சு வார்த்தை. அந்த பேச்சு வார்த்தைக்கு அழைக்க நூற்றுக்கணக்கில் கூட்டங்கள், உள்ளிருப்பு போராட்டங்கள்..

தொழிலாளிகளின் உழைப்பு கூலி 7000 கோடியை 1000 கோடிகள் வீதம் 7 ஆண்டுகளுக்கு தருவோம் என வாய் கூசாமல் பொறுப்பற்று பதில் சொல்லும் அரசுக்கும், இரண்டு மாதங்களுக்கு முன்னால் வரை வெறும் 80000 ரூபாயாக இருந்த தங்கள் சம்பளத்தை ‘போதவில்லை என சொல்லி வேறு வேலைக்கு செல்லாமல்’ 2.5 லட்சம் உயரும் வரை எல்லாவகையான எடுப்பும் பார்த்து சாதித்து கொண்ட நீதித்துறைக்கும் எதிராக இன்று போக்குவரத்து தொழிலாளிகள் போராடி கொண்டிருப்பது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கவா?

தமிழக போராட்ட வரலாறுகளில் போக்குவரத்து தொழிலாளிகளின் போராட்டங்களுக்கு ஒரு வரலாறு உண்டு. பிரித்தாளும் சூழ்ச்சியில் போராட்டங்களை நசுக்கி குளிர் காய்ந்த அரசாங்கம் எல்லா போராட்டங்களையும் நர்ஸுகள்போராட்டம் போல நீதி மன்ற துணை கொண்டு நசிக்கிட கூடுமா?

இப்போது சொல்லுங்கள் போக்குவரத்து தொழிலாளர்களின் இந்த போராட்டம் தேவையற்றதா?

சுசீலா ஆனந்த், சமூக செயல்பாட்டாளர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: