நூல் விமர்சனம்

”நடைமுறை சந்தர்ப்பவாதத்திற்கு கோட்பாட்டு முலாம் பூசுகிற திருத்தல்வாத கம்யூனிஸ்டுகள்”: அருண் நெடுஞ்செழியன்

மார்க்சியர் கே. சங்கர நாராயணன் எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்ட “மார்க்சியமும்  தேசிய இனப் பிரச்சனையும்” என்ற நூல் குறித்து அரசியல் செயல்பாட்டாளர் அருண் நெடுஞ்செழியன் எழுதிய விமர்சனம் இது. முந்தைய பகுதியை இங்கே படிக்கலாம்.

அருண் நெடுஞ்செழியன்

இந்திய மைய அரசுடனான, கடுமையான போராட்டங்களுக்கும் உயிர்த்தியாகங்களுக்கும் பிறகு இந்திய ஆளும்வர்க்கத்தால் அரைமனதாக அமைக்கப்பட்ட மொழி வழி மாநிலங்களின் அரசியல் முடிவை இன்று யார் எடுத்து வருவது? ஒரு மாநில ஆளுனரை மக்கள் தேர்ந்தெடுப்பதில்லை. மாநில ஆளுநர், மத்திய அரசால் நேரடியாக நியமிக்கப்பட்டு வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைக்கப்படுகிற மாநில சட்டமன்ற சபையை ஆளுனரால் கலைக்கமுடியும். 356 சரத்தின் கீழ், ஜனாதிபதி ஆட்சியை எந்தவொரு மாநிலத்தின் மீதும் ஜனநாயக விரோதமாக நடைமுறைப் படுத்த இயலும். கடந்த காலத்தில் சுமார் எண்பதிற்கும் மேற்பட்ட முறை இவ்வாறு மையே அரசு மாநில ஆட்சியை கலைத்துள்ளது. ஜனாதிபதி ஆட்சியை நடைமுறைப் படுத்துகிற 356 சரத்தானது, நூலாசிரியருக்கு இந்தியாவின் முரணற்ற ஜனநாயகத்தின் மகுடமாக தெரிகிறது போலும். ஈ எம் எஸ் இன் முதல் கம்யூனிஸ்ட் சட்டமன்றத்தை நேரு அரசாங்கம் கலைத்ததை நூலாசிரியரின் நினைவுக்கே விட்டு விடுகிறேன்.

மாநில நிர்வாகத்தை கண்காணித்து முடக்கவோ, கலைக்கவோ மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத மத்திய அரசின் மாநில முகவரான ஆளுனரால் முடிகிறது. மாநில சட்டமன்றத்தில் ஒரு சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டுமென்றால் அது மாநில ஆளுனரின் ஒப்புதலோடு மத்திய அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு பிறகுதான் நடைமுறைக்கு வர முடியும். மத்திய அரசு நினைத்தால் இந்த மசோதாவை முடக்கவும் முடியும்.

மேலும் உள்நாட்டு ஆபத்து, பொருளாதார நெருக்கடி போன்ற சூழல் வருகிறபோது, ஒட்டுமொத்த மாநில சட்டமன்றமும் கலைக்கப்பட்டு எமெர்ஜென்சி நிலையை மத்திய அரசால் கொண்டு வர முடியும். 1973-77 இந்திரா காந்தியில் எமெர்ஜென்சி காலகட்டமானது அதற்கொரு சிறந்த எடுத்துக் காட்டு.

ஆக, இந்திய மைய ஆட்சியின் கீழ், மொழி வழி தேசிய மக்களின் சட்டமன்றங்களானது, மாநில மக்களின் பிரதிநிதித்துவ ஜனநாயக நிறுவனமானது, மாநகராட்சி மன்றங்களாக மட்டுமே நடைமுறையில் இயங்குகிறது.. மாநில சட்டமன்றத்திற்கு அம்மாநிலம் தொடர்பாக எந்தவொரு அரசியல் பொருளாதார முடிவையும் எடுக்க இயலாத நிலைதான் தேசிய இனங்களுக்கு இடையிலான சமத்துவமாக நூலாசிரியர் கருதுகிறார் போலும்.

போலவே, ஒரு மாநிலத்தில் பதற்ற நிலைமை என ஆளுனர் அறிவித்துவிட்டால், அம்மாநில சட்டமன்றத்தின் அனுமதியின்றியே மத்திய அரசின் ராணுவப் படைகள் இந்தியாவில் எந்த மாநிலத்தில் வேண்டுமானலும் செயல்பட உரிமை உண்டு. மக்களை கைது செய்யவோ, சுட்டுக் கொல்லவோ உரிமை உண்டு. அவ்வாறான சூழலில், ஒருவர் மீது சந்தேகம் வந்தாலே விசாரனையின்றி கைது செய்கிற உரிமை ராணுவத்திற்கு உண்டு.

இந்தியாவின் வடகிழக்கு மாகணங்களிலும் ஜம்மு காஷ்மீரில் நடைமுறையில் உள்ள ஆயுத சட்டங்கள், இவ்வாறான ராணுவ வன்முறைகளுக்கு சட்டப்பூர்வ அனுமதியை வழங்குகிறது.

“இந்திய ராணுவம் எங்களை வன்புணர்வு செய்கிறது, நாங்கள் எல்லாம் மனோரமாவின் தாய்மார்கள்” என்ற பாதைகளை தாங்கியபடி நிர்வாணமாக போராடிய பனிரெண்டு மணிப்பூரிய பெண்களிடத்தில் சென்று, அம்மா இந்தியாவில் தேசிய இனப் பிரச்சனையானது ஜனநாயக ரீதியில் தீர்க்கப்பட்டு விட்டது, உங்கள் போராட்டம் தவறு என நூலாசிரியரால் கூற இயலுமா? இந்திய ராணுவத்தின் கொடூர ஜனநாயக விரோத ஆயுத சட்டங்களை; இந்தியாவில் ஒடுக்குகிற தேசியம் இல்லை என நியாயப்படுத்த முடியுமா? அவ்வாறு நியாயப்படுத்துவதை விட ஒரு வெட்க்கக்கேடு இருக்க முடியுமா?

போலவே மாநில நீதிமன்றத்தின், நீதிபதிகளின் நியமனம், நிதி வருவாய், இந்திய நிர்வாகத் துறை போன்றவற்றில் முடிவெடுக்கக் கூடிய எந்த அதிகாரமும் மாநில மக்களுக்கு இல்லை. அதாவது மாநில மக்களின் பிரதிநிதி சபைகளான மாநில சட்டமன்றத்திற்கு இல்லை.

போலவே பல்தேசிய நாட்டில், தேவநகரி எழுத்து வடிவிலான இந்தி மொழியையே ஆட்சி மொழியாக இந்திய மைய அரசு அதன் அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்தியை அகில இந்திய மொழியாக திணிக்கிற பணிகளையும் பலாத்காரத்தின் வழியே முயற்சித்தது, முயற்சி செய்தும் வருகிறது.

நமது நூலாசிரியர் என்ன கூறுகிறார் பாருங்கள்

“இந்தியாவிற்கு பொதுவான ஒரு தேசிய மொழி இல்லை. இந்தி மொழியைத் தேசிய மொழி எனத் தவறாக கருதுகிறோம்” பக்கம்-49

பிரச்சனை தேசிய மொழி என்பதல்ல, இந்திய அரசியல் சாசனத்தில் இந்தி மொழியை ஆட்சி மொழியாக தீர்மானித்தது எந்த ஜனநாயகத்தின் அடிப்படையில் என்பதே. ஒரு பல்தேசிய நாட்டில், உற்பத்தி வாணிப நோக்கங்களுக்கு ஏதுவான மொழியே அதன் சொந்த வளர்ச்சிப் போக்கில், பொது மொழியை உருவாக்கும் என்பற்கும் அரசியல் சாசனத்தின் வழியே செயற்கையாக திணிப்பதற்கும் பாரா தூரமான வேறுபாடு உள்ளது.

சின்னஞ்சிறிய சுவிட்சர்லாந்து நாட்டில், ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலி மொழிகள் ஆட்சி மொழியாக உள்ளதே, இதற்கு எந்த கேடும் இல்லையே என லெனினே மேற்கோள் காட்டியுள்ளாரே (தேசிய இனப் பிரச்சனைகளும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும் பக்கம் -21)

ஆக,இந்தி மொழி ஆட்சி மொழியாக இருப்பதில் கேடொன்றுமில்லை எனக் கருதுகிற நூலாசிரியர்,இதை ஜனநாயக விரோதமெனக் காணமால்,அரசியல் சாசனம் அட்டவணை எட்டில் உள்ள மாநில மொழிகளின் அடித்தளத்தில் இந்தி மொழி வளப்படுத்தவேண்டும் என்ற எல்லைக்கு செல்கிறார்.

“இந்தியாவில் சுமார் 880 மொழிகள் பேசப்பட்டு வருகின்றன, அதில்29 மொழிகள் பெரிய, பரவலாகப் பேசப்படும் மொழிகள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இந்தி உட்பட 22 மொழிகள் இந்தியாவின் தேசிய மொழிகளாக இடம்பெற்றுள்ளன. இந்திய மத்திய அரசு இந்த 22 மொழிகளையும் வளர்க்க வேண்டும். மேலும்,இந்த 22 மொழிகளின் அடித்தளத்தில் இந்தி மொழியை வளப்படுத்த வேண்டும்”(மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சனையும் பக்கம் -49)

மேற்கூறிய உதாரணங்கள் எல்லாம், ஒடுக்குகிற தேசிய இனங்கள் இல்லாத நாட்டில், பல்தேசிய அரசுக்கு தலைமை தாங்குகிற முதலாளித்துவ அரசால் ஒடுக்குமுறையை எதிர்கொள்கிற தேசிய இனங்களின் பிரச்சனைகள் பற்றியது. நூலாசிரியரைப் பொறுத்தவரையில் இதுவெல்லாம் பிரச்சனையே அல்ல. தேசிய இனப் போராட்டங்கள் எல்லாம் மிச்ச சொச்ச பிரச்சனைகள், குறுகிய கால அஜென்டா. மேலும் இந்தியாவின் “முரணற்ற ஜனநாயகமானது” ஜனநாயகப் பூர்வமாக இப்பிரச்சனைகள் அனைத்தையும் வெற்றிகரமாக தீர்த்து விட்டது-தீர்க்கிற திறன் ஆளும் வர்க்கத்திற்கு இருக்கிறது என்பதாகும்.

“தேசிய ஜனநாயகப் புரட்சியின் சில கோரிக்கைகள், மிச்ச சொச்சங்கள் பல இன்றும் இருக்கலாம்.அந்த முழுமையடையாத மிச்ச சொச்சங்களுக்கான அரசியல், மிகக் குறுகிய கால அஜெண்டா. தேசிய இனங்கலுக்கு இடையே முரணற்ற ஜனநாயகம் கடைபிடிக்கும் இந்தியாவில், தேசிய ஜனநாயகக் கட்டத்தின் மிச்ச சொச்சங்களுக்கான போராட்டங்கள், தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு, அஸ்ஸாம்,மிசோ, தெலுங்கான, சிவசேனா, காலிஸ்தான் வடிவில் வந்து அடங்கிப் போனதை நாமே பார்க்கிறோம். இந்தப் பிரச்சனைகளைச் சமாளிக்கும் திறன் ஆளும் முதலாளித்துவ சக்திக்கு இருக்கிறது. (மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சனையும் பக்கம்-57)

ஆக, முரணற்ற ஜனநாயகம் கடைபிடிக்கப்படுகிற இந்தியாவில் எழுகிற தேசிய இனப் பிரச்சனைகள் ஜனநாயக ரீதியாக தீர்த்துவைக்கப்பட்ட இந்தியாவில், தீர்த்தத்தை கூட புரிந்து கொள்ளாமல் போராடுவது என்ன நியாயம் என்பதுதான் நூலாசிரியரின் வாதம். மார்க்சிஸ்ட் கே நாராயணனைப் பொறுத்தவரை, தேசிய இனப் போராட்டங்கள் மிச்ச சொச்சங்களுக்கான அரசியல் – குறுகிய அஜெண்டா. என்ன அருமையான முடிவு! ஆளும்வர்க்க அறிவுஜீவியால் கூட இவ்வாறன ஒரு விளக்கத்தை கொடுக்க இயலாது!

ஆக,திரு கே சங்கர நாராயணன் போன்ற மார்க்சிஸ்டுகள், இந்திய முதலாளித்துவ ஜனநாயகமானது முரணற்றதகாவும்,மொழி வழி தேசியமாக உள்ள பல்வேறு மொழிவாரி மாநிலங்களின் சமத்தும், ஒற்றுமை தொடர்பான பிரச்சனைகள் முதலாளித்துவ ஜனநாயகம் தீர்க்க முடியும், தீர்த்து விட்டது என்கிறார்கள்.

ஆனால் அன்றாடம் நூலாசிரியரும் செய்திகளைப் பார்க்கிறார், காஷ்மீரில், வடகிழக்கில் ஏன் இன்னும் போராட்டங்கள் ஓயாமல் நடைபெறுகிறது. எல்லாம் தீர்த்தும் சிக்கல் வருவதால் இக்கோரிக்கையை தீவிரவாதிகளே எழுப்பிவரவேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார்.

“வடகிழக்கு மாநிலங்களில் மிஷனரிகள் மூலம் ஆங்கில வழிக் கல்வி கொடுப்பதுடன்,அந்நிய நாட்டு ஏஜென்ட்களும் தீவிரவாதத்திற்கு ஆள் பிடிக்கவும், பணம்-ஆயுதம் சப்ளை செய்யவும் அங்கு அனுப்பப்பட்டனர். ஆனால் இந்திய முதலாளித்துவம் இதையும் சமாளிக்கத் தொடங்கிவிட்டது” (மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சனையும்-பார்க்க 45)

“உள்நாட்டு நெருக்கடிகளை சமாளிக்க பாகிஸ்தானிய மதக் கலாசார தேசியம் பல வழிகளில் பயன்படுகிறது. இந்தியாவுடன் மோதல் போக்கும், காஷ்மீரில் தீவிரவாதத்தை -இறக்குவதும் அதில் சில வழிகள்.(மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சனையும்- பார்க்க 46)

காஷ்மீர் போராட்டம் தீவிரவாதம் எனவும், வடகிழக்கு போராட்டங்கள் கிருத்துவ மிஷனரிகளால் தூண்டப்பட்டு அந்நிய எஜென்ட்களால் நடத்தப்படுவதாகவும் ஆளும்வர்க்க குரலாகவே மார்க்சியர் கே நாராயணன் பேசுகிறார். காங்கிரஸ், பாஜக போன்ற முதலாளியக் கட்சிகள் காஷ்மீர், வடகிழக்கு போராட்டங்களை பிரிவினைவாத கோரிக்கையாக நாட்டின் ஒற்றுமையை பாதிக்கிற தீவிரவாத பிரச்சனையாக மக்களிடம் பேசுகிறது. இதை மார்க்சிஸ்ட் திரு நாராயணன் அவர்கள் வேறொரு வார்த்தையில் பேசுவது கொடுமையினும் கொடுமை.

2

சுய நிர்ணய உரிமைக் கோரிக்கை பாட்டாளி வர்க்கத்தை பிளவுபடுத்துமா?

அ) தொழிலாளர் வர்க்க ஜனநாயகத்தின் தேசிய இன வேலைத்திட்டம்

ஒடுக்குகிற தேசியம் இல்லாத நாட்டில், நவீன முதலாளித்துவ அரசு வடிவில்,மைய அரசின் கீழ் தேசிய மக்களை ஒடுக்கிவருவதற்கான சில உதாரணங்களை மேலே கூறினோம்.மேலும்,சுய நிர்ணய உரிமை பேசுவது,பாட்டாளி வர்க்கத்திற்கு இடையிலான மோதலை உருவாக்கும் என இந்திய ஆளும்வர்க்க குரலில் பேசுகிற நூலாசிரியரின் வாதத்திற்கு வருவோம்.

அருமை மார்க்சிஸ்ட் திரு நாராயணன் அவர்களே, இந்தியாவில், ஒடுக்கப்படுகிற தேசிய இயக்கங்களின் விடுதலைக் கோரிக்கைகள், அத்தேசிய இனங்களின் சுரண்டல் வர்க்கத்தாலோ, அல்லது சிறு உடமையாளர்களாலோ முன்னெடுப்பதற்கும், ஒடுக்கப்படுகிற தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்தில் முன்னெடுப்பதற்கும் பாராதூரமான வேறுபாடு உள்ளது. ஒடுக்கப்படுகிற தேசிய இனத்தின் கோரிக்கையே மித பூர்ஷ்வா கோரிக்கை என நிராகரிப்பது நகைக்கத்தக்க மடமையாகும். ஒடுக்கப்படுகிற தேசிய இனங்களின் பாட்டாளி வர்க்கத்த்ற்கு ஜனநாயக உரிமை வேண்டும் அல்லவா?அல்லது ஒடுக்குமுறையை சகித்துக் கொண்டு முதலாளித்துவ சுரண்டலை ஏற்றுக் கொண்டு வாழப் பழகிக் கொள்வதா?

அரசின் எல்லைகளுக்குள் எந்த ஒரு தேசிய இனத்தையும் பலவந்தமாக பிடித்துவைத்திருப்பதை அறவே ஒதுக்கிவிடும் ஒரு ஜனநாயகம் வேண்டுமென பாட்டாளி வர்க்கம் கோருகிறது. (தேசிய இனப் பிரச்சனைகளும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும் -13)

என்ற லெனினின் வாசகத்தை, ஒடுக்குகிற தேசியத்திற்குதான் இந்த வாதம் பொருந்தும் இந்தியாவில் இது பொருந்தாது என கூறுவதை விட ஒரு முட்டாள்தனம் இருக்க முடியுமா? மிதவாத பூர்ஷ்வா வர்க்கம் கோருவதால் மட்டுமே பல் தேசிய நாட்டின் தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராக ஒடுக்கப்படுகிற தேசியத்தின் பாட்டாளி வர்க்கம் போராடாமல் இருக்க முடியமா? பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்தில் சுய நிர்ணய உரிமை எனும் ஜனநாயக உரிமைக் கோரிக்கையை நிராகரிக்க இயலுமா?

தொழிலாளர் வர்க்க ஜனநாயகத்தின் தேசிய இன வேலைத்திட்டம் திட்டம் வருமாறு

“எந்த தேசிய இனத்துக்கும் எந்த மொழிக்கும் எந்தவிதமான தனியுரிமைகளும் இல்லவே இல்லை; தேசிய இனங்களது அரசியல் சுய நிர்ணயப் பிரச்சினை, அதாவது அவை அரசுகளாக பிரிந்து செல்லும் பிரச்சனை, முழு அளவுக்குச் சுதந்திரமான, ஜனநாயக வழியில் தீர்க்கப்படுதல்; எந்த ஒரு தேசிய இனத்துக்கும் எந்த விதமான சிறப்புரிமையும் அளிப்பதாகவோ, தேசிய இனங்களது சமத்துவத்துக்கு அல்லது தேசிய இனச் சிறுபான்மையினரது உரிமைகளுக்கு ஊறு செய்வதாகவோ இருக்கும்படியான எந்த நடவடிக்கையும் சட்ட விரோதமானதுமென்றும் செயலுக்கு வர முடியாததென்றும் பிரகடனம் செய்து, இம்மாதிரியான நடவடிக்கை அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதாய் அறிவிக்கப்பட்டு நீக்கப்பட்ட வேண்டும் என்றும், இதனைச் செயல்படுத்த முயலுவோர் குற்றவாளிகள் எனத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கோருவதற்கு எந்தக் குடிமகனுக்கும் உரிமை அளித்திடும் சட்டம் ஒன்றை அனைத்து அரசுக்குமாகப் பிற்பபித்தல்.” (தேசிய இனப் பிரச்சனைகளும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும்-லெனின் –பக்கம் 23)

மார்க்சிஸ்ட் கே நாராயணனைப் பொறுத்தவரை, இந்திய முதலாளித்துவ அரசு ஏற்கனவே ஜனநாயக வழியில் தேசிய இனப் பிரச்சனையை தீர்த்துவிட்டபடியால், முன்னாள் சோவியத் ரஷ்யாவைப் போலவே அனைத்து தேசிய இன மக்களுக்கு சம உரிமைகளும் சலுகைகளும் வழங்கப்பட்டு விட்டமையால், ஒடுக்குகிற தேசியம் இல்லாத நாட்டில் ஒடுக்கப்படுகிற தேசிய இனங்களின் தொழிலாளார் வர்க்க ஜனநாயகத்தின் தேசிய இன வேலைத்திட்டம் என ஒன்றே தேவையில்லை என்பதாகும்! தவறியும் ஏதேனும் சுய நிர்ணய உரிமைக் கோரிக்கை வைத்தால் அதை மிதவாத குட்டி முதலாளித்துவ கோரிக்கை என புறந்தள்ளுவார்.

பூர்ஷ்வா மிதவாத தேசியவாதமானது பாட்டாளி வர்க்க ஒற்றுமையை,அருகருகே வாழ்கிற தேசிய இனங்களின் உழைக்கும் மக்களிடையே சகோதர சண்டைகளை உருவாக்குவது. வெளியாரை வெளியேற்றுவோம், வந்தேறி அரசியல் போன்றவை திரு பெ. மணியரசன், திரு சீமான் கோரிக்கைகள் இவ்வாறனவை. மாறாக, ஒட்டுக்கப்படுகிற தேசிய இனங்களின் விடுதலைக் கோரிக்கையான (பிரிந்து போகும் உரிமையுடன்)சுய நிர்ணய உரிமைக் கோரிக்கை பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்தில் கோருவது ஜனநாயக கோரிக்கை ஆகும். தேசிய ஒடுக்குமுறையே நிகழாத நாட்டில் (ஏனெனில் ஒடுக்குகிற தேசியம் இல்லை!)தொழிலாளர் வர்க்க ஜனநாயகத்தின் தேசிய இன வேலைத்திட்டத்தை மார்க்சிஸ்ட் நாராயணன் ஏற்பது சிரமம்தான்.

அரசியல் எல்லைகளுக்குள்ளாக ராணுவ, அரசியல், பொருளாதார வழிகளில் பிற தேசியங்களை பலவந்தமாக கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் அரசிற்கு எதிராக எழுகிற தேசிய இயக்கக் கோரிக்கைகளை, மிதவாத பூர்ஷ்வா கோரிக்கை என்ற அர்த்தத்தில் சுருக்குவது மடமையினும் மடையானது. ஒடுக்கப்படுகிற தேசிய இனத்தில் பாட்டாளி வர்க்க நலன்களுக்கு எதிரானது.ஒடுக்குகிற அரசிற்கு ஆதரவானது.

சுய நிர்ணய உரிமை கோரிக்கையை அங்கீகரிப்பது, ஒடுக்கப்படுகிற தேசிய இனங்களின் மிதவாத பூர்ஷ்வா தேசியவாதத்தை அம்பலப்படுத்துவதை ஒருபோதும் விலக்கிவிடாது. மாறாக, பிரிந்து போகும் உரிமையை மறுப்பதுதான் ஜனநாயக விரோதம் ஆகும். ஒடுக்கப்படுகிற தேசிய இனங்களின் தொழிலாளி வர்க்க கோரிக்கை மிதவாத பூர்ஷ்வா பேசுகிற தேசிய இனக் கலாச்சாரவாதமல்ல. தொழிலாளி வர்க்க இயக்கத்தின் சர்வதேச கலாசாரம் ஆகும்.அருகருகே வாழ்கிற தேசிய இனங்கள் இறுதியில் சுதந்திரமாக,சகோதரப்பூர்வ வழியில் இணையும் போது மட்டுமே தேசிய இனங்களின் பாட்டாளி வர்க்க ஒற்றுமையும் கூட சாத்தியமாகும். பாட்டாளி வர்க்க சர்வதேசிய கலாச்சாரத்தின் நிபந்தனையாகும்.ஒரு முரணற்ற ஜனநாயக வடிவில்தான் தேசிய இனங்கள் சுதந்திரமாக இணைய முடியும். மாறாக, செயற்கையாக பலாத்காரமான வகையில் பிடித்து வைக்கபட்டுள்ள இந்தியாவில் முரணற்ற ஜனநாயகம் எனப் பேசுவது அபத்தத்தின் உச்சமான ஆளும் வர்க்க கருத்தாகும்.மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவ நாடான சுவிட்சர்லேந்தை முதுற்சியான முரணற்ற ஜனநாயகம் எனக் கூறலாம், மாறாக இந்தியாவை அவ்வாறு கூறுவது மடமையாகும்.

இந்திய அரசியல் எல்லைக்குள் எவ்வளவோ மூத்த மொழிகள் எழுத்து, பேச்சு மொழியாக உயிர்ப்புடன் இருக்கிற நிலையில் இந்தியை மட்டும் ஆட்சி மொழியாக மற்ற தேசிய இனங்களின் மீது திணிப்பது எவ்வாறு முரணற்ற ஜனநாயகம் ஆகும் திரு நாராயணன் அவர்களே! மாநகராட்சி மன்றங்களாக உள்ள மாநில சட்டமன்றத்தில் மாநில மொழியில் உரையாடுவதை தேசிய இனங்களின் சமத்துவம் உறுதிப்படுத்தப் பட்டது எனக் கூறவதை விட ஒரு அபத்தம் இருக்க முடியுமா?

காஷ்மீரில் ஒரு குடிமகனுக்கு பத்து போலீஸ், வடகிழக்கில் இராணவ வன்முறை, ஏனையே பின்தங்கிய வளர்ந்த தேசிய இனங்களின் மாநில சட்டமன்றத்தின் பொத்தான் மைய அரசின் கையில், இவையெல்லாம் முரணற்ற ஜனநாயக அரசின் அம்சங்களா?

ஆ) தொழிலாளர் வர்க்க ஜனநாயகத்தின் சர்வதேசிய கலாசாரம்

நூலின் எந்த இடத்திலும் சுய நிர்ணய உரிமையின் தொடர்ச்சியான சுதந்திர இணைப்பு குறித்து நூலாசிரியர் பேசவே இல்லை. முரணற்ற ஜனநாயகத்தில், அனைத்து மொழி வழி தேசிய உரிமைகள் வழங்கப்பட்டுள்ள நாட்டில், முதலாளித்துவ ஜனநாயக புரட்சியின் மிச்ச சொச்சங்கள் நிலவுகிற நாட்டில்,தேசிய இனப் போராட்டத்தை தீவிரவாத கோரிக்கை, கிறித்துவ மிஷனரி அஜெண்டாவாக, மிதவாத பிரிவினை பூர்ஷ்வாவின் குறுகிய அரசியல் அஜெண்டாவாக கருதுகிற “மார்க்சிஸ்டிடம்” இறுதி இணைவு குறித்து கேட்பது நியாமில்லைதான்.

உழைக்கும் மக்கள், பாட்டாளி வர்க்க நலன்ககளுக்காக பாட்டாளி வர்க்க கட்சி மிகப்பெரிய நாட்டை விரும்புகிறது. சிறிய நாடுகளாக இருப்பதைக் காட்டிலும் பெரிய நிலப்பரப்பில் வாழ்கிற பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் பொருளாதார நலன் அதிமாகவே கிடைக்கப்பெறும். ஆனால் பெரிய நிலப்பரப்பிற்கான இறுதி இணைவானது சுதந்திரமாக சகோதரப்பூர்வமாக இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். இறுதி இணைவில் பல் தேசிய இன மக்கள் நம்பிக்கையுடன் தொடரவேண்டுமென்றால் சுய நிர்ணய அரசியல் உரிமை அதற்கான முன் நிபந்தனை என லெனின் சரியாகவே கண்டார். எந்த அளவிற்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்படுகிறதோ, அந்தளவில் பிரிவினைக் கோரிக்கை மட்டுப்படும்,தேசிய இனங்களை நம்பிக்கையுடன் ஒன்றுடுடன் ஒன்று நெருங்கி வரும். வளர்ச்சியுறாத தேசிய மக்களுக்கும் தன்னாட்சி அதிகாரம் வழங்கத் தயாராக இருந்தார். இதை சோசலிச ரஷ்யாவில் நடைமுறையில் பிரயோகித்தார்.

“பாட்டாளி வர்க்கக் கட்சியின் உடனடி வேலை பிரிந்து செல்வதற்கான முழுமையான சுதந்திரத்தை உணர்ந்து அறிவித்தலே ஆகும். இப்பணி முடிந்த பிறகுதான் தேசங்களும் மக்களும் பாட்டாளி வர்க்கக் கட்சியின், தலைமையில் கீழ் ஒன்றோடுன்று நெருங்கி வரவும்,அதைத் தொடர்ந்து இணையவும் அல்லது ஒன்றுபடவுமான நிலையை அடைய முடியும். முழுமையான பிரிந்து போகும் சுதந்திரம் பரந்து பட்ட ஸ்தல மற்றும் தேசிய சுயாட்சி,தேசிய சிறுபான்மையினரின் விரிவான உத்தரவாதமளிக்கப்பட்ட உரிமைகள்-போன்றவையே புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தின் திட்டங்களாகும்,” (லெனின் மேற்கோள்-இந்தியாவின் தேசிய இனச் சிக்கலும் ஆளும் வர்க்கங்களும் –சுனிதி குமார் கோஷ்,பக்கம் -12)

நூலாசிரியர் திடுமென இந்தியாவில் “முரணற்ற ஜனநாயகம்” நிலவுவதாக கூறியபடியால், தேசிய இனப் பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டதால், இறுதி இணைவு ஏற்கனவே நடந்த முடிந்துவிட்டதால், மீண்டுமொரு சுய நிர்ணய உரிமையும் சகோதரப்பூர்வ இறுதி இணைவு குறித்து பேசாமல் இருந்திருக்கலாம். ஏனெனில் திரு. நாராயணனைப் பொறுத்தவரை யூகோஸ்லோவியாவைப் போல சோவியத் ரஷ்யா போல இந்தியாவிலும் தேசிய இன மக்களுக்கு இடையில் சமமான உரிமைகளும் சலுகைகளும் வழங்கப்பட்டு பிரச்சனை முன்பே தீர்த்தாயிற்றே.

ஏற்கனவே இறுதி இணைவு நடைபெற்றுவிட்டது என நூலாசிரியர் கருதியதால் அது குறித்து பேசாமல் போகிருக்கலாம். ஆனால், ஏகாதிபத்திய சகாப்தத்தில், முரணற்ற ஜனநாயகம் நிலவுகிற நாட்டில் தேசிய இனப் போராட்டங்கள் மீண்டும் அரசியல் அரங்கிற்கு முன்னுக்கு வந்து நிற்பதேன். நூலில் ஏகாதிபத்திய சகாப்தம் குறித்தும் ஒரு வார்த்தை கூட இல்லையே!.

3

இந்திய முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும்

பொருளாதார சார்பு என ஒரிடத்தில் தோழர் சுனிதி குமார் கோஷுக்கு மறுப்பு கூறுகிற இடத்தில் மட்டும் கூறுகிறார்.

//பொருளாதார ரீதியில் இந்தியா, ஏகாதிபத்தியங்களை, ஐ எம் எப், உலக வங்கி முதலானவற்றை சார்ந்து இருப்பதால், இந்திய தேசிய இனங்களுக்கு விடுதலையும் சுயர்நிர்ண உரிமையும் வேண்டும் என்கிறார்.//

//தேசிய இயக்கம் தோன்றப் பொருளாதாரக் காரணிகள்தான் அடிப்படை. ஆனால் அந்தக் கட்டத்தைக் கடந்தபின்னும் முடிந்துபோன அரசியலையே பேசுவதா? அதற்குப் பொருளாதாரச் சார்பை சொல்வதா? பொருளாதார ரீதியில் ஒன்றை ஒன்று சாராத நாடுகள் ஏதேனும் இருக்கிறதா? அமேரிக்கா, ஜப்பான், சீனா போன்ற எல்லா நாடுகளும் அடுத்த நாட்டுச் சந்தையை சார்ந்துதனே இருக்கின்றன. பொருளாதார ரீதியில் அடுத்த நாட்டைச் சாராத நாடு என் எதுவும் இருக்க வாய்ப்பே இல்லை.// (மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சனையும் பக்கம் 57-58)

அதாவது ஏகாதிபத்தியம் இருந்தது, எப்போது என்றால் காலனியாதிக்க கட்டத்தில் இங்கிலாந்து ஏகாதிபத்தியம் இருந்தது. அதுதான் இந்திய தேசிய விடுதலைப் போரட்டத்திற்கான பொருளாதார காரணிகளை வழங்கியது. ஆனால் 1947 ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசியல் விடுதலை பெற்றுவிட்டோமே? அதன் பிறகு எங்கே ஏகாதிபத்தியம் உள்ளது? பொருளாதார நலன்களுக்காக மேற்குலக நாட்டை, வளர்ந்த நாட்டை சார்ந்துள்ளதைப் போய் பெரிதுபடுத்துவதா? என்கிற வகையில் ஏகாதிபத்திய கேள்வியை சர்வ சாதரணமாக கடந்த போகிறார்.நிலவுகிற ஏகாதிபத்திய சகாப்தத்தில் புதிய ஜனநாயக புரட்சியை நடத்துவதில் இருந்து பின்னோக்கி, ஏகாதிபத்திய கேள்வியை முடிந்து போன அரசியலாக கருதுகிறார், ஏகாதிபத்தியம் 1947 ஆம் ஆண்டோடு முடிந்து விட்டதென்றால், எழுபது ஆண்டுகளாக இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சி ஏன் சாத்தியப்படாமல் உள்ளது?

எழுபது ஆண்டுகளாக நாட்டில் தொழிற்துறை உற்பத்தி, நாட்டின் ஒட்டுமொத்த ஜிடிபியில் 15 விழுக்காட்டைத் தாண்டவில்லை. நூற்று இருபது கோடி மக்களில் பாதி மக்கள் தொகை இன்னும் பழைய விவசாய உற்பத்தி உறவில் நம்பியுள்ளார்கள்? எழுபது ஆண்டுகளாக இந்திய சமுதாயம் ஏன் பொருளாதார ரீதியாக வளர்ச்சிப் பெறமுடியவில்லை? ஏகதிபத்தியம் முடிந்து போன அரசியல் என காங்கரஸ், பிஜெபி சொல்லலாம் மாறாக ஏகதிபத்திய சகாப்தத்தின் கேடால் துன்புற்றுவருகிற, கொடிய வறுமையும் ஏற்றத்தாழ்வுகளையும் எதிர்கொண்டு வருகிற சமுதயாத்தில் இருந்துகொண்டு ஒரு மார்க்சிஸ்ட் ஏகாதிபத்திய அரசியல் முடிந்துவிட்டது எனக் கூறுவதை விட ஒரு அபத்தம் இருக்க முடியுமா?

காலனிய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் உள்நாட்டு சந்தையை ஏகாதிபத்திய நாடுகள் பிடிக்குள் கொண்டு வந்தன. இந்தியா, இலங்கை, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் ரஷ்யா, அமெரிக்கா, பிரான்சு, இங்கிலாந்து போன்ற நாடுகளின் கைப்பாவை ஆகின.அரசியல் விடுதலை பெற்ற நாடுகளின் முதலாளிய வர்க்கமானது ஏகாதிபத்தியத்திடன் மண்டியிட்டது.அதன் கையாலாகியது. தொழில்நுட்ப வளர்ச்சியில் பின்னடைந்துள்ளதால் உலக வர்த்தகத்தில் போட்டி போட இயலாமல் முடங்கியது, தேங்கிய சமுதாயமாக சுமார் எழுபது ஆண்டுகளாக தொடர்கிறது. ஏகாதிபத்திய நாடுகளில் சந்தைக்கு புகலிடமாக மாறியது.

இதன் காரணமாக இந்நாடுகளின் சமுதயாமோ பழைய பிற்போக்கு உற்பத்தி உறவில் தொடர்கின்றன. அதேசமயம் உலகமய விளைவால் நகரில் புதிய நடுத்தர வர்க்க உருவாக்கும் நடைபெற்றன. இந்நாடுகளின் தேச உருவாக்கமும் வளர்ச்சியும் காலனியாதிக்க காலப் போரட்டத்திற்கு பிறகு எங்குமே இயற்கையானதாக உயிர்ப்புடன் இருக்கவில்லை.

இந்திய முதலாளிய வர்க்கமானது, மேற்கு ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவ சக்திகள் வகித்த முற்போக்குப் பாத்திரத்தை வரலாற்றில் இழந்துவிட்டது.திரு கே நாராயணன் போன்ற மார்க்சிஸ்ட்கள் மட்டுமே எழுபது ஆண்டுகளாக, இந்தியாவில் முரணற்ற ஜனநாயகம் நிலவுவதாக கருதிக்கொண்டு, ஏகாதிபத்திய அரசியல் கேள்வி முடிந்து போன ஒன்றென கூறிக்கொண்டு, தேசிய இனச் சிக்கல் ஜனநாயக ரீதியாக தீர்க்க்கப்பட்டுவிட்ட சிக்கல் என்றும் முதன்மையான முரண்பாட்டையே மிச்ச சொச்ச அரசியலாக கருத்துக்கொண்டு, இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சி வரும், பாட்டாளிகள் எண்ணிக்கை பெருகும், அப்போது புரட்சியை நடத்துவோம் அதுவரை காத்துக் கிடப்போம். முதலாளித்துவ வளர்ச்சியை ஆதரிப்போம். அதை கண்காணிப்போம். முதலாளித்துவ வளர்சிக்கு தடையாக இருக்கிற தேசிய இனக் கோரிக்கையை பிரிவினைக் கோரிக்கை என எதிர்ப்போம், அனைத்து மாநில மொழியின் அடித்தளத்தில் இந்தி மொழியை வளப்படுத்துவோம் எனக் கனவுலகில் கற்பனாவாத சோசலிசம் பேசி வருகிறார்கள். கட்சி புரட்சி நடத்தும் என்ற நம்பிக்கையுடன் கம்யூனிஸ்ட் கட்சிக்காக அர்ப்பணிப்புணர்வுடன் வேலை செய்கிற கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களுக்கும் மக்களுக்கும் துரோகம் இழைக்கிறார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)ஆகிய கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆளும் காங்கிரஸ் கட்சியின் இயற்கையான கூட்டணியாக உள்ளன. தேச கட்டமைப்பில் தங்களுக்கும் பங்கு உண்டு எனக் கருதுகிறார்கள். இந்திய அரசின் பல்வேறு ஜனநாயக நிறுவனங்களில் பொறுப்பு வகிக்கிறார்கள். இந்திய ஆளும் வர்க்கத்தின் ஒன்றுபட்ட அங்கமாகவே உள்ளனர். பாராளுமன்ற பங்கேற்பை அரசியல் கோரிக்கைக்காக அல்லாமல் சமூக ஜனநாயக சீர்திருத்தத்திற்கான வடிவமாக பார்க்கிறார்கள். அவ்வாறே கேரளா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் அரசு கட்டிலில் அமர்ந்துகொண்டு புரட்சி பேசுகிறார்கள். பாராளுமன்றத்தில் வாய் வீச்சு வீராவேசம் காட்டுகிறார்கள், நடைமுறையில் ஏகாதிபத்திய மூலதனத்திற்கும் இந்திய முதலாளிய வர்க்கத்திற்கும் சேவை செய்கின்றனர். இந்திய தேச ஒற்றுமைக்கு ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக பாதுகாவலராக செயல்படுகின்றனர். கட்சி ஊழியர்களுக்கும் மக்களுக்கும் துரோகம் செய்கின்றனர்.. ஆளும்வர்க்க அரசு இயந்திரத்துடன் ஒன்று கலந்து, நடைமுறை சந்தர்ப்பவாதத்திற்கு கோட்பாட்டு முலாம் பூசுகிற திருத்தல்வாத முன்னாள் ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சியாக, சோவியத் மென்ஷ்விக்குகளாக இன்றைய இரு பாராளுமன்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் சீரழிந்துள்ளது. இக்கட்சியில் திருத்தல்வாதத்திற்கு கோட்பாட்டு முலாம் பூசுகிற பெர்ன்ஸ்டைன்களுக்கும் கவுட்சிக்கிக்களுக்கும் பஞ்சமில்லை.

திரு கே.சங்கர நாராயணன் போன்ற திருத்தல்வாத மார்க்சிஸ்டுகளுக்கு சொல்லிக் கொள்வதாவது,

ஏகாதிபத்திய சகாப்தத்தில் இந்தியாவில் நடைபெற்றுவருகிற தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டமானது அடிப்படையில் புதிய ஜனநாயகப் புரட்சியுடன் பிண்ணிப் பினைந்தவொன்றாகும். தமிழகம், காஷ்மீர், மிசோரம், பஞ்சாப் போன்ற ஒடுக்கப்படுகிற தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமானது அடிப்படையில் ஒரு ஜனநாநாயகக் கோரிக்கை என்ற அம்சத்திலிருந்து கம்யூனிஸ்ட்கள் இத்தேசிய போராட்டத்தை ஆதரித்து மக்களை அணி திரட்டவேண்டும்.

ஒடுக்கப்படுகிற தேசிய இனங்களின் சுரண்டல் வர்க்கத்தை அம்பலப்படுத்தியே, இந்திய தேசியத்தின் பண்பாட்டு, அரசியல் பொருளாதார ஒடுக்குமுறைக்கு எதிராக ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, பின்தங்கிய நிலப் பிரபுத்துவ மிச்ச சொச்ச பிற்போக்குகளுக்கு எதிராக போராடுவதே ஒவ்வொரு கம்யூனிஸ்டின் இன்றைய கடமையாக உள்ளது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.