கருத்து

சில சாதிகளின் கேளிக்கை விளையாட்டு தமிழர் கலாச்சாரம் ஆகுமா?

சல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் நடந்தது புரட்சியா அல்லது கேம்ப்பிங்கா?

பகுதி- 2

ப. ஜெயசீலன்

கலாச்சாரம் என்றால் என்ன? by definition ஒரு மக்கள் திரளின் அறிவார்ந்த கூட்டு பங்களிப்பில், முயற்சியில் உருவாக்கப்பட்ட/ செழுமையாக்கப்பட்ட கலை மற்றும் இன்ன பிற வாழ்வியல் விழுமியங்களையும் நடைமுறைகளையும் கலாச்சாரம்/ பண்பாடு என கொள்ளலாம். ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு கடத்தப்படும் நம்பிக்கை சார்ந்த அடையாளங்களை/சடங்குகளை/பழக்கவழக்கங்களை சம்பிரதாயம்/ மரபு(tradition) என்று கொள்ளலாம். சம்பிரதாயம்/மரபென்பது நம்மை கடந்த காலத்தோடு தொடர்ப்பு கொள்ள செய்கிறது. கலாச்சாரம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடத்தில வாழும் சமூகத்தின் ரசனையை, தேர்வுகளை ,நடைமுறைகளை, அரசியலை குறிப்பது. இதில் கவனிக்க வேண்டியது கலாச்சாரம் என்பது காலத்திற்கு காலம் மாற கூடியது. பண்படுதலே பண்பாடு என்பது போல சமூகம் பண்பட பண்பட பண்பாடு மாறிக்கொண்டே வருகிறது. அந்த பண்படுதலை நிகழ்த்தும் காரணியாகத்தான் நவீனம்(modernity) மற்றும் அறிவியல் விளங்குகிறது. பொதுவில் கலாச்சாரம் என்பது நவீனத்திற்கு முரணானது/எதிரானது. ஏனென்றால் modernity என்பது நிகழும்,நிகழ்ந்து கொண்டிருக்கும் கலாச்சாரத்திடம் மாற்றத்தை, நவீனத்தை கோறுவது. கடைசியாக மதம் சார்ந்த எதுவும் மரபு என்னும் வகைமைக்குள்ளோ கலாச்சாரம் என்னும் வகைமைக்குள்ளோ வராது. ஏனென்றால் மதம் என்பது முழுவதும் மதம் சார்ந்த நம்பிக்கையின் அடிப்படையில் கேள்விகளுக்கு, தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டு இயங்க கூடியது. சிக்கலான இந்த வித்தியாசங்களை எனக்கு புரிந்த வரையில் சொல்லியுள்ளேன். மேலும் விவரங்களுக்கு கூகுளை அணுகுகங்கள்.

இப்பொழுது நாம் சல்லிக்கட்டு என்பது மரபா அல்லது கலாச்சாரமா என்ற கேள்வியை முன் வைக்க வேண்டும். இரண்டில் எதுவாக இருந்தாலும் நவீனத்திற்கு குறுக்கால் நிற்பதுதான். என்றாலும், அது யாருடைய மரபு அல்லது கலாச்சாரம்? தமிழர் மரபென்றல் தமிழரின் முன்னோர் காளையை அடக்குபவருக்கு தனது பெண்ணை பரிசுக்கோப்பையாய் தந்த மரபு ஏன் வழக்கொழிந்தது? தமிழரின் மரபென்றால் மாடு பிடிப்பதை ஒரு அளவீடாக கொண்டு பெண்ணை அவனுக்கு மணமுடித்து கொடுத்த முட்டாள்தனமான பொறுக்கித்தனமான மரபுதான் நம்முடையதா? உடனே ‘கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்” என்று மூச்சை பிடித்து கொண்டு சொல்லி புறநானூரிலேயே சல்லிக்கட்டு பெருமை பாட பட்டுள்ளது என்பார்கள். ஆடுமாடுகளை மேய்த்து பிழைக்கும் ஆயர் குல பெண் மாட்டின் கொம்பை பார்த்து ஜெர்க்காகும் ஒருவனை definite ஆக கட்டிக்கொள்ள மாட்டாள் என்று practicality பற்றி பாடும் அந்த பாடலில் சல்லிக்கட்டு பெருமை எங்குவந்தது? நாம் அந்த பாடலில் கவனிக்க வேண்டியது ஆடுமாடு மேய்ப்பவள் நன்றாக மாடு மேய்ப்பவன் மேல்தான் மையல் கொள்வாள் என்று ஏன் எழுதினார்கள்? ஏன் அவள் மீனவ குலத்தை சார்ந்த ஒருவனையே பனையேறும் ஒருவனையே ஏன் விரும்பமாட்டாள் என்று அந்த பாடலை எழுதியவர் நாடக காதல்களுக்கு எதிராக யோசித்ததின் பின்னணி என்ன என்று ஏன் ஆராயக்கூடாது?

மாட்டை பிடிக்கையில் குத்தப்பட்டு சாகிறார்கள் என்று தெரிந்தும் ஒரு கவசம் அணிவிக்க கூட தோன்றாதா காட்டுமிராண்டித்தனம்தான் நமது மரபின் தன்மையா? சரி அது கலாச்சாரம் என்று கொண்டால் அந்த கலாச்சார கேளிக்கை விழா/ கொண்டாட்டம் தமிழர் அனைவரும் உள்ளடக்கிய எந்த பிராந்தியத்தின் எந்த கால மக்களின் அறிவார்ந்த கூட்டு பங்களிப்பில் செழுமையாக்கப்பட்டது? ஒரு காலத்தின் ஒரு பிராந்தியத்தின் ஒரு சமூகத்தின் கூட்டு பங்களிப்பில்/ பங்கேற்ப்பில் செழுமையாக்கப்பட்டவைகளே கலாச்சாரம் என்னும் வைகைமைக்குள் வரும் என்னும் பொழுது சில குறிப்பிட்ட சாதிகளின் மரபான கேளிக்கை விழா/விளையாட்டு எப்படி தமிழர் எல்லோருக்குமான கலாச்சாரமாக மாறும்? பறை என்னும் ஒரு இசைக்கருவி தமிழரின் இசை கலாச்சாரமாகாமல் பறையர் அடிக்கும் மேளமாக ஆகும் போது சில குறிப்பிட்ட ஆதிக்கசாதிகளின் மரபான கேளிக்கை என்ன தைரியத்தில் தமிழரின் கலாச்சாரமாக முன்னிறுத்தப்பட்டது? இந்த சாதிக்கார மாட்டை இந்த சாதிக்காரர் தான் பிடிக்க வேண்டும். ஒவ்வொரு சாதிக்கும் வெவ்வேறு நேரம் மாடு பிடிக்க. இது போன்ற அயோக்கியத்தனமான விதிகள் மீற பட்டால் வெட்டுக்குத்து கொலை….இது எல்லாம் என்ன மாதிரியான கலாச்சாரம் மரபு?

நவீனத்தின் எந்த கூறுகளையும் உள்வாங்காமல் நவீனத்தை,நாகரீகத்தை நோக்கி எந்த நகர்வையும் செய்யாமல் தமிழரின் கலாச்சாரம் பண்பாடு பாரம்பரியம் என்று பிதற்றும் மடையர்களை என்ன செய்வது? உண்மையில் கலாச்சாரம் என்பதின் அளவீடு ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் வாழும் சமூகத்தின் ஜனநாயக பன்பையும், ஜனநாயகத்தன்மையையும், கலா ரசனையையும், அறிவியல் தேடலையும் சார்ந்தது ஆகும். பாஸ் இத நாங்க ரொம்ப நாளா பண்ணிக்கிட்டு இருக்கிறோம்..நல்லா போயிட்டு இருக்கு..இனிமேலும் இப்படித்தான் இருப்போம்…இதுல மாத்தறதுக்கு எதுவுமே இல்ல..எல்லாம் perfect என்று வாதிடுவது கலாச்சாரம் இல்லை. மடத்தனம். உண்மையில் தமிழர் கலாச்சாரம் என்பதின் அடிப்படை “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதின் அடிப்படையிலும்,”பெரியோரை வியத்தலும் இலமே,சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” என்பதின் அடிப்படையிலும்,”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதின் அடிப்படையிலும் கட்டமைக்கப்பட்ட விழுமியங்களை சார்ந்து இருக்க வேண்டுமே தவிர மாடு பிடிப்பதை கட்டிக்காப்பதை சார்ந்து இருக்கக்கூடாது.

இது எங்கள் இரண்டாயிரம் ஆண்டு பாரம்பரியம் கலாச்சாரம். எதாவது குற்றம் குறையிருந்தால் சுட்டிக்காட்டுங்கள் திருத்தி கொள்கிறோம். ஆனால் நிரந்தரமாக தடை செய்து விடாதீர்கள் என்று இவர்கள் நீதிமன்றத்தில் தலையை சொரிந்து கொண்டு நின்றது கேவலமாக பரிதாபமாக இருந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளாய் இவர்கள் கவனம் முழுவதும் ஏரை தழுவுவதிலேயே இருந்ததால் இவர்களால் சல்லிக்கட்டில் இருக்கும் குற்றம் குறைகள் என்னவென்று இவர்களாகவே கண்டுபிடிக்க தெரியவில்லை. அதனால்தான் நீதிமன்றத்திடம் போய் ஜி சொல்லுங்க ஜி..பார்த்து பண்ணிரலாம் ஜி என்று நின்றார்கள் நம் மானத்தை வாங்கிக்கொண்டு.சல்லிக்கட்டை தமிழர் பாரம்பரியம் என்று சொன்னால் நவீனத்தின் கூறுகளை உள்வாங்காத உள்வாங்கமுடியாத உள்வாங்கவிரும்பாதா உயிர்பலி கோரும் இந்த கருமம் பிடித்த பாரம்பரியம் போய் தொலைய வேண்டும். அது கலாச்சாரம் என்றால் ஜனநாயக்கத்தன்மை அற்ற, மாந்தநேய சமத்துவ விழுமியங்களை உள்வாங்கி கட்டமைக்காத தமிழர் கலாச்சாரம் மாடுபிடித்து எதையும் கழட்டி மாட்ட போவதில்லை. சக மனிதனை, விரும்பிய பெண்ணை மணந்தான் என்று வெட்டிக்கொள்ளும் மூளையற்ற காட்டுமிராண்டிகளுக்கு மாடுபிடி விளையாட்டு/கொண்டாட்ட கலாச்சாரம் ஒரு கேடா?

புரட்சியாளர் மாவோ சீனாவில் கலாச்சார புரட்சியை அறிவித்து,முன்னெடுத்த போது அவர் அதற்க்கு சொன்ன காரணம் சீனர்களின் கலாச்சாரத்துடன் முதலாளிதுத்வத்தின் பண்புகளும்,கூறுகளும் நீக்கமற கலந்து,பின்னி பிணைந்துள்ளன. தான் அமைக்க விரும்பும் புதிய சீன மக்கள் குடியரசை நிறுவ சீனத்தின் கலாச்சாரம் முற்றுமுழுதாய் மாற்றியமைக்க வேண்டும் என்று நம்பினார். அவருடைய முயற்சி நல்லவை,கேட்டவை இரண்டையும் நிகழ்த்தியது என்றாலும் மாவோவின் நோக்கம் பரிசுத்தமானது. அதை போலவே ஹிந்துத்வ இந்திய, தமிழக சமூகத்தின் பாரம்பரிய,கலாச்சார கூறுகளில் சாதி என்பது நீக்கமற நிறைந்துள்ளது. சாதியின் கூறுகளை நீக்கிவிட்டால் ஹிந்துத்வ சமூகத்தில் கலாச்சாரம்,மரபு என்று ஒன்றுமே மிஞ்சாது. நாம் உண்மையில் சாதியற்ற ஒரு சமூகத்தை கட்டமைக்கவேண்டும் என்று விரும்பினால் நாம் புத்தம் புதிதாக ஒரு கலாச்சாரத்தை வடிவமைக்கவும், நமது corrupted மரபுகளை சமரசமற்று தூக்கி எறியவும் தயாராக வேண்டும். அதன் மூலம் நாம் அடையும் இழப்புகளை விட பலன்களே மிக அதிகமாகயிருக்கும் என்பது என்னுடைய எண்ணம்.

உலகம் முழுவதும் தற்பொழுது பன்முக கலாச்சாரம் கொண்டாடப்படுகிறது. கலாச்சாரத்தின் நோக்கம் ஒன்று கலப்பது. அதாவது ஒரு சீனர் நமது வீட்டிற்கு வந்தால் நமது கலாச்சார உணவான மாட்டிறைச்சி பிரியாணியை காரம் குறைத்து பரிமாறவேண்டும். நாம் சீனத்தில் அவர் வீட்டுக்கு சென்றால் காரம் அதிகம் சேர்த்த dimsim செய்து பரிமாறுவர். நாம் அடுத்தமுறை இட்லி செய்யும்போது அவர் dimsimஸோடு குடுத்த சாஸை முயற்சித்து பார்ப்போம். அவர் dimsim ஸோடு தயிர் பச்சிடி தொட்டு சாப்பிட்டு பார்ப்பார். ஒரு புதிய நவீன உணவு கலாச்சாரம் பிறக்கும்.கலாச்சாரத்தின் நோக்கம் இதுதான். நமக்கென்று ஒரு கலாச்சாரம் இருந்தால்தான் இன்னொரு கலாச்சாரத்துடன் உறவாட முடியும். அதற்க்காகத்தான் கலாச்சாரம். அதாவது ஒன்று கலக்க, ஒன்றிணைய, தனித்து நிற்க, பிரித்து வைக்க இல்லை. ஆனால் நம்மூரில் என்ன நடக்கிறது? புதிய மனிதர்களை பார்த்தால் பீதி அடைந்து வில்லை கொண்டு தாக்கும் அமேசான் காடுகளில் வாழும் பழங்குடியினரை போல இது எங்க கலாச்சாரம் இது கூட யாரையும் கலக்க விடமாட்டோம் நாங்களும் யார்கூடயும் கலக்க மாட்டோம். அவரவர் அவரவர் கலாச்சாரத்தை வைத்து அவங்கவங்க அவங்கவங்க சாதியில் பெண்கட்டி அப்படியே ஜாலியாயிருப்போம் என்று சொல்லும் மடையர்கள் நிறைந்ததுதானே நாம் வாழும் சமூகம்? இந்த மடையர்களுக்கு கலாச்சாரம் என்ற சொல்லை பயன்படுத்த நா கூசவில்லையா?? இப்படி கலாச்சாரத்தின் அடிப்படையே புரியாத பாரம்பரியத்திற்கும், கலாச்சாரத்திற்கும் வித்தியாசம் தெரியாத, சில சாதிகளின் மரபான கேளிக்கை விளையாட்டை தமிழர் கலாச்சாரம் என்று அடித்து விடுவது எவ்வளவு பெரிய சில்லறைத்தனம், போக்கிரித்தனம் ??

ப. ஜெயசீலன், சமூக -அரசியல் விமர்சகர்.

Advertisements

One comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: