சினிமா

அர்ஜுன் ரெட்டி’காரு …பைசாவுக்கு பெறாத பிற்போக்குவாதி

ப. ஜெயசீலன்

அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை பற்றி வந்த நேர்மறையான விமர்சனங்களினாலும், பாடல்களிலும் அதை காட்சிப்படுத்துவதிலும் இருந்த நவீன அணுகுமுறையின் காரணமாகவும் தூண்டப்பட்டு அந்த படத்தை சமீபத்தில் பார்த்தேன். நமது சமூகத்தில் நவீனத்துவம் குறித்தும், முற்போக்குத்தனம் குறித்தும் பிற்போக்குவாதிகளுக்கு ஒரு குதர்க்கமான, கோமாளித்தனமான புரிதலிருக்கிறது.

பிற்போக்குவாதிகளை பொறுத்தவரை மேற்கத்திய ஆடைகளை அணிந்து ஆங்கிலம் பேசுவதே ஒருவனின் நவீனத்தை அளவிடும் கருவி. சாதியின் எல்லா அயோக்கியத்தங்களையும் கடைபிடித்துகொண்டே எனக்கு சாதியில் நம்பிக்கையில்லை என்று சொல்வதும், இந்தக்காலத்தில் யார் சாதி பார்க்கிறார்கள் என்று சொல்வதும்தான் அவர்களுடைய முற்போக்குத்தனத்தின் எல்லை. அடிப்படை அரசியல், சித்தாந்த அறிவற்ற/புரிதலற்ற இயக்குனர்கள் பூத்துக்குலுங்கும் தோட்டம்தான் இந்திய/தமிழ் சினிமா. அந்த தோட்டத்தில் ஆந்திராவில் பூத்திருக்கும் இன்னொரு அரைகுறை தற்குறிதான் அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டிகாரு. படம் பார்க்காதவர்களுக்காக சுருக்கமாக அர்ஜுன் ரெட்டியின் கதை.

அர்ஜுன் ரெட்டி மருத்துவ மேற்படிப்பு படித்துக்கொண்டிருக்கும் ஆண்மை பிதுங்கி வழிந்து ஓடும் அழகோடும், திமிரோடும், துடிப்போடும், அறிவோடுமிருக்கும் ஒரு மிக பணக்கார இளைஞன். அவனுக்கு அடக்கம் ஒடுக்கமாக தெய்வீகத்தன்மையோடு பரதம் எல்லாம் ஆட தெரிந்த துளு பெண்ணான ப்ரீத்தி என்ற ஜூனியர் பெண்ணிடம் பார்த்ததும் காதல். ரெட்டிகாரும் ப்ரீத்தியும் முற்போக்கு நவீனவாதிகள் என்பதால் இரண்டுபேரும் எதைப்பற்றியும் யோசிக்காமல் காதலாகி கசிந்துருகி கலவிக்கொள்கிறார்கள். ப்ரீத்தின் வீட்டில் இந்த காதல் விஷயம் தெரிந்து டென்ஷனாகிறார்கள். ப்ரீத்தியின் அப்பா எல்லா சாதிவெறி கோமாளிகளை போலவே நம்ப சாதியென்ன பெருமையென்ன ரெட்டிகாருக்கெல்லாம் எனது பெண்ணை மணமுடிக்க முடியாது என்று மறுத்துவிடுகிறார். தனது பெயரிலேயே ரெட்டி என்னும் சாதிப்பேரை வைத்திருக்கும் அர்ஜுன் ரெட்டிகாரு ப்ரீத்தியின் அப்பாவின் சாதிவெறியை ஏசிவிட்டு, பிரீத்தியிடம் இன்னும் 6 மணிநேரத்தில் நீ குடும்பத்தை விட்டு என்னிடம் வா என்று சொல்லிவிட்டு சென்று morphine என்னும் போதையை ஏற்றி கொண்டு மட்டையாகிவிடுகிறான். நடுவில் சில குழப்பங்கள் ஏற்பட்டு ப்ரீத்திக்கும் வேறொருவருடன் திருமணமாகி 3 மாதம் கர்பமாகவும், ரெட்டிகாரு வெறித்தனமாக தண்ணியையும், கிடைக்கும் பெண்களையும் போட்டுகொண்டு காதல் தோல்வி விரக்தியில் இருந்து ஒருவழியாக மீண்டு, ஒருவழியாக 3 மாதம் கர்ப்பமாய் இருக்கும் ப்ரீத்தியை சந்திக்க ப்ரீத்தி சொல்கிறாள் வயிற்றில் வளர்வது உனது பிள்ளை, நான் எனது கணவனின் விரல் கூட என்மீது பட விடவில்லை என்று.இரண்டு நவீன புரட்சியாளர்களும் ஒன்று சேர்க்கிறார்கள்.சுபம்.

செய் நேர்த்தியும், அழகியலும், தொழில் நுட்ப தரமும் சிறப்பாக பங்காற்றியுள்ள இந்த படம் நெடுகிலும் சந்தீப் ரெட்டிகாரு எவ்வளவு அற்பமான/ஆபத்தான கருத்துக்களை உடையவர் என்பதும், நவீனம் என்னும் பெயரில்/புரிதலில் எவ்வளவு ஆபத்தான/அற்பமான கருத்துக்களை அவர் மீட்டுருவாக்கம் செய்கிறார் என்பதையும் பார்க்க முடிகிறது. நான் சமீபத்தில் பார்த்த இந்திய படங்களிலேயே கேட்ட மிக ஆபாசமான பொறுக்கித்தனமான வசனம் இந்த படத்தில்தான் வந்தது. ஒரு காட்சியில் அர்ஜுன் ப்ரீத்தியிடம் சொல்கிறான் “அழகான பெண்களுக்கு எப்பொழுதுமே அசிங்கமான குண்டான பெண்கள் நல்ல தோழியாய் அமைவார்கள். there is something about ugly fat chicks. அவர்கள் நாய்குட்டிகளை போல விசுவாசமானவர்கள்”. இதுதான் சந்தீப் ரெட்டிகாருவின் நிஜமான முகம். இந்த மேல்சொன்ன வசனத்தை அர்ஜுன் கதாபாத்திரம் ஏதோ கண்டடைதலுக்கரிய உண்மையை தான் அறிந்து வைத்திருப்பதை போல சொல்லும். ஒரு நல்ல திரைக்கதையில் கதாபாத்திரங்களுக்கு ஒரு consistency இருக்கும். ஒரு காட்சியில் இப்படி சொல்லும் அர்ஜுன் இன்னொரு காட்சியில் air india விமான பணிப்பெண்கள் ஆண்ட்டிகளை போல உள்ளதாக கிண்டலடிக்கும் ஒரு நண்பனிடம் பெண்களை objectify செய்வது தனக்கு பிடிக்காது என்று அறசீற்றம் கொள்கிறான்.

ப்ரீத்தியின் தந்தை தனது பெண்ணை வேறு சாதியில் திருமணம் செய்து வைக்கமுடியாது என்று சொன்னவுடன் டென்ஷனாகும் அர்ஜுன் கதாபாத்திரம் படம் நெடுகிலும் ஒரு சில காட்சிகள் தவிர்த்து தனது பெயரை வாய்நிறைய அர்ஜுன் ரெட்டி அர்ஜுன் ரெட்டி என்றே சொல்லிக்கொள்கிறது. ப்ரீத்தியின் அப்பாவின் சாதிப்பற்றை கேள்விக்குட்படுத்தும் அர்ஜுன் கதாபாத்திரம் தனது பெயரில் தொங்கும் ரெட்டி அடையாளத்தை கேள்விக்குட்படுத்தவுமில்லை, நிராகரிக்கவுமில்லை. அர்ஜுன் ரெட்டி படத்தின் பல காட்சிகளில் நிச்சயதார்த்தம், திருமணம், இன்ன பிற சடங்குகள் மிக நேர்த்தியான பார்ப்பனிய ஹிந்துத்வ அழகியலோடு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த காட்சிகளில் அர்ஜுன் கதாபாத்திரம் அந்த சடங்கு சம்பிரதாயங்களை (என்ன இருந்தாலும் நம்ம culture பிரதர்) முழுவதுமாய் உள்வாங்கி அந்த சடங்குகளுக்கு உடன்படுகிறது. அதாவது பெயரில் சாதியை வைத்துக்கொண்டு, பார்ப்பனியத்தை கடைபிடித்துக்கொண்டு என்னஜி பெரிய சாதி மயிறுனு..மனுஷங்க தான் ஜி முக்கியம் என்று பிதற்றும் போலி முற்போக்குத்தனத்தின் திரை வடிவமே அர்ஜுன் கதாபாத்திரம். சாதியை ஒரு முரணாக வைத்து கதை செய்திருக்கும் சந்தீப் ரெட்டிகாரு தனது படத்தின் பெயரிலேயே ரெட்டியை தொங்கவிடுவது எவ்வளவு கோமாளித்தனம்?

அர்ஜுன் கதாபாத்திரத்தின் ஆணாதிக்க செயல்பாடுகளும், முரட்டுத்தனங்களும் ரசிக்கத்தக்க சுவாரசியமான ஆண் கதாபாத்திரம் என்பதை நிறுவும் வகையிலேயே இயக்குனர் படைத்துள்ளார். ஒரு காட்சியில் அர்ஜுன் கதாபாத்திரம் அவனது தந்தையை விட வயது முதிர்ந்தவராக தெரியும் வீட்டு வேலையாளை “டே இங்க வாடா” என்று கத்தி அழைத்து தனக்கு போதைமருந்தை வாங்க மருந்தகத்திற்கு அனுப்புகிறான். இந்த காட்சி ஒரு இயல்பான நிஜமான காட்சி என்னும் கோணத்தில் அணுகப்பட்டிருக்கிறதே தவிர அர்ஜுன் கதாபாத்திரத்தின் சாதி ஹிந்து மனோநிலைதான் தன் தந்தையை விட வயதில் மூத்த ஒருவரை ‘டே’ என்று அழைத்து அவருக்கு கட்டளையிடும் அதிகாரத்தை தருகிறது என்பதை இயக்குனர்,வசனகர்த்தா ரெட்டிகாரு உணர்ந்தவராக தெரியவில்லை.

ப்ரீதியுடனான பிரிவிற்கு முழு காரணம் அர்ஜுன் கதாபாத்திரத்தின் ஆணாதிக்க திமிரும், சாதி ஹிந்து மனோநிலைதான் என்று பார்வையாளர்களுக்கு தோன்றும் வகையில் திரைக்கதை அமைந்திருந்தாலும் இயக்குனர் ரெட்டிகாரு அர்ஜுன் கதாபாத்திரத்தை சாதி ஹிந்து ஆண்கள் தங்களை ரிலேட் செய்து கொள்ளும் வகையில் அமைத்ததினால் இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. அதற்கு முக்கியமான காரணம் அவர் அமைத்த இறுதிக்காட்சி. ப்ரீத்தி திருமணம் ஆன பெண்ணாக இருந்தாலும், மூன்று மாதம் கர்ப்பமாய் இருந்தாலும், அவள் தன்னுடைய கனவனின் நிழல் கூட தன்மீது விழவில்லை என்று சொல்கிறாள். ஆணாதிக்க சிந்தனையில், பார்ப்பனிய சித்தாந்தத்தில் ஊறிய சாதி ஹிந்துவுக்கு இதைவிட என்ன பெரிய சந்தோசம் இருக்க முடியும்? உடனே அர்ஜுன் ப்ரீதியிடம் வா செல்லம் நாம போகலாம்..கலயாணமாவது வெங்காயமாவது என்று கூட்டி கொண்டு கிளம்புகிறான்.இதுதான் விமர்சகர்கள் நவீன சினிமா என்றும், முற்போக்கு சினிமா என்றும் அர்ஜுன் ரெட்டிகாருவை தூக்கிவைத்து கொண்டாட சொல்லும் காரணம். இதுவே முற்போக்குத்தனம் என்றால் ப்ரீத்தி கதாபாத்திரம் அர்ஜுன் நான் உன்னை நினைக்காத நாளேயில்லை..ஒவ்வொரு நாள் எனது கணவனை புணரும்போது நான் உன்னோடான புணர்தலுக்காகத்தான் ஏங்கினேன். எனக்கு பிறக்க போகும் குழந்தை உன்னை போலிருந்தாள் நான் ஆச்சர்யப்படமாட்டேன். உன்னை நினைத்து நினைத்து எனது கணவனை புணர்ந்து நான் மனதளவில் மிகவும் வெறுமையாக இருக்கிறேன். வா நாம் இனிமேலாவது ஒன்றாய் இருப்போம் என்று சொல்லியிருந்தால் அதற்கு என்ன சொல்லியிருப்பார்கள்? படம் நமது கலாச்சாரத்தை சீரழிப்பதாய் உள்ளது என்று சொல்லியிருப்பார்கள். படம் ஊத்தியிருக்கும். எனவே சந்தீப் ரெட்டிகாரு ஒரு பக்குவமான ஹைதெராபாதி பிரியாணியை செய்வது போல சாதி ஹிந்துக்களுக்கான ஒரு பிற்போக்கு தனத்தை திரைக்கதையாய் வடித்திருக்கிறார். மேற்கத்திய ஆடைகளை அணிந்து, ஆங்கிலம் பேசி, ஆணாதிக்க மனோநிலையோடு, சாதியின்,பார்ப்பனியத்தின் எல்லா அயோக்கியத்தங்களையும் கடைபிடித்துகொண்டே எனக்கு சாதியில் நம்பிக்கையில்லை என்று சொல்லும் அர்ஜுன் ரெட்டி, கல்யாணம் ஆன பின்பும் கற்போடு காத்திருக்கும் ப்ரீதியோடு இணைவது திரைப்படம் வெற்றியடைய போதுமானதுதான் இல்லையா?. அர்ஜுன் ரெட்டி படம் நெடுகிலும் ஆணாதிக்க சாதி ஹிந்து மனோநிலையில் கட்டமைக்கப்பட்ட காட்சிகளாகவே தொடர்ந்து விரிகிறது. மேல்சொன்ன விஷயங்கள் எனக்கு மிகவும் எரிச்சலூட்டக்கூடியவைகளாக அமைந்த விஷயங்கள் மட்டுமே. இவையில்லாமல் அந்த திரைப்படத்தை திரைக்கதை சார்ந்து, திரைக்கதை நிறுவும் அரசியல் சார்ந்து விமர்சனத்திற்கு உள்ளாக்க நிறைய உள்ளது.

தெலுங்கு சினிமாவில் வலுபெற்றுவரும் அல்லது தொடர்ந்துவரும் பார்ப்பனிய அடிப்படைவாதம் கவலைக்குரியது. ஏனென்றால் தெலுங்கு சினிமா பாகுபலி போன்ற அசாத்தியமான வணிக சினிமாவின் மூலம் மிக லாவகமாவும், நேர்த்தியாகவும் பார்ப்பனிய அடிப்படைவாதத்தை நிறுவுகிறது, நியாப்படுத்துகிறது. அந்த திரைப்படங்களின் தாக்கம் தென் இந்திய சினிமாவில் குறிப்பாக தமிழ் சினிமாவில் ஆளுமை செலுத்தக்கூடிய வல்லமையோடு இருப்பது கவலையளிக்கிறது. தனது கடுமையான உழைப்பை தான் ஏற்கும் கதாபாத்திரங்களுக்கு வழங்க கூடிய நடிகர் விக்ரம் இன்னபிற அரசியல் முதிர்ச்சியற்ற மற்ற தமிழ் நடிகர்களை போலவே மிக ஆபத்தான சமூக விரோத பிற்போக்கு படங்களில் நடித்தவர்தான். அவர் இப்பொழுது தமிழ் சினிமாவின் பிற்போக்கு சக்திகளில் முக்கியமான இடத்தை உரிமைகோரக்கூடிய படங்களை தொடர்ந்து தளராமல் இயக்கிவரும், சமூக அரசியல் பிரஞையற்ற, பெண்களுக்கு எதற்கு பேண்டில் ஜிப்பிருக்கிறது போன்ற வசனங்களை நகைச்சுவை என்று கருதக்கூடிய இயக்குனர் பாலாவை இயக்குனராய் கொண்டு அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக்கில் தனது மகனை அறிமுகப்படுத்துகிறார் என்பது கவலைக்குரியது. நியமாக குப்பைத்தொட்டியில் எரிந்திருக்கக்கூடிய அர்ஜுன் ரெட்டி போன்ற படங்களுக்கு கிடைக்கும் வெற்றியும், அந்த படங்களுக்கு கிடைக்கும் முற்போக்கு லேபிளும் நாம் எந்த நாட்டில் வாழ்கிறோம் என்பதை நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றன.

ப. ஜெயசீலன், சமூக – அரசியல் விமர்சகர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: