கருத்து

வரலாற்று நாயகர்களை மோதவிடும் கலாச்சாரத்தைக் கொஞ்சம் மறுபரிசீலனை செய்யலாம்!

அன்புசெல்வம்

அன்பு செல்வம்

சாதி அரசியல் ஏற்படுத்துகிற வன்முறையைக் கருத்தில் கொண்டு வரலாற்று நாயகர்களை மோதவிடும் கலாச்சாரத்தைக் கொஞ்சம் மறுபரிசீலனை செய்யலாம்.

“இந்துக்களிலேயே உன்னதமானவர்” என்றழைக்கப்பட்ட‌ காந்தியைப் பேசுவதற்கு இது ஒரு காரணம். ஆனால் காந்திக்கும், அம்பேத்கருக்கும் இருந்த‌ முரண்பாட்டை மட்டுமே கூர்தீட்டுகிற‌ பழைய காலத்து அரசியல் இன்றைக்கும் இருக்கிறது. அது செயல்படுத்த வேண்டிய‌ சிறு, சிறு நம்பிக்கைகளை பொது நினைவுகளில் இருந்தே அகற்றி விடுகிறது. குறைந்தபட்சம் தலித்துகளுக்காக‌ காந்தி ஏதாவது சொல்லியிருந்தால் மறுவாசிப்புக்கு உட்படுத்தலாம். அதற்காக சில குறிப்புகள்.

காந்தியின் தொடக்ககாலப் புரிதல்

காந்தி, அம்பேத்கர் இருவரும் சாதியமைப்பை வெவ்வேறு வகைகளில் அணுகியவர்கள். சில இடங்களில் நெருக்கமாகவும் – விலகியும் நின்று எதிரொலித்து இருக்கிறார்கள். ஒருவகையில் இச்சமூகத்தின் பொதுப் பிரச்சனையான சாதி – தீண்டாமை இருவராலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அடிப்படையில் நமக்குத் தேவையான பகுதி இது தான். சாதிகளின் தோற்றத்தை விளக்க முற்படுகிற பலர் அதை வருணம், பிராமணியம் என்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். அவ்வாறு மட்டுமே பார்த்துவிட முடியுமா என்பது கேள்வி தான். அது வட்டாரம், காலம், ஒழுங்கு போன்ற‌ சூழலுக்கு ஏற்ப எப்படி மாற்றம் அடைந்திருக்கிறது? காலப்போக்கில் ஒவ்வொரு குழு, இனம், குலம், பண்பாடு என எப்படி விரிவடைந்திருக்கிறது? என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். வளர்ச்சி அடைந்து வருகிற‌ சாதியை அணுகுவதில் இருக்கிற பிரச்சனை அது. காந்தியின் புரிதலும் அத்தகைய‌ வளர்ச்சி மாற்றங்களில் இருந்து உருவானது தான். ஆனால் அம்பேத்கரின் வாழ்க்கை அனுபவத்தோடு காந்தியின் புரிதலை ஒப்பிட முடியாது.

1916 – ல் இந்திய சாதியமைப்பை அம்பேத்கர் பேசியபோது, காந்தி தீண்டாமைப் பிரச்சனைகளைப் பேசினார். “தீண்டாமை பாவகரமான செயல். அதை பின்பற்றுகிற நீங்கள் எல்லாம் இந்து மதத்தின் ஜெனரல் டயர்கள்” என்றார். “சாதியமைப்பு இந்து மதத்தை அழிவிலிருந்து காப்பாற்றி வருகிறது” என்கிற அவரின் தொடக்ககால (1920 – 21) நம்பிக்கை சாதிமறுப்பாளர் மத்தியில் இன்று வரைக்கும் சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. “ஒருவருடைய‌ பிறப்பு சார்ந்த அடையாளமும், பரம்பரைச் சட்டமும் எல்லா காலத்துக்கும் உரியது. அதை மாற்ற நினைப்பது பெரும் குழப்பத்துக்கு வழி வகுக்கும்.” என்கிற முன் முடிவும் தலித்துகள் காந்தியை வெறுக்கக் காரணமாக அமைந்தது. 1927 -லிருந்து 1932 செப்டம்பர் 24, பூனா ஒப்பந்தம் வரையிலும் சாதி மற்றும் வர்ணாஸ்ரம அமைப்பின் மீது அமர்ந்தவாறே எல்லா அரசியல் பிரச்சனைகளையும் அணுகினார் என்பது மறுப்பதற்கில்லை.

காந்தியின் பல‌ வாதங்களை அம்பேத்கர் ஏற்றுக் கொள்ளவில்லை. அறிவு ரீதியாக தொடக்கத்திலிருந்தே நிராகரித்தார். இந்திய விடுதலை, சமூகம், அரசியல், வர்ணாஸ்ரமம், கர்மா, சாதி ஒழிப்பு, இடஒதுக்கீடு, இரட்டை வாக்குரிமை போன்றவற்றில் அவருக்கு இருந்த பிரச்சனையை சித்தாந்த ரீதியாக விமர்சித்தார். கடிதம் மூலம் எழுதியும் வந்தார். அது காந்தியை அம்பேத்கருடன் தொடர்ந்து போராட வைத்தது. இறுதிக் காலத்தில் கோரே போன்றோர் வலியுறுத்திய கருத்துக்களும் காந்தியிடம் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது. 1930 -க்கு முன் இருந்த‌ சாதி பற்றிய புரிதலை கொஞ்சம் கைவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அது தான் காந்தியை சாதி மறுப்புத் திருமணத்தில் கொண்டு வந்து நிறுத்தியது. இந்த பேருண்மைகள் நாம் எதிர்பார்க்கிற‌ நன்மைகளுக்கு எதிரானது கிடையாது. ஆனால் விரோதமானது என நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம்.

பிற சாதியினருடன் சேர்ந்து உண்ணுதல் – சாதி மறுப்புத் திருமணம்

“சாதி என்பது அடக்குமுறையின் மற்றொரு பெயர். அது ஒருவரை தனக்கு விதிக்கப்பட்ட வட்டத்தை விட்டு வெளியே வர அனுமதிப்பதில்லை” என்கிற வாதம் காந்தியிடம் ஏற்பட்ட‌ இன்னொரு மாற்றம். நுட்பமாகப் பார்த்தால் 1921 -ல் நவஜீவன் இதழில் எழுதிய‌ சாதி, வருணம் பற்றிய‌ அவரின் கருத்தை அவரே மறுப்பதாக இருக்கிறது. பிற‌ சாதியினருடன் சமமாக‌ அமர்ந்து உண்ணுவது, சாதி மறுப்புத் திருமணத்தின் மீதான‌ கட்டுப்பாடு மற்றும் குறுக்கீடு இந்து மதத்தின் ஒரு பகுதியாக இல்லை. ஆனால் இந்த இரண்டு தடைகளும் இந்து மதத்தின் வளர்ச்சியை பலவீனப்படுத்துகிறது என்றார். அதற்கு உபகாரமாக “பிற சாதியினருடன் சேர்ந்து உண்ணுதல் – சாதி மறுப்புத் திருமணம்” என்கிற இறுதி முடிவுக்கு வந்தடைந்தார். இந்த இரண்டையும் ஒருபோதும் ஆட்சேபிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு, அதற்கான செயல்பாடுகளையும் திட்டமிட்டார்.

வெவ்வேறு மதங்களை மறுத்த‌ திருமணம் அதற்கு முதல்படி. 1930 -ல் எழுத்தாளர் ஹுமாயூன் கபீர் – சாந்தி லதா தாஸ் குப்தாவுக்கும், 1935 -ல் நேருவின் உறவினரான ப்ராஜ் குமார் நேரு – மக்டினோ ஃப்ரிட் (யூதர்) தம்பதி திருமணத்திற்கு தார்மீக ஆதரவளித்தார். இந்த இரண்டு திருமணங்களும் செல்வாக்கான‌ குடும்பங்களுக்கு உரியது. அதே சமயம் வலுவான‌ மத அடையாளம் சார்ந்தது. ஆனால் வருணம் என்பது பிறப்பின் அடிப்படையிலானது என்கிற அவரது கருத்தை இந்த நிகழ்வு மறுபரிசீலனை செய்கிறது. “பரம்பரைத் தொழில்கள் மீது கொண்டிருந்த நிலையான புரிதலில் இருந்து விலகி பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்கிற வகைமைக்குள் வருகிறார். வர்ணா அமைப்பு இப்போது உடைந்து விட்டது. சாதியை நவீன கருத்தில் நான் நம்பவில்லை. வளர்ச்சிக்கான பாதைக்கு தடையாகவும், முடமாகவும் இருப்பதாகப் பார்க்கிறேன். அல்லது நான் நம்புகிற மனிதத் தன்மைக்கும், நம்பிக்கைக்கும் ஏற்றத்தாழ்வாக இருக்கிறது. ஆனால் திருமணம் புனிதமானது. அதில் பரஸ்பர நட்பு இருக்க வேண்டும்” என்கிறார்.

1931 ஆகஸ்டில் அம்பேத்கருடன் நிகழ்ந்த‌ முதல் சந்திப்பு காந்திக்கு மகிழ்ச்சியாக இல்லை. அம்பேத்கரின் காங்கிரஸ் அரசியல் விமர்சனங்கள் அவரை வெகுவாகப் பாதித்தது. இரட்டை வாக்குரிமையில் நிலை தடுமாறிய காந்தி 1932 – பூனா ஒப்பந்தம் கொடுத்த நெருக்கடியால் ஹரிஜன சேவா சங்கத்தைத் தொடங்கினார். அது தலித்துகளுக்காக தனி வேலைத் திட்டத்தை வரையறுத்தது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உருவான காங்கிரஸ் அரசும் தலித்துகளுக்கான நலத்திட்டங்களை அறிவித்தது.

இக்காலக் கட்டத்தில் (1933 – 1934) அகமண‌ விவாகங்களை விமர்சித்து அவர் மேற்கொண்ட தீண்டாமைக்கு எதிரான சுற்றுப்பயணம் முக்கியமானது. அது பலத்த எதிர்ப்பை சந்தித்தது. ஹிந்து மகா சபையினர் அவர் சென்ற இடத்தில் எல்லாம் கறுப்புக் கொடி காட்டினார்கள். பூனாவில் நடந்த ஒரு கூட்டத்தில் மனித மலத்தை வீசினார்கள். நீ பிராமணன் இல்லை, உனக்கு சமஸ்கிருதம் தெரியாது, நீ எங்களின் சடங்கு – சம்பிரதாயங்களை கேள்விக்குள்ளாக்குகிற பனியா” என்று விமர்சித்தார்கள். வைதீகமும் – முற்போக்கும் வரிந்து கட்டியது. 1937 -ல் சேவாகிராம் இல்லத்தில் தலித்துகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்கிற முடிவு சனாதனிகள் விரும்பாதது. அன்றைக்கு காந்தியை சந்தித்த வல்லபாய் படேல் “தீண்டாமையிலிருந்து விடுபட்டு, படிப்படியாக‌ சாதி மறுப்புத் திருமணத்தை நோக்கி நகருகிறீர்கள் போலத்தெரிகிறதே” என சிரித்துக் கொண்டே கேட்டார். அதற்கு காந்தி பாமர‌ மக்களுக்கு வேண்டுமானால் தீண்டாமையிலிருந்து விடுபடுவது போதுமானதாக இருக்கலாம். ஆனால் உங்களைப் போன்றோருக்கு “அவர்களைத் தொடுவது மட்டுமே போதுமானதல்ல. அதையும் தாண்டி . . . அவர்களோடு சேர்ந்து உண்ணுவதிலும், திருமணம் வைத்துக் கொள்வதிலும் வெகுஜன இந்துக்களுக்கு இருக்கிற தடைகளை தகர்ப்பதாக இருக்க வேண்டும்” என பதிலளித்தார்.

சாதி மறுப்புத் திருமணத்துக்கு ஆதரவு

பாப்லோ நெரூடா சொல்வதைப்போல வாழ்க்கையை வாழ்க்கையிலிருந்தே திட்டமிடுவதும் மாற்றத்துக்கான குறியீடு தான். காந்திக்கு தனது மகனின் திருமண அனுபவத்தில் இருந்த‌ புரிதல் 1940 -களில் இல்லை. சற்றேரக்குறைய மாறிவிட்டது. பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி தலித் பெண்ணுக்கும், உயர்சாதி ஆணுக்கும் நடக்கிற காதல் திருமணங்களை ஆதரிக்கத் தொடங்கினார். ஒரு சம்பவத்தை குறிப்பிட்டாக வேண்டும். “1940 மார்ச் இறுதியில் ராதாமதாப் என்கிற பிராமண இளைஞர், இந்து மதச் சடங்குகளின்படி ஆயிரம் பேர் சூழ ஒரு தலித் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர் மாணவராக இருக்கும்போது கால்பந்து விளையாடுவதற்காக ஒரு தலித் கிராமத்தில் வசித்து வந்தார். அப்போது அவருடன் இருந்த சக மாணவர்கள் கூட்டாக‌ சேர்ந்து, நாம் தலித் பெண்களைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என‌ உறுதி மொழி எடுத்துக் கொண்டார்கள். அந்த உறுதிமொழியிலிருந்து பலர் பின்வாங்கி விட்டனர். ஆனால் நான் அதில் உறுதியாக இருந்தேன். எங்கள் சாதியினர் கடுமையாகத் திட்டினார்கள். ஆச்சாரம் கெட்டு, தெய்வ குத்தம் ஆகிவிடும் என எச்சரித்தார்கள். பிராமணர் உள்ளிட்ட‌ உயர்சாதி மக்களோடு தலித்துகள் சமமாக அமர்ந்து மணமகளின் தந்தையிடம் தாம்பூலம் வாங்கியதை நினைத்துப் பார்க்கிறேன்” என ராதாமதாப் தனது அனுபவத்தை காந்தியிடம் பகிர்ந்து கொண்டார். வேதங்களையும், சாஸ்திரங்களையும் புரட்டிப்போட்ட ராதாமதாப்பின் வாக்குமூலம் காந்தியை பிரமிக்க வைத்தது.

பொதுவாக காந்தி எல்லோரையும் தன் பக்கம் கவர அசாதராணமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது உண்டு. ராதாமதாப்பின் அனுபவம் அவருக்கு இன்னும் உத்வேகத்தைக் கொடுத்தது. அந்த சமயத்தில் இரண்டு சாதி மறுப்புத் திருமணங்களை பகிரங்கமாக‌ ஆதரித்தார். டாக்டர் சௌந்தரம் (பிராமணர்) – ஜி. ராமச்சந்திரனுக்கும் (சூத்திரர்), கோவா காங்கிரஸ் தலைவர் டாக்டர். ஏ.ஜி. டெண்டுல்கர் (உயர்சாதி இந்து) – இந்துமதி (தீண்டப்படாதவர்) தம்பதிக்கும் நடந்த காதல் திருமணம் அது. ஒரு தலித்தும், தலித் அல்லாதவரும் திருமணம் செய்து கொண்டால் மட்டுமே என்னுடைய ஆசிர்வாதம் அந்த தம்பதிக்கு உண்டு என்றார். அவரது மரணத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் (1946) சாதி மறுப்புத் திருமணங்களில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டார். இனி சேவாகிராமம் ஆசிரமத்தில் நடைபெறும் எந்த திருமணமாக‌ இருந்தாலும் அதில் ஆணோ அல்லது பெண்ணோ நிச்சயம் ஒரு தலித்தாக இருக்க வேண்டும் என தீர்க்கமாக அறிவித்தார். சாதி ஒழுங்குகள் கூர்மையாகக் கடைப்பிடிக்கப்பட்ட காலத்தில் பின்விளைவுகளை யோசிக்காமல் முடிவெடுப்பதும் ஆளுமைக்குரிய அடையாளம்.

சாதிமறுப்புத் திருமணம் சாத்தியமா?

காந்தியை விமர்சிப்பவர்கள் அவர் முன்னுக்குப் பின் முரணாக எதையாவது சொல்லுவார் என கருத்துக் கூறுவது உண்டு. உண்மை தான். சாதிமறுப்புக்காக தலித்துகள் சத்தியம் பேசினால், காந்திக்காக கோயில் கட்டுகிறோம் என விமர்சிக்கப்படுவோம். ஆனால் முன்னுக்குப் பின் முரணான‌ காந்தி ஏற்படுத்திய தாக்கம் அவர் சுற்றுப்பயணம் செய்த பல மாநிலங்களில் இன்னமும் பிரதிபலிக்கிறது. நவீன வார்த்தைகளில் முற்றாக‌ சாதியை ஒழிக்கவில்லை என்றாலும் குறைந்தபட்சம் சாதி, வருணங்களுக்கு இடையே தாறுமாறான‌ கலப்பைத் தொடங்கி இருக்கிறது. இந்த கலப்பு இன வாதத்துக்கும், தூய்மை வாதத்துக்கும் கிடைத்த பேரிடி.

இந்திய மானுட வளர்ச்சிக் கணக்கெடுப்பு – 2005 (IHDS) -ன் அறிக்கையோடு செய்யப்பட்ட ஒரு ஆய்வு இதை கொஞ்சம் உறுதிப்படுத்துகிறது. இந்தியாவில் நடக்கிற‌ சாதி மறுப்புத் திருமணங்கள் 5%. இதில் 96.5% காதல் திருமணங்கள். அதிகம் வடமாநிலங்களில் தான் நடக்கிறது. பஞ்சாப் 12.2% – மேற்கு வங்கம் 9.3% – குஜராத் 8.2% பெற்று முதலிடம் வகிக்கிறது. மும்பையிலிருந்து வெளியான இன்னொரு ஆய்வு கோவா, பஞ்சாப், சிக்கிம், குஜராத் மாநிலங்களைக் காட்டுகிறது. ஆனால், கல்வியிலும் இதர வளர்ச்சியிலும் முன்னோடியாகக் கருதப்படுகிற‌ தென்னிந்தியாவில் 9.71% மட்டுமே. அதிலும் முற்போக்கு, புண்ணியபூமி என்றெல்லாம் வருணிக்கப்படுகிற தமிழ் நிலப்பரப்பில் 2.2% என‌ ஆய்வு சொல்கிறது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது மிக, மிகக் குறைவு. சாதி – தீண்டாமை ஒழிப்பில் நாம் பார்க்கத் தவறிய‌ வெற்றிடம் இது. இங்கு சாதி மட்டுமல்ல, அதனை எதிர் கொள்வதாகக் காட்டிக் கொள்ளும் முழக்கங்களும் கற்பிதமாகவே இருந்து வருவதை தரவுகள் மெய்ப்பிக்கிறது. இத்தணை ஆண்டுகளாக நாம் பேசிய‌ சமூகநீதி, மதச்சார்பின்மை, இன‌ அடையாளம், மொழிவழி தேசியம், காந்தியம் எல்லாம் சாதியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறதோ என்கிற சந்தேகத்தைக் கிளப்பி இருக்கிறது.

காந்தியும் – ஆணவக் கொலையும்

காந்தியின் மரணத்துக்கு எது காரணமாக இருக்கும் என்கிற அரசியலை இப்போது கையிலெடுத்திருக்கிறோம். ஆனால் சாதி மறுப்புத் திருமணத்தை தேடாமலே விட்டு விட்டோம். அவ்வாறு தேடியிருந்தால் எல்லோரையும் போல வாழ விரும்பிய‌ காதலர்களை ஆணவக் கொலைகளில் இழந்திருக்க மாட்டோம். கடந்த மூன்றாண்டுகளில் காதலித்து திருமணம் செய்து கொண்ட 80 பேர் கொல்லப்பட்டிருப்பதாக “தீண்டாமை ஒழிப்பு முன்னணி” சொல்கிறது. உடுமலைப்பேட்டை சங்கருக்கு நிகழ்ந்த ஆணவக்கொலையில் மரண தண்டனை கிடைத்தும், தடுக்க தனிச் சட்டம் வேண்டும் என போராடி வருகிறோம். மனித உரிமைகளை மதிப்பதற்கும், மனித மாண்பைப் போற்றுவதற்கும் சட்டங்களை மட்டுமே நம்பியிருக்கிறோம். சாதிக்கும் அப்பாற்பட்ட‌ ஒரு காந்தியைப் போன்ற தோழனை அடையாளம் காண முடியாமலும் தவிக்கிறோம். இதில் கவனிக்கப்பட வேண்டியது, தலித்துக்கும் உயர்சாதிக்கும் இடையே நடக்கிற‌ காதல் திருமணங்கள் தலித்துகளைக் கொல்வதில்லை. ஆனால் ஒரு தலித்துக்கும் இடைநிலைச் சாதிக்கும் இடையே நடக்கிற காதல் திருமணம் சடுதியில் கொன்று விடுகிறது. எழுந்து வரும் புதிய சாதியவாதத்தில் இது குறித்த‌ மனம் திறந்த‌ ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

சாதிமறுப்புத் திருமணங்களில் மரணங்கள் மட்டுமே பிரச்சனை இல்லை. அதை சரி செய்வதற்கான‌ புரட்சிகர‌ வேலைத்திட்டங்களும் சிதைந்து கிடக்கின்றன. 2013 -ல் மத்திய அரசு கொண்டு வந்த ‘டாக்டர் அம்பேத்கர் சமூக ஒருமைப்பாட்டு கலப்புத் திருமணத்திட்டம்’ தன்னளவில் பெயராக நிற்கிறது. அதை மக்களிடம் கொண்டு செல்வதற்கான இயக்கங்கள் இல்லை. ‘தமிழகத்தில் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள எவருமே முன்வரவில்லை’ என மாநிலங்களவையில் சமூக நலத்துறை அமைச்சர் விஜயபாலா சொல்கிறார். இவற்றுக்கு மத்தியிலும் “சாதிமாறி திருமணம் செய்பவர்களை பஞ்சாயத்து அமைப்புகளோ, பெற்றோர்களோ தடுக்கக் கூடாது” என சமீபத்தில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. ஆனால் சாதிமறுப்பை விரும்புகிற‌ காந்திகளுக்குத் தான் இங்கே கடும் பஞ்சம்.

இறுதியாக‌

புரட்சிகர சிந்தனை கொண்டவர்கள் காந்தியைப் புறக்கணிப்பதற்கும், வட்டார – தேசியவாதிகள் அம்பேத்கரை வெறுப்பதற்கும் இடமளிக்கிற‌ காலச்சூழலை மாற்றியாக வேண்டும். நாம் நேசிக்கிற‌ மாபெரும் தலைவர்களை நன்றியுடன் நினைவு கூறுகின்ற செயல் அது. எழுபதாண்டு நினைவில் அவரவருக்கு ஏற்ற காந்திகளில் காதலர்களின் சாதிமறுப்புக்கும் ஒரு காந்தி மிச்சம் இருக்கட்டும்.

கட்டுரையாளர் : அன்புசெல்வம், “சாதி இன்று” அறிக்கையின் நூலாசிரியர்களில் ஒருவர்.

தொடர்புக்கு : anbuselvam6@gmail.com

பி-கு : இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள சில குறிப்புகள் Exploring the Myth of Mixed Marriages in India (Journal of Comparatively Family Studies) ஆய்விலிருந்தும் Mark Lindley -ன் “Changes in Mahathma Gandhi’s Views on Caste and Inter Marriage” கட்டுரையிலிருந்தும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.