புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம் – இந்தியா என்கிற கருத்தாக்கம்

பீட்டர் துரைராஜ்

பீட்டர் துரைராஜ்

சுனில் கில்நானி தில்லியில் பிறந்து இலண்டன் அரசர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் வரலாற்றுத்துறை ஆய்வாளர் ஆவார். இந்திய விடுதலையின் பொன்விழா ஆண்டில் (1997) அவருடைய Idea of India என்ற நூல் வெளிவந்து பரவலான வரவேற்பைப் பெற்றது. இது “இந்தியா என்கிற கருத்தாக்கம் ” என்ற பெயரில் அக்களூர் ரவியால் மொழி பெயர்க்கப்பட்டு சந்தியா பதிப்பக வெளியீடாக இந்த ஆண்டு புத்தக கண்காட்சியின் போது வெளிவந்துள்ளது. கவனிக்க வேண்டிய ஐந்து புத்தகங்களில் ஒன்றாக இதனை தமிழ் இந்து நாளிதழ் குறிப்பிட்டது. இது ஒரு சுவாரசியமான, முக்கியமான நூல்.

சுனில் கில்நானி எழுதியுள்ள முன்னுரையும், 2003 ம் ஆண்டு பதிப்பிற்கான அறிமுகமும் இருபதாம் ஆண்டு பதிப்பிற்கான முன்னுரையும் இந்த நூலை எப்படிப் பார்ப்பது என்பதை நமக்கு விளக்கும். தற்கால அரசியலை புரிந்து கொள்ள உதவும் திறவுகோல் இந்த நூல் என்று நான் கருதுகிறேன்.

இந்தியா குறித்த கருத்தாக்கங்கள், ஜனநாயகம், எதிர்கால கோவில்கள் , நகரங்கள், இந்தியன் யார்? நவீனத்துவம் என்கிற துகில் என்கிற ஆறு தலைப்புகளில் சுதந்திர இந்தியாவின் சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல் ஓட்டங்களை விவரிக்கிறார் ஆசிரியர்.

சுனில் கில்நானியின் மொழி தனித்துவமான மொழி; வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்தி உள்ளார். ஓர் ஆய்வுக்கட்டுரை போல இந்த நூல் உள்ளது. இதனை மொழி பெயர்ப்பது சிரமமான பணி. அக்களூர் ரவி இந்த முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார். நான் இந்த நூலை வெகு எளிதாக ஓடுகிற ஓட்டத்தில் வாசித்து விட்டேன். ஆனால், இதன் சாரம் பிடிபட வேண்டுமென்றால் நிதானமாக படிக்க வேண்டும்; ஆழமாக யோசிக்க வேண்டும்; அப்பொழுதுதான் இந்த நூலை முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.இந்தியா குறித்த பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும், கவலையையும் உங்களுக்கு இந்த நூல் தரும்; எனக்குத் தந்தது.

நேரு தொடங்கி நரசிம்ம ராவ் வரை எண்ணற்ற ஆளுமைகளின் பங்களிப்பு இந்தியாவின் நவீன வரலாற்றில் உள்ளது. ஆனால் தனிப்பட்ட முறையில் யாரையும் அவர் பெரிதாக எழுதவில்லை. அவர் கூறுகின்ற கருதுகோள்களின் அடிப்படையில்தான் பல ஆளுமைகளைப் பற்றிய குறிப்புகள் பாதகமாகவோ சாதகமாகவோ வருகின்றன; கூர்மையாக வருகின்றன. யாரையும் தூக்கிப் பிடிக்கும் எண்ணமோ, தூக்கி எறியும் எண்ணமோ இவருக்கு இல்லை. ஜனநாயக விழுமியங்கள் என்ற அளவுகோல் மூலம்தான் இவர் அனைவரையும் (நேரு உட்பட) மதிப்பிடுகிறார்.

‘கடந்த நூற்றைம்பதுஆண்டுகளில்தான் இந்திய நிலப்பகுதிக்கு நவீன அரசு வந்தது’. ‘இந்திய அரசின் செயல்பாடுகளை தர நிலை அடிப்படையில்தான் மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு மதிப்பிட வேண்டும்’. ‘பெரிய நிலப்பரப்பை தக்க வைத்துக் கொள்வதில் அரசின் திறமை, குடிமக்களின் உயிருக்கு பாதுகாப்பு, பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவும் அமைப்பாக இயங்குவது , குடிமக்களுக்கு சமுதாயத்தில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது போன்ற செயல்களை’ ஒப்பிட்டு இந்த நூல் எழுதப்பட்டுள்ளது என்று கூறுகிறார்.’இந்த நூல் இருபதாம் நூற்றாண்டு இந்தியாவின் பொது வாழ்வைப் பற்றியது. 1947 ஆண்டு இந்தியா விடுதலைப் பெற்றது முதல் கொந்தளிப்பும், சிக்கலும் நிறைந்த அந்த முக்கியமான வரலாற்றுத் தடத்தின் மீது இந்நூல் கவனத்தைச் செலுத்துகிறது. வரலாற்று தொடர்ச்சிகள் மீதும் அடையாளப் பூர்வமான, உண்மையான பிளவுகள் மீதும் இந்நூல் அக்கறை கொள்கிறது’ என்று சுனில் கில்நானி சரியாகவே இந்த நூலைப் பற்றி முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

‘ காங்கிரஸ் கட்சி விடுதலையின் போது தெளிவான உறுதியான பொருளாதார உத்திகள் எதனையும் எடுத்துரைக்கவில்லை’. ‘ஜப்பான், தென் கொரியா, தைவான்,சீனா போல இந்தியாவில் நிலச்சீர்திருத்தச் சட்டங்கள் வெற்றி பெறவில்லை. ”நில உடமையாளர்களின் சாபத்திலிருந்து தப்பிக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த நிலச் சீர்திருத்தத்தையும் வரி விதிப்பையும் மாநில சட்டசபைகளிடம் ஒப்படைக்க அரசியல் நிர்ணய சபை முடிவெடுத்தது’ என்கிறார். (இந்தமுடிவை நிலச்சீர்திருத்தத்திற்கு எதிரானது என்று கவலைப்படுவதா அல்லது மாநிலத்திற்கான அதிக அதிகாரம் என்று மகிழ்ச்சி அடைவதா என இக்கட்டுரையாளரான எனக்குத் தெரியவில்லை). ‘நேருவிற்கு ஆட்சிப் பணி அதிகாரிகள் மீது தனிப்பட்ட அபிமானம் இல்லை. ஆனால் தனது கட்சி ஏற்படுத்தும் தடைகளுக்கு எதிராக அவர்களைப் பயன்படுத்த முடியும் என்று கருதினார்’. இவையெல்லாம் இந்நூலில் வருகின்றன.

எதிர்காலக் கோவில்கள் என்ற தலைப்பில் திட்டக்குழு பேசப்படுகிறது; மகோபிலஸ் பேசப்படுகிறார். சுதந்திர இந்தியாவில் பஞ்சம் தவிர்க்கப் பட்டது. 1990 களில் தாராள மயத்திற்கான ஆதரவான குரல்கள் வெளிநாடுகளில் இருந்துதான் வந்தன என்கிறார். தாராளமயத்திற்கு ஆதரவாகத்தான் இவர் குரல் ஒலிக்கிறது.

சுனில் கில்நானியின் இலக்கிய ஆர்வத்தை இந்நூலில் நாம் பார்க்க முடியும். தாகூர் நூல் நெடுகிலும் வருகிறார்; இந்தியாவை கோடு கிழித்த ராட்கிளிப் குறித்த டபுள்யூ.எச்.ஆடன் கவிதை வருகிறது; ஆர்.கே.நாரயணனின் அழிவற்ற கற்பனை நகரான மால்குடியை சொல்லி இவரது நகரங்கள் என்ற அத்தியாயம் தொடங்குகிறது. லுட்யென்சால் வடிவமைக்கப்பட்ட புதுதில்லி, லே கோர்புசியேவால் கட்டப்பட்ட சண்டிகர், என இந்திய நகரங்கள் பேசப்படுகின்றன.

1980 களில் பொதுத்தேர்தல்களில் சாதி, மத உணர்வுகள் பயன்படுத்துவது பற்றி, மாநிலங்களின் கோரிக்கைகளை தேச விரோதமானவை என்று சொல்லும் மத்திய அரசு பற்றி, கூட்டுச் செயல்பாட்டு வழிமுறைகள் புறக்கணிக்கப்பட்டது பற்றி  (இந்திரா காந்தியை இந்த விஷயத்தில் கடுமையாக விமர்சிக்கிறார்), அதிகார ஆளுமைமிக்க மனிதர்களை வழிபடுவது பற்றி, வழக்கறிஞர்களும்,மருத்துவர்களும் 2002ம் ஆண்டு அகமதாபாத் நகரில் கைகளில் முஸ்லிம்கள் முகவரிகளோடு அலைந்தது பற்றி, காஷ்மீர தேர்தலில் வாக்களித்த இளைஞன் இராணுவ ஜீப்பில் கட்டப்பட்ட அவலம் பற்றி கவலையோடு பேசுகிறார்.

ஆனாலும் இந்தியாவில் தேர்தல் முறை நிலைபெற்று விட்டது; தங்களுக்கு அங்கீகாரம் தர மறுப்பவர்களால் ஆளப்படுவதை மக்கள் மறுக்கிறார்கள். கலவையான, பன்மைத்தன்மை கொண்ட இந்தியத்தன்மையின் வரையறை ஒன்றை நேருவால் நிறுவ முடிந்தது. மொத்தத்தில் பல இடர்பாடுகள் இருந்தாலும் அரசிற்கும் சமுதாயத்திற்கு இடையிலான ஒரே இணைப்புப் பாலமாக ஜனநாயகம் என்கிற ஆகுபெயர் விளங்கி நிற்கிறது என்கிறார்.

நவீன வரலாற்றில் இது ஒரு தவிர்க்க இயலாத நூல்.

சந்தியா பதிப்பகம் ,சென்னை -83/ 2017/336 பக்கம்/ ரூ.315/ sandhyapathippagam@gmail.com

பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: