
ஜி.கார்ல் மார்க்ஸ்
ஒரு வழியாக கமல் தனது கட்சியைத் தொடங்கிவிட்டார். “மக்கள் நீதி மய்யம்” என்கிற அவரது கட்சியின் பெயரைப் பார்த்தால் பெயரை அவரேதான் தேர்ந்தெடுத்திருப்பார் என்று தோன்றுகிறது. மறக்காமல் அருகில் இருந்த ஆலோசனைக் குழுவிடம் “நல்லாருக்குல்ல…” என்று அவர்களது கருத்தைக் கேட்டிருப்பார். அவர்களும் “அட்டகாசமாக இருக்கிறது” என்று அவருக்குப் பிடித்த பதிலைச் சொல்லியிருப்பார்கள். விழாவுக்கு கேஜ்ரிவாலை வரவழைத்திருக்கிறார். இதை நல்ல ஏற்பாடு என்றே நான் புரிந்துகொள்கிறேன். அன்னா ஹசாரேவுடன் களத்துக்கு வந்தபோது கேஜ்ரிவால் டெல்லியின் முதலமைச்சர் ஆவார் என்று யாராவது நம்பினோமா என்ன. இல்லையே. ஆக இதன் வழியாக ரசிகர்களாக, நற்பணி மன்றத்தாராக இருந்த தனது தொண்டர்களுக்கு மட்டுமல்லாது பொதுமக்களுக்கும் கூட நம்பிக்கை வழங்க முற்படுகிறார் கமல்.
“கமலிடம் என்ன அரசியல் இருக்கிறது” என்று கேட்கிறார்கள் விமர்சகர்கள். அது உண்மைதான். இதற்கு நேரடியாக பதில் சொல்லமுடியாவிட்டாலும், இப்படிச் சொல்லலாம். இங்கு அரசியல் என்று எதெல்லாம் அறியப்பட்டிருக்கிறதோ அதெல்லாம் நீர்த்துப் போய் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டுப் போயிருக்கும் சூழலில், ஒரு கட்சியைத் தொடங்குவதற்கு அரசியல் என்ற ஒன்றே தேவையில்லை, மேலும் அது அதீத சுமை என்று திரிந்திருப்பதைக் கமல் உணர்ந்திருக்கிறார். கமல் மட்டும் அல்ல, அவரைப் போல இங்கு அரசியல் பேச வந்திருக்கும் பலரும் இந்த எதார்த்தத்தை உணர்ந்திருக்கிறார்கள். மேலும், தமிழகத்தில் இன்று நிலவுவது கட்சி அரசியல், சித்தாந்த அரசியல் என்பதைக் கடந்த “செலிப்ரிட்டி அரசியல்” (celebrity politics) என்கிற போது, அரசியல் கட்சி தொடங்கக்கூடிய தகுதி அவருக்கு இயல்பாகவே வந்துவிடுகிறது. ஆக “அரசியலின்மை” என்பது அரசியலுக்கான தகுதியாக வரையறுக்கப்பட்டிருக்கும் தமிழகச் சூழலில் கமலின் அரசியல் பிரவேசத்தில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.
கமலைப் போன்ற அரசியல் போலிகள் அரசியலுக்கு வருவதற்கு பாதை சமைத்துக் கொடுத்ததில் இங்கு மாறி மாறி ஆட்சியில் வீற்றிருக்கும் இரண்டு திராவிடக் கட்சிகளின் அற்பத்தனத்துக்கும், மக்கள் விரோத செயல்பாடுகளுக்கும் முக்கியமான பங்குண்டு. சமூக நீதி, மாநில சுயாட்சி, பொருளாதாரத் தன்னிறைவு போன்ற காத்திரமான அரசியல் பார்வைகளை விடுவோம். மிக எளிமையான, எல்லோருக்கும் புரிந்த ஒரு உதாரணத்துடன் இங்கு நிலவும் “அரசியல் வெற்றிடத்தைப்” புரிந்துகொள்வோம். இங்கு நான் சொல்வது எல்லோரும் சொல்லிக்கொண்டிருக்கும் “சட்டமன்ற இடங்களைப் பங்குபோட்டுக்கொள்ளும் வாய்ப்பைத் தருகிற அரசியல் வெற்றிடம்” அல்ல. எது அரசியல் தேடலோ, அந்த வெற்றிடம். மிக அடிப்படையான ஒரு வெற்றிடம்.
அந்த உதாரணம் “டாஸ்மாக்”.
இங்கு ஒரு குவார்ட்டர் பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் கூடுதலாக விலை வைத்து விற்கப்படுகிறது. ரசீது என்ற ஒன்று கிடையாது. கிட்டத்தட்ட நாய்கள் படுத்துப் புரளும் சாக்கடையிலும் கீழான நிலையில் அந்தக் கடைகள் இயங்குகின்றன. விற்பனையாளர்களோ அரசு ஊழியர்கள். கூடுதலாக விற்கப்படும் பணம், மிகத் திட்டமிட்ட வகையில், விற்பனையாளர், சூப்பர்வைசர், போலீஸ், கட்சிப் பிரதிநிதிகள், டாஸ்மாக் நிறுவன மேற்பார்வையாளர்கள், சோதனையாளர்கள், ஆய்வக ஊழியர்கள் போன்றவர்களால் பகிர்ந்துகொள்ளப் படுகிறது. இந்த அருவருக்கத்தக்க கொள்ளையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டுக்குமே சம பங்கு இருக்கிறது. இந்த ஊழல், சரக்கு கொள்முதலில் தொடங்குகிறது. எதைக் குடிக்கவேண்டும் என்று வாடிக்கையாளன் தீர்மானிக்க முடியாது. கொள்முதல் செய்யும் ஊழல் பெருச்சாளிகளே அதைத் தீர்மானிக்கிறார்கள்.
இங்கு ஒரு ரப்பர் பேன்ட் தயாரித்து விற்கவேண்டும் என்றால் கூட அதற்குத் தேவையான தரத்தை நீங்கள் பராமரிக்க வேண்டும். ஆனால் கோடிகளில் வியாபாரம் நடக்கிற, அருந்துகிறவர்களின் ஆரோக்கியத்துடன் நேரடித் தொடர்புடைய, அதன் வழியாக சமூக அமைதியில் மற்றும் அமைதியின்மையில் பங்காற்றுகிற, பொருளாதார உற்பத்தியை பாதிக்கிற ஒரு விவகாரத்தில் எந்த தரக் கட்டுப்பாடும் இல்லாமல் அது நிகழ்கிறது.
சரக்கு என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் ஒரு நிறுவனம் தயாரித்து அதை டாஸ்மாக்கிற்கு அனுப்பமுடியும். அதை அரசே விற்கும். மக்களைப் பிரதிநிதுத்துவப்படுத்துவதாக, மாற்று அரசியல் பேசுவதாக கூறிக்கொள்ளும் எந்த அமைப்பும் அது குறித்து பேசாது. ஊழல் என்று பேச முற்படும் சொற்ப ஆட்களின் குரல் கூட “ஒழுக்கவியல் பார்வையின் அடிப்படையில்” நெரிக்கப்பட்டுவிடும். இந்த விஷயத்தில் இங்கு நிலவும் அமைதிக்கும் நமது “அரசியல் சொரனையின்மைக்கும்” தொடர்பு உண்டு. இந்த சொரனையின்மைதான் இங்கு நிலவும் உண்மையான அரசியல் வெற்றிடம். அதைப் புரிந்துகொள்ளும்போதுதான் கமல் போன்றவர்களின் அரசியல் பிரவேசம் ஏன் நிகழ்கிறது என்பது புரியும்.
சரக்கு விவகாரத்தில் இத்தகைய ஒரு ஊழல் கூட்டணி கேரளாவில் நடக்க சாத்தியம் அல்ல. அவர்கள் நம்மை விட நிறைய சரக்கடிப்பவர்களாக இருக்கலாம். ஆனால் அடக்க விலையை விட ஒரு ரூபாய் கூட கூடுதலாகத் தரமாட்டார்கள். ஸ்ட்ரைக்கில் ஈடுபடுவார்கள். கடைகளை உடைப்பார்கள். நாம் ஏன் அதைச் செய்யவில்லை.? ஏன் செய்யமுடியவில்லை? அதைச் செய்யவிடாமல் தடுக்கும் அரசியல் எது? எதுவென்றால் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் சேர்ந்து அமைத்திருக்கும் ஊழல் கூட்டணியாக இது இருக்கிறது என்பதுதான். எங்கிருந்து கேள்வி எழவேண்டுமோ அவர்களும் ஊழலின் பங்காளிகளாக வெளிப்படையாக மாறுகிறபோது ஊழல் என்பது அசைக்க முடியாத நிறுவனமாகத் தகவமைகிறது.
இந்த டாஸ்மாக என்பது ஒரு சோற்றுப் பதம். இதை இங்கு நிலவும் ரியல் எஸ்டேட், பொதுப்பணித்துறை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட எல்லா ஊழலுக்கும் நீங்கள் பொருத்திப் பார்க்கலாம். அதனால்தான் இதை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்று மக்கள் முடங்குகிறார்கள். தலை குனிகிறார்கள். சலிப்படைகிறார்கள். கேள்வி கேட்காமல் வரிசையில் காத்திருப்பவர்களாக மாறுகிறார்கள். மக்களின் இந்த மனநிலை ஒருவித அரசியல் திகட்டல் நிலையாக (political saturation) மாற்றமடைகிறது. ஆக, பாதிக்கப்படும் பொதுமக்கள், ஆள்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் இரண்டு பேர் குறித்தும் சமமான கருத்துநிலைக்கு வந்தடைகிறார்கள். அப்போது மீட்பர்கள் குறித்து ஏங்குகிறார்கள். அதுதான் ஜிகினாக்கள் மீது அவர்கள் கவர்ச்சி கொள்வதை தவிர்க்க முடியாததாக ஆக்குகிறது. இங்குதான் கமல் போன்றவர்கள் வெளிச்சத்துக்கு வருகிறார்கள். கவனிக்கப்படுகிறார்கள்.
மேலும், கொள்கை வேட்கையுள்ள தலைவர்கள் சமூகத்தின் அடிமட்டத்தில் இருந்து உருவாகி வரமுடியாது என்பதை இரண்டு திராவிட கட்சிகளுக்கும் உறுதிபடுத்தி வைத்திருக்கின்றன. திமுக அதற்கு சிறந்த உதாரணம். அவர்கள் தங்களது அடுத்த தலைவராக உதயநிதியை அடையாளம் கண்டிருக்கிறார்கள். கமலை நோக்கி நெற்றிக்கண்ணைத் திறக்கும் திமுக சார்பு அறிவுஜீவிகள் கூட, இந்த விஷயத்தில் முரட்டுத்தனமாக முட்டுக் கொடுக்கிறார்கள். அல்லது கள்ள மவுனம் சாதிக்கிறார்கள். ஸ்டாலின் திமுகவின் தலைமைக்கு வருவது அரசியல் நெறிகளுக்கு எதிரானது, தார்மீக அடிப்படையில் தவறானது போன்ற விவாதங்கள் அதன் ஆரம்ப காலத்தில் உருவானபோது வெளிவந்த இன்னொரு முக்கியமான குரல் “அது வாரிசு அரசியலை தவிர்க்க முடியாததாக தமிழகத்தில் நிலைநிறுத்தும்” என்பதுதான். அந்த நிஜத்தை இப்போது நாம் ஏற்றுக்கொள்ள பழகியிருக்கிறோம்.
கட்சி ஆரம்பித்த அன்றே “உங்களது மகள்கள் அரசியலுக்கு வருவார்களா” என்று பத்திரிகையாளர்கள் கமலைப் பார்த்துக் கேட்கிறார்கள். நான் திமுக அனுதாபிகளை நோக்கிக் கேட்கிறேன்… இந்த கேள்வியின் அபத்தம் உங்களை நாணச் செய்யவில்லையா? எனக்கு அதிமுக அனுதாபிகளை நோக்கிக் கேட்பதற்கு கேள்விகளே இல்லை. அவர்களையே நாணச் செய்யும் அளவுக்கு கேள்வி கேட்கும் திறன் எனக்கில்லை என்பதே அதன் பொருள்!