கருத்து

குரங்கணி தீ விபத்து பலி…அஜாக்கிரதையின் விலை!

பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பிரக்ஞையற்ற நம் சமூகத்தாலும், பாதுகாப்பு நடைமுறைகள்/விதிமுறைகள் குறித்து ஒரு புரிதலை விதைக்காத, பாதுகாப்பு விதிகளை வகுத்து/நடைமுறைப்படுத்தாத அரசாங்கத்தாலுமே நிகழ்ந்துள்ளது.

ப. ஜெயசீலன்

10 வருடங்களுக்கு முன்பு ஒரு மேற்கத்திய நாட்டிற்கு நான் குடிபுகுந்த பொழுது எனக்கு பல விஷயங்கள் வியப்பாயிருந்தன. அதில் மிக முக்கியமான ஒன்று அவர்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் பாதுகாப்பு அம்சங்களுக்கு, பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அவர்கள் செலுத்தும் அக்கறையும், கவனமும். உதாரணத்திற்கு அங்கு எந்த கூட்டம் தொடங்குவதற்குமுன்பும் முதலில் அவர்கள் வந்திருப்பவர்களுக்கு வெளியேறும் வழிகள்(exit points), தீயணைப்பு மற்றும் முதலுதவி உபகரணங்கள் உள்ள இடங்கள் மற்றும் அவசரகால ஒன்றுகூடல் மையம் (emergency assembly point) இவற்றை விளக்கி சொன்ன பின்புதான் நிகழ்ச்சியையே தொடுங்குவார்கள். சமீபத்தில் நான் வீடு மாறும் நிமித்தம் புதிய வீட்டிற்கு மின்சார இணைப்பு பெற்றபோது அந்த சேவையை செய்யும் நிறுவனம் என்னிடம் கேட்ட பாதுகாப்பு சார்ந்த கேள்விகளில் ஒன்று நீங்கள் உயிர் காக்கும் கருவிகளை உங்கள் வீட்டில் பயன்படுத்துபவரா என்பதும் ஒன்று. ஏனென்றால் அவ்வாறு ஒருவர் இருக்கும் பட்சத்தில் எதிர்பாராத சமயங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கும் நிலை ஏற்பட்டாலும் அந்த குறிப்பிட்ட வீட்டிற்கு மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும் வகையில் கூடுதல் வசதி செய்து தரும் நோக்கோடு கேட்கப்பட்ட கேள்வியது. இன்னொரு உதாரணம் சொல்ல வேண்டுமானால் ஆஸ்திரேலியா பிரதம மந்திரி தனது வீட்டிற்கு அருகில் உள்ள கடலில் துடுப்பு படகில்(kayak) life jacket இல்லாமல் துடுப்பிடும் புகைப்படம் வெளியாகி கண்டனத்திற்கு ஆளானதோடு அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. அதாவது ஒரு சமூகமாக ஒரு தனி மனிதர் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்காவிடிலும் அதை ஒரு குற்றமாக பார்க்கும் மனோநிலையும், பாதுகாப்பு நடைமுறைகளிலும்/விதிகளிலும் கிஞ்சித்தும் சமரசமற்ற தன்மையை அவர்கள் ஒரு சமூகமாக கொண்டிருக்கிறார்கள். பாதுகாப்பு விதிகள்/நடைமுறைகள் மீறப்படும்போது யாராகயிருந்தாலும் அவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுக்கிறார்கள்.

நம்முடைய சமூகத்தில் சக மனிதரின் உயிரின் மேல் கிஞ்சித்தும் அக்கறையில்லாத, பாதுகாப்பு அம்சங்களின் மீது பிரஞையற்ற, அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கவேண்டிய பாதுகாப்பு விதிகள்/அம்சங்கள் குறித்து பயிற்றுவிக்கப்படாத சமூகமாக நாம் இருப்பது மிகுந்த வருத்தத்திற்கு உரியது. செய்திகளில் பார்க்கும் விபத்து மரணங்களில் பெரும்பாலானவை பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்காத காரணத்தால் ஏற்படுபவையே. அதன் தொடர்ச்சியாக ட்ரெக்கிங் போனவர்கள் பலர் தீவிபத்தில் இறந்துவிட்டார்கள் என்றும் இன்னும் நிறைய பேர் மீட்கப்பட வேண்டும் என்று வரும் செய்திகள் மிகுந்த வேதனையை தருகிறன்றன. ஏனென்றல் 100% முழுக்க முழுக்க பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பிரக்ஞையற்ற நம் சமூகத்தாலும், பாதுகாப்பு நடைமுறைகள்/விதிமுறைகள் குறித்து ஒரு புரிதலை விதைக்காத, பாதுகாப்பு விதிகளை வகுத்து/நடைமுறைப்படுத்தாத அரசாங்கத்தாலுமே நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் கடைப்பிடிக்கபடாதா/கடைப்பிடிக்க பட்டிருக்கவேண்டிய அடிப்படை பாதுகாப்பு அம்சங்களாக நான் உணருபவை

1) தட்ப வெப்பம்/ காலம்

காடுகளுக்கு trucking, camping, bush walking போன்ற செயல்பாடுகளை எல்லா தட்பவெப்பத்திலும், காலத்திலும் அனுமதிக்கக் கூடாது. ஏனென்றால் காடுகளில் இயற்கையிலேயே காட்டு தீ, மண் சரிவுகள், வெள்ள பெருக்குகள், திடீர் மழை போன்ற இயற்கையான நிகழ்வுகள் நிகழக்கூடும். அதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ள பருவநிலைகளில் மேல் சொன்ன நடவடிக்கைகளை அனுமதிக்கக் கூடாது.

2) எச்சரிக்கை

காடுகளுக்குள் செல்பவர்களுக்கு காட்டு தீ போன்ற அசம்பாவிதங்கள் நடப்பதிற்கான சாத்தியங்கள் குறித்தான எச்சரிக்கை தரப்படுவது அவசியம். உதாரணத்திற்கு, ஆஸ்திரேலியாவில் கடுமையான வெய்யில் நாட்களில் தீயணைப்பு துறையினர் ( http://www.cfa.vic.gov.au/warnings-restrictions/total-fire-bans-and-ratings/) “code red ” என்னும் எச்சரிக்கை அறிவிப்பு தரப்படுவது முறை. அதன் அர்த்தம் தீ பற்றுவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம், எனவே அதற்குத்தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுங்கள் என்பதே. code red அறிவிக்கப்பட்ட நாட்களில் காட்டிற்குள் எந்த நடவடிக்கையாகவும் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

3) தகவல்/தொடர்ப்பு

ஆஸ்திரேலியாவில் ஒரு பாதுகாக்கப்பட்ட காட்டிற்குள் செல்லுமுன் அங்கிருக்கும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஏதேனும் கட்டுப்பாடுகள் அல்லது எச்சரிக்கைகள்( restrictions and warning) அமலில் உள்ளதா என்று தொலைபேசியிலோ அல்லது இணையத்திலோ அறிந்து கொள்ளலாம். அது இல்லாமல் காட்டிற்குள் இருக்கையில் அந்த காட்டிற்கான பிரத்யோக fm அலைவரிசையில் அந்த காட்டில் நிகழும் தட்ப வெப்ப மாறுதல் குறித்த தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். இதுபோன்ற ஒரு தொடர்ப்பு வசதி குரங்கணியில் காட்டிற்குள் சென்றவர்களுக்கு தரப்பட்டதா என்று தெரியவில்லை.

4) அடிப்படை கருவிகள்

காட்டிற்குள் செல்லும் ஒவ்வொருவரும் அடிப்படையான சில பொருட்களை எடுத்துச்செல்வது அவசியம். appropriate dress, காடுகளுக்கென்று வடிவமைக்கப்பட்ட காலணிகள், அந்த காட்டின் வரைபடம் (அவசர காலங்களில் ஒன்றுகூடும் புள்ளி அல்லது அவசர காலங்களில் வெளியேற பயன்படுத்த வேண்டிய வழியை உள்ளடக்கியது), காடுகளின் சூழலுக்கேற்ப அடிப்படை முதல் உதவி சாதனங்கள் மற்றும் அவசர காலங்களில் வெளிஉலகத்தினர்க்கு தங்களது இடத்தை காட்டுவதற்கான smoke signal kit, emergency torch போன்றவை அவசியம். இவையும் இங்கு கடைப்பிடிக்கப்பட்டதாக தெரியவில்லை.

5) வயது கட்டுப்பாடுகள் மற்றும் உடல்தகுதி

காடுகளின் தன்மைக்கேற்ப சிறுவர், முதியோர் போன்றவர்களுக்கு கட்டுப்பாடுகள் தேவை. காட்டுத்தீ பரவ கூடிய ஒரு காட்டிற்குள் எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்காமல் குழந்தைகளை அழைத்து சென்றிருக்கிறார்கள் என்பது உண்மையிலேயே உறைய வைக்கிறது. இவர்களின் அஜாக்கிரதை மற்றும் பாதுகாப்பு குறித்தான எச்சரிக்கை அற்ற தன்மை அந்த குழந்தைகளின் உயிரை ஆபத்தில் விட்டிருக்கிறது. இதனோடு காடுகளின் தன்மை, பூகோளம் சார்ந்து ட்ரெக்கிங் பாதையின் கடினத்தன்மை குறித்தான விரிவான எச்சரிக்கை அளித்து ஒவ்வொருவரிடமும் கையெழுத்து வாங்கியே காட்டிற்குள் விட வேண்டும்.

6) emergency response unit

எல்லா வளரும் நாடுகளை போலவே இந்தியாவிலும் அவசர காலங்களில், பேரிடர் காலங்களில் மீட்ப பணியில் ஈடுபட நன்றாக பயிற்சி அளிக்கப்பட்ட, நவீன கருவிகள் மற்றும் சாதனங்கள் கொண்ட அமைப்பு நம்மிடம் இல்லை. climate change என்பது நம் கண்முன்னால் நிகழ்ந்து கொண்டிருக்கும் உண்மை. எதிர்காலங்களில் நாம் திடீர் பெருமழை, எதிர்பாராத புயல், மண்சரிவுகள், காட்டு தீ போன்றவற்றை எதிர்நோக்கி அதற்குத் தயாராய் இருப்பது அவசியம். உதாரணத்திற்கு பெருநகரங்கள் எங்கும் மேற்கத்திய நாடுகளை ஒத்த அபார்ட்மெண்ட் buildings காண முடிகிறது. ஆனால் என்னால் உறுதியாக சொல்ல முடியும் மேற்கத்திய நாடுகளில் கடைபிடிக்கப்படும் பாதுகாப்பு வழிமுறைகளில் பாதிகூட நம் ஊரில் கடைப்பிடிக்கப்படாது. நீங்கள் வேண்டுமானால் அபார்ட்மெண்டில் வசிக்கும் உங்கள் நண்பரிடம் வருடத்திற்கு ஒரு முறையாவது fire drill நடத்தப்படுகிறதா, உங்களது வீட்டில் smoke alarm இருக்கிறதா என்று கேட்டுப்பாருங்கள். இந்த குரங்கணி தீ விபத்தில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கை நமது அரசாங்கத்தின் கையாலாகாததனத்தையும் அவர்களின் அசைட்டையுமே காட்டுகிறது. சிறிய நாடுகளில் கூட மீட்பு நடவடிக்கைக்கென்று பிரத்யேகமான ஹெலிகாப்டர்கள் வைத்திருக்கிறார்கள். அதி நவீன பயிற்சி பெற்ற ERU வைத்திருக்கிறார்கள். அசம்பாவிதம் நடக்கும் போதெல்லாம் கடற்படை ஹெலிகாப்டர் வரும் என்று உக்காந்திருந்தால் உயிர் பலிதான் நிகழும்.

7) மக்களின் விழிப்புணர்வு

ஒவ்வொருமுறையும் சுற்றுலா தளங்களில் மக்கள் படகு சவாரி செய்யும் பொழுதும் எத்தனை பேர் life jacket கேட்டு பார்த்திருக்கிறீர்கள், எத்தனை பேர் அதை அணிந்து பார்த்திருக்கிறீர்கள், எத்தனை முறை படகை எடுப்பதற்குமுன் அந்த படகை செலுத்துபவர் அந்த படகில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை விளக்கி அவசர காலங்களில் என்ன செய்ய வேண்டும் என்று விளக்கி பார்த்திருக்கிறீர்கள், எத்தனை முறை நாம் பயணம் செய்யும் பேருந்து அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட பலமடங்கு வேகத்தில் செல்கையில் ஆட்சேபனை தெரிவித்திருக்கிறீர்கள், எத்தனை முறை உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினரிடம் உணவை பரிமாறுமுன் உங்களுக்கு எதாவது ஒவ்வாமை இருக்கிறதா என்று கேட்டிருக்கிறீர்கள்? இவையெல்லாம் பாதுகாப்பு குறித்தான நமக்கிருக்கும் பிரக்ஞை சார்ந்த எளிய உதாரணங்கள். நாம் ஒரு சமூகமாக நவீன உலகில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் பாதுகாப்பு வழிமுறைகள் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்தும் தேர்ந்த புரிதலில்லாமல் மிகவும் பின்தங்கியிருக்கின்றோம். இந்நிலையில் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையிலாவது பாதுகாப்பு அம்சங்களில் கவனம் செலுத்துவது முக்கியம்.

8) ஊரை அறிந்திருத்தல்

சமீப வருடங்களில் கேம்பிங், trucking போன்ற செயல்பாடுகள் பெருகியிருப்பதை காணமுடிகிறது. இதுபோன்ற செயல்பாடுகள் மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரத்தின் ஒரு பகுதி. அவர்களின் காடுகளும் நம்முடைய காடுகளும் முற்றிலும் வேறானவை. அவர்கள் பாதுகாப்பு அம்சங்களில் காட்டும் அக்கறை நம்மால் நினைத்து பார்க்க முடியாதது. நம்முடைய அரசாங்கம், நம்முடைய மீட்பு குழுக்களின் தகுதி/வசதி, நம் சமூகம் எல்லாவற்றையும் நமக்கு நன்கு தெரியும். இந்நிலையில் எந்த செயலில் எந்த நடவடிக்கையில் ஈடுபட்டாலும் தகுந்த பாதுகாப்பு அம்சங்களோடு ஈடுபடுவது மிக மிக அவசியம். இல்லையென்றால் நாம் தரும் விலை மிக பெரியதாகயிருக்கும்.

ப.ஜெயசீலன், சமூக – அரசியல் விமர்சகர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.