புத்தக அறிமுகம்

நூல் அறிமுகம் : எழுத்தாளர் சுகுமாரனின் ‘பெருவலி’

பீட்டர் துரைராஜ்

பீட்டர் துரைராஜ்

முகலாய அரசன் ஷாஜகானின் மகள் ஜஹனாராவைச் சுற்றி சுகுமாரன் எழுதியுள்ள புதிய நாவல் Peruvali / பெருவலி. முகலாய அரசர்களைப் பற்றி பல கதைகள் வந்துள்ளன. இது பெண் பார்வையில் எழுதப்பட்டுள்ள நாவல்.

முகலாயப் பேரரசர் ஷாஜகான் அவரது மகன் அவுரங்கசீபால் சிறை வைக்கப்படுகிறார். ஷாஜகான் மீதுள்ள பிரியத்தினால் அவரது மூத்த மகள் ஜஹனாராவும் அவரோடு சிறையில் இருக்கிறார். அவள் திருமணம் செய்து கொள்ள முடியாது. ஏனெனில் “அரச குடும்பத்தைச் சார்ந்த இளவரசிகள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று சக்ரவர்த்தி அக்பர் கட்டளை இட்டிருந்தார். ஆண் வாரிசுகளுக்கும் திருமண பந்தத்தின் மூலம் புதிதாக நுழையும் ஆண்களுக்கும் இடையில் போட்டி வந்துவிடும். அதன்மூலம் அரண்மனைக்குள் கலகம் ஏற்பட்டுவிடும்.அது ஆட்சியைத் தத்தளிக்கச் செய்யும். தான் கனவு கண்ட அமைதியான நாடு இல்லாமல் போகும் என்று அஞ்சியதன் விளைவு அந்த விதி”.அவள் தன் சகோதரர்கள் தாரா, முராத், அவுரங்கசீப் இவர்களுக்கு இடையில் நடந்த அதிகாரப் போட்டியை , சதியை, போரை அருகில் இருந்து பார்த்தவள்.அவள் தன் மனோகிலேசங்களை, பார்த்தவைகளை குறிப்புகளாக ரகசியமாக எழுதியிருந்தாள். ‘முகலாய வம்ச பெண்களில் முதலில் நாட்குறிப்புகளை எழுதிய பெருமை ஜஹனாராவுக்கு உரியது. அவளுடைய குறிப்புகள் மிக அந்தரங்கமானவை கூட ‘. இதையொட்டி எழுதப்பட்டுள்ளதுதான் இந்த நாவல்.

வெலிங்டன் நாவல் மூலம் மலைவாழ் பிரதேசத்தின் உருவாக்கத்தை வரலாற்று கதையாக எழுதி அதனோடு சமகால வாழ்வியலையும் சேர்த்து எழுதி ஒரு நல்ல நாவலைத் தந்தவர் சுகுமாரன். அவர் படைத்து இருக்கும் இரண்டாவது நாவல்தான் பெருவலி. இந்த நாவல் ஷாஜகான் இறப்போடு முடிவடைகிறது. பின்னுரையாக இந்த நாவலை ஏன் எழுதினேன் ? இந்தக் கதாப்பாத்திரத்தை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்பதை ஓரிரு பக்கங்களில் சுகுமாரன் நெகிழ்ச்சியாக எழுதியுள்ளார்.

காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நாவலை நாம் படிக்கலாம்.ஷாஜகானுக்கும் மும்தாஜ் மகாலுக்கும் உள்ள காதல் , ஷாஜகானின் மூத்த மகன் தாராவிற்குள்ள மென்மையான விவாதத் தன்மை கொண்ட மனநிலை, அவுரங்கசீபின் மூர்க்க குணம், ஜகாங்கீரை எதிர்த்து ஆட்சியைப் பிடிக்கும் ஷாஜகான் போன்ற அனைத்தும் வருகின்றன. ஜஹனாரா அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். எனவே அரசாங்க இரகசியங்கள், செயல்கள் குறித்த பல சம்பவங்கள் சொல்லப்பட்டுள்ளன. திருமணம் ஆகாமல் சிறையில் இருந்த காரணத்தால் ஒரு மெல்லிய சோகத்தை இந்தக் கதையில் நாம் உணரமுடியும். இதற்கு காரணம் சுகுமாரனா? ஜஹனாராவா?

சக்ரவர்த்திக்கு ஆலோசனை சொல்லும் அளவுக்கு முதிர்ச்சியானவள்; அவரது அன்புக்கு பாதரதிரமானவள். அவரின் மூத்த மகள். எனினும் பெண் என்பதால் அவளுக்கு பொதுவெளி இல்லை. அரண்மனை சேவகத்தில் அக்பர் காலம் முதல் ஷாஜகான் காலம் வரை ஈடுபட்ட மூன்றாம் பாலினம் பானிபட் வழியாக பல உள்விவகாரங்கள் பேசப்படுகின்றன. ஷாஜகான் மரணத்திற்கு வராத அவுரங்கசீப் , ஜோதிட நம்பிக்கை, இந்து மதத்துடன் இசைவாக இருக்கும் தாரா , தாராவின் மரணத்திற்குப் பின் அவனது மனைவியரை பெண்டாள முயலும் அவுரங்கசீப், குரான் பெயரால் பெண்களின் உரிமையைப் பறிக்கும் அவுரங்கசீப் என பல செய்திகள் கதையோட்டத்தில் சொல்லப் படுகின்றன. இது வெற்றிகரமான நாவல்தான். சுகுமாரன் கவிஞர் என்பதாலோ என்னவோ கதை கவித்துவமாய் செல்கிறது. இறுதியில் ஒரு சந்தேகம்: எனது ஒன்றாம் வகுப்பு டீச்சர் சொல்லிக் கொடுத்த ஔரங்கசீப் என்பது சரியா? சுகுமாரன் எழுதும் அவுரங்கசீப் என்பது சரியா ?

Peruvali / பெருவலி. காலச்சுவடு பதிப்பகம் / டிசம்பர் 2017/ 192 பக்கம் / ரூ.225.

பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: