இந்துத்துவம்

ராமர் கோயில் கட்டுவதுதான் ராம ரத யாத்திரையின் நோக்கமா?

ராமர் கோவில் காட்டுவது அவர்கள் நோக்கமல்ல. ராமர் பெயரால் நாட்டை பதற்றத்தில் வைத்திருப்பதும், இந்து - முஸ்லீம் பிரச்சினையை உண்டாக்குவதும், அதன் பேரால் இந்து வாக்கு வங்கியை பலப்படுத்துவதும் தான் நோக்கம்.

எஸ்.எஸ்.சிவசங்கர்

எஸ். எஸ். சிவசங்கர்

ஆண்டாளை இழுத்து ரோட்டில் விட்டு அவமானப்பட்டும், பெரியார் சிலையில் மோதி மண்டையை உடைத்துக் கொண்டும் வெட்கப்படாத கூட்டம் இப்போது ராமனின் ரதத்தில் ஏறி வந்து ரத்தம் குடிக்கப் பார்க்கிறது.

விசுவ இந்து பரிசத் “ராம ரத யாத்திரை”யை தமிழகத்தில் நடத்தி, இந்து உணர்வை தூண்டலாம் என பார்க்கிறது.

இந்த ரத யாத்திரைக்கு ஓர் வரலாறு இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் எப்போதும் நீண்ட காலத் திட்டத்தோடு தான் ஒர் காரியத்தில் இறங்கும். அப்படி தான் இந்தியாவை கைபற்றும் திட்டத்தில் அயோத்தியை கையிலெடுத்தது.

அயோத்தியில் இருக்கும் பாபர் மசூதியானது, அங்கு ஏற்கனவே இருந்த ராமர் கோவிலை இடித்து கட்டப்பட்டது என அறிவித்தனர். 1980 வாக்கில் ஆர்.எஸ்.எஸ்ஸின் துணை அமைப்பான விசுவ இந்து பரிசத் களத்தில் குதித்தது.

பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டுவோம் என்று அறிவித்தது. இதற்கு துணையாக சங் பரிவார் போர் அறிவித்தது.

இந்த காலக்கட்டத்தில் தான் அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் பொதுத் தேர்தலில் தோல்வியை தழுவியது.

யாருக்கும் மெஜாரிட்டி இல்லாத நிலையில், காங்கிரஸிற்கு எதிராக வி.பி.சிங் தலைமையில் ஜனதாதள் ஆட்சி அமைக்க கம்யூனிஸ்ட்களும், பாரதிய ஜனதா கட்சியும் ஆதரவளித்தன.

காங்கிரஸ் கட்சியில் உத்தரபிரதேச முதல்வராக, மத்திய நிதியமைச்சராக பணியாற்றிய போதே நேர்மையான, துணிச்சலான, அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றவர் வி.பி.சிங்.

மத்திய அரசில் பிற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைந்திருந்த, மண்டல் கமிஷன் அறிக்கை நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்தது. இயற்கையாக சமூகநீதியில் அக்கறை கொண்டவர் வி.பி.சிங். கூட்டணித் தலைவரான கலைஞரின் உத்வேகத்தால், மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவதாக அறிவித்தார் வி.பி.சிங்.

பதறிப் போனது பா.ஜ.கட்சி. வட மாநிலங்களில் ஆதிக்க சாதிகளின் துணையால் அரசியல் அதிகாரத்தை கொஞ்சம், கொஞ்சமாக கைப்பற்றிக் கொண்டிருந்தது பா.ஜ.க. ஆதிக்க சாதியினர் கோபம் கொழுந்து விட்டது மண்டல் அறிக்கைக்கு எதிராக. டெல்லியில் ஓர் மாணவர் தீக்குளித்து எதிர்ப்பை தெரிவித்தார்.

மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தும் வி.பி.சிங் அரசிற்கு ஆதரவளித்தால், தனது வாக்கு வங்கியை இழக்க நேரிடும் நிலை பா.ஜ.கவிற்கு. அதே சமயம் மண்டல் கமிஷனை நேரிடையாக எதிர்த்தால், பிற்பட்ட வகுப்பினரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் நிலை.

இந்த இக்கட்டான நிலையில் தான், அதில் இருந்து தப்பிக்க, விசுவ இந்து பரிசத்தின் “ராமர் கோவில்” பிரச்சினையை கையில் எடுத்து, திசைதிருப்பி ஆட்சியை கவிழ்க்க முடிவெடுத்தனர் பா.ஜ.கவினர்.

அதற்கான வழி முறையாகத் தான், அத்வானியின் ரத யாத்திரை திட்டம் தீட்டப்பட்டது.

1990 செப்டம்பர் 25 அன்று சோம்நாத் நகரில் ரத யாத்திரை புறப்பட்டது. அக்டோபர் 30ஆம் தேதி அயோத்தியில் ராத்திரையை முடிப்பதாகத் திட்டம். குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா, மத்திய பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்கள் வழியாக உத்தரபிரதேச அயோத்தியை அடைவது பாதை திட்டம். அயோத்தியை அடைந்து, பாபர் மசூதியை இடிக்க திட்டம்.

இதற்குள் ஒரு நாளைக்குள் பயணிக்கும் 300 கிலோமீட்டர் தூரத்தில் ஆறு இடங்களில் உரையாற்றி எழுச்சி ஏற்படுத்துவது எனத் திட்டம். திட்டமிட்டபடி பயணம் துவங்கியது, திட்டமிட்டபடி கலவரம் வெடித்தது, யாத்திரை கடந்த பின்.

யாத்திரை பீகாரில் நுழைய இருந்தது. பீகாரில் ஜனதாதள் கட்சியின் முதல்வராக இருந்தார் லல்லுபிரசாத் யாதவ். கடும் நடவடிக்கை எடுக்க பிரதமர் வி.பி.சிங் உத்தரவிட்டார்.

பீகார் மாநிலத்தில் நுழைந்த அத்வானியை கைது செய்தார் லல்லுபிரசாத். அதற்கு பிறகும் உத்தரபிரதேசத்தில் அயோத்தியை நோக்கி பா.ஜ.கவினர் பயணித்தனர். ஒன்றரை லட்சம் பேரை கைது செய்து, பாபர் மசூதியை தாக்காமல் காத்திட்டார் உத்தரப்பிரதேசத்தின் அன்றைய முதல்வர் முலாயம்சிங்.

பிறகு நரசிம்மராவ் பிரதமராக இருந்த நேரத்தில், 1992 டிசம்பர் 6 ஆம் தேதி கரசேவை என்ற பெயரில், பாபர் மசூதியை இடித்துத் தள்ளினர் பா.ஜ.க சங் பரிவார் கூட்டத்தினர். இதனை திட்டமிட்டு நிகழ்த்தியவர்கள் விசுவ இந்து பரிசத் அமைப்பினர்.

அடுத்து, பாபர் மசூதியை கட்டும் இடத்தில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்று மார் தட்டினர் பா.ஜ.க மற்றும் வி.எச்.பியினர்.

1996 மே 16 ஆம் ஆண்டு பா.ஜ.க மத்தியில் ஆட்சி அமைத்தது. அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக பொறுப்பேற்றார். அந்த ஆட்சி 1996 ஜூன் 1 வரை தான் நீடித்தது. அப்போது ராமர் கோவிலை விசுவ இந்து பரிசத்தால் கட்ட முடியவில்லை.

பிறகு மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைந்தது. இந்த முறை 1998 மார்ச் 19 முதல், 2004 மே 22 வரை முழு அய்ந்து ஆண்டுகள் ஆட்சியை நடத்தியது பா.ஜ.க. இந்த முறையும் விசுவ இந்து பரிசத்தால் ராமர் கோவிலை கட்ட முடியவில்லை.

பிறகு பா.ஜ.க தனிப்பெரும் மெஜாரிட்டியோடு ஆட்சியை பிடித்தது. 2014 மே 26 அன்று வாராது வந்த மாமணியாய் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றார். நான்காண்டுகள் ஆட்சி முடியப் போகிறது இப்போது.

அந்தோ பரிதாபம், இப்போதும் விசுவ இந்து பரிசத் கட்சியினரால் ராமர் கோயில் கட்ட முடியவில்லை.

ராமர் கோவில் காட்டுவது அவர்கள் நோக்கமல்ல. ராமர் பெயரால் நாட்டை பதற்றத்தில் வைத்திருப்பதும், இந்து – முஸ்லீம் பிரச்சினையை உண்டாக்குவதும், அதன் பேரால் இந்து வாக்கு வங்கியை பலப்படுத்துவதும் தான் நோக்கம்.

அதனால் ராமர் கோவிலை கட்ட, பொதுமக்கள் ஆதரவை கேட்டு என்ற பெயரில், மீண்டும் ராம ரத யாத்திரையை துவங்கி விட்டது விசுவ இந்து பரிசத்.

இந்த ராமர் ரத யாத்திரையை தான் தமிழகத்தில் நுழைய திட்டமிட்டுள்ளனர் விசுவ இந்து பரிசத்தினர்.

ஆனால் இப்போது அத்வானி ரதயாத்திரையை வழி நடத்தவில்லை. பாவம் அத்வானி, ஓரங்கட்டப்பட்டு ஒதுங்கி நிற்கிறார். ஆர்.எஸ்.எஸ் அத்வானிக்கு மாற்றாக ஆள் தயார் செய்யும்.

நாடகம் தொடர்கிறது, நடிகர்களே மாறியுள்ளனர், கலவரமே நோக்கம் !

எஸ்.எஸ்.சிவசங்கர், திமுகவைச் சேர்ந்த அரசியல் செயல்பாட்டாளர்; முன்னாள் எம்.எல்.ஏ.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: