கருத்து

போராட்டமும் எதார்த்தமும்

ஜி. கார்ல் மார்க்ஸ்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை பாரதீய ஜனதா கட்சி தட்டிக் கழித்திருப்பது தமிழகம் முழுவதும் கட்சிகளைக் கடந்து எல்லா மக்களையும் அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கிறது. இங்கு தன்னெழுச்சியாக நடக்கத் தொடங்கியிருக்கும் போராட்டங்கள், வெறும் காவிரிக்கானது மட்டும் அல்ல. காவிரி என்பது அதிருப்திகளின் பிரதான காரணமாக இருக்கிறது அவ்வளவே. கொஞ்சம் கொஞ்சமாக சேகரமாகிக்கொண்டே இருக்கும் அதிருப்தி அதன் கொதிநிலையை எட்டுவதன் வெளிப்பாடே இப்போது நடக்கும் போராட்டங்கள்.

காவிரி விவகாரத்தில், காங்கிரஸ், பிஜேபி, ஜனதாதளம் என எந்த கட்சி கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தாலும் அவை மிக வெளிப்படையாக தமிழக விரோதப் போக்கையே கடைபிடிக்கும். இதுவரை வந்த நீதிமன்ற உத்தரவுகள் எவற்றையும் அவை மதித்ததில்லை. மேலும், அடுத்த மாதம் அங்கு சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் சூழலில், காவிரி விவகாரம் மிகவும் உணர்வுப்பூர்வமானதாக மாற்றப்பட்டிருக்கும் கர்நாடகாவில், அங்கு செயல்படும் எந்தக் கட்சியும் மேலாண்மை வாரியத்தை எதிர்ப்பதன் வாயிலாக தேர்தலில் பலன் பெற நினைக்குமே தவிர தமிழகத்துக்கு சாதகமான ஒரு நிலையை நோக்கி நகராது. இதுதான் கள எதார்த்தம்.

இதை வெளிப்படையாகப் பேசும் கட்சிகளோ ஊடகங்களோ இங்கு இல்லை. இந்த உண்மையை நேர்மையாக மக்கள் முன் வைப்பதில் கட்சிகள் தவறு செய்கின்றன. ஒரு கட்சி இன்னொரு கட்சியை துரோகியாக சித்தரித்து மக்கள் முன் பொம்மலாட்டம் நிகழ்த்துகிறது.

குறிப்பாக, ஆளும் அடிமை சேவக அரசு. கெடு முடியும் கடைசிநாளில், “இன்று இரவு பன்னிரெண்டு மணி வரை நேரம் இருக்கிறது, நாங்கள் நல்ல செய்திக்காகக் காத்திருக்கிறோம்” என்று சொல்வதற்கெல்லாம் நெஞ்சுரம் வேண்டும். அந்த நெஞ்சுரம் முழுக்கவும் அரசியல் சொரனையற்ற உணர்விலிருந்து கிளைக்கக்கூடியது. அதில் இந்த அரசு, இப்போது இருக்கும் எந்த தென்னிந்திய அரசுடனும் ஒப்பிட முடியாத அளவுக்கு சீரழிந்ததாக இருக்கிறது.

நாமும் அரசு… அரசு.. என்கிற வார்த்தையைப் பயன்படுத்திக்கொண்டே இருக்கிறோம். இங்கு ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு ஏற்பட்டிற்கும் “ஒரு வித லும்பன் அமைப்பு முறைக்கு” அரசு எனும் சொல்லே பொருந்தாது. ஒரு அரசுக்கான அடிப்படை விழுமியங்களை இவற்றிடம் எதிர்பார்ப்பதென்பது அதிகபட்ச சொகுசு. அதனால்தான் இந்த அரசை விமர்சிப்பதற்குக் கூட கூசுகிறது. எழுதுகிற, யோசிக்கிற, சமூகத்தின் மீது கனிவு கொள்கிற ஒருவனது எதிர்ச் சொல்லுக்குக் கூட தகுதியற்ற அரசு இது. கேவலத்தின் உச்சம்.

ஆனாலும் இப்படி ஒரு அரசு எங்ஙனம் தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்கிறது? ஆட்சியை நடத்துபவர்களின் உடல்மொழியில் எந்தத் தயக்கமும் இல்லையே ஏன்? மற்ற மாநிலங்களில் இப்படி சாத்தியம்தானா என்கிற கேள்வி எழுகையில்தான் தமிழகத்தின் அரசியல் மற்றும் கலாச்சார சூழலை நாம் இந்தியாவின் மற்றைய மாநிலங்களுடன் பொருத்திப் வேண்டியிருக்கிறது. குறிப்பாக, வட இந்திய மாநிலங்களில் நடப்பது போன்ற வன்முறையுடன் கூடிய போராட்டங்கள் ஏன் இங்கு சாத்தியமாவதில்லை? நான் இதை இவ்வாறு புரிந்துகொள்கிறேன்.

SC/ST வன்கொடுமைச் சட்டங்களில் திருத்தம் கொண்டு வர முயலும் உச்சநீதிமன்றத்தின் விழைவுக்கு எதிராக வட இந்திய தலித்துகள் வீதிக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் மீது ஆதிக்க சாதியினரின் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. வட இந்தியா கிட்டத்தட்ட முடங்குகிறது. தமிழகத்தில் அப்படி ஒரு போராட்டம் நடக்கவில்லை ஏன்? இதன் பொருள் தலித்துகள் மீதான வன்முறைகள் இங்கு இல்லை என்பதா? இல்லை. ஒப்பீட்டளவில் நாம் வட இந்தியாவை விட மிக உயரமான இடத்தில் இருக்கிறோம் என்பதே அது. இது அப்படியே காவிரி விவகாரத்துக்கும் பொருந்தும்.

காவிரி பொய்க்கத் தொடங்கி கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. சிறுகச் சிறுக விவசாயத்தில் இருந்து டெல்டா பகுதி மக்கள் வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள். வேறு வழியில்லாத ஒரு பிரிவு மக்கள் மட்டுமே அதில் இன்னும் உழன்றுகொண்டிருக்கிறார்கள். அவர்கள் விவசாயத்தில் இருந்து வெளியேறி எங்கு போனார்கள்? உலகம் முழுக்க போனார்கள். மாநிலத்துக்குள்ளேயே திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்கு இடம் பெயர்ந்தார்கள். தேயிலைத் தோட்டங்களுக்கு அடிமையாகப் போன வரலாறு கொண்ட தமிழர்கள், மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு ஒட்டகம் மேய்ப்பதற்கும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு உடலுழைப்புக்கும் சென்றதாக அதன் எதார்த்தம் விரிவடைந்தது. அந்த வரலாற்று இடப்பெயர்வுக்கும் இப்போது நிகழ்வதற்கும் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது.

அது என்னவென்றால், மற்ற மாநிலங்களை ஒப்பிட நாம் கல்வியில் அடைந்திருக்கிற இடம். குறிப்பாக அடிப்படைக் கல்வி. மற்றொன்று முற்போக்கு அம்சங்களில் நமக்குக் கிடைத்த வெளிச்சம். கலை, கலாச்சாரம் போன்ற விவகாரங்களில் நமக்கு இருந்த பாரம்பரியத் தொடர்ச்சி. இதை நான் விதந்தோதுதலாகக் குறிப்பிடவில்லை. அதன் போதாமைகளையும் கணக்கிலெடுத்துக்கொண்டு, மற்ற வட இந்திய மாநிலங்களை ஒப்பிட்டுதான் நமது இடத்தைச் சொல்கிறேன். இப்படி சாத்தியப்பட்ட தனிமனிதத் தகுதி மேம்பாடு, தமிழர்களை அவர்கள் ஒடுக்கப்படுகிற, வாழ்வாதாரங்கள் மறுக்கப்படுகிற இடத்திலிருந்து வெளியேறும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்கியது. மேலும் அது இரண்டு வகையில் வினையாற்றுகிறது.

ஒன்று, இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையை விரைவாக வரித்துக்கொண்டு அதன் பலன்களை அனுபவிக்கும் பண்பாகத் திரள்கிறது. இரண்டாவது அதன் உப விளைவாக வரும் அரசியல் நீக்கத்துக்கு தன்னை முழுக்கவும் ஒப்புக்கொடுக்கிறது. இந்த மாற்றங்கள் இப்போது பெரும் மக்கள் திரள் போராட்டங்களுக்கு எதிரான ஊசலாட்டமாக உருமாற்றம் அடைந்திருக்கின்றன. இந்த பிரத்யேகத் சூழல்தான் போராட்டங்களுக்கு எதிரான ஒரு மனநிலையை தமிழகத்தில் தகவமைத்தது. எது தமிழகத்தின் பெருமையோ அதுவே அதன் எல்லையாகக் குறுகி நிற்கும் நிலைக்கு இப்போது ஆளாகி நிற்கிறது.

தொண்ணூறுகளுக்குப் பிறகு இங்கு நடந்த மாற்றங்களில் முக்கியமானது, ஒரே வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு மக்கள் பிரிவிற்குள் இரண்டு விதமாக உட்பிரிவுகள் உருவானதுதான். உதாரணமாக, வேளாண்மையில் இருக்கும் ஒரு தரப்பு அதைத் தவிர வேறு வருமான வாய்ப்பே இல்லாமல் அதில் பிணைக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு தரப்பு அதனுள்ளேயே இருந்துகொண்டு, கல்வியின் மூலம் மற்றைய வாய்ப்புகளைக் கண்டடைந்து வேளாண்மையை உபரியாகக் கருதும் நிலைக்கு நகர்ந்து ஆசுவாசத்தைப் பெற்றிருக்கிறது. இதில் சாதி, நிலவுடைமை, சிறு மற்றும் குறு விவசாயிகளின் சமூகப் பிணைப்பு போன்ற பல காரணிகள் உண்டு.

இது கிட்டத்தட்ட சமூகத் தளத்தில் உள்ள எல்லா தொழில்களுக்கும் பொருந்தும். இந்த நுணுக்கமான முதலாளித்துவ பண்பு ஒரு பிரிவு மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற உதவியது. குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலான மத்திய தர வர்க்கம் உருவாக வழிவகுத்தது. அதே சமயம் உடலுழைப்பை மட்டுமே நம்பி வாழும் ஒரு பிரிவை, அதே சமூகத்திற்குள் இருக்கும் உடலுழைப்பில் இருந்து வெளியேறி விட்ட இன்னொரு பிரிவைப் பார்த்து ஏங்கும் நிலைக்குத் தள்ளியது.

இந்த வேறுபாடு, பொது விவகாரங்களுக்காக இணைகிற வீதிக்கு வருகிற பண்பில் உடைப்பை ஏற்படுத்திவிட்டது. இன்று விவசாயி என்பதன் சுட்டு அதன் மேலோட்டமான தன்மையில் இருந்து மிகவும் நுணுக்கமாகப் பகுத்தறியவேண்டிய அரசியல் சொல்லாடலாக மாறிப்போயிருக்கிறது. ஒரு விவசாயக் கூலியும் ஒரு குறு விவசாயியும் ஒன்றல்ல. விவசாயம் செய்யும் ஒரு கவுண்டரும் ஒரு வன்னியரும் ஒன்றல்ல. ஒரு அதிமுக சார்பு விவசாயியும் திமுக சார்பு விவசாயியும் ஒன்றல்ல. பொது நோக்கிற்காக இந்த வேறுபாடுகளைக் களையும் அரசியலை முன்னெடுப்பதற்கு மாறாக அதன் மூலம் ஆதாயம் அடையும் நிலைக்கு இங்கு இருக்கும் அரசியல் கட்சிகள் சென்றதே இன்று மக்களை ஒன்றிணைக்க முடியாததற்கும் எதேச்சிகார மத்திய அரசை எதிர்த்து நிற்கமுடியாமல் போனதற்கும் காரணம்.

அதற்கு உதாரணம் இங்கு நடக்கும் உண்ணாவிரத கேலிக்கூத்துக்கள். இப்படி ஒரு உண்ணாவிரத நாடகத்தை நடத்திவிட்டு எடப்பாடிக்குத் திரும்பிப் போக முடியாது என்கிற நிலை இருந்தால் பழனிச்சாமியின் உடல் மொழி இவ்வளவு அலட்சியமாக இருக்குமா சொல்லுங்கள். இங்குதான் நமது சமூகத்தில் சாதி வகிக்கும் பங்கு இருக்கிறது. இங்குதான் பழனிச்சாமிகள் அரசியலுக்கு வெளியே இருக்கும் வெகுஜனத்தை விட அரசியலைக் கணிக்கும் அறிவுஜீவிகளை விட மிக நெருக்கமாக மக்களின் வேறுபாட்டு உணர்வைப் புரிந்துவைத்திருக்கிறார்கள். அதிலிருந்தே தமது அரசியலைக் கட்டியமைக்கிறார்கள். அதிகாரம் என்பது மக்கள் நலனுக்கு முழுக்கவும் எதிராக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள். கடற்கரைகளுக்கு பூட்டு போட்டு விட்டு, ஊழல் பணத்தை அடுக்கி வைத்திருக்கும் அறைக்கு வெளியே தமது எஜமானர்களின் காலை நக்கியபடி ஓய்வெடுக்கிறார்கள்.

இங்கு இருக்கும் கட்சிகளை விடுத்து தன்னெழுச்சியாகத் திரளும் போராட்டங்கள் கூட ஒரு கட்டத்துக்கு மேல் முன்நகர முடிவதில்லையே ஏன்? அங்குதான் அமைப்பாக்கத்தின் தேவையும் தலைமையின் அவசியமும் முக்கிய இடம் வகிக்கின்றன. தன்னெழுச்சிக்கும் தான்தோன்றித்தனத்துக்கும் பெருத்த வேறுபாடு இருக்கிறது. அதனால்தான் போராட்ட வடிவம் என்று வருகிறபோது நாம் வடமாநில மாதிரிகளை அப்படியே வரித்துக்கொள்ளமுடியாது.

வேல்முருகனின் டோல் உடைப்பு ஒரு கிளுகிளுப்பான ஆசுவாசத்தை நமக்கு வழங்கலாம். அதனால் எந்த அரசியல் பயனும் ஏற்பட முடியாது. ஏனெனில் இங்கு நிகழ்ந்த உதிரி உருவாக்கமும் சமூக, பொருளாதார, சாதியக் கட்டமைப்பும் வட இந்தியாவை ஒப்பிட முழுக்கவும் வேறானது.

நமக்கு என்னதான் வழி இருக்கிறது? இங்கு நிலைத்திருக்கும் வெகு மக்கள் திரள் கட்சிகளை போராடும் நிர்ப்பந்தத்தை நோக்கி நகர்த்துவதும், அது சார்ந்த உரையாடல்களை முன்னேடுப்பது மட்டுமே சாத்தியமானது. அந்த திசையில் நகர வேண்டுமெனில், அதில் இருக்கும் தடைகள் என்ன என்பது குறித்து யோசிக்கவேண்டும். அவற்றில் முக்கியமானது மக்களிடம் இருந்து விலகி நிற்கும் சமகால அரசியல்.

உதாரணத்துக்கு, அதிமுகவைக் குற்றம் சொல்ல திமுகவுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. சொல்லவும் செய்கிறது. ஆனால் மக்களைத் திரட்டி இந்த அரசைத் தூக்கியெறியும் ஒரு போராட்டத்தை அது முன்னெடுக்க முடியாது. அப்படி ஒன்றைச் செய்யும் தார்மீக பலம் அதற்குக் கிடையாது என்பது ஒருபுறம் இருக்க அப்படியான ஒரு அரசியல் சூழல் இங்கு இல்லை என்பதே முக்கியம்.

ஆ. ராசா சமீபத்திய ஒரு நேர்காணலில் “நீங்கள் ஏன் இந்த ஆட்சியைக் கவிழ்ப்பதில் தீவிரம் கட்டவில்லை” என்ற கேள்விக்கு இவ்வாறு பதில் சொல்கிறார். “அடுத்து நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம் என்று ‘Industrial Sector’ ல் இருக்கும் ஆட்கள் கூட கருதுகிறார்கள். அதனால் அவர்களின் துணையுடன் ஆயிரம் கோடிகளைக் களத்தில் இறக்கி சட்டமன்ற உறுப்பினர்களை வளைத்து இந்த அரசைக் கவிழ்க்க முடியும்தான். ஆனால் அதன் மூலம் வரும் அவப்பெயரை நாங்கள் சம்பாதித்துக்கொள்ள விரும்பவில்லை”. இதில் வெளிப்படும் ஒரு செய்தி மிகவும் முக்கியமானது. அது, “இன்றைய அரசியல் என்பது அதன் செயல்பாட்டில் மக்களின் பங்கேற்பைக் கோருவதில் இருந்து வெளியேறியிருக்கிறது” என்பதே.

இந்தப் பின்புலத்தில் வைத்துதான் ஸ்டெர்லைட்டின் இருப்பை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இது அப்படியே திருப்பூரின் சாயப்பட்டறைகளுக்கும் பொருந்தும். ராசா சொல்லும் அந்த இண்டஸ்ட்ரி ஆட்களில் அவர்களும் உண்டுதான். காவிரியா இண்டஸ்ட்ரியா என்றால் இண்டஸ்ட்ரிதான். இண்டஸ்ட்ரி என்றால் அது ஸ்டெர்லைட்டையும் உள்ளடக்கியதே. இன்றைய தேதியில் ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தாலும் கூட காவிரியைப் பெற்றுத் தரமுடியாது என்பதுதான் எதார்த்தம். இந்த எதார்த்தத்தை முதலாகக் கொண்டே சீமான் போன்ற வெற்று தமிழ் தேசிய பெருச்சாளிகள் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள்.

அதன் இன்னொரு வடிவம் தான் வேல்முருகனின் ஹீரோயிசம். அதற்கு மக்களிடம் கிடைத்திருக்கும் அமோக வரவேற்பு, இங்கு நிலவும் அரசியல் வெற்றிடத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. மீட்பர்களுக்காக ஏங்கும் ஒரு பிரிவு மக்களின் ஏக்கம் அது. அவர்களது இருத்தலின் நம்பிக்கையையும் அசைத்து வீதிக்கு வரத் தூண்டியதே மோடியின் சாதனை. இதன் பொருள், இனி இங்கு மக்கள் போராட்டங்களே சாத்தியம் இல்லை என்பதல்ல. நம்மிடம் நிலைத்திருக்கும் மரபான போராட்ட வடிவங்கள் மற்றும் மக்களைப் பணயம் வைக்கும் அதன் வழிமுறைகளின் மூலம் அத்தகையப் போராட்டங்கள் சாத்தியம் இல்லை என்பதே.

ஏனெனில் இங்கு அரசுக்கு எதிரான போராட்டம் என்பது, மக்களின் ஒரு பிரிவு இன்னொரு பிரிவுக்கு எதிராகப் போராடுவதாக வடிவெடுத்து நிற்கிறது என்கிற எதார்த்தம்!

ஜி. கார்ல் மார்க்ஸ், எழுத்தாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: