#savetamiljournos

பத்திரிகை ஊழியர்களை பாதுகாக்க வேண்டும்: ஊடகங்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடிதம்

ஊடகவியலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்திக்கும் பாஜகவினரின் நெருக்கடியை புறந்தள்ளி, ஊழியர்களை பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஊடகத்துறை ஆசிரியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதம் கீழே தரப்பட்டுள்ளது.

23.04.2018
பெறுநர்
உயர்திரு ஆசிரியர் அவர்கள்,
நாளிதழ் / தொலைக்காட்சி,
சென்னை.

அன்புடையீர் வணக்கம்,

ஜனநாயகத்தின் முக்கிய அங்கமாக ஊடகங்கள் உள்ளன. பல கடினமான சூழ்நிலைகளைக் கடந்துதான் பலரும் இந்த துறையில் பணியாற்றிவருகின்றனர்.

இந்த நிலையில், பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர், ஊடகவியலாளர்களைக் குறித்து செய்திருந்த பதிவும் அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளும் மிகவும் வருத்தமளிக்கின்றன.

எஸ்.வி.சேகர் செய்திருந்த பதிவு, பெண் ஊடகவியலாளர்கள் பணிக்காகவும், சம்பளத்திற்காகவும், பணி உயர்வுக்காகவும் தங்கள் சுயமரியாதையையும், கௌரவத்தையும் இழப்பவர்கள் என்றும், ஊடக உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளை பெண் பித்தர்கள் என்றும் ஒட்டுமொத்தமாக சித்தரிக்கிறது. இது ஊடகப் பணியாளர்கள் மட்டுமின்றி அனைவரையும் கோபம் கொள்ளச் செய்திருக்கிறது.

ஒரு புதிய வாய்ப்பு திறக்கப்பட்டிருப்பதன் காரணமாக எராளமான புதிய இளைஞர்கள், பெண் பணியாளர்கள் அதிலும் முதல் தலைமுறையைச் சேர்ந்த பலர் இந்தப் பணிக்கு வந்திருக்கின்றனர். இரவு-பகல் பாராமல் கடினமான பணியைச் செய்துகொண்டுள்ளனர். அவர்களைக் குறித்து இத்தகைய அவதூறுக் கருத்தைப் பரப்புவது, குடும்ப வாழ்க்கையிலும், சமூகத்தின் முன்னிலையிலும் கூனிக் குறுகச் செய்திடும் உள்நோக்கம் கொண்டது. இதன் மூலம் துணிச்சலான, தவறுகளைத் தட்டிக் கேட்கும், ஊடகப் பணியாளர்களை அச்சுறுத்த விரும்புகின்றனர்.

ஊடகத்துறையினரை இழிவுப்படுத்தி, மிரட்டி பணியவைக்கச் செய்யும் இந்த அறுவெறுப்பான பதிவுக்கு எதிராக ஊடக நிறுவனங்களே புகாரளித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருக்க வேண்டும். இப்போதும் கூட பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா, தமிழ்நாடு மகளிர் ஆணையம் ஆகியோரிடம் ஊடக நிறுவனங்களே புகார் அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

காவல்துறையும் தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவதுடன், கைதும் செய்திருக்க வேண்டும். இவையெல்லாம் நடக்காத நிலையிலேயே ஊடகத்தில் பணியாற்றுவோர் போராட்டத்திற்கு தள்ளப்பட்டனர்.

தற்போது, போராட்டத்தைக் காரணம் காட்டி, எஸ்.வி.சேகரை தப்பவைக்கும் நோக்கத்துடன் பாஜகவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். ஊடக நிறுவனங்களுக்கும், அதிகாரிகளுக்கும் கடுமையான நெருக்கடியைக் கொடுத்துவருவதாக அறிகிறோம். ஆளுங்கட்சி தனது அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தியும், விளம்பர வருவாய் என்கிற ஆசை காட்டியும், ஊடகப் பணியாளர்களை பழிவாங்குவதற்கு நிர்ப்பந்திப்பதையும், அதற்கு நிறுவனங்கள் பணிய வற்புறுத்தப்படுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு மோசமான பிரச்சனையாகப் பார்க்கிறது.
ஏற்கனவே கடந்த காலங்களில் பாஜகவை எதிர்த்து கருத்து தெரிவித்ததற்காக சில ஊடகவியலாளர்கள் பழிவாங்கப்பட்டது, சில ஊடகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியதும் அனைவரும் அறிந்ததே. எத்தகைய தவறு செய்தாலும் தாங்கள் ஆளுங்கட்சி என்பதால் – எந்த நியாயமான விமர்சனமும் ஊடகங்களில் வந்துவிடக் கூடாது என்பதே இவர்களின் நோக்கமாக இருக்கிறது.

அவர்களுடைய நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் பத்திரிக்கை நிர்வாகங்கள் நடந்துகொண்டால் அது ஊடக சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் விடப்பட்ட அச்சுறுத்தலாகவே அமையும்.

எஸ்.வி.சேகர் எழுதியதைப் போன்ற கீழ்த்தரமான பேச்சுக்களை தினமும் அள்ளி வீசுவோரைத் தப்புவிக்கவும், யாரும் எதிர்க்குரல் எழுப்பக் கூடாது என்பதற்குமாகவே இத்தகைய நிர்ப்பந்தங்கள் கொடுக்கப்படுவதாக நாங்கள் கருதுகிறோம். பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தங்கள் பணி காரணமாக அச்சுறுத்தலை எதிர்கொள்கிறபோது, நிறுவனங்கள் உடன்நின்று பாதுகாக்க வேண்டுமென அன்புடன் வலியுறுத்துகிறோம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: