சந்திரமோகன்

கடந்த ஆண்டை விட, இந்த முறை தமிழகத்தில் கூடுதலாக 30% மாணவர்கள் NEET நீட் பரீட்சை எழுதப் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்தோர், 1,07,480 ஆவர். சென்னை மையங்கள் சுமார் 25,000, சேலம் 17,461 கோவை 15,960 மதுரை 11,800 திருச்சி 9420 வேலூர் 9053 நாமக்கல் 5560 நெல்லை 4383 இன்னபிற.
தமிழகத்தில் பரீட்சை எழுத மையங்கள் இல்லை என கேரளா எர்ணாகுளத்திற்கு துரத்தப்பட்டோர் மட்டுமே 5371 ( மதுரை 1550, திருச்சி 1520, நெல்லை 2301) ஆவர். ராஜஸ்தான் ஜெய்ப்பூர் கணக்கு வர வேண்டியுள்ளது.
ஏப்ரல் 17 ந் தேதி நீட் கார்டு வந்துவிட்டது. மாணவர்கள், பெற்றோர்கள் பழனிசாமி அரசாங்கம் அனைவருக்கும் தெரிந்து விட்டது.
தமிழகத்திலிருந்து தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அநியாயமாக சிபிஎஸ்இ கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தேர்வு மையங்களை தீர்மானித்து அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை மாற்றி தமிழகத்திலேயே தேர்வு மையங்களை தீர்மானிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் காளிமுத்து மூலமாக வழக்கு தொடுக்கப்பட்டு, கரிசனமிக்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் அவ்வறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால் மாணவர்கள் – பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் வெளி மாநிலங்களுக்குச் செல்வதற்கான பயண டிக்கட்டுகளையும் ரத்து செய்தனர்.
இந்நிலையில் பார்ப்பனீய அதிகாரிகள் நிறைந்த சிபிஎஸ்இ பார்ப்பனீய உச்சநீதிமன்றத்திடம் சென்ற. மே 3 ந் தேதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று பேர் அமர்வு ஈவிரக்கமற்ற முறையில் அறிவித்தது. “ஏற்கனவே தீர்மானித்த மையங்களை மாற்ற இயலாது”. எனவே அந்த மையங்களிலேயே தேர்வு எழுத அனுமதிக்க உத்தரவு பெற்றுள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் சென்று தேர்வு எழுத உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகவும் குழப்பமடைந்து பதற்றத்தில் உள்ளனர்.
நாளை மே 6 நீட் தேர்வு
தமிழ்நாட்டின் கிராமங்களிருந்து ஏழை மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக தனியாக வேறு மாநிலங்களுக்கு சென்று வர முடியுமா? துணைக்கு பெற்றோரும் செல்ல வேண்டுமே! கடைசி நேரத்தில் ரயில் பதிவுகூட கிடைக்காதே ! எப்படிப் போனார்கள்? ஓரிரு நாட்கள் முன்பாகவே சென்று தங்கியிருந்தால்தானே தேர்வு நாளில் பதற்றமின்றி தேர்வு எழுத முடியும்? அப்படித் தங்குவதற்கு செலவு அதிகமாகுமே? மொழி தெரியாத பகுதிகளில் இன்னும் சிரமங்கள் இருக்குமே? மாணவிகளுக்கு இது இன்னும் சிரமம் இல்லையா? அனைவரும் போனார்களா, இல்லையா ?
நமக்கு எழும் சந்தேகங்கள் !
1) தமிழகத்தில் போதுமான மையங்கள் இல்லை என்பதால் வேறு மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்க செய்ய வேண்டி வந்தது என்கிறது சிபிஎஸ்இ. அதன் பொருள் என்ன? தேர்வு நடத்தக்கூடிய தரமான பள்ளிகள் தமிழகத்தில் இல்லையா ? கடந்த ஆண்டும் நீட் தேர்வு நடைபெறத்தானே செய்தது? அப்போது இந்தப் பிரச்சினை வரவில்லையே, அது எப்படி? அந்த மையங்களில் கூடுதல் இடங்களை வாங்கி இருக்கலாமே !இதிலிருந்து தெரிய வருவது – சிபிஎஸ்இ மகா குப்பைத்தனமாக ஏற்பாடு செய்திருக்கிறது என்பதா அல்லது பார்ப்பனீயத்தின் சதி என்பதா?
2) இதுபோன்ற தேர்வுகளில் தேர்வு மையத்தை தேர்ந்தெடுக்குமாறு விண்ணப்பத்தில் கூறப்பட்டிருக்கும். பொதுவாக, 1, 2, 3 என்று முன்னுரிமை கொடுத்து 3 தேர்வு மையங்களை தேர்ந்தெடுக்கலாம் என்று தரப்பட்டிருக்கும். ஒரு மாணவர் தேர்வு செய்த மூன்று மையங்களும் மாணவர் தாமாக முடிவு செய்வதில்லை. தேர்வு நடத்தும் சிபிஎஸ்சி முடிவு செய்து அறிவித்த மையங்கள்தான். அப்படியிருக்க, இந்த மூன்றிலும் இல்லாத ஒரு தேர்வு மையத்தை எப்படி எந்த அடிப்படையில் தேர்வு செய்தது சிபிஎஸ்ஈ?
3) தமிழகத்திலேயே தேர்வு மையங்களை மாற்றித்தர கால அவகாசம் இல்லை என்கிறது சிபிஎஸ்இ இதுகூடச்செய்ய முடியாத ஓர் அமைப்புதான் தேர்வுகளை நடத்துகிறது என்பது எவ்வளவு பெரிய அபத்தம்? சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடுவதற்குச் செலவு செய்த அந்த நேரத்தில் மாற்று ஏற்பாடுகளை சிபிஎஸ்இ செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. அகங்காரமா, பார்ப்பனீயத் திமிரா ?
4) தேர்வு எழுதும் இடங்களை மாற்ற முடியாது என அறிவித்து அமல்படுத்தும் சிபிஎஸ்இ தமிழில் தேர்வு தாங்களை வழங்குமா, ஏமாற்றுமா ?
காற்றில் கரைந்த கனவுகளோடு தன்னுயிரை மாய்த்துக்கொண்ட அனிதாக்கள் எண்ணிக்கை அதிகரிக்குமா?
நாட்டில் கல்வி, நீதித்துறை, நிர்வாகம் ஆகியவற்றில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளும்.. ஆர்எஸ்எஸ் பாஜகா வால் தலைமை தாங்கப்பட்டு நடத்தப்படும் இந்த காவிப்பாசிஸ்டுகள் ஆட்சியில் பார்ப்பனீயம் கொழுத்து ஆட்டம் போடுகிறது என்பதை நிரூபிக்கிறது.
பார்ப்பனீயத்திற்கு எதிரான அடுத்தச் சுற்று இயக்கம் அவசியப்படும் தான் போலும்!
சந்திரமோகன், அரசியல் செயல்பாட்டாளர்.