பிரதமர் நரேந்திர மோடியின் மிரட்டும் தொனியிலான பேச்சு குறித்து எச்சரிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
“எதிர்க்கட்சி தலைவர்களை குறிப்பாக காங்கிரஸ் கட்சியினரை, அரசுக்கு தலைமை தாங்கும் பிரதமர் அச்சுறுத்தும் முறையில் பேசுவது மக்களாட்சி முறையில் சிந்திக்க முடியாதது” என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்நாடக தேர்தல் பரப்புரையில் மே 6-ஆம் தேதி ஹூப்ளியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி, ‘காங்கிரஸ் தலைவர்களே, கவனமாகக் கேளுங்கள்…உங்கள் எல்லையை மீறினால், நினைவில் வையுங்கள்…இது மோடி, அதற்கான விலையை நீங்கள் கொடுத்தாக வேண்டும்’ என பேசியதாக கடிதம் கூறுகிறது.
தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காக, பிரதமர் பதவியை மிரட்டுவதற்கு பயன்படுத்துவதாகவும் அதில் காங். தலைவர்கள் எழுதியுள்ளனர்.
“1.3 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஜனநாயக நாட்டின் அரசியலமைப்பு படி தேர்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமரின் ‘மொழி’ இப்படி இருக்கக்கூடாது. பிரதமரின் வார்த்தைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என எழுதப்பட்டுள்ளது.
கர்நாடக தேர்தல் பரப்புரையின் போது முன்னாள் பிரதமர் மன்மோகன் பிரதமர் தன் தகுதியை மறந்துவிட்டு கீழிறங்கி பேசுவதாக தெரிவித்திருந்தார்.