கருத்து

“காலம் வரும்..! #காலா வரட்டும்…!”: இயக்குநர் மீரா கதிரவன்

காலாவின் எல்லைக்குள் நின்றே ரஞ்சித்தை விமர்சிக்கவேண்டும். காலாவிற்கு வெளியே நின்றே ரஜினியை விமர்சிக்கவேண்டும்.

மீரா கதிரவன்

சில மாதங்களுக்கு முன் தமிழ் சினிமாவிலுள்ள தமிழர்களின் மீதான அக்கறையின் பொருட்டு நண்பர்களால் ஒரு சங்கம் துவங்கப்பட்டது. குரல் வாக்கெடுப்பின் அடிப்படையில் எனக்கு ஒரு பதவியும் வழங்கப்பட்டது. சாதியற்ற தமிழர்களாய் ஒன்றிணையத் தொடர்ந்து பேசி வரும் பா.ரஞ்சித்தைப் போன்ற கலைஞர்களையும் இணைத்துக்கொண்டே இந்தச் சங்கம் வளர்த்தெடுக்கப்பட வேண்டுமென நான் பேசிய போது ஒரு நபர் அதை மறுத்தார். ரஞ்சித் ஒரு சாதி வெறியர் எனக் கடுமையான விமர்சனங்களையும் வைத்தார்.

சமீபத்தில் அந்தச் சங்கம் தொடர்பான வாட்ஸப் குரூப்பில் அதே நபர் சம்மந்தமில்லாமல் அதே கருத்தை குரல் பதிவிட்டார். அடுத்த நிமிடத்திலிருந்து நான் அந்த வாட்ஸப் குரூப்பிலில்லை. அந்தச் சங்கத்திலுமில்லை.

ரஞ்சித்தையும் அவரது காலாவையும் மறுப்பது என்பது ரஞ்சித்தை மட்டுமல்லாது விளிம்பு நிலை மக்களின் குரலையும் ஒடுக்கவதற்கான ஒரு வாய்ப்பாகத்தான் பயன்படுத்தப்படுகிறதோ என்கிற ஐயம் எனக்குள் எழுகிறது. அப்படியே ரஜினியை மறுப்பது என்றாலும் ரஜினியின் படங்கள் என்று தானே இருக்க வேண்டும். அது என்ன காலாவை மட்டும்? அப்படியே காலாவை மறுப்பது என்றாலும் ரஞ்சித்தை எதற்கு இழுக்க வேண்டும்.

சினிமா என்பது 24 தொழில் பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு மீடியம். நம்முடைய அலைவரிசையில் ஒத்திசைந்து பணிபிரிவதற்கு நான்கு பேர் கிடைத்தாலே இங்கு ஆச்சர்யம். அட்டக்கத்தி வெற்றிப்படம் என்று சொல்லப்பட்டாலும் தமிழ் சினிமா வர்த்தகத்தின் பெரிய மையமான மதுரை போன்ற ஊர்களில் முழுமையாகச் சென்று சேராத படம் என்று விநியோகஸ்தர்களின் மத்தியில் ஒரு பேச்சுண்டு. அதற்கு முக்கிய காரணம், அட்டக்கத்தியின் கதைக்களமும் புதுமுக நடிகர்களுமே.ஆனால் மெட்ராஸ் படம், மெட்ராஸையும் தாண்டி எல்லா ஊர்களிலும் சென்று சேர்ந்தது. கார்த்திக் போன்ற ஒரு வெற்றிகரமான நட்சத்திரம் படத்தில் இருந்ததும் அதைச் சாத்தியமாக்கிக் கொடுத்தது.

இப்படியான அனுபவங்களின் வழியாக தன்னுடைய அரசியல் சார்ந்த கருத்துக்களை இன்னும் பரவலாகக் கொண்டு சேர்க்க விரும்பும் ஒரு கலைஞன் ரஜினி போன்ற ஒரு உச்ச நட்சத்திரத்துடன் இணைவது இயல்பானது மட்டுமல்ல தேவையானதும் கூட.

தமிழ் சினிமா போன்ற ஒரு மைய நீரோட்டத்தில் ரஞ்சித்திற்கு முன்பே ஒரு சிலர் தலித் / விளிம்பு நிலை மக்களின் அரசியலைப் பேசியிருந்தாலும் அவர்கள் யாரும் அதிகாரத்தை நுகரும் இடத்திற்கு நகரவில்லை,

பொதுவாக நம் சமூகத்தில் அதிகார நுகர்வு அல்லது மேலான விசயங்கள் என்பது உயர்ந்தவர்களுக்கு மட்டுமே உரியது என்பதே காலம் காலமாக நிலவி வரும் ஒரு கட்டமைப்பாக இருக்கிறது.. ரஜினி என்கிற உச்ச நட்சத்திரத்தோடு இணைந்து ரஞ்சித் இளம் வயதிலேயே தனக்கான அதிகாரத்தைப் பகிர்ந்தெடுப்பது இந்தக் கட்டமைப்பையே தகர்ப்பது போன்றது. இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாத மேலாதிக்க மனப்பான்மை கொண்ட சிலர் தான் காழ்ப்புணர்ச்சியுடனும் வன்மத்துடனும் ரஞ்சித்தைக் குறி வைக்கிறார்கள். ரஞ்சித் மீதான தங்கள் வெறுப்பை உமிழ்கிறார்கள்.அதிகாரப் பங்கீட்டை மறுக்கும் அல்லது வெறுக்கும் மனோபாவமே இதுவென்று நாம் புரிந்துகொள்ளமுடிகிறது.

ரஜினி காலாவில் பேசும் கருத்துகள் மட்டுமே ரஞ்சித் உடையது, பொதுவெளியில் ரஜினி வெளிப்படுத்தும் கருத்துக்களுக்கு ரஞ்சித்தை நாம் பொறுப்பாளியாக்க முடியாது. தூத்துக்குடி சென்றுவிட்டு வந்து ரஜினி அளித்த பேட்டி மீது எனக்கு விமர்சனம் உண்டு, அதை ஒட்டிய ரஞ்சித்தின் கருத்தின் மீதும் எனக்கு விமர்சனம் உண்டு. தமிழ் சினிமாவில் ரஜினி போன்ற உச்ச நட்சத்திரத்தோடு இணைந்து பணியாற்றும் போது ஒரு வளர்ந்து வரும் கலைஞன் எதிர் கொள்ள வேண்டியிருக்கிற நிர்பந்தங்களையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டியிருக்கிறது.

திராவிடக் கோட்பாடு ஒங்கி ஒலித்துக் கொண்டிருந்த காலத்தில் தான் மாலையிட்ட மங்கை என்றொரு படம் வந்தது. இப்படத்தை எழுதி தயாரித்த கவியரசு கண்ணதாசன் அப்போது திராவிடக்கருத்தியலுக்கு எதிர் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். படத்தில் நாயகனாக நடித்த திரு. டி. ஆர். மகாலிங்கம் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர், ஆகையால் இப்படத்தைப் புறக்கணிக்க வேண்டுமென அப்போதும் சில குரல்கள் ஒலித்தன. ஆனால் படத்தின் டைட்டிலில் ” எங்கள் திராவிட பொன் நாடே” என்று பாடல் ஒலித்த போது மக்கள் எழுந்து நின்று ஆர்ப்பரித்து அமோக வெற்றியடையச் செய்தார்கள். பின்னாட்களில் திராவிடக் கட்சி மேடைகளில் அந்தப் பாடல் சத்தமாய் ஒலிக்கவும் செய்தது என்பதே வரலாறு. அந்தப் பாடலில் ஒலித்தது கண்ணதாசனின் குரலா அல்லது டி.ஆர். மகாலிங்கத்தின் குரலா? அது படைப்பின் குரல்.

காலா என்கிற படத்தின் குரலையும் நாம் கேட்க வேண்டும். அதற்கு பொறுத்திருக்க வேண்டும். காலா வழியாக மக்களை அரசியல் படுத்த வேண்டுமென நினைக்கிற ரஞ்சித்தின் குரலை நடிகரான ரஜினி யாரோ ஒருவருக்காக அறுவடை செய்வார் என முன்வைக்கப் படும் வாதங்களுக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.. அப்படியே ரஜினி ரஞ்சித்தைப் பயன்படுத்திக் கொண்டாலும் மக்கள் அதற்கான எதிர்வினையை தேர்தல் களத்தில் ஆற்றுவார்கள்.. ஆனால் யூகத்தின் அடிப்படையில் ரஞ்சித்தின் இதற்கு முந்தைய படங்களையும் போராட்டக் களங்களில் அவர் ஆற்றிய பங்களிப்புகளையும் குறைத்து மதிப்பிடுவது என்பது அறமல்ல.

காலாவின் எல்லைக்குள் நின்றே ரஞ்சித்தை விமர்சிக்கவேண்டும். காலாவிற்கு வெளியே நின்றே ரஜினியை விமர்சிக்கவேண்டும்.

ரஜினியைப் புரிந்து கொள்ள காலம் வரும்.

ரஞ்சித்தைப் புரிந்து கொள்ள காலா வரட்டும்.

மீரா கதிரவன், இயக்குநர்; எழுத்தாளர்.

மாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்!

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது.  வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

குறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..

Advertisements

2 கருத்துக்கள்

  1. ரஞ்சித்துக்கு எங்கள் ஆதரவு உண்டு. ஒடுக்கப்பட்ட இனம் இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் ஒதுங்கியே , ஒடுங்கியே இருப்பது.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: