
வி.களத்தூர் எம்.பாரூக்
நீட் தேர்வு கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு அறிவித்தவுடன் கடுமையான எதிர்ப்பினை அது சந்தித்தது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், கல்வியாளர்களும், சமூக செயல்பாட்டாளர்களும் கடும் எதிர்ப்பை பதிவு செய்தார்கள். நீட் தேர்வு CBSE என்கிற மத்திய பாடத்திட்டத்தின் அடிப்பைடையில்தான் நடைபெறும் என்பதை யூகித்துக்கொண்டு, இதனால் தங்கள் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்றும் இது மாநில உரிமையை பாதிக்கும் என்றும் அவர்கள் நன்றாகவே உணர்ந்திருந்தனர். இதனால்தான் நீட் தேர்வு என்று அறிவிப்பு வந்தவுடன் அதற்கு எதிராக 115 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டன.
அதிக எதிர்ப்பு இருந்தும் நீட் தேர்வு இன்று கட்டாயமாக்கப்பட்டதற்கு
‘இந்தி’ய அரசியலும், உலக அரசியலும் காரணம் என்பதே நிதர்சனமானது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக கபில்சிபல் இருந்தபோது ‘நாடு முழுவதற்கும் நீட் தேர்வை நடத்த வேண்டும்’ என்று இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரை செய்தது. இதை ஏற்றுக்கொண்ட அப்போதைய காங்கிரஸ் அரசு 2010 ம் ஆண்டு நீட் தேர்வை நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டது. இதனை எதிர்த்து நூறுக்கும் மேற்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் நீட் தேர்விற்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் இரு நீதிபதிகள் நீட் தேர்விற்கு எதிராகவும், நீதிபதி ஏ.ஆர்.தவே மட்டும் நீட் தேர்விற்கு ஆதரவாகவும் இருந்தனர். பெரும்பான்மை கருதி நீட் தேர்வு 18.07.2013 ல் ரத்து செய்யப்பட்டது.
இதன்பிறகு பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது. நீட் தேர்வை கொண்டு வரவேண்டும் என்பதில் முன்னைய காங்கிரஸ் அரசைவிட அதிதீவிர முனைப்பு காட்டியது. நுழைவுத் தேர்வு வேண்டாமென்ற தீர்ப்பிற்கு எதிராக மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. முன்பு நீட் வழக்கில் நுழைவுத் தேர்விற்கு ஆதரவாக இருந்த ஏ.ஆர்.தவே தலைமையிலான அமர்வுக்கு வழக்கு சென்றது. தார்மிகரீதியில் அவர் இந்த வழக்கை ஏற்று நடத்திருக்கக்கூடாது. வேறு ஒரு நீதிபதி அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் தலைமையிலான அமர்விற்கு நீட் வழக்கு சென்றதில் பாஜகவின் கைங்கரியம் இருந்திருக்க வாய்ப்புள்ளது. எதிர்பார்த்ததைப்போல் ஏ.ஆர்.தவே தலைமையிலான அமர்வு நீட் தேர்வுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. இதன் பிறகுதான் ‘தேசிய நுழைவுத் தேர்வு சட்டம்-2016’ நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது.
உச்ச நீதிமன்றம் எத்துணை தீர்ப்புகள் வழங்கினாலும் தனக்கு சாதகமானவற்றில் மட்டும் நீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி அதை நடைமுறைப்படுத்துவதற்கு அதி தீவிரமாக இன்றைய மத்திய அரசு செயல்படும் என்பதற்கு இந்த வழக்கே சரியானச் சான்று. உச்ச நீதிமன்றம் தனது எண்ணத்திற்கு மாறான தீர்ப்பை வழங்கினால் அத்தீர்ப்பை கண்டுகொள்ளச் செய்யாது. அதற்கு காவிரி மேலாண்மை வாரியம், ஆதார் வழக்கு போன்றவற்றை உதாரணங்களாக கொள்ளலாம். நீட் தேர்விற்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதிற்குக்கூட ஒரு வகையில் மத்திய அரசே காரணம். ‘நீட் தேர்வை நடத்த அரசு தயாராக இருக்கின்றதா’ என்று நீதிபதிகள் கேட்டபோது ‘தயாராக இருக்கின்றோம்’ என்ற மத்திய அரசின் பதிலை வைத்துதான் அந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிமன்றங்களில் பெரும்பாலும் அரசுகளின் உறுதியான போக்கையும், வாதங்களையும் வைத்தே தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. முன்பு தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு சி.இ.டி. என்ற நுழைவுத்தேர்வு நடைமுறையில் இருந்தது. 2006 ம் ஆண்டு அப்போதைய தமிழக அரசு இந்நுழைவுத்தேர்வுக்கு எதிரான கருத்துக்கள் வளர்ந்ததின் அடிப்படையில் வல்லுநர்கள் குழு அமைத்து ஆராய்ந்து, பின்பு அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் நுழைவுத்தேர்வை ரத்து செய்தது. இதனை எதிர்த்து சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் தமிழக அரசு உறுதியுடன் வாதாடியது. கிராமப்புற மாணவர்களின் நலன்களை அது முன்வைத்தது. இறுதியில் ‘இது சமூக நீதியின்பாற்பட்டது. இது தரத்தை குறைக்கவில்லை’ என்று நுழைவுத்தேர்வு நீக்க மசோதாவை ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார்கள். உச்ச நீதிமன்றமும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்தியது. ஆதலால் மாணவர்களின் எதிர்காலம் சம்மந்தமான நீட் வழக்கில் சரியாக வாதாடாமல் நீதிமன்றம் சொல்லிவிட்டது என்று நீட் தேர்வை கட்டாயப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது.
நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. அப்போது இதை விரும்பாத மாநிலங்களுக்கு 2016-2017 கல்வியாண்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. விலக்கிற்கான காரணங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. 30 காரணங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. அதில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று ‘இந்தியாவில் பாடத்திட்டம் சமச்சீராக இல்லை’ என்பது. 2016-2017 ம் ஆண்டுக்கு மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கூறிய காரணம், 2017-2018 ம் ஆண்டிற்கு பொருந்தாதா? அல்லது மத்திய பாடத்திட்டமும், மாநில பாடத்திட்டமும் இந்த ஒரே வருடத்தில் சமச்சீராக ஆகிவிட்டதா? என்ற கேள்வி எழும்புவதை தவிர்க்க முடியவில்லை.
இவைமட்டுமல்ல கல்வியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைக்கிறார்கள். எதன் ஒன்றுக்கும் மத்திய அரசு பதில் அளிக்கவில்லை. அளிப்பதில்லை என்பதைவிட பதில் அளிக்கவிரும்பவில்லை என்பதே சரியானதாகும். அவர்களின் ஒரே நோக்கம் ‘ஒரே தேசம், ஒரே தேர்வு’ என்ற கோசத்தை முன்வைத்து நீட் தேர்வை அமல்படுத்திட வேண்டும் என்பதே. இதன்மூலம் தனக்கு வேண்டியவர்களுக்கு சேவகம் செய்ய முயலுகிறார்கள் அவர்கள்.
நீட் தேர்வு கட்டாயமாக்கப்படுவதற்கு பின்னணியில் உலக வர்த்தக அமைப்பின் (WTO) அரசியல் இருக்கிறது. பல நாடுகளின் வர்த்தகர்கள் பங்கேற்கும் அமைப்புதான் WTO. அந்தந்த அரசுகளின் சார்பில் வர்த்தகர்களை கண்காணிக்கும் அமைச்சரும் இதில் பங்கேற்பார். 1995 ம் ஆண்டில் இருந்தே கல்வியில் சந்தை வாய்ப்புகளை அனுமதிக்க இந்த அமைப்பு தொடர்ந்து முயன்று வருகிறது. வாஜ்பேயி தலைமையிலான முன்னைய பாஜக அரசு உலக வர்த்தக அமைப்பில் பங்கேற்று ‘வர்த்தகங்களில் சேவை துறைகளை திறந்துவிடுவதற்கு’ தனது விருப்பத்தை பதிவு செய்தது. இன்று மோடி அரசு செய்துகொண்டிருக்கிற அனைத்து நாசகார திட்டங்களுக்கும் அடிப்படையாக இருப்பது வாஜ்பேயி தலைமையிலான முன்னைய பாஜக அரசுதான். கல்வியில் துவங்கி வரலாறு வரை அவர்களின் சித்தாந்தங்களை திணிக்க முயற்சி, எல்லாத்துறைகளிலும் அன்னியமுதலீடு, அரசியல் அமைப்பு சட்டம் மாற்ற முயற்சி, அரசியல் சட்ட பலகீனப்படுத்த மேற்கொண்ட தகிடுதத்தங்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். வாஜ்பேயி நல்லவர் அவரின் அரசு சிறப்பாக இருந்தது என்று சிலர் பேசும்போது சிரிப்பை அடக்கமுடியவில்லை. அன்று தனிப்பெரும்பான்மை இல்லாததால் தடுத்து ஆடினார்கள். இன்று மிருகபலத்துடன் இருப்பதால் அடித்து ஆடுகிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.
கல்வித்துறையில் அயல்நாட்டு வர்த்தகர்களை, தனியார் முதலாளிகளை அனுமதிக்க வேண்டும் என்பதில் இந்த அரசு தீயாக வேலையாற்றுகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பாடத்திட்டம் என்று இருந்தால் அவர்கள் தொழில் செய்வதற்கு உகந்ததாக இருக்காது என்பதால் ஒரே கல்வி, ஒரே தேர்வு என்பதை கொண்டுவருகிறார்கள். அதற்குத்தான் இந்த நீட் தேர்வு. இதில் மக்கள் நலனும் சரி, மாணவர்கள் நலனும் சரி கிஞ்சிற்றும் அக்கறை கொள்ளப்படவில்லை.
1986 ம் ஆண்டில் இருந்து இங்கு கல்வி தனியார் மயமாகி வருவது அவர்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. அதேபோல் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டும் அவசர நிலைக்காலத்தில் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அது இன்றுவரை அப்படியே தொடர்கிறது. இதுவும் இவர்களுக்கு கூடுதல் வசதியாக அமைந்துவிட்டது.
கல்வியையும், மருத்துவத்தையும் வெளிநாட்டு வர்த்தகர்கள், தனியார் முதலாளிகள் கையில் கொடுத்துவிட்டு அவர்கள் கொள்ளையடிப்பதை மாணவர்களின், பெற்றோர்களின் ரத்தத்தை உறிஞ்சுவதை சோளக்காட்டு பொம்மைபோல் வேடிக்கை மட்டுமே பார்க்கப் போகிறது மத்திய அரசு. அதற்கான வேலைகள் ஜரூரா நடைபெற்று வருகின்றன. நிதி ஆயோக்கும் தனது பரிந்துரையில் அதைத்தான் முன்மொழிந்திருக்கிறது.
“இலாபம் கிடைத்தால்தான் கல்லூரிகள் தொடங்க பலர் முன் வருவார்கள். அதனால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்திற்கு அரசு கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது. கட்டுப்பாடுகள் நீக்கிவிட்டால், மாணவர் சேர்க்கையில் மோசடிகளுக்கு இடமிருக்காது” இதுதான் நிதி ஆயோக்கின் பரிந்துரை. இதை சொல்வதற்காகத்தான் பிரதமர் மோடி நிதி ஆயோக் கொண்டு வந்தாற்போலும். இவர்களின் மோசடியான இந்த திட்டங்களினால் சேவையாக இருந்து வருகிற கல்வியும், மருத்துவமும் மிகப்பெரும் வியாபாரமாக உருவெடுக்கும். இதன்மூலம் கல்வியும், மருத்துவமும் ஏழை எளிய மக்கள் அல்லாத பணக்காரர்களுக்கு மட்டுமானதாக உருமாறும். அதைதான் இந்த மோடி வகையறாக்கள் விரும்புகிறார்கள். அவர்களின் நோக்கம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமை சேவகம் செய்வதுதானே தவிர மக்கள் நலன் அல்லவே!
வி.களத்தூர் எம்.பாரூக் கட்டுரையாளர். கீற்று உள்ளிட்ட இணையதளங்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார்.