பா. ஜெயசீலன்
ஜப்பானிய சினிமாவில் “chambara” என்றொரு வகைமை(genre) உண்டு. வாள் சண்டை திரைப்படங்கள் என்னும் பொருள்கொண்ட chambara படங்கள் பெரும்பாலும் 16ஆம் நூற்றாண்டையே தனது கதைக்களமாக கொண்டிருக்கும். ஏற்கனவே சொன்னதை போல 16ஆம் நூற்றாண்டு ஜப்பான் உள்நாட்டு போரில் தகித்து கொண்டிருந்த காலம். Daimyoகள் ஒருவருக்குகொருவர் சண்டையிட்டு கொண்டிருந்தனர். இந்த தொடர் சண்டையினால் பல Daimyoகள் கொல்லப்பட்டு அவர்களோடிருந்த சாமுராய்கள் Ronin சாமுராய்கள் ஆனார்கள். chambara வகை படங்களில் பெரும்பாலும் Ronin சாமுராய்களை பற்றியதாகவே இருந்திருக்கிறது. இதன் காரணம் Ronin சாமுராய்கள் sweet rascals என்னும் அளவில் கதாசிரியர்கள் Ronin கதாபாத்திரங்களின் மேல் ஈர்ப்பு கொண்டிருந்தார்கள்.
மேற்கத்திய நாடுகளில் “western genre” என்றொரு வகைமை உண்டு. ஒருவகையில் அதன் ஜப்பானிய வடிவமே chambara genre என்று சொல்லலாம். குறிப்பாக சிறுவயதிலிருந்து மேற்கத்திய படங்களை பார்த்து வளரும் வாய்ப்பை பெற்றிருந்த அகிரா western genre வகைமையை மிக திறமையாக ஜப்பானிய சமூக பண்பாட்டு கூறுகளுக்குள் உள்வாங்கி செவென் சாமுராய் திரைப்படத்தை உருவாக்கினார். chambara வகைமை படங்கள் இரண்டாம் உலகப்போரின் முடிவிற்கு பின்னான காலம் தொட்டு 1970கள் வரை நிறைய இயக்குநர்களால் பயன்படுத்தப்பட்டது. போரின் பெரும் இழப்பிற்கு பின்பான, தோல்விக்கு பின்பான அந்த கால கட்டத்தில் ஜப்பானியர்களுக்கு மரணத்தை எளிதாக அணுகும் சாமுராய்களின் மனநிலையும், புறக்கணிக்கப்பட்ட அவமானப்படுத்தப்பட்ட Ronin சாமுராய்கள் பற்றிய கதைகளும், அதை Ronin சாமுராய்கள் எதிர்கொண்ட அந்த கால கட்டத்து கதையாடல்களும் ஒருவகையில் ஆறுதல் அளித்திருக்கலாம்.
செவென் சாமுராயின் கதை மிக இலகுவான எளிதான நேரடியான கதை. அந்த கதையின் திரைக்கதையை மூன்று பகுதியாக பிரிக்கலாம். முதல் பகுதியில் அகிரா வேளாண் சாதிகள் வாழும் ஒரு சின்ன எளிய கிராமத்தை அறிமுகப்படுத்துகிறார். தொடங்கிய உடனேயே அந்த கிராமத்தை அறுவடை காலத்தில் கொள்ளையடிக்க திட்டமிடும் கொள்ளைக்காரர்களையும், அவர்கள் திட்டமிடுவதை ஒளிந்திருந்து கேட்டுவிடும் அந்த கிராமத்தினரையும் காட்டி முதல் பகுதி தொடங்குகிறது. கிராமத்தில் பயம் பற்றிக்கொள்ள, அந்த கிராமத்தின் பெரியவர் பசியோடு திரியும் சாமுராய்களை அழைத்துவந்து பணிக்கு அமர்த்தி கொள்ளையர்களிடமிருந்து தங்கள் கிராமத்தை காக்க சொல்லலாம் என்று ஆலோசனை சொல்கிறார். நாட்டாமையின் தீர்ப்பை ஊர் ஏற்று கொள்கிறது. கிராமத்தினரிடம் பெரிதாக பணம் இல்லாத நிலையில், அவர்கள் வெறும் சோற்றிற்கு சண்டையிட தயாராகயிருக்கும் Ronin சாமுராய்களை தேடி அருகிலிருக்கும் சின்ன நகரத்திற்கு கிளம்புவதோடு முதல் பகுதி முடிகிறது.
முந்தைய பகுதிகளைப் படிக்க:
ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா: பகுதி – 1
ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா: பகுதி – 2
ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா: பகுதி – 3
இந்த முதல் பகுதியில் அகிரா மிக கவனமாக அந்த கிராமத்தை கட்டமைக்கிறார். தமிழ் சினிமாவில் சாதி ஹிந்து இயக்குனர்கள் எப்படி “கிராமம்” என்னும் ஒரு புனித பிம்பத்தை கட்டமைக்கிறார்களோ அதே போன்ற லாவகத்தில் அகிரா ஒரு கிராமத்தை கட்டமைக்கிறார். திரைப்படத்தின் துவக்கத்தில் காட்டப்படும் கொள்ளைக்காரர்களை தவிர படம் நெடுகிலும் வரும் எல்லா கதாபாத்திரங்களின் சாதியும் மிக நேர்த்தியாகவும், கவனமாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஏன் அகிரா கொள்ளைக்காரர்களின் அடையாளத்தை யாரோ சில முரடர்கள், திருடர்கள் என்னும் அளவில் கடந்து போகிறார்? ஏற்கனவே போன பகுதிகளில் சொன்னதை போல கதை நடக்கும் 16ம் நூற்றாண்டில் நடந்த கடுமையான உள்நாட்டு யுத்தத்தால் பல சாமுராய்கள் ronin சாமுராய்கள் ஆனார்கள். சண்டையிடுவதை தவிர வேறொன்றும் தெரியாத அவர்களில் பெரும்பான்மையினர் கொள்ளையர்களாகவும், அடியாள்களாகவும் மாறினார்கள். அந்த காலத்தில் வாழ்ந்த வேளாண்சாதிகள் ஒரு பக்கம் கொள்ளையடிக்கும் ronin சாமுராய்களாலும், இன்னொருபக்கம் கடுமையான வரி சுமையை செலுத்திய daimyoகளிடம் வேலை செய்த சாமுராய்களாலும் பாதிக்கப்பட்டார்கள். படத்தின் துவக்கத்தில் வரும் கொள்ளையர்களை நாம் ronin சாமுராய்கள் என்று புரிந்து கொள்வதற்கு நமக்கு அந்த காலகட்டது ஜப்பானிய வரலாறு போதுமான தரவுகளை தந்திருக்கிறது. ஆனால் படம் நெடுகிலும் எல்லா கதாபாத்திரங்களின் ஜாதிய பின்புலங்களையும் மிகுந்த சிரத்தை எடுத்து படம்பிடித்திருக்கும் அகிரா அந்த கொள்ளையர்களை மட்டும் “வெறும் கொள்ளையர்கள்” என்று கடந்து போகிறார்.
கொள்ளையர்கள் வந்து போன பின்பு கிராமத்தினர் அனைவரும் கிராமத்தின் நடுவில் கூடி கூனி குறுகி சோகத்தில் அமர்ந்திருப்பதை போன்ற ஒரு காட்சி வரும். நான் பார்த்த தமிழ் திரைப்படங்களிலேயே ஒரு மிக ஆபாசமான பாத்திர படைப்பு என்றால் முதல் மரியாதை படத்தில் உண்ம தெரிஞ்சாகணும் சாமி என்று சொந்த பிள்ளை செத்ததற்கு கூட ஆவேசப்படாமல் சிவாஜி வீட்டின் முன் வந்து வாசலில் தயங்கியபடி, இடுப்பில் துண்டை வைத்துக்கொண்டு கூனி குறுகி நின்று தலையை சொரியும் கதாபாத்திரத்தை சொல்வேன். நம் சமூகத்தின் சாதிய அமைப்பில் ஊராத, அந்த சாதிய அமைப்பின் மேல் கேள்விகளற்ற பற்றில்லாத ஒருவரால் அப்படி ஒரு பாத்திரத்தை எழுதவோ, இயக்கவோ முடியாது. ஒரு சுத்தமான சாதி ஹிந்து மனநிலையில் ஊறிய ஒரு மனநோயாளியால்தான் அப்படி ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கமுடியும். கிட்டத்தட்ட அந்த கதாபாத்திரத்துக்கு இணையான மனிதர்களை நீங்கள் அகிராவின் படங்களில் கானலாம். குறிப்பாக செவென் சாமுறையில் அதுபோன்ற கதாபாத்திரங்கள் படம் நெடுகிலும் காணகிடைப்பார்கள். கொள்ளையர்களை கண்டு அஞ்சி வேளாண் சாதி மக்கள் கிராமத்தின் நடுவில் கூடி அமர்ந்திருக்கும் காட்சியை அகிரா மிகுந்த கவனத்தோடு காட்சிப்படுத்தியிருப்பதை காணமுடியும். எல்லோருடைய தலைகளும் மன்னைநோக்கியிருக்க, அவர்களுடைய மொத்த உடலும் கூனி குறுகி கிட்டத்தட்ட அவர்கள் மனிதர்களே அல்ல உடல் பெருத்த மண் புழுக்கள் என்னும் பாவனையில் தரையில் அமர்ந்திருப்பார்கள். அகிரா அங்கு சொல்ல விளைவது ஆபத்தை கண்டு அஞ்சிவிட்டார்கள் என்பதையல்ல. மாறாக வேளாண் சாதியான அவர்களின் limitations. சண்டை செய்வதற்கோ, தற்காத்துக்கொள்வதற்கோ, தங்கள் உடமைகளை, உறவுகளை காத்துக்கொள்வதற்கோ அவர்கள் எந்த வகையிலும் தகுதியானவர்களோ, திறமையானவர்களோ, தைரியம் உள்ளவர்களோ கிடையாது என்பதைத்தான். நமது சமூகத்தில் மணியாட்டுபவர்கள் தங்களை உயர்ந்த சாதி என்று சொல்லிக்கொண்டு வேறு யாரையும் அதற்க்கு அனுமதிக்காததை போல ஜப்பானிய நிலவுடமை முறை சமூகத்தில் சண்டை செய்யும் சாமுராய்கள் தான் உயர்ந்த சாதி. அவர்கள் சண்டையிடும் உரிமையை வேறு சாதியினருக்கு அனுமதிக்கவில்லை. இன்னும் சொன்னால் வாளை எடுத்து செல்லும் உரிமையே சாமுராய்களுக்கு மட்டும்தான் இருந்தது. நம்மூர் பார்ப்பனர்களுக்கு பூணுல் போல சாமுராய்களுக்கு அவர்களது வாள். anyway..
முந்தைய பகுதிகளைப் படிக்க:
ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா: பகுதி – 1
ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா: பகுதி – 2
ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா: பகுதி – 3
நம்முடைய எல்லா கிராமிய படங்களிலும் ஊர் பெரியவர் ஒருவர் வருவார். இதுபோன்ற கதாபாத்திரங்களை மேற்கத்திய படங்களில் பார்ப்பது அரிதிலும் அரிது. நமது படங்களில் வரும் ஊர் பெரியவர் எந்த ஜனநாயக விழுமியங்களுக்கும் உட்பட்டவராக இருக்கமாட்டார். அவரது அதிகாரம் என்பது பெரும்பாலும் hereditary சார்ந்து அடைந்ததாக இருக்கும். எனது கவுண்டர் சாதி நண்பர்களிடம் பேசும் பொழுது அவர்கள் ஊர் கவுண்டர்/மணியக்காரர் பற்றி பெருமிதமாக பேசுவார்கள். மணியக்காரர் திருமணத்திற்கு வந்தால் எப்படி எல்லோரும் அவருக்கு பயப்படுவார்கள் என்பதை சிரித்த முகத்தோடு சொல்வார்கள். இதுதான் சாதி ஹிந்து மனநிலை என்பது. மணியக்காரர்/ஊர் கவுண்டர் போன்றவர்களின் அதிகாரத்தின் legitimacy பற்றி சாதி ஹிந்து மனது கேள்வியெழுப்பாது. மாறாக அவருக்கு பணிந்து நடப்பதைத்தான் அது பெருமையாக, மகிழ்ச்சிக்குரியதாக கருதும். இந்த மனோநிலையின் வெளிப்பாடுதான் கிராமிய தமிழ் படங்களில் வரும் ஊர் பெரியவர் கதாபாத்திரம். சாதிய ஜப்பானிய சமூகத்திலும் ஊர் கவுண்டர் தேவைப்பட்டிருப்பார் இல்லையா? செவென் சாமுராய் திரைப்படத்தில் கிராமத்து மக்கள் நேராக ஊர் பெரியவரிடம் போகிறார்கள். அந்த பெரியவரின் முன்பு எல்லோரும் பம்மி கொண்டு அவரது பொக்கை வாயை பார்த்தபடி உட்காந்திருக்கிறார்கள். அங்கு ஒரே ஒரு இளைஞன் அந்த கொள்ளைக்கார்களை நாமே சண்டையிட்டு வெல்வோம் என்று ஆவேசம் கொள்கிறான். ஒரு நொடி நாமே ஆச்சரியபடுகிறோம். ஆனால் இன்னொருவர் சண்டையிட நாம் என்ன சாமுராய்களா..வெறும் விவசாயிகள்..நாம் சண்டையிட்டால் மொத்தமாக அழிந்து போவோம் என்று கண்ணிமைக்கும் நேரத்தில் சாமுராய்களுக்கு build up தரும்பொழுதுதான் நமக்கு அதானே பார்த்தேன் என்று தோன்றுகிறது. ஒருவழியாக ஊர் பெரியவர் கொள்ளைக்காரர்களை deal செய்ய ronin சாமுராய்களை கூட்டிவருவதுதான் வழி என்னும் சல்லிசான யோசனையை terrorரானா பின்னணி இசையோடு, விதவிதமான close up ஷொட்களோடு சொல்லிமுடிக்கிறார். உடனே அந்த கிராமத்திலிருக்கும் மங்கூஸ் மண்டயன்கள் என்னயிருந்தாலும் நம்ம மணியக்காரர் மணியக்காரர் தான் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
சாமுராய்களை அழைத்துவர அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் கிளம்பி பக்கத்து ஊருக்கு போகிறார்கள். இதோடு முதல் பகுதி முடிகிறது. தமிழ் கிராமிய படங்களில் கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு கொஞ்சம் பாடுங்கள் என்று கதாநாயகி ஓடி ஆடுவதை பார்த்து Switzerland கிராமத்தினரே பார்த்து பொறாமை படும் அளவிற்குத்தான் கிராமங்கள் காட்சிப்படுத்தப்படும். சிம்புவும், மஹிமாவும் அவர்கள் பாட்டுக்கு ஒரு கிராமத்தில் யாரோ ஒருவர் வீட்டில் இரவில் உணவருந்தி, தூங்கி நடுவில் சிம்பு cityல இதுயெல்லாம் கிடைக்குமா என்று பீலாகும் அளவில்தான் கிராமங்களின் புனிதங்கள் கட்டியெழுப்பப்படுகின்றன. இதற்க்கு பின்பும் சாதி ஹிந்து மனநிலை உள்ளது. சாதி ஹிந்துக்களுக்கு தங்களது சாதியின் அதிகாரத்தை ருசிக்க, சோதனையிட கிராமங்கள் நல்ல வாகான இடம். சாதி ஹிந்துக்கள் கிராமிய வாழ்க்கையை எப்பொழுதும் வாயில் எச்சில் ஊற பேசுவதற்கு இது ஒரு முக்கிய காரணம். அகிரா அறிமுகப்படுத்தும் கிராமத்தில் வேளாண்சாதிகளை தவிர வேறு யாருமே இல்லை. படத்தின் அடுத்த பகுதியில் நகரத்தில் burakumin சாதி கதாபாத்திரங்களை பயன்படுத்தும் அகிரா கிராமத்தை காண்பிக்கையில் ஒரு பரிசுத்தமான குற்றம் குறைகளற்ற ஜப்பானிய கிராமமாக கட்டமைக்கிறார். ஒரு மலை பிரதசேத்தில் அமைந்திருக்கும் அந்த கிராமத்தை சுற்றிலும் geographical ஆகவே வேறெந்த குடியிருப்புகளோ ஊர்களோ இல்லை. அந்த ஊரிலிருப்பவர்கள் அனைவரும் விவசாய சாதிகளாக மட்டுமே உள்ளார்கள். தேவர்மகனில் கமல் இசக்கி கதாபாத்திரத்தோடு பறையிசைக்கு நடனமாடி ஒரு அழகிய கிராமத்தை கட்டமைப்பது ஒரு யுக்தி என்றால் அகிரா எசக்கிகளே இல்லாத ஒரு அழகிய கிராமத்தை கட்டமைப்பதும் ஒரு யுக்தி.
தொடரும்
பா. ஜெயசீலன், சமூக-அரசியல் விமர்சகர்.
முந்தைய பகுதிகளைப் படிக்க:
ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா: பகுதி – 1
ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா: பகுதி – 2
ஜப்பானில் தேவர் மகன் எடுத்த அகிரா குரோசோவா: பகுதி – 3