சந்திரமோகன்

திருநெல்வேலி மாவட்டத்தில் அக்.11 இன்றிலிருந்து – “தாமிரபரணி மஹா புஷ்கரம்” என்ற பெயரில், இந்துக்களின் புனித நீராடல் விழா ஒன்றை “அகில பாரதிய துறவியர்கள் சங்கம் ” என்ற அமைப்பை முன்னிறுத்தி, தமிழக அரசாங்க ஆதரவுடன் RSS அரங்கேற்றியுள்ளது. அக். 22 வரையில் இந்து முன்னணி, விசுவ இந்து பரிசத், பாஜக என அனைத்தும் களமிறங்கி வேலை பார்க்கவுள்ளன.
புஷ்கரம் என்பது கும்பமேளா போன்ற ஒரு நிகழ்ச்சியாகும். சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற காவிரி புஷ்கரம் நிகழ்ச்சிக்கு அடுத்து இந்த விழா நெல்லையில் திட்டமிட்டு எடுக்கப்பட்டுள்ளது.
பாபநாசத்தில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகிதர்( RSS பட்டறை தயாரிப்பு) அவர்கள் (புண்ணியத்தை பெறவோ அல்லது பாவங்களை கரைக்கவோ …. 😪) தாமிரபரணியில் நீராடியுள்ளார்; சாமியார் கள் நடத்தும் மாநாட்டில் பங்கெடுத்துக் கொண்டு ள்ளார்.
தாமிரபரணி தோன்றும் பொதிகை மலை முதல் கடலில் கலக்கும் புன்னக்காயல் வரை 149 கி.மீ வரையுள்ள 143 தீர்தக் கட்டங்களிலும் இலட்சக்கணக்கான மக்களை குவித்து பக்தியுடன், தேசீயத்தையும் ஊட்டிவிட RSS-பாஜக திட்டம் தீட்டியுள்ளது.
செங்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி என மதக் கலவர மையங்களை உருவாக்கும் திட்டத்தின் ஒருபகுதியாக, இந்து மத நம்பிக்கையான மஹா புஷ்கர பட்டியலில் இல்லாத தாமிரபரணி புஷ்கரம் நிகழ்ச்சி இந்தாண்டு நடத்தப்படுகிறது. ஆன்மீகத்தை முன்னிறுத்தி இந்துத்துவா கருத்தியலை வலுப்படுத்துகின்றனர் ; சைவம், வைணவம் எனப் பல்வேறு சாமியார் குழுக்களையும் இணத்து செயல்படவும் திட்டம் போட்டு செயல்படுத்தி வருகின்றனர்.
இந்து மத விழா எப்படி ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி என சொல்ல முடியும்?
இத்தகைய கேள்வியை பாஜக துவங்கி, பக்தர்கள் வரை அவாள் இவாள் எனப் பலரும் முன் வைக்கின்றனர். ஆர்எஸ்எஸ் பல்வேறு உறுப்பு அமைப்புகளை (சங் பரிவார்) கொண்டு உள்ளது என்பதும், இந்து மதம் சார்ந்த வேறுபட்ட நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடையே இந்துத்துவா கருத்தியலை விதைத்து வருகிறது என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
1980 களுக்குப் பிறகு, சில விழாக்களை ஷாகாக்களுக்கு வெளியே ஆலயங்களுக்கு/கோவில்களுக்கு மாற்றி விட்டது. விஜயதசமி, விநாயகர் சதுர்த்தி எனப் பெரிய பட்டியல் உள்ளது. கும்பமேளா துவங்கி புஷ்கரம் எனும் புனித நீராடல் திருவிழா க்களையும் சிறப்பாக பயன்படுத்துகிறது. ஆர்எஸ்எஸ் பரிவாரமான விசுவ இந்து பரிசத் மூலமாக ராமர் கோவில் பிரச்சினை துவங்கி, கும்பமேளா/ புஷ்கரம் வரை பயன்படுத்தி கொள்கிறது.
சாமியார்கள், சன்யாசிகள் அமைப்புகளை விசுவ இந்து பரிசத் & இந்து முன்னணி மூலமாக கையாள்கின்றன. ஆர்எஸ்எஸ் க்கு VHP மூலமாக சன்யாசிகள், மதத் தலைவர்கள் (சங்கராச்சியார்கள் முதல் மடாதிபதிகள், ஆதீனங்கள், அடிகளார் வரை) உறவுகள்/பிணைப்புகள் அவசியமானவை ஆகும். அப்போது தான், இந்துமத நெடிய வரலாற்றின் ஒரு பகுதியாக இந்துத்துவாவை காட்ட முடியும்.
இந்துமத புஷ்கரம் புனித நீராடல் பட்டியலில் தாமிரபரணி என்றுமே இருந்தது இல்லை!
முதலில் புஷ்கரம் என்றால் என்னவெனத் தெரிந்து கொள்வோம். இந்து மத நம்பிக்கை /புராண அடிப்படையில், குரு/பிரஹஸ்பதி ஆனவர், குரு பெயர்ச்சி காலத்தில், ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு, அந்தந்த ராசிக்குரிய 12 புண்ணிய நதிகளில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, 12 நாட்களில் பிரவேசம் செய்து அந் நதிகளில் வாசம் செய்வதாக ஒரு நம்பிக்கை /Myth உள்ளது. குரு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கரம் விழா 12 நாட்களுக்கு நடத்தப்படும்; அச் சமயத்தில் அந்தந்த நதிகளில் மக்கள் நீராடினால், “நல்லது நடக்கும் ” ” முன்னேற்றம் ஏற்படும் ” என்பதும் நம்பிக்கை /ஐதீகமாகும்.
144 ஆண்டுகளுக்கு ஒரமுறை தான், ஒரு ஆறு சார்ந்த விழா வருவதால், இந்து மத நம்பிக்கையுள்ள மக்களும் இதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள். இக் காலங்களில் சன்னியாசிகளும், சாமியார்களும் அடிக்கும் கூத்துக்களுக்கும் ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடுவது, கூத்தடிப்பது நடைபெறுகிறது. அலகாபாத் #கும்பமேளாவில் நாகா அம்மண சாமியார்கள் ஆடும் ஆட்டம், பாட்டம் உலகப் புகழ் பெற்றது. நிற்க!
தாமிரபரணி ஆறு புஷ்கரம் பட்டியலில் உள்ளதா?
இந்து மத நம்பிக்கை சார்ந்த புராணங்கள் மற்றும் பிரிட்டிஷ், இந்திய அரசாங்க ஆவணங்கள் அடிப்படையில் பார்த்தால் … கும்பமேளா & புஷ்கரம் நடைபெற்ற இடங்கள், குரு பெயர்ச்சி ஆகும் ராசிகளின் நதிகளாக பின்வரும் பட்டியல் தான் இந்தியா முழுவதும் கடைபிடிக்கப் படுகிறது.
1) கங்கை – மேச ராசி 2)நர்மதா – ரிசப ராசி 3)சரஸ்வதி- மிதுன ராசி 4)யமுனை – கடக ராசி 5)கோதாவரி – சிம்ம ராசி 6)கிருஷ்ணா – கன்னி ராசி 7)காவேரி – துலா ராசி 8)பீமா- விருச்சிக ராசி 9)தப்தி- தனுச ராசி 10)துங்கபத்ரா-மகர ராசி 11)சிந்து- கும்ப ராசி 12)பிரனிஹிதா- மீன ராசி. இப்பட்டியலில் எந்தக் காலத்திலும் தாமிரபரணி இருந்தது இல்லை. (சரஸ்வதி நதி என்பது இல்லை என்றாலும், இருந்ததாக தொடர்ந்து நம்புவதும், புராணங்கள் துவங்கி சேட்டிலைட் வரை கண்டு பிடிக்க RSS இந்துத்துவா வாதிகள் முயற்சிப்பதும் மற்றொரு கிளைக் கதையாகும்.)
இந்து மத ஐதீகத்தின் / நம்பிக்கையின் படி குரு வானவர், ஒவ்வொரு 12 ஆண்டுக்கு ஒரு முறை ஒரு நதியில் தான் வாசம் செய்கிறார். ஏற்கனவே விருச்சிக ராசிக்கு உரிய பீமா நதியில் (மஹாராஸ்டிராவில் துவங்கி ஆந்திரா வரை சென்று கிருஷ்ணாவில் சேரும் மிகப்பெரிய ஆறு) மஹா புஷ்கரம் நடந்து வரும்போது , இந்த ஆண்டு் அக். 12 முதல் அக். 23 வரை நடைபெறுகிறது என்ற போது, தாமிரபரணி எங்கு இதில் வந்தது? இங்கே தான் RSS சதியுள்ளது.
தாமிரபரணியில் இதுவரை புஷ்கரம் நடந்ததாக, 1874 ல் நடந்ததாக பிரிட்டிஷ் ஆட்சி குறிப்பு /ஆவணங்கள் அல்லது எந்த புராணக் குறிப்பும் இல்லை. RSS – பாஜக கூட்டம், இந்த ஆண்டு புதிதாக தாமிரபரணியை இணைத்து கொண்டு விழா எடுக்கின்றனர்.
நெல்லையை மதக் கலவர பூமியாக்கும் நீண்ட காலத்திட்டத்தில் இந்து மத நம்பிக்கை சார்ந்த விழாவை கொண்டு வந்து சேர்க்கின்றனர். புதிய தமிழகம் கிருஷ்ண சாமி விசுவ இந்து பரிசத் யாத்திரைக்கு கொடி அசைத்து துவக்கி வைக்கிறார். மோடி- எடப்பாடி ஆட்சியில் எதுவும் நடக்கும். இதை வெறுமனே ஒரு மதநம்பிக்கை சார்ந்த விழாவாக கடந்து சென்றுவிடக் கூடாது. இது…
புனித நீராடல் அல்ல!
மதவெறுப்பு அரசியலுக்கான ஆன்மீகத் தயாரிப்பு என்பதை அம்பலப்படுத்த வேண்டும்! சாதி மதங்கள் கடந்த ஒற்றுமை கட்ட வேண்டும்! Defeat RSS Evil Design!
சந்திரமோகன், CPIML இயக்கத்தைச் சேர்ந்தவர்.