பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளான எம்.ஜே. அக்பரின் கடந்த கால பெருமைகளை பேசுவதை நிறுத்துங்கள் என ஊடகவியலாளர் பர்கா தத் சாடியுள்ளார்.
மீ டூ இயக்கத்தின் மூலம் 16க்கும் அதிகமான பத்திரிகையாளர்களால் பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டு ஆளானவர் எம்.ஜே. அக்பர். ‘ஏசியன் ஏஜ்’ இதழின் ஆசிரியராக இருந்தபோது இவர், தனக்குக்கீழே பணியாற்றிய பல பெண்களிடம் தொடர்ந்து ஒடுக்குமுறையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பின், பாஜகவில் இணைந்து மத்திய இணை அமைச்சர் பதவி வகித்தார். பாலியல் குற்றச்சாட்டுகள் வரிசையாக வெளிவந்தநிலையில், பதவியை ராஜினாமா செய்தார் அக்பர். இந்நிலையில், கடந்த வாரம் பத்திரிகையாளர் பல்லவி கோகாய், ‘ஏசியன் ஏஜ்’ இதழில் பணியாற்றியபோது அக்பர் தன்னிடம் பாலியல் வல்லுறவு கொண்டதாக குற்றம்சாட்டினார். இருவரும் சம்மதத்துடன் உறவில் இருந்ததாக அக்பரும் அவருடைய மனைவியும் விளக்கம் அளித்திருந்தனர்.
அக்பர் குறித்து தொடர்ந்து பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டுக்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், பத்திரிகையாளராக அவர் செய்த சாதனைகளைச் சொல்லி அவரை சிலர் ஆதரிப்பதாக பர்கா தத் கடுமையாக சாடியுள்ளார். ‘ஏசியன் ஏஜ்’ இதழில் பணியாற்றியவர் தற்போது ‘த சிட்டிசன்’ என்ற இணையதளத்தின் ஆசிரியர் சீமா முஸ்தபாவும் அக்பரை ஆதரிப்பதாக பர்கா தெரிவித்துள்ளார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழில் பர்கா எழுதியுள்ள பத்தியில், ‘தெஹல்கா’ இதழின் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு எழுந்தபோதுகூட பலர் அவருடைய திறமை-பெருமைகளைச் சொல்லி அவரை ஆதரித்தனர். அக்பர் விஷயத்தில் இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. மீ டூ இயக்கத்தில் குற்றச்சாட்டுக்கு ஆளான பல ஆண்களை கடந்த கால பெருமைகளை சொல்லி ஆதரிப்பது வெட்கக்கேடான செயல் என அவர் தெரிவிக்கிறார்.
“ஒருவரை தனிப்பட்ட முறையில் தெரியும் என்பதற்காக அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய் என்று ஆகிவிடாது. அவர்களுடைய குற்றங்களைக் கண்டு அமைதியாக இருப்பது, உடந்தையாக இருப்பது போன்றதாகும். பாலியல் வன்கொடுமை ஒரு குற்றச் செயல். பல்லவி கோகாயின் வாக்குமூலம் ஒன்றே அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு போதுமானது. அதுமட்டும் போதாது, அவர் பாஜகவிலிருந்து நீக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்திலிருந்தும் வெளியேற்றப்பட வேண்டும். சுதந்திரமான புலனாய்வு அவர் மீது நிகழ்த்தப்பட வேண்டும்” என பர்கா தத் தெரிவித்துள்ளார்.