கருத்து தலித் ஆவணம்

புயல் கரையை கடந்துவிடும்.. சாதி?: இரா.வினோத்

இரா.வினோத்

திருமணமான மூன்றே மாதங்களில் புதுமண தம்பதியை பெண்ணின் குடும்பத்தினரே கொடூரமாக கொலை செய்து, சடலங்களை க‌ர்நாடக ஆற்றில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. காதல் கைக்கூடிய அந்த இளம் ஜோடியின் கனவு, சாதி வெறியினால் சின்னாபின்னமாக்கப்பட்டு இருக்கிறது. கிருஷ்ணகிரி போலீஸ் எஸ்.பி.மகேஷ்குமார் அனுப்பிய கொலை படங்களும், மண்டியா போலீஸார் பகிர்ந்து கொண்ட தகவல்களும் ஏற்படுத்திய அதிர்வலையில் இருந்து மீள முடியவில்லை.

ஓசூரை அடுத்துள்ள சூடகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் நந்தீஷ் (25). பட்டியல் வகுப்பை சேர்ந்த இவரும் அதே ஊரை சேர்ந்த மகள் சுவாதியும் (21) 4 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். நந்தீஷின் சாதியை காரணம் காட்டி, சுவாதியின் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெற்றோர் கடுமையாக எதிர்த்துள்ளனர். மிரட்டலுக்கு பயப்படாமல் சுவாதி நந்தீஷை காதலித்து வந்துள்ளார்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய சுவாதி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நந்தீஷை வற்புறுத்தியுள்ளார். இதனை ஏற்காத நந்தீஷின் தந்தை நாராயணப்பா, ‘சாதி பிரச்சினை வரும்’ எனக்கூறி சுவாதியை அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். உடனடியாக சுவாதியின் தந்தை சீனிவாசனை சந்தித்து, தன் மகனுக்கு சுவாதியை திருமணம் செய்து தருமாறு ‘பெண் கேட்டு’ள்ளார்.

அதற்கு சுவாதியின் தந்தை சீனிவாசன் சாதி பெயரைச் சொல்லி திட்டி, பெண் தர மறுத்துவிட்டார்.மேலும் சுவாதியை அடித்து, வெளியே செல்ல விடாமல் வீட்டில் அடைத்து வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்டில் சுவாதி வீட்டை விட்டு வெளியேறி, நந்தீஷை திருமணம் செய்துள்ளார். திரும்பவும் ஊருக்குப் போனால் பெரிய பிரச்சினையாகும் என்பதால் இருவரும் ‘தலைமறைவு’ வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.

ஓசூர் பேருந்து நிலையம் அருகே ‘ரகசியமாக’ வாடகை வீடு எடுத்து வசித்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 4-ம் தேதி சட்டப்படி நந்தீஷூம் – சுவாதியும் தங்களது திருமணத்தை சூளகிரி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 10-ம் தேதி ஓசூருக்கு வந்த‌ நடிகர் கமல்ஹாசனை சுவாதி பார்க்க விரும்பியுள்ளார். காதல் மனைவியின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, நந்தீஷ் அவரை கமல் ஹாசன் நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு சுவாதியின் உறவினர்கள் கிருஷ்ணன் (26), வெங்கட் ராஜ்(25) ஆகியோர் புதுமண தம்பதியை பார்த்து, அவர்களிடம் பேச்சுக்கொடுத்து கொண்டே சுவாதியின் தந்தைக்கு தகவல் கொடுத்தன‌ர். அதற்காகவே காத்திருந்த சுவாதியின் தந்தை சீனிவாசன் (40), பெரியப்பாக்கள் அஸ்வதப்பா(45), வெங்கடேஷ் (43) சாமிநாதனின் (30) வாடகை காரை எடுத்துக்கொண்டு வந்தனர்.

முதலில் கோபமாக சண்டை போட்ட சுவாதியின் தந்தை சீனிவாசன், ”காரில் ஏறுங்கள். போலீஸ் ஸ்டேசனுக்கு போகலாம்”என குண்டுகட்டாக நந்தீஷையும் சுவாதியையும் காரில் ஏற்றியுள்ளனர். ஒரு கட்டத்தில் கோபம் முற்றி கண்ணீர் விட்டு அழுவதைப் போல நடித்த சீனிவாசன், இருவரையும் ஏற்றுக்கொள்கிறேன். வீட்டுக்கு வந்துடுங்க எனவும் கெஞ்சியுள்ளார். இதனை நம்பி நந்தீஷூம் – சுவாதியும் பயணித்த நிலையில், கார் நைஸ் ரோடு வழியாக கர்நாடகாவுக்குள் நுழைந்தது.

இதனால் சந்தேகமடைந்த நந்தீஷ், ‘எதுக்கு இந்த பக்கம்?’ என கேட்டிகிறார். அதற்கு சீனிவாசன், ”ராம்நகர் பக்கத்துல பெரிய அனுமான் கோயில் இருக்கு. அங்கு போய் பூஜை பண்ணிட்டு, முறைப்படி கல்யாணம் செஞ்சி வைக்கிறேன்”என ஏமாற்றி அழைத்து சென்றுள்ளார். இதனை நந்தீஷூம், சுவாதியும் நம்பாத நிலையில் மீண்டும் வாக்குவாதம் எழுந்திருக்கிறது. அப்போது காரில் இருந்த சீனிவாசன், வெங்கடேஷ், அஸ்வதப்பா, கிருஷ்ணன், வெங்கட் ராஜ் உள்ளிட்டோர் கூர்மையான ஆயுதங்களால் நந்தீஷ் – சுவாதியை அடித்துள்ளனர்.

ஆள் நடமாட்டம் இல்லாத சிவனசமுத்ரா நீர்வீழ்ச்சி பகுதிக்கு கொண்டு சென்று, ‘பிரிந்து போய்விடுமாறு’ மீண்டும் நந்தீஷையும், சுவாதியையும் கடுமையாக தாக்கியுள்ளனர். அதற்கு மறுத்த நிலையில் இருவரையும் ஆயுதங்களால் தலை பகுதியில் வெட்டி, கொலை செய்துள்ளனர். பின்னர் இருவரையும் அடையாளம் காண முடியாதவாறு, அவர்களின் முகங்களை தீயிட்டு பொசுக்கியுள்ளனர். அதிலும் சுவாதியை மொட்டை அடித்து, அவரது அடிவயிறு பகுதியை சிதைத்துள்ளனர். இருவரின் கை, கால் லுங்கி துணியால் கட்டி சிம்சா ஆற்றில் வீசிவிட்டு, ஊர் திரும்பியுள்ள‌னர்.

அம்பேத்கர் டி -ஷர்ட்

இந்நிலையில் கடந்த 11-ம் தேதி நந்தீஷின் தம்பி சங்கர், தனது அண்ணனையும் அண்ணியையும் காணவில்லை. சுவாதியின் தந்தை சீனிவாசன் மீது சந்தேகம் இருப்பதாக ஓசூர் போலீஸில் புகார் அளித்தார். இதனை வழக்கம்போல போலீஸார் உடனடியாக வழக்குப்பதிவு செய்யவில்லை. கட‌ந்த 13-ம் தேதி நந்தீஷின் உடல் அழுகிய நிலையில் கர்நாடக‌ ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட பிறகு, 14-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

நந்தீஷின் முகம் அடையாளம் காண முடியாத நிலையில், அவர் அணிந்திருந்த நீல நிற டி – ஷர்ட் துப்பு துலக்க உதவியது. அதில் டாக்டர் அம்பேத்கர் படம் பொறிக்கப்பட்டு, ‘சூடகொண்டப்பள்ளி, ஜெய்பீம்’ என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து பெலகாவாடி போலீஸ் கிருஷ்ணகிரி போலீஸாருக்கு தகவல் கொடுத்த நிலையில், மறுநாள் (15-ம் தேதி) நந்தீஷின் சடலம் மிதந்த அதே இடத்தில் சுவாதியின் சடலமும் மிதந்தது.

இதை உறுதி செய்த போலீஸார் நந்தீஷ் – சுவாதியை கடத்தி கொலை செய்ததாக சுவாதியின் தந்தை சீனிவாசன்(40), பெரியப்பா வெங்கடேஷ் (43), மற்றொரு பெரியப்பா அஸ்வதப்பா (45) உறவினர் கிருஷ்ணன் (26), உறவினர் வெங்கட் ராஜ் (25), கார் உரிமையாளர் சாமி நாதன் (30) ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் சீனிவாசன்,வெங்கடேஷ், கிருஷ்ணா ஆகிய 3 பேரை பிடித்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய அத்தனை பேரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புரிந்துகொள்ள முடியவில்லை

இந்த சம்பவத்தை தொடர்ந்து எழும் வழக்கமான கண்டன முழக்கங்களை பார்க்க சலிப்பாக இருக்கிறது. அறிக்கைகள், கள ஆய்வுகள், விசாரணைகள், சட்ட நடவடிக்கைகள் எல்லாம் அலுப்பூட்டுகின்றன. சாதி ரீதியான தாக்குதல்கள் அன்றாட நடவடிக்கைகளாக மாறிவிட்ட சூழலில் அதை தினமும் எழுதுவதும், பேசுவதும் விரக்தியை தருகிறது. கழிவிரக்கம், ஆதரவு குரல், தொலைக்காட்சி விவாதம், கண்டன ஆர்ப்பாட்டம், நீதிமன்ற முறையிடல், புதிய சட்டத்துக்கான கோரிக்கை என எல்லாமே அந்த நேரத்துக்கான கண் துடைப்போ என எண்ண வைக்கிறது.

சாதி ரீதியாக மனித தன்மையற்ற முறையில் எளிய மனிதன் கொல்லப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், ‘ஒற்றுமை அவசியம்’ என முழங்கும் குரல்களை ஏற்கும் மனநிலை இல்லாமல் போகிறது. களத்தின் எதார்த்தத்தை உணராமல், கனவு தேசத்தை கட்டியெழுப்பவதில் மும்முரமாக இருக்கும் தலித் கட்சிகளை நேசிக்க முடியாமல் போகிறது. எதனோடும் ஒப்பிடவே முடியாத வலியை சந்திக்கும் பாதிக்கப்பட்டவனையும், நிதம்நிதம் வதம் செய்யும் பாதிப்பை ஏற்படுத்துவனையும் ஒன்றாக அமர்த்தி, உரையாட அழைக்கும் புதிய குரல்களை ஆதரிக்க முடியாமல் போகிறது.

என்ன செய்தால் இந்த கொலைகள் எல்லாம் நிற்கும்? எப்படி கொல்லப்படுபவர்களை காப்பது? எப்படி சொன்னால் கொலையாளிகளுக்கு புரியும்? புரியாதவர்களுக்கு எப்படி புரிய வைப்பது? பலியிடப் படுவதற்காகவே நேர்ந்து விட்டவர்களா ஒடுக்கப்பட்டவர்கள்? மனசாட்சி உள்ள மனிதர்களால் தினந்தினம் கொலைகளை கண்டும், எப்படி மிக‌ சாதாரணமாக கடந்து போக முடிகிறது?

இத்தனைகளை கொலைகள், வீடு எரிப்புகள், பலாத்காரங்கள், வன்முறை சம்பவங்கள் என தினந்தினம் பார்த்துக்கொண்டு இருக்கும், ‘தலித் தலைவர்களால்’ ஏன் இந்த சம்பவங்களுக்கு எதிராக கிளர்ந்தெழ முடியவில்லை. எதிர் தாக்குதல் குறித்து முழக்கம் எழுப்பியவர்கள், ஏன் மவுனமாக இருக்கிறார்கள்? எதையுமே புரிந்துக்கொள்ள முடியவில்லை.

எதுவுமே சாத்தியப்படாத நிலையில், எல்லாவற்றையும் மீண்டும் தொடக்கத்தில் இருந்தே தொடங்கி பார்க்க வேண்டும். எவரும் கைக்கொடுக்காத நிலையில், மக்கள் தமக்கு தாமே கைக்கொடுத்துக்கொள்ள வேண்டும். முக தாட்சண்யம் கடந்த நீண்ட விவாதத்தை, நிறுத்திவிட்ட செயல்பாட்டை, மரபான குணாம்சத்தை, கற்க வேண்டிய பாடத்தை தயக்கமின்றி கற்க வேண்டும். சரியோ, தவறோ எதையும், எதற்கும் நிகர் செய்ய வேண்டும். தீர்வு வரும்வரை நிறுத்தக்கூடாது.

எங்கிருந்து வருகிறது வெறி?

சாதி வெறியில், பெற்ற மகளை கொடூரமாக கொலை செய்த சீனிவாசனின் முகத்தை பார்த்தேன். கிழிந்த சட்டை, செருப்பில்லாத கால், ஒட்டிப்போன முகம், நோஞ்சான் போன்ற உடல்வாகு பார்க்கவே பரிதாபமாக இருந்தது. கடும் வறுமையும், அறியாமையும், இறுக்கமும் நிறைந்திருக்கிறார். ‘பொசுக்’னு இருக்கும் இந்த மனிதருக்கு எங்கிருந்து சாதி வெறி வந்தது? சாதி எப்படி இந்த சாதாரண மனிதரிடம் இவ்வளவு மூர்க்கமாக இயங்குகிறது? அறிவியல் வளர்ந்த இந்த 21-ம் நூற்றாண்டிலும் எப்படி இன்னும் முட்டாளாகவே இருக்கிறார்? பெற்ற மகளை,சக மனிதரை, துள்ள துடிக்க கொல்லும் மன நிலையை எங்கிருந்து பெற்றார் என யோசிக்கவே முடியவில்லை.

ஏராளமான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதும், பார்வையில் பலம் வாய்ந்ததாக பட்டவற்றை எல்லாம் புயல் புரட்டி போட்டுவிடுகிறது. பார்வையில் படாத, மக்களின் மனங்களில் புறையோடிப் போயிருக்கும் இந்த சாதியை எந்த புயலாலும் புரட்டி போட முடிவதே இல்லை.

புயலை விட சாதி கோரமானது!

இரா.வினோத், பத்திரிகையாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: