தீ. ஹேமமாலினி
அந்தமான் நிக்கோபர் பிரதேசத்தின் வடக்கு சென்டினலீசு தீவிற்கு (Northern Sentilese Island) சென்ற ஜான் ஆலன் சாவ் என்ற அமெரிக்க இளைஞர் சென்டினல் (Sentinel) பழங்குடியினரால் கொல்லப்பட்டதாக பலரும் தற்போது விவாதித்து வருகிறார்கள்..
அந்தமான் நிக்கோபர் பகுதியில் உள்ள 572 தீவுகளில், சுமார் 36 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர்..
இப்பிரதேசத்தின் தொல் பழங்குடிகளாக ஜாரவா, சென்டினல், ஷாம்பென், ஓங்கே, கிரேட் அந்தமானீஸ் போன்றோர் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நீக்ரிட்டோ வகை பழங்குடி இனத்தைச் சேர்ந்த சென்டினல் பழங்குடியினரை இந்திய மானிடவியல் துறை கிட்டத்தட்ட 30,000 ஆண்டுகள் பழமையானவர்கள் என்று கூறினாலும், இவர்கள் 60,000 ஆண்டுகள் பழமையானவர்கள் என்றும், ஆப்பிரிக்காவில் தோன்றி ஆசியாவிற்கு இடம்பெயர்ந்த முதல் மனித இனத்தின் சக பிரிவே இவர்கள் எனும் கருத்தையும் சர்வதேச ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர்..இவர்களின் தோற்றம், மரபணு, வாழ்வியல் பற்றி இன்றுவரை மானிடவியலாளர்கள் (Anthropologists) விரிவாக ஆய்வு செய்து வருகின்றனர்..
அடிப்படையில் விலங்குகள் மற்றும் மீன்களை வேட்டையாடி வாழும் முறையை தற்போதும் கடைபிடித்து வரும் சென்டினல் மக்கள் வெளியுலக வாசிகளின் தொடர்புகள் சற்றும் இல்லாமல்/விரும்பாமல், பொது சமூக ஓட்டத்திலிருந்து முற்றிலும் விலகி வாழ்ந்து வருபவர்கள்..
சென்டினலீசு தீவு வங்காள விரிகுடாவில் இருக்கும் அந்தமான் தீவுகளில் ஏறத்தாழ 28 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட ஓர் சிறிய தீவு. இதனைச்சுற்றிய 3 கடல் மைல் பகுதியில் வெளியாட்கள் பிரவேசிப்பது இந்திய அரசின் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
சென்டினல் (Sentinel) என்றால் “காவலாளி” என்று பொருள்படும்..
உலகின் பாதுகாக்க வேண்டிய மக்களாக கருதப்படும் இவர்கள் வெளியின மனிதர்களை அவர்கள் தீவில் காலடி எடுத்து வைக்க அனுமதிப்பதில்லை. மீறி வந்தவர்கள் மீது ஈட்டி, வில் அம்பினால் கடுமையாக தாக்கி தங்களது எதிர்ப்பைக் காட்டுகின்றனர்.. இதில் சிலர் கொல்லப்பட்டுள்ளனர்.. இப்படியான தாக்குதல்கள் அனைத்தும் இவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே..
பொதுவாக நம்மிடம் பகிரப்படும் சென்டினல் தீவு மக்களின் புகைப்படங்கள் அவ்வப்போது கப்பலில் அல்லது விமானத்திலிருந்து தூரத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளே..
பிரித்தானியர்கள் தங்கள் கணக்கெடுப்பின் படி 1901 முதல் 1921 வரை 117 சென்டினல்கள் வாழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.. தொடர்ந்து 1931ல் 50 பேர், 1991ல் 23 பேர், 2011ல் 15 பேர், 2001ல் 49 பேர் என்கிறது இந்திய அரசின் சென்செஸ் (Census) கணக்கெடுப்பு.. ஆயினும் தற்போது சுமார் 300 பேர் வரை இருக்கலாம் என்று மானிடவியல் ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. இதுவும் துல்லியமான தகவலில்லை..
1800-ல் மோரிசு வைடல் போர்ட்மேன் (Portman) என்ற பிரித்தானிய நிர்வாகியின் தலைமையில் சென்ற குழுவொன்று உள்ளூர் மக்களின் வாழ்க்கை முறையை அறியும் பொருட்டு வெற்றிகரமாக இத்தீவிற்கு சென்றது.
பின்னர் இவர்களால், வயது முதிர்ந்த தொல்குடியின தம்பதிகள் மற்றும் அவரது நான்கு குழந்தைகளும் வலுக்கட்டாயமாக தீவின் முக்கிய நகரான போர்ட் ப்ளேயருக்கு அழைத்து வரப்பட்டனர்.
ஆனால் அந்த மொத்த நபர்களும் தொடர்ந்து விரைவாக நோய்வாய்ப்பட்டதோடு வயோதிகர் இருவரும் இறந்தே போயினர். எஞ்சியிருந்த குழந்தைகள் சில பரிசுப் பொருட்களுடன் அவர்களுடைய சொந்த இடத்திற்கே திருப்பிக் கொண்டு விடப்பட்டனர்.. வெளியாட்கள் மூலம் நோய்த் தொற்று இவர்களுக்கு விரைவாக பரவுவதே இத்தகைய இறப்புகளுக்கு காரணம்..
பொதுவாகவே அவர்களது உடற்கூறுகள் நம்மிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை.. நமது உடலிலிருந்து அவர்களுக்கு பரவும் வைரஸ் தொற்று மிக விரைவில் அவர்களது உடலில் பரவி அவர்களது உயிரைப் பறித்து விடும்..
மேற்கிந்திய தீவில் கால் வைத்த கொலம்பஸ் குழுவினரால் பரவிய “சிஃபிலிஸ் (Syphilis)” வைரசாலும், ஆஸ்திரேலியாவில் நுழைந்த வெள்ளையர்கள் அளித்த கம்பளியில் பொதிந்திருந்த கிருமிகளாலும் ஏராளமான தொல் பழங்குடியினர் சாகடிக்கப்பட்டனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது..
சென்டினலீசு மக்களுடனான முதலாவது அமைதியான தொடர்பு இந்திய மானிடவியலாளர் திரிலோக்நாத் பண்டிட் (T.N. Pandit) மற்றும் அவரது குழுவினரால் 1991 சனவரியில் நிகழ்த்தப்பட்டது.
பல வருடங்களாக அவர்களை கண்காணித்த பண்டிட் குழு சிலமுறை அங்கு சென்று வந்தனர். பின்னர் நடந்த ஒரு தொடர்பில் தேங்காய்களை அவர்களே வந்து வாங்கிக் கொண்டதே இன்று வரை பெருமையான ஒன்றாக பேசப்படுகிறது.
இம்முழுத் தீவையும், அதனைச் சுற்றி மூன்று மைல் சுற்றளவு கடற்பகுதியையும் இந்திய அரசு “தவிர்ப்பு வளையமாக” அறிவித்திருந்தது.. ஆனால் வருத்தம்படும்படியாக கடந்த ஆகஸ்டு மாதம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் மத்திய அரசால் அந்தமான் தீவுகளின் 29 தீவுகளில் “வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டு பகுதி” அனுமதி ( Restricted Area Permit-RAP) 2022 வரை அகற்றப்பட்டுள்ளது..
மேலும் மத்திய அரசால் அந்தமானின் போர்ட் பிளேயர் முதல் தீவின் வடக்கிலுள்ள டிக்லிபூர் வரை 240 கி.மீ தூரத்திற்கு சுமார் 2500 கோடியில் போடப்படவுள்ள நீளமான இரயில் பாதை இத்தீவின் இயற்கை சூழலியலுக்கும், தொல்குடிகளின் வாழ்வியலுக்கும் அதி தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தும்..
இதற்கெதிரான பிரச்சாரங்கள் சூழலியல் ஆர்வலர்களால் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன..
சமீபத்தில் தீவில் கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து போதுமான அளவுக்கு இருந்தும், ஜாரவா பழங்குடியினரை பெருமளவு பாதிக்கும் வகையில் அமைக்கப்பட்ட “டிரங்க் ரோடு (Trunk Road)” நெடுஞ்சாலைக்கு சூழலியல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.. இச்சாலையை பொதுப் போக்குவரத்திற்கு அனுமதிக்க உச்சநீதிமன்றத்தால் 2013 ல் தடை விதிக்கப்பட்டு, தற்போது சில கட்டுப்பாடுகளுடன் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது..
கூடவே ஜப்பானுடன் இணைந்து இப்பகுதியில் டீசல் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில் துவங்க சுமார் பத்தாயிரம் கோடி ஒப்பந்தம் ஒன்றையும் இந்திய அரசு கையெழுத்திட்டுள்ளது. உண்மையில் அருகில் உள்ள தீவுகளில் நடைபெறும் சீன ஆதிக்கத்திற்கு மாற்றாகவே இந்திய அரசு இத்தகைய நடவடிக்கைகளை “வளர்ச்சி” எனும் பெயரில் எடுத்து வருகிறது. எல்லாவற்றையும் இணைத்துப் பார்த்தால் இதன் பின்னணியில் பொதிந்துள்ள இன்னும் இதர அரசியல் நோக்கங்கள் தெரியவரும்.
மொத்தத்தில் இதனால் ஆகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாவது தீவின் இயற்கைச் சூழலும், அதையொட்டி வாழும் தொல்குடிகளுமே..
இன்னொரு புறம் மத அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களால் இவர்கள் எதிர்கொள்ளும் பண்பாட்டு, கலாச்சார நெருக்கடிகளும் ஏராளம்..
கடந்த 2004ம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியால் கூட இவர்கள் அவ்வளவாக பாதிக்கப்பட்டவில்லை..
சுனாமிக்குப் பின்னர் சென்டினலீசு தீவு மக்களின் நிலையை அறிய இந்திய அரசு ஹெலிகாப்டர் ஒன்றை அனுப்பியது..அருகில் உள்ள பல தீவுகள், அந்தமான் தீவு ஆகியவை பாதி்ப்புக்குள்ளானாலும், சென்டினலீசு தீவும், அதில் உள்ள மக்களும் தப்பினர். அவர்கள் சுனாமி வரப்போவதை முன்னரே அறிந்து பாதுகாப்பான இடத்திற்கு சென்று தப்பியுள்ளனர்..
இராணுவத்தின் மூலம் மருத்துவ உதவி,உணவு போன்றவற்றை வீச முற்பட கீழே இருந்து பழங்குடி மக்கள் கற்களை வீசியும், அம்புகளை எய்தும் இராணுவ ஹெலிகாப்டருக்கு எதிர்ப்புகளைக் காட்டியதும் நடந்தது..
அந்தமான் நிக்கோபார் அரசு 2005 ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சென்டினல் மக்களின் வாழ்க்கையுடனோ அல்லது அவர்களின் வாழ்விடங்கள் மீதோ தலையிடத் தமக்கு எவ்வித எண்ணமோ, திட்டமோ இல்லை எனவும், அது ஒரு தனித்த வாழ்விடப் பகுதி என்றும் கூறியுள்ளது.. ஆனாலும் மறைமுகமாக இங்கு பழங்குடி மக்களை வளர்ச்சி எனும் பெயரில் ஒழித்துக் கட்டும் பணிகளே தொடர்ந்து நடக்கிறது..
முன்னதாக, அந்தமான் தீவில் உள்ள பழங்குடியின மக்கள், 1800-ம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டபோது ஏராளமான கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.. தீவின் பல லட்சம் பழங்குடி மக்கள் பல்வேறு காரணங்களால் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர்..
இன்றும் இன அழிப்பு என்பது வேறுவிதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது..
“போ” எனும் பழங்குடியினத்தை சேர்ந்த கடைசி 85 வயது முதியவர் ஒருவரும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தார்..
உலகில் “போ” இன மொழியைப் பேசிய கடைசி நபரும் அவர்தான்..
சில ஆண்டுக்கு முன்பு அப்பகுதிக்கு சுற்றுலா சென்றவர்களும், உள்ளூர் காவலர்களும் சேர்ந்து ஜாரவா பழங்குடியினரை நடனம் ஆடவைத்ததோடு மது உள்ளிட்ட பொருட்களை வீசியெறிந்த அருவருக்கத்தக்க நிகழ்வையும் பார்த்தோம்..உலகில் தொல்குடிகளுக்கு நாம் அளிக்கும் மதிப்பு அவ்வளவே..
சுற்றுலா வாசிகள், சொகுசு விடுதிகள், கடத்தல்காரர்கள், நில ஆக்கிரமிப்புகள், கனிம வளக் கொள்ளையர்கள், வளர்ச்சியின் பேரால் நடக்கும் அழிவுகள் என்று தொடரும் பேரழிவுகளால் அந்தமான் தீவுகளின் இயற்கை சூழல் மட்டுமல்ல அதனையே முற்றிலும் சார்ந்து வாழும் பழங்குடியினர் அனைவருமே விரைவில் ஒட்டு மொத்தமாக அழிந்து போவார்கள்..
நாகரிகம், வளர்ச்சி, நவீனம் ஆகியவற்றின் பெயரால் ஆப்பிரிக்கா தொடங்கி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அந்தமான் வரை வரலாற்றில் சாகடிப்பட்ட கோடிக்கணக்கான தொல்குடிகளின் கேவல்கள் இப்புவியெங்கும் நிறைந்துள்ளன..
வனங்களை,மலைகளை,வன உயிரினங்களை தொல்குடிகளை முற்றாக அழித்தொழித்து, நெடுஞ்சாலைகளையும் கட்டிடங்களையும் தொழிற்சாலையையும் உருவாக்கி வாகனப் பெருக்கம், கேளிக்கை விடுதிகள், நச்சுக் காற்று, மக்கள் நெரிசல், குப்பை மேடுகள் என்று உருவாக்குவதன் வழி நாம் சாதித்ததுதான் என்ன?
தொல்குடிகள் இப்புவியின் ஆதி எச்சங்கள்..
மலைகளைப் போல..
மரங்களைப் போல..
வனங்களைப் போல..
காட்டாற்றைப் போல..
வளர்ச்சியின் வாடை தீண்டாமல்
அவர்களை தனித்து வாழவிடுவோம்..
அவர்களாவது பிழைத்திருக்கட்டும்..
தீ. ஹேமமாலினி, மானிடவியல் ஆய்வாளர்