சந்திரமோகன்
1960 களின் பிற்பாதியில், இந்திய வேளாண்மையில் ஏகாதிபத்திய தலையீடு ஆக பசுமை புரட்சி, மத்திய அரசால் அறிமுகப்படுத்தப் பட்டது. வீரியரக ஒட்டு விதைகள் + ரசாயன உரங்கள்+ பூச்சி மருந்துகள் + அரசு நிதி/கடன் உதவி = பசுமை புரட்சி என அறிமுகப்படுத்தப் பட்டது.
குறைந்த நாள் பயிர்கள் அதிக உற்பத்தி என்ற கவர்ச்சிகரமான முழக்கங்களுடன் ஏகாதிபத்திய பசுமைப் புரட்சி சதி திட்டம் அறிமுகமானது. கிலோ கணக்கில் உரங்களை சாப்பிடுகிற, பூச்சிகளுக்கு எளிதில் இரையாகிற, குறைந்த நாள் நெல் பயிர்கள் (பிலிப்பைன்ஸ் மணிலா ஆராய்ச்சி சாலைகளில் தயாரான IR 8 போன்ற வீரிய ஒட்டு ரகங்கள்) விவசாயத்தில் ஊடுருவியது.
விளைவாக, பத்தாண்டுகளில், ஒருபுறம்
நம் முன்னோர்கள் உபயோகப்படுத்திய பல்வேறு பாரம்பரியமான நெல் ரகங்கள், கண்ணால் கூடக் காண முடியாத அளவுக்கு வழக்கொழிந்து விட்டன. மற்றொரு புறம் ஏகாதிபத்திய சக்திகள் “ஆராய்ச்சி” என்ற பெயரால், இங்கிருந்த ஆயிரக்கணக்கான பாரம்பரிய நெல் விதைகளை குவிண்டால் கணக்கில் அமெரிக்காவுக்கும், பிலிப்பைன்ஸ் நாட்டிற்கும் எடுத்துச் சென்று நம்மை, பாரம்பரிய நெல் விதைகள் அற்ற ஓட்டாண்டிகளாக ஆக்கிவிட்டார்கள்.
பசுமைப்புரட்சியின் கை ஓங்கியிருந்த இந்த கால கட்டத்தில் அரசு வேலையைத் துறந்து விவசாயிகளிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தப் புறப்பட்டவர் தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி அய்யா #நம்மாழ்வார். அவருடன் காவிரி டெல்டா மாவட்ட சுற்றுப்பயணத்தில், அவர் பின்னால் செல்லும் குழுவில் பயணித்தவர்களில் ஒருவர்தான் ‘நெல்’ ஜெயராமன்.
சமீப காலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர், இன்று காலையில் இறந்து விட்டார்.
வாழ்க்கை பின்னணி :-
இயற்பெயர் இரா. ஜெயராமன். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். அப்பா விவசாயி; விவசாய குடும்பத்தில் வழக்கமான கடன் தொல்லைகள் காரணமாக தமக்கு இருந்த விவசாய நிலங்களை விற்று கடனை அடைத்துவிட்டு, திருத்துறைப்பூண்டியில் உள்ள அச்சகத்தில் தொழிலாளியாக வேலையைத் துவக்கினார்.
சுவாமி மலைக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வந்திருந்த நேரம், அவருடைய பேச்சைக் கேட்டு, விவசாயியாகத் தனது வாழ்க்கையை மீட்டார். நஞ்சில்லா உணவை முன்னிறுத்தி 2003-ம் ஆண்டு பூம்புகார் முதல் கல்லணை வரை ஒரு மாத காலம் நம்மாழ்வார் நடத்திய விழிப்புணர்வு நடைபயணத்தில் பங்கேற்றார் ஜெயராமன்.
அந்த பயணத்தின்போது விவசாயிகள் நம்மாழ்வாருக்கு பாரம்பர்ய நெல் ரகங்களை விவசாயிகள் வழங்கியுள்ளனர். நம்மாழ்வார் அவர்கள், அவற்றை ஜெயராமனிடம் கொடுத்து அவற்றை மறுஉற்பத்தி செய்து விவசாயிகளிடம் பரப்பச் சொன்னார். அன்று முதல் மறைவதற்கு சில நாள்களுக்கு முன்பு வரைக்கும் பாரம்பர்ய நெல்லை மீட்பது, பரப்புவது என்ற பணியில் தனது மொத்த வாழ்க்கையை அர்ப்பணித்து கொண்டார், நெல் ஜெயராமன்.
2005-ம் ஆண்டு கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கும்பளங்கி எனும் கிராமத்தில், ’நமது நெல்லைக் காப்போம்’ என்ற கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது. அதில் நெல் ஜெயராமன் கலந்து கொண்டபோது, கேரளா விவசாயிகள், அவர்களின் பாரம்பர்ய நெல்லைப் பற்றி பேசும்போது, நம்முடைய பாரம்பர்ய நெல்கள் எல்லாம் என்ன ஆயிற்று என்று தீவிரமாக சிந்திக்க துவங்கினார். அப்போதிருந்தே தமிழக விவசாயிகள் பலரிடமும் நேரில் சென்றும் நெல் சேகரிக்க தொடங்கியுள்ளார். இப்படி பல வழிகளில் நெல் சேகரிக்க பாடுபட்டதால்தான், இன்று பலராலும் ’நெல்’ ஜெயராமன் என அழைக்கப்படுகிறார்.
இதுவரைக்கும் ஏராளமான பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுத்திருக்கிறார். விவசாயிகளிடம் இருந்து விதைநெல்லாக மட்டுமல்லாமல், நெல் நாற்றுகளாகவும் வாங்கி வந்து நடவு செய்தும் பாரம்பர்ய ரகங்களை மீட்டெடுத்தவர்.
169 வகையான பாரம்பரிய ரக நெல் விதைகள் அவரால் மீட்கப்பட்டது.
‘‘ஒசுவக்குத்தாலை, சிவப்புக்குடவாழை, வெள்ளையான், குருவிகார், கல்லுருண்டை, சிவப்பு கவுணி, கருடன் சம்பா, வரப்புக் குடைஞ்சான், குழியடிச்சம்பா, பனங்காட்டுக் குடவாழை, நவரா, காட்டுயானம், சிறுமணி, கரிமுண்டு, ஒட்டடையான், சூரக்குறுவை… என்பதெல்லாம் நமது மண்ணின் பாரம்பரிய நெல் ரகங்கள் ஆகும்.
“தமிழகத்தில், புயல், மழை, வெள்ளம், வறட்சியையும் தாங்கி வளர்கிற ரகங்கள் இருந்தன. விதைச்சு விட்டுட்டா பிறகு அறுவடைக்குப் போனா போதும் என்ற நெல் ரகங்கள் இருந்தன. கடற்கரையோர உப்புநிலத்துக்கு ஒசுவக்குத்தாலை, சிவப்புக்குடவாழை, பனங்காட்டுக் குடவாழை. மானாவாரி நிலங்களில் குறுவைக் களஞ்சியத்தையும், குருவிக்காரையையும் போட்டால் விளைச்சல் நிறையும். காட்டுப்பொன்னியை தென்னை, வாழைக்கு ஊடுபயிராக போடலாம்.
வறட்சியான நிலங்களுக்கு காட்டுயானம், தண்ணி நிக்கிற பகுதிகளுக்கு சூரக்குறுவை, இலுப்பைப்பூ சம்பா… வரப்புக்குடைஞ்சான்னு ஒரு ரகம்… ஒரு செலவும் இல்லை. விளைஞ்சு நின்னா வரப்பு மறைஞ்சு போகும் ” என்பார், நெல் ஜெயராமன்.
ஒரு சமயம் பனங்காட்டுக் குடவாழை நெல்லைத் தேடி அலைந்திருக்கிறார். அந்த நெல், கடலோர மாவட்டங்களில் விளையும் தன்மை கொண்டது. வேதாரண்யம் பக்கத்தில் இருக்கும் ஒரு விவசாயி வைத்திருப்பது கேள்விப்பட்டு அங்கே சென்றிருக்கிறார். சளைக்காமல் தொடர்ந்து ஆறுமுறைக்குமேல் அவரிடம் சென்று கேட்டிருக்கிறார். இவரும் இரண்டு பிடி நெல் நாற்றை வாங்கி வந்து நடவு செய்து பனங்காட்டு நெல் விதையை உற்பத்தி செய்தார். இதுபோல பல நெல் ரகங்களையும் கஷ்டப்பட்டுத்தான் சேர்த்திருக்கிறார். அனைத்துமே தமிழர்களின் பாரம்பரி்ய நெல் ரகங்கள் என்பதுதான் அதன் சிறப்பு ஆகும்.
நெல் திருவிழா !
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம் கிராமத்தில் நண்பர் நரசிம்மன் வழங்கிய 5 ஏக்கர் நிலத்தில் பாரம்பர்ய நெல் மையம் அமைத்தார். 60 நாள் முதல் 180 நாள் வரை சாகுபடி செய்யக்கூடிய பாரம்பர்ய நெல் விதைகளை அம்மையத்தில் சேமித்து வைத்திருக்கிறார். அங்கேயே வருடம்தோறும் தேசிய அளவிலான நெல் திருவிழாவை 2006-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடத்தினார்.
நெல் திருவிழாவில் ஒரு விவசாயிக்கு இரண்டுகிலோ வீதம் விதை நெல்லை வழங்கி வந்தார். நெல் திருவிழாவில் ஒவ்வொரு வருடமும் விவசாயிகள் அதிகளவில் கலந்து கொள்கிறார்கள். பாரம்பர்ய விதைகளைப் பரப்பும் நோக்கில் பல கருத்தரங்குகளில் உரையாற்றி இருக்கிறார். இயற்கை விவசாயம் சார்ந்து பல பயிற்சி வகுப்புகளையும் நடத்தி இருக்கிறார். அதற்கென ஒரு நெல் வங்கியும் இயங்கி வருகிறது.
இவரது பணிகளை அங்கீகரிக்கும் வகையில், பாரம்பரிய விதைகளைக் காப்பாற்றியதற்காக தேசிய விருதும் மாநில விருதும் கிடைத்திருக்கின்றன. பாரம்பரி்ய விதை நெல்களைக் காக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்து நெடுங்காலமாகச் செயற்பட்டுக் கொண்டு இருந்தவர். #நமதுநெல்லைக்காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர். நம்மாழ்வாரின் தீவிர கொள்கை செயற்பாட்டாளர்.
பாரம்பரிய நெல்லின் ஒவ்வொரு விதையிலும் நெல் ஜெயராமன் நீடித்திருப்பார். `நெல்’ ஜெயராமன் என தனது பெயரையே கெசட்டில் மாற்றிக்கொண்ட நெல் ஜெயராமன் அவர்களுக்கு எமது அஞ்சலி !
சந்திரமோகன், அரசியல் செயல்பாட்டாளர்.