சந்திரமோகன்
கடந்த ஆண்டில், 2018 சட்டமன்ற தேர்தல் காலகட்டத்தில், கர்நாடகத்தில் அமைக்கப்படவிருந்த மிக உயரமான ஹனுமான் சிலைக்கு கோலார் அருகிலிருந்து கிழக்கு பெங்களூர் அருகிலுள்ள காச்சாரகானஹள்ளி வரை சுமார் 1450 டன்கள் எடை கொண்ட பெரும்பாறை, ஒற்றைக்கல் ஸ்வரூபம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டது; இதன் போக்குவரத்து ஏற்படுத்திய சேதங்கள் பெரும் சர்ச்சைகளை அங்கே உருவாக்கியது.
கார்நாடகாவிலேயே பெரும் பெரும் கரடுகள், மலைகளில் பாறைகளிருக்க, பெங்களூரிலுள்ள கோதண்டராமசுவாமி டிரஸ்ட் என்ற நிறுவனம், தமிழ் நாட்டில் தான் மாபெரும் ஒற்றைக்கல் இருப்பதாக கண்டு பிடித்து, தமிழக அரசாங்கத்திடம் கேட்டது.
திருவண்ணாமலை மாவட்ட கொரக்கோட்டை பகுதியிலிருந்து சுமார் 360 டன் எடையுள்ள பெரும்பாறை வெட்டி எடுக்கப்பட்டு கோதண்டராமசாமி பெருமாள் முகத்தை வடித்து, 240 டயர்கள் கொண்ட வண்டியில் பெங்களூர் நோக்கி பயணம் சென்று கொண்டிருக்கிறது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளின்- நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை, மின்வாரியம், காவல்துறை, மாவட்ட நிர்வாகம் போன்றவற்றின் முறையான எழுத்துப் பூர்வமான ஒப்புதல் எதுவும் பெறாமல், முறையான முன் அனுமதி ஆவணங்கள் இல்லாமல், சாலைகள், வீடுகள்,கட்டடங்கள், நீர்நிலைகள் எனப் பலவற்றையும் சேதப்படுத்தியவாறு டிரெயிலர் சென்று கொண்டிருக்கிறது.
மேலிருந்து சொல்லப்படும் வாய்வழி தகவல்கள் உத்தரவுகள் வழியாக பயணம் தொடர்கிறது. தற்போது 6-வது நாளாக கிருஷ்ணகிரியிலிருந்து 10 கி.மீ தொலைவில், மார்கண்டேய நதியின் குறுக்கே வாகனம் செல்ல முடியாமல் நின்று கொண்டிருக்கிறது.
வழக்கமான நெடுஞ்சாலைகளில் செல்ல முடியாத அளவுக்கு ஒரு பொருள் சிறப்பு வாகனம் மூலம் கொண்டு சென்றால், அதற்காக முன்கூட்டிய அனுமதி, வழித்தடம், பயணத் திட்ட அனுமதி பெற்று இருக்க வேண்டும். ஆனால், நெடுஞ்சாலை டோல் கேட்டிற்கு கொடுக்கப்படும் அனுமதி சீட்டு தவிர எதுவுமே இவர்களிடம் இல்லை.
“5 நாட்களாக ஓரிடத்தில் நின்று கொண்டிருக்கிறது” என்பது ஊடகங்கள் வாயிலாக தெரியவர, அரசியல் கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மூலமாக, சிலையாக பெரும்பாறை சட்டவிரோதமாக செல்கிறது தான் செல்கிறது என்பதும் அம்பலமாகி விட்டது. பிரச்சினை வெளியே தெரிந்து அரசாங்க அதிகாரிகள் விசாரணை செய்ய, வெறும் வெள்ளை பேப்பரில் முன்தேதியிட்ட அனுமதி கடிதம் என ஒன்று தரப்பட்டது.
பொதுநல வழக்குகள் :
“கோதண்டராமசுவாமி சிலைக்காக, சட்டவிரோதமாக கல் எடுத்து செல்வதை நிறுத்த வேண்டும் ” என்று சென்னை உயர்நீதிமன்றத்தில், மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்கள் பொதுநல வழக்கு தொடுத்துள்ளார். (WP No.1215/2019). அதன் மீது விசாரணை நடந்து வருகிறது. அரசு தரப்பிலிருந்து பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பொய் வழக்குகளில்…
இதற்கிடையில், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி விட்டு, முறையான இழப்பீடுகள் வழங்காமல்… கிருஷ்ண கிரி நகரில் நுழைந்த இந்த கற்சிலைப் பயணம் பற்றி, கிருஷ்ணகிரியில் ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் பாலக்குறி கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் என்பவர் 30 செகண்டுகள் ஓடும் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
கடவுள் நம்பிக்கை உள்ள அவர், இந்த கல்லை கொண்டு செல்வதன் பின்னணியில் ஊழல் இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். இது வைரலாக பரவியுள்ளது.
எனவே, அவர் மீதும் மற்றும் ஆறு பேர்கள் மீதும், தவறான குற்றப் பிரிவுகளில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. பிரிவு 143 சட்டவிரோதமாக கூடுதல், பிரிவு 153 மதத்தை நிந்தனை செய்தல், பிரிவு 505 வன்முறை தூண்டுதல் மற்றும் பிரிவு 67 of IT act -அதாவது ஆபாசமான, பாலியல் தொடர்பான பதிவுகளை பகிர்வதற்காகப் போடப்படும் பிரிவு.
மகேஷ் குமார் ரிமாண்ட் செய்யப்பட்டார்; பிறர் பிணையில் விடப்பட்டுள்ளனர். இப்படியாக, அநியாயத்தை சுட்டிக் காட்டிய அப்பாவிகள் மீது, கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை பொய் வழக்கு தொடுத்துள்ளது.
மக்கள் சார்பான வழக்கு தள்ளுபடி!
இந்த பெரும்பாறையை கொண்டு சென்ற போது, வீடுகள், கட்டடங்கள் இடிக்கப்பட்டு சரியான இழப்பீடு கிடைக்காமல் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சார்ந்த சிலர் சார்பில், வழக்கறிஞர் பூபால் என்பவர் ஒரு பொதுநல வழக்கு தொடுத்திருந்தார். (WP.No. 3546/2018). இழப்பீடு கொடுக்கும் வரை கோதண்டராமர் சிலையை பெங்களூரு எடுத்துச் செல்ல தடை கோரியிருந்தார்.
சேதமடைந்த வீடுகளுக்கு / கட்டடங்களுக்கு உரிய இழப்பீடு தரவேண்டும் என வழக்கு தொடுத்திருந்தார்.
இன்று விசாரணைக்கு வந்த வழக்கின் நீதிமன்ற அமர்வு, மனுதாரர் நேரடியாக பாதிக்கப்பட்டவர் இல்லை என்பதால் வழக்கை தள்ளுபடி செய்கிறோம், என்று தீர்ப்பு வழங்கினர். ( Dismissing PIL BECAUSE the petitioner is not an affected party goes against the spirit of PIL.)
ஒரே உயர்நீதிமன்றத்தில்,ஒரு பொதுநல வழக்கில் ஏற்பும், மற்றொரு பொதுநல வழக்கில் தள்ளுபடியும் செய்யப்படுகிறது.
கிருஷ்ணகிரி ஜூடிசியல் நீதிபதி வீடியோ ஒன்றிற்காக, குற்றச்சாட்டு பிரிவுகளை கூட மனதில் கொள்ளாமல் (Unlawful assembly ஆம், ஆபாச படமாம்) ஏழு பேருக்கு ரிமாண்ட் என்கிறார்.
கடவுளின் பெயரால்
1) உரிய எழுத்துப்பூர்வமான அனுமதி, ஆவணங்கள் இல்லாமல் செல்லும் கோதண்டராமசுவாமி டிரஸ்ட் மற்றும் கல்லை எடுத்து செல்லும் ஒப்பந்த பணியின் போக்குவரத்து வாகன காண்ட்ராக்டர் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
2) ஆனால், சட்ட விரோதமான பயணம் பற்றிய கேள்வி எழுப்பியவர்கள் மீது வழக்கு, சிறை!
3)பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கேட்ட ஒரு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது .
நாட்டின் சட்டங்கள் நீதிகள் வாய்பொத்தி நிற்கின்றன! சட்டத்தின் மாண்பு மீட்கப்படுமா?
சந்திரமோகன், அரசியல் செயல்பாட்டாளர்.
கடவுள் பெயரில் , மீண்டும் மீண்டும் , அநியாயங்கள்…. இதை அந்தக் கடவுளே அனுமதிப்பாரா ? பின்னணி என்ன , என்ன , நியாய மீறல்களுக்கு , உடந்தையாய் , உள்ளதோ, அந்தக் கடவுளுக்கே , வெளிச்சம்…. பாவப் பட்ட ,, சனங்கள்…. இன்னும் எத்தனைக் காலமோ , ஏமாற்றுவார், கடவுள் , பெயரைச் சொல்லிக் கொண்டு…
LikeLike