வேந்தன். இல
ஆரம்பத்திலிருந்து விசிக திமுகவின் கூட்டணியில் இணைவதை முகம் சுழித்த பார்வையோடே துரைமுருகன் அவர்கள் பார்த்து வருவது அவரது பேச்சின் வாயிலாக எளிமையாக தெரிந்து கொள்ளலாம். ‘இன்னும் கூட்டணியே முடிவாகல..’ ‘இன்னும் தாலியே கட்டல..’ போன்ற நக்கல் தொணி பேச்சுகள் எல்லாம் கடைசி நேரத்தில் கூட விசிக வை தவிர்த்துவிட முடியாதா என்ற அவரின் ஏக்கத்தை தான் வெளிப்படுத்துகின்றன.
அவரது கறார் வாதப்படியே ‘கூட்டணி என்பது தொகுதி உடன்படிக்கை ஏற்பட்ட பிறகு தான் அது கூட்டணி’ என்று சொன்னால், எந்த தொகுதி உடன்படிக்கையையும் பேசாத காங்கிரசின் ராகுல்காந்தியை நேரடியாக அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று எப்படி அறிவித்தார்கள்? கேட்டால் காங்கிரஸ் ஏற்கனவே கூட்டணியில் இருந்த கட்சி என்று பேசுவார். கூட்டணி என்ற சொல்லையும் கணக்கையும் எப்படி வேண்டுமானாலும் தனக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்ளலாம் என்பது துரைமுருகன் அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
விசிக பலமுறை தானே முன்வந்து திமுக கூட்டணிக்கும் காங்கிரஸ் கூட்டணிக்குமான விருப்பத்தை வெளிப்படையாக சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில், துரைமுருகனின் பேச்சு கண்ணியமாக நமக்கு தெரியவில்லை. அண்ணாவோடு அப்படி இருந்தேன் கலைஞரோடு இப்படி இருந்தேன் என்று அவர்களை வெறும் புகழ்ந்து பேசுவதில் மட்டும் பயனில்லை. அவர்களின் அரவணைப்பு அரசியலையும், மதிநுட்பமான முடிவுகளையும் அவர்களிடமிருந்து கொஞ்சமாவது கற்றறிந்து பின்பற்றுவது தான் துரைமுருகன் அவர்களுக்கு அழகு!
இப்படி சிண்டு முடிந்து முரண்பாடுகளை உருவாக்க நினைக்கும் நபர்களையும் அருகில் வைத்துகொண்டு, கூட்டணி கட்சிகளை அரவணைத்தும் கொண்டும் செல்லும் கூடுதல் சுமை தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு தான் ஏற்படுகிறது.
திமுக தலைமையின் ஆளுமையாலும் அரசியல் முதிர்ச்சியினாலும், விசிக தலைமையின் பொறுப்புணர்ந்த பொறுமையினாலும் முதிர்ச்சியாலும் துரைமுருகன் போன்றோரின் எண்ணம் ஈடேறாது என்பது மட்டும் உறுதி.
துரைமுருகனின் ஜாதிய உணர்வு, திமுகவுக்கு மட்டும் எதிரியல்ல.. சமூக நீதிக்கொள்கைக்கே எதிரானது!
அது திமுக – விசிக கூட்டணியில் அப்பட்டமாக முன்பு தெரிந்தது. இப்போதும் தெரிகிறது.
மக்கள் நல கூட்டணியை உருவாக்கியது விசிகவோ இடதுசாரிகளோ அல்ல.. துரைமுருகன் வகையறாக்களே! இதனால் திமுகவும், மக்கள் நல கூட்டணியும் மோசமான விளைவுகளை சந்தித்தது தான் மிச்சம்.
வேந்தன். இல, பத்திரிகையாளர்.