இந்தியாவின் பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியை தேசியமாக்க வேண்டும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாகியாக இருந்த சந்தா கொச்சார் விதிமுறைகளை மீறி தன் கணவர் பணிபுரிந்த வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் கொடுத்து 5000 கோடி ரூபாய்களுக்கு நட்டம் ஏற்படுத்தி உள்ளார். எனவே அவர் வங்கியின் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டார். அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு குற்றவியல் நடவடிக்கைகளை எதிர் கொண்டு உள்ளார்.
ஏற்கெனவே இந்த வங்கியில் இருந்த போது சிறப்பாக பணியாற்றியமைக்காக மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி இருந்தது. ஐசிஐசிஐ வங்கியை விட நன்கு செயல்பட்ட பொதுத்துறை வங்கிகளின் நிர்வாகிகளுக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கவில்லை. பொதுத்துறை வங்கிகள் சமூகநலம் சார்ந்த திட்டங்களுக்கு பெருமளவில் கடன் வழங்கி இருந்தன. தனியார் வங்கிகள் சிறப்பாக செயல்படுகின்றன என்று காட்டுவதற்காக மத்திய அரசு சந்தா கொச்சாருக்கு இந்த விருதை வழங்கி இருந்தது.
இந்நிலையில் இ.அருணாச்சலம் தலைமையில் சமீபத்தில் கூடிய தமிழ்நாடு வங்கி ஊழியர் சங்க மாநில மாநாட்டில் ஐசிஐசிஐ வங்கியை தேசியமயமாக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட து. இந்திரா காந்தி வங்கிகளை 1969 ஆண்டு தேசியமயமாக்கினார். அதன் பொன்விழா ஆண்டு இது. இந்நிலையில் இந்தக் கோரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.