sport

May 1: ஆதியும் அந்தமும் மூலமும் முதலும் உழைப்புதான்! | May day special article

Essays

oi-Staff

|

– எழுத்தாளர் லதா சரவணன்

வியர்வைகளால் கவிதை எழுதி உழைப்பு என்னும் உறையில் இட்டு அதன் ஊதியமாய் சில வெண்மணிகளைப் பெறும் போது கீற்றாய் வெளிப்படும் புன்னகைக்கு ஈடாகாது எந்த உதட்டுச்சுழிப்பும். என்றுமே உழைப்பிற்கென்று தனி மதிப்பு உள்ளது. துள்ளித்திரியும் காலத்தில் கூட நம்மையும் அறியாமல் உழைப்பு நம்மோடு இணைந்து கொண்டேதான் இருந்திருக்கிறது. நாம் தான் அதை ஊதியம் என்ற ஒன்றிற்காய் மட்டும் செய்வதாய் தவறாக கருதிக் கொண்டு இருக்கிறோம்.

சக்திக்கேற்ற உழைப்பு அதைவிடவும் உழைப்புக்கேற்ற ஊதியம் அதுதானே நம் இலக்கு. அந்த முதல் இல்லாத உழைப்பைத் தந்து அறுவடை செய்த பலனை பகிர்ந்தளிக்கும் விவசாயி அவனே உயர்ந்தவன். சிங்க நடைப் போட்ட சிகரத்தில் நிற்கும் தமிழன்.

May day special article

உழைப்பில் பலவகை உண்டு, பத்துபேரின் உழைப்பினைச் சுரண்டி தான் ஒற்றையாளாய் நின்று ஏவிவிட்டு துளிர்காத நெற்றி வியர்வைத் துடைக்கும் வகையினரும் உண்டு, நூறு கைகளால் எழுப்பப்பட்ட கட்டிடத்தின் உயரத்தில் முதலாய் பணத்தைப் போட்டவன் நிற்பதைப் போன்று இங்கே முதலாக பணத்திற்கு கிடைக்கும் மரியாதை உழைப்பினை முதலாய்ப் போட்டவருக்கு இல்லை என்பது முகத்தில் அறையும் நிஜம்.

நிறைய சினிமாக்களில் வில்லனின் முன் தன் செல்வ நிலையை உயர்த்திக் காட்ட முனையும் ஹீரோவிற்காக ஒரு பாடல் போடப்படும். அதில் எந்தந்த வேலை கிடைக்கிறதோ அத்தனையும் அவர் செய்வார் பாடலின் முடிவில் நடந்து சென்று கொண்டிருந்த அவர் காரில் செல்வதைப் போல காட்டப்பட்டு இருக்கும். கிழிந்த உடை கோட்டு சூட்டாய் மாறியிருக்கும், குடிசை வீடு கோபுரமாக இருப்பதைப் போல காட்சிகள் மாறிக்கொண்டே வரும் ஆனால் அப்படி மாறிவரும் காட்சிகளில் அவரின் முக பாவத்தைக் கொண்டு நாம் கைதட்டி வரவேற்போம். அந்த மாதிரி முன்னுக்கு வரணும்டா என்று எட்டாத நம் முதுகில் நாமே தட்டிக் கொள்வோம்.

இந்த காட்சிகளை எல்லாம் கலாய்ப்பதற்காகவே தமிழ்படம் என்று ஒரு படம் வந்தது . காதலியின் தந்தை ஒரு காப்பியைக் குடிப்பதற்குள் பொருளாதாரத்தில் கீழ் நிலையில் இருக்கும் கதாநாயகன் உயர்நிலையை அடைந்து இரண்டு கைகளாலும் கையெழுத்து இடுவதைப் போல,

நீ ஹீரோவாகனுன்னுதான் நான் வில்லன் ஆயிட்டேன் என்ற வசனத்தைப் போல பொழுது போக்கிற்காக எடுக்கப்பட்ட காட்சிகள் எனினும். நமது வாழ்வில் அந்த பாடலின் இடைவெளியைப் போல 4நிமிடங்களில் அப்படி மந்திரம் போட்டால் போல உயர்ந்து விட முடியும் என்றால், இன்று ஏழைகளே இருக்க மாட்டார்கள்.

சுவிட்ச் போட்டதும் இருளை ஒழிக்கும் விளக்கிற்கான உழைப்பு ஒரு மைக்ரோ நொடியில் வந்தது இல்லை. அதற்குப் பின்னால் எடிசன் என்ற மனிதனின் அநேக தோல்விகளும் அதிலிருந்து கற்ற பாடங்களின் உழைப்பும் இருந்திருக்கிறது.

நமது கட்டிடக்கலை, இறைபக்தியை பறைசாற்றும் தஞ்சை பெரிய கோவில் ஒரே நாளில் கட்டப்பட்டவை இல்லை, பேரரசன் ராஜராஜ சோழனின் புத்திக்கூர்மையும், இறைநம்பிக்கையும், பல பேரின் உழைப்பும் அதில் கலந்து இருக்கிறது. அந்த உழைப்பின் பலனே வருடங்கள் தாண்டியும் நிமிர்ந்து நிற்கும் வல்லமை பெற்று இருக்கிறது.

சரி உழைப்பைக் கொட்ட நான் தயாராக இருக்கிறேன் ஆனால் வெற்றிக்காக காத்துக் கொண்டே தானே இருக்க வேண்டியிருக்கிறது அது என்னை வந்தடையவே இல்லையே இப்படி சந்தேகத்தோடே நாம் ஒவ்வொரு நொடியும் பயணிக்கிறோம் நம்மில் அநேகம் அடுத்தவரின் வளர்ச்சியை பற்றியே சிந்திக்கிறோம். இப்பத்தான் பீல்டில் வந்தான் உடனே பெரிய ஆளாயிட்டான் ஆனா அந்த ஆள் வெற்றி நிலையை அடைய எத்தனை உழைத்திருப்பான் என்பதை நாம் மறக்க தயார் படுத்திக் கொள்கிறோம்.

நமது வளர்ச்சிப் பாதையை நோக்கி நாம் எடுக்கும் முடிவு ஆக்கப்பூர்வமான உழைப்பாக இருக்கவேண்டும். ஒரு நாளைக்கு ஒரு செங்கலை வைத்தால் என்செயல் முடிந்து விட்டது என்ற அர்த்தம் இல்லை அந்த செங்கலை குழைக்க சிமெண்ட் என்னும் உழைப்பை கொண்டு உயர்த்திக்கொண்டே வந்தால் ஒரு சுவர் உருவாகிவிடும் அந்தச் சுவர் தான் உழைப்பு

இதுதான் நம் இலக்கு என்று நிர்ணயித்த பிறகு அதை தேடிச் செல்லும் வழியில் நிறைய தடங்கல்கள் வரும் அப்படி வரும்போது சதா நம்மைத் தட்டிக்கொடுத்து கொண்டே இருக்க நாம் எத்தனை கரங்களை முதுகில் சுமந்து கொண்டே செல்ல முடியும். அதுவும் ஒரு பாரம்தானே, ஒரு நாளைக்கு இத்தனை நேரம் நான் உழைத்தால் போதும் என்ற மன நிலையில் இருப்பவர் தொழிலாளி ஆகிறார். அந்த உழைப்பின் கனத்தை உணர்ந்து நேரமின்றி உழைப்பவர் முதலாளி ஆகிறார். வெறும் ஆயிரங்கள் நம்மை திருப்திப் படுத்தி விடும் எனில் நம்பிக்கை என்ற உரம் நம்மில் வீரியம் இழந்துதான் போகும்.

ஒரு மலை வாழ் தோட்டத்தினை உருவாக்கிய காவலாளிக்கு நான்கு நாட்கள் அந்த தோட்டத்தை விட்டு வெளியூருக்கு செல்லவேண்டிய நிலை தோட்டத்தைப் பார்த்துக் கொள்ள ஆட்கள் இல்லை வழக்கமாக அவன் செய்யும் வேலையைப் பார்த்துக் கொண்டே இருக்கும் குரங்குக் கூட்டங்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு செல்கிறான் அவன். நான்கு நாட்கள் கழித்து வந்து பார்த்தால் தோட்டம் பாழாகி கிடக்கிறது கிட்டத்தட்ட ஒரு பருவத்தின் உழைப்பு வீணாகி இருக்க அவன் குரங்கிடம் கேட்கிறான் ஏன் இப்படி என்று ?

ஊற்றிய தண்ணீர் முழுவதும் இறங்கிவிட்டதா என்பதை பார்க்க வேர்களை பிடுங்கினேன் என்று தளராமல் பதில் சொன்னது குரங்கு நாமும் இந்த குரங்குகளைப் போல வெற்றிச் செடி வேர்பிடித்து விட்டதா என்று பிடுங்கிப் பிடுங்கி பார்த்துக் கொண்டே இருப்போம் உழைப்பு என்னும் நீரையும் உரத்தையும் கொடுத்துக் கொண்ட இருந்தாலே நம் வெற்றி கனியைச் சுவைக்கலாம்.

ஆதியும் அந்தமும் மூலமும் முதலும் உழைப்புத்தான் என்பதை நாம் உணர வேண்டும் இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.

விருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,
இன்றே பதிவு செய்யுங்கள்
– பதிவு இலவசம்!

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
Close
Close